நான்...வசந்திதேவி



என்னைப் பற்றி நானே எழுதுவது எளிதல்ல. அதை ஆன்ம சுத்தியுடன் செய்ய இயலுமா என்று என்னுள் ஆழ்ந்த சந்தேகம் இருக்கிறது.

என் வாழ்வின் ஆயிரமாயிரம் அனுபவங்களில், அவற்றின் சூழலில், எவை என்னை நிர்ணயிப்பதில், வசந்திதேவி என்ற ஒருத்தியை உருவாக்குவதில் பங்கு பெற்றவை... எவை என்னைத் தொடாமல் உருண்டோடி விட்டவை என்பதைத் தெளிவாக என்னால் கணிக்க இயலவில்லை. 
இது ஒரு சுய தரிசனமோ, சுய விமர்சனமோ அல்ல. பின் நோக்கிய நினைவு ஓட்டத்தில் கண்களில் தென்பட்ட சில மைல் கற்கள்.

என் குடும்பப் பின்னணி சராசரி இந்தியனின் (அப்படி ஒரு சராசரி இந்தியன் உண்டென்றால்) வாழ்வுப் பின்னணியிலிருந்து வேறுபட்டது. சாதியும், மதமும் அடிப்படை வார்ப்படமாக என் வாழ்வில் அமையவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் பல புதிய சுழற்சிகளில் உருவானது என் குடும்பம். இரண்டு தலைமுறைகளாக சாதி, மத வரம்புகளை மீறிய குடும்பம். என் தாய் வழிப் பாட்டனார் சக்கரைச் செட்டியார் தமிழ் செட்டியார்; தாய் வழிப் பாட்டி ஆந்திர பிராமணர். பாட்டனாரும், பாட்டியின் குடும்பம் முழுவதும் கிறிஸ்துவர்களாக மதம் மாறினர்.

கிறிஸ்துவராக வளர்ந்த என் தாய் ஜானகி, இந்து நாயுடுவான என் தந்தை தாஸை மணந்தார். இருவரும் மதம் மாறாமல் திருமணம் செய்து கொண்டனர்.குடும்பத்தில் பலரும், அத்தை, சித்தி, தம்பி அனைவரும் சாதி, மத வரம்புகளைக் கடந்து திருமணம் செய்தனர். நான் என் கல்லூரி சக மாணவர், பிராமண சமுதாயத்தைச் சார்ந்த சுப்ரமணியனை மணந்தேன்.

என் மகன் நரேந்திரா, கேரள நாயரை மணந்தான். என் மகள் அஜந்தா, கருப்பின அமெரிக்கரை (African-American) மணந்தாள்.நான் 1938ல் திண்டுக்கல்லில் பிறந்தேன். நினைவுக்கெட்டும் பிள்ளைப் பிராயத்தில் சுதந்திரப் போராட்டத்தின் லட்சியக் காற்று எங்களைச் சூழ்ந்திருந்தது. என் தந்தை சுதந்திரப் போராட்டத்திடமும், அதன் தலைவர்களிடமும் மிகுந்த பக்தி கொண்டவர். அவரது ஆதர்ச தலைவர் சித்தரஞ்சன் தாசின் மனைவியின் பெயர்தான் எனக்கு வைக்கப்பட்டது. காந்தி இறந்த செய்தி கேட்டதும் என் தந்தை கதறி அழுததும், ஒரு வாரம் சாய்வு நாற்காலியை விட்டு எழாமல் கிடந்ததும் என் நினைவில் பதிந்தவை. ஒரு மாதம் என் குடும்பமே துக்கம் அனுஷ்டித்தது.

எட்டு வயது வரை நான் பள்ளிக்குப் போகவில்லை. நான் போக விரும்பவில்லையாம். பெற்றோர்களுக்கும் பள்ளிக்கு அனுப்பித்தான் எனக்குக் கல்வி அளிக்க வேண்டும் என்று தோன்றவில்லையாம். என் ஆரம்பக் கல்விக்கு அஸ்திவாரம் இட்டது என் அம்மா. கல்வியைப் பொறுத்தமட்டில் அது ஒரு கனாக் காலம். பெற்றோரின் அதீத கனவுகளை நிறைவேற்ற, கொடிய போட்டி நிறைந்த உலகில் குழந்தைகள் தள்ளப்பட்ட காலம் அல்ல. நான் துணைவேந்தராக இருந்த பொழுது சொல்வதுண்டு, ‘எட்டு வயது வரை பள்ளிக்குப் போகாத நான் துணைவேந்தராக ஆகியிருக்கிறேன். குழந்தைகளை வருத்தாதீர்கள்...’ என்று.

பள்ளி முடித்து, சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பும், பின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றில் B.A. Honoursம் படித்தேன்.
என்னை உருவாக்கியதில் எனது அரசியல் நம்பிக்கைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. என் அடிப்படை அரசியல் சித்தாந்தம் என் வாழ்வின் பெரும் உந்து சக்தியாக இருந்திருக்கிறது. வாழ்வின் பல முடிவுகளை எடுப்பதற்குக் காரணியாக  இருந்திருக்கிறது; இருக்கிறது. அரசியல் என்பதற்கு ஒரு பரந்த இலக்கணம் உண்டென்றால், I am a political animal என்று சொல்லலாம்.  

