நியூஸ் சாண்ட்விச்



மசூதியில் இந்து திருமணம்

கேரளாவில் அனைத்து சமூகத்தினரும் மதச்சார்பற்று ஒற்றுமையுடன் வசித்து வருவது நமக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் இஸ்லாமிய பள்ளிவாசலில், இந்து முறைப்படி திருமணம் நடந்திருப்பது அனைவரையுமே ஆச்சரியத்தில் திக்குமுக்காடச் செய்துள்ளது.

மணமகளின் தாயார் திருமணம் செய்ய போதிய பணமில்லாமல் உதவி கோரியதால், சேரப்பள்ளி ஜும்மா மசூதி மண்டபத்திலேயே இந்து முறைப்படி திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. மணமகளுக்கு 10 பவுன் நகையும், இரண்டு லட்ச ரூபாயுடன் 1000 பேருக்கு உணவும் தயார் செய்து கொடுத்திருக்கின்றனர் இஸ்லாமியத் தலைவர்கள்!

32 அடி  நீள பென்சில், 56 அடி உயர நாற்காலி

அமெரிக்காவின் இல்லினாய்ஸிலுள்ள கேசி என்ற சிறிய நகரத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருபவர் ஜேம்ஸ் போலின்.
இவர், இயற்கை எரிவாயு ஆயில் பைப் பராமரிக்கும் தொழில் செய்து வந்தார். தன் நிறுவனத்தின் விளம்பரமாக, பெரிய பைப்கள் கொண்டு விண்ட் சைம்ஸை உருவாக்க முடிவு செய்தார்.

இதற்காக இரண்டு ஆண்டுகளாக உழைத்து, உலகிலேயே மிகப்பெரிய விண்ட் சைம்ஸை 56 அடி உயரத்தில் உருவாக்கினார். இது சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களை ஈர்க்க, மொத்தம் 7 பொருட்களை உலகிலேயே பிரம்மாண்டமாக உயர்ந்ததாக உருவாக்கி தன் நகரைச் சுற்றுலா தலமாக மாற்றியிருக்கிறார்.

32 அடி நீள பென்சில், 56 அடி உயர நாற்காலி, 13.75 அடி நீள தையல் ஊசிகள், 4 அடி 9 அங்குல உயர மர ஷூக்கள், 60 அடி நீளமான ஃபோர்க், 5,743.41 கன அடி பெரிய அஞ்சல் பெட்டி மற்றும் 30 அடி உயரமான கோல்ஃப் மட்டை... என பல பொருட்கள் இந்த சிறிய நகரத்தை பெரியதாக மாற்றியிருக்கின்றன!    

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்