பட்டாஸ்



அப்பாவைக் கொன்றவர்களைப் பழிக்குப்பழி வாங்கக் கிளம்பும் இளைஞனே ‘பட்டாஸ்’.சின்னச்சின்ன திருட்டுக்களைச் செய்து வாழும் தனுஷ் அண்ட் கோ அந்த ஏரியாவில் அதகளம் செய்கிறது. அதே ஏரியாவில் இருக்கும் குத்துச்சண்டை மையத்திலும் திருடுகிறார். அதனால் தனுஷின் காதலி மெஹ்ரினுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

அடுத்த பக்கத்தில் சினேகா ஆயுள் தண்டனை அனுபவித்து வெளியே வர, மறுபடியும் குத்துச் சண்டை நிலையம் நடத்தும் நவீன் சந்திராவைக் கொல்லச் செல்கிறார். அங்கு இறந்து விட்டதாக நினைக்கும் தனுஷ் எதிர்ப்படுகிறார். சினேகா தன் மகனை விட்டு இளமையில் பிரிந்தது ஏன்? அப்பா தனுஷுக்கு என்னவாயிற்று? நவீன் சந்திராவோடு என்ன பிரச்னை என அடுத்தடுத்து கேள்விகளுக்கு பதில் சொல்ல விரைகிறது திரைக்கதை.

சிறு திருட்டுக்கும்பல் + காமெடி+ பழிதீர்க்கும் ஃபார்முலா என மினிமம் கியாரண்டி சங்கதிகளைப் பெரிதும் நம்பி களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.செந்தில்குமார். அதே மாதிரி தனது ஹோம் கிரவுண்டான காமெடி ஏரியா + நடிப்பு ஏரியாவில் அடித்து ஆடியிருக்கிறார் தனுஷ். சதிஷ் உடன் இணைந்து உரிய பில்டப்களோடு அறிமுகமாகி மொக்கை வாங்குவது, உடம்பு நோகாமல் முரட்டு வில்லன்களை ஏமாற்றி திருடுவது என காட்சிக்கு காட்சி சீனி பட்டாசு. க்ளீன் ஷேவ் செய்து பேண்ட்டை மாட்டிக் கொண்டு விட்டால் இளமையில் ஜொலிக்கிற தனுஷ் ஆச்சர்யம்!
மெஹ்ரின் பளீர் அழகில் டாலடிக்கிறார். ஆனால், நடிப்பில் அவரை வைத்துக்கொண்டு சிரமப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.

இளமை தனுஷுக்கு அம்மாவாக சினேகா. கொஞ்ச காலம் நடிப்பை மறந்து இருந்ததற்கு தண்டனையா என்ன! ஆனாலும் அடிமுறை கலை பற்றி பயிற்சி எடுத்து கவனம் ஈர்க்கிறார். அந்த அழகுச் சிரிப்பும், படத்தின் அடுத்த பகுதியை தனுஷ் உடன் தாங்கிப்பிடிக்கும் விதமும் அருமை.

தனக்கே உரிய மேனரிசத்தில் கேரக்டரில் மேஜிக் செய்கிறார் முனிஸ்காந்த். என்னவோ தெரியவில்லை நவீன் சந்திரா கேரக்டர் ஆள்கட்டு, உயரம் என இருந்தும் கேரக்டர் வார்ப்பில் பின்வாங்குகிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் நாசர் நடிப்பில் இடம் பிடிக்கிறார். அடிமுறை கலையில் ஊறியெடுத்து தனுஷ் போடும் சண்டையெல்லாம் அனல்! அந்த ஒல்லி கில்லி உடம்பில் பாய்ந்து வரும் வேகமெல்லாம் டெரர்!

விவேக் மெர்வின் இசையில் பாடல் காட்சிகள் அத்தனை கவரவில்லை. பின்னணி இசை பரபரப்பு. ஓம் பிரகாஷ் கொண்டாட்டமான ஒளிப்பதிவை சரியான விகிதத்தில் அளித்திருக்கிறார்.கொஞ்சம் பழைய கதையை சீர் செய்திருக்கலாம். காமெடிக்கு, அடிமுறை கலைக்கு யோசித்ததில் கதைக்கும் யோசித்திருக்கலாம். ஆங்காங்கே லாஜிக் உறுத்தல்கள்.விறுவிறு ஓட்டத்தில் ‘பட்டாஸ்’ ஜாலி ரைடு எடுத்து வெடித்திருக்கிறது.

குங்குமம் விமர்சனக் குழு