என் அப்பா பெரியாரிடம் மிகுந்த மரியாதையும், அவரது கருத்துகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டிருந்தார். பெரியாரிடம் கொண்ட ஈடுபாடு தொடர்ந்து உருவான திராவிட இயக்கத்திடம் உண்டாகவில்லை. என் நிலையும் அதேதான். எனக்கும் பள்ளியில் இருந்தபோதே பெரியாரைப் பிடிக்கும். ஆனால், திராவிட இயக்கத்தின் பால் கொஞ்சமும் ஈர்க்கப்படவில்லை.

திராவிட இயக்க சித்தாந்தத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்படாமல் போனதற்குக் காரணம், ஏற்கெனவே மார்க்சியத்திடம் மனதையும், அறிவையும் பறிகொடுத்துவிட்டதுதான். மார்க்சிய நம்பிக்கை இன்றுவரை என் ஆன்ம நேயமாகவும், அறிவார்ந்த சமூக சித்தாந்தமாகவும் நின்று, என் நிலைப்பாடுகளை ஒருமைப்படுத்துகிறது.

1957ல் மாநிலக் கல்லூரியில் B.A.Honours வகுப்பில் சேர்ந்ததிலிருந்து மார்க்ஸியம் பற்றி படிப்பதும், புரிந்துகொள்ள முயற்சிப்பதும் சீராகத் தொடங்கிற்று. சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் பிரமாண்ட வளர்ச்சி, செஞ்சீனத்தின் எழுச்சி, க்யூபா, வியட்நாம் இவைதான் உணர்வு
களை ஆட்கொண்டிருந்தன.

இந்திய அரசியலிலும், இடதுசாரி இயக்கங்கள்தான் நம்பிக்கைக்கு உரியவையாக இருந்தன. கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடின் அமைச்சரவை, உலகில் தேர்தல் மூலம் அதிகாரத்தை வென்ற முதல் கம்யூனிஸ அரசு, 1959ல் நேரு அரசினால் கலைக்கப்பட்டபோது கடும் கோபமும், ஆத்திரமும் பொங்கியது.

எனது மார்க்ஸிய ஈடுபாடு ஆரம்பத்தில் ஒரு uncritical faith, கேள்விக்கு உட்படுத்தாத நம்பிக்கையாகத்தான் இருந்தது. போகப்போக, ஸ்டாலினிசத்தின் கொடூரமும், ஜனநாயக - மனித உரிமை மறுப்பும், சோவியத் யூனியனில் உருவான managerial classன் ஆதிக்கமும், பின்பு சோவியத் யூனியனின் சிதைவும் பல நம்பிக்கைகளைத் தகர்த்தன.

ஆயினும், இவையெல்லாம் மார்க்ஸியத்தின் திரிபுகள், மறுப்புகள் என்றுதான் பார்க்கிறேனே ஒழிய, மார்க்ஸிய சித்தாந்தம்தான் இன்றும் என் நம்பிக்கை.
இடதுசாரி அரசியலிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் இளம் வயதிலேயே பரிச்சயம் ஏற்படுவதற்குக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பு தவறிவிட்டது.
என் தாய் வழிப் பாட்டனார் சக்கரைச் செட்டியார் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் கர்த்தாக்களில் முக்கியமானவர். பல காரணங்களினால் அவருடைய நேரடித் தாக்கம் எனக்கு இல்லாமல் போனது என் வாழ்வின் மிகப் பெரும் இழப்பு என்று கருதுகிறேன்.

ஆயினும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டவை என்னை மிகவும் கவர்ந்தன. தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டுவதற்கு அவர் பட்ட பாடு, ஒன்றுமே அறியாது, முதலாளித்துவ சுரண்டல்களுக்கு ஆளாகி இருந்த தொழிலாளர்கள் அவர்களது உரிமைகளை உணரச் செய்த முயற்சிகள், அவர் வழக்கறிஞராகவும் இருந்ததால், தொழிற்சங்க வழக்குகளை நீதி மன்றத்தில் வாதாடியது... இவையெல்லாம் எங்கோ என்னைத் தொட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

பிற்காலத்தில் ஆசிரியர் இயக்கத்தில் நான் இணைந்து, போராட்டத்தில் குதித்ததும், இடதுசாரி இயக்கங்களின் பால் தீர்க்கமாக ஈர்க்கப்பட்டதும் இந்தத் தாக்கத்தின் விளைவாக இருக்கலாம்.பெண் விடுதலைக் கருத்துகள் என்னிடம் எவ்வாறு உருவாகின என்பதைச் சொல்ல வேண்டும். பொது வாழ்வில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் இருக்கும் முதல் அடையாளம் ‘பெண்’ என்பதுதான். ஓரளவிற்கு என் தந்தை இதற்குக் காரணம். என் வளர்ச்சியில் முழு ஆர்வம், ஆதரவு காட்டியவர். என் தம்பிக்கு இணையாக, அவனை விடவும் அதிக செல்லமாக என்னை வளர்த்தார். அன்று பெண்கள் அறியாத சில துறைகளில் எனக்குப் பரிச்சயம் உண்டாக்கினார்.

உதாரணம், கிரிக்கெட். அன்று, ஐம்பதுகளில் சென்னைக்குத் தெற்கில் கிரிக்கெட் என்பதே யாருக்கும் தெரியாது. சென்னையில் நடக்கும் ஒரு test matchஐயும் விடாமல் அவருடன் போய் பார்த்திருக்கிறேன்.என் பணி வாழ்வு குறித்துப் பார்க்கலாம். கல்லூரிப் படிப்பு முடிந்த உடனேயே, அதே ஆண்டு 1959ல், இருபது வயதில் சென்னை ராணி மேரி கல்லூரியில் வரலாற்றுத் துறை ஆசிரியராகச் சேர்ந்தேன். பல கல்லூரிகளில் பணி புரிந்திருக்கிறேன். மதுரை, திண்டுக்கல், கும்பகோணம் ஆகியவற்றில்.

பின்பு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இருமுறை துணை வேந்தராக, 1992 முதல் 1998 வரை பொறுப்பேற்றிருந்தேன். அதன்பின், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராக 2002 முதல் 2005 வரை மூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன்.ஏற்ற அனைத்துப் பணிகளிலும், நான் வகுத்துக் கொண்ட லட்சியங்கள் வழி நடக்க ஓரளவு முயற்சித்தேன்.

கல்வி நிறுவனங்கள் தங்களைச் சுற்றி பெரும் மதில் சுவர்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இன்றைய கல்வி அன்னியப்படுத்தும் கல்வி. மாணவரை, ஆசிரியரை, கல்வியின் உள்ளடக்கத்தை, சுற்றிலுமிருக்கும் சமுதாயத்திலிருந்து அன்னியப்படுத்தும் கல்வி. இதனை மாற்றி, கல்வி நிலையங்களை சமுதாயத்துடன் இணைக்கும் பாலங்கள் கட்டப்பட வேண்டும். இது நான் வகுத்துக் கொண்ட அடிப்படை லட்சியம்.

கல்லூரிகளுக்குள் இருக்கும் சில spaces, வாய்ப்புகளை பயன்படுத்தினேன். நான் பணிபுரிந்த திண்டுக்கல், கும்பகோணம் மகளிர் கல்லூரிகளில் மாணவர் பேரவை, நாட்டு நலத் திட்டம், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றின் மூலம் சமூக உணர்வை, பெண் உரிமை சிந்தனைகளை விதைக்க முயன்றேன்.
கல்லூரி மாணவியர் பெண் உரிமை வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்தி, கோஷங்கள் முழங்கி, சிறு நகர வீதிகளில் வலம் வருவது எண்பதுகளின் தொடக்கத்தில் அறியாத புதுமை. சர்ச்சைகள் கிளம்பின.

திண்டுக்கல் கல்லூரியில் பணி புரிந்தபோது, ஜாக்டீ (JACTEA) என்ற கூட்டமைப்பின் பெரும் ஆசிரியர் போராட்டம் மாநிலம் முழுவதிலும் வெடித்துக் கிளம்பிற்று. அதில் நான் தீவிரப் பங்கேற்று, எங்கள் பகுதி ஆசிரியரைத் திரட்டும் பொறுப்பை மேற்கொண்டேன். என் தலைமையில் பெண் ஆசிரியர் ஏராளமானோர் போராட்டத்தில் இறங்கி, மறியல் செய்து, சிறை சென்றனர். பின் நடந்த கல்லூரி ஆசிரியர் போராட்டத்தில் நான் சிறையில் பனிரெண்டு நாட்கள் இருந்தேன்.

அரசுகள் தங்களை எதிர்க்கும் போராட்டங்களை சகித்துக் கொள்வதில்லை. அன்றைய எம்ஜிஆர் அரசின் கடும் கோபத்திற்கு ஆளானேன். எனக்குப் பாடம் கற்பித்து, அடக்கும் எண்ணத்துடன், அரசு என்னை திண்டுக்கல்லிலிருந்து, கும்பகோணத்திற்கு இடமாற்றம் செய்தது.

அதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இன்றி, நானே வாதாடினேன் (as party in person). இட மாற்றம் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது என் வாதம்.

நீதிமன்றம் என் இட மாற்றத்திற்குத் தடை விதித்தது. தமிழக அரசு அதை எதிர்த்து அமர்வு நீதி மன்றத்திலும் (Division Bench ), பின் உச்ச நீதி மன்றத்திலும் மேல் முறையீடு செய்தது. இறுதி வரை வெற்றி என் பக்கமே நின்றது.துணை வேந்தரானபின் அமைப்புக்குள், பாடத்திட்டத்திற்குள் என் கனவுகளை, அக்கறைகளைப் புகுத்த முயற்சித்தேன். Social Value Education என்ற ஒரு புதிய பகுதியை அனைத்து இளங்கலை மாணவருக்கும் கட்டாய பாடமாக்கினோம். ‘இந்தியாவில் பெண்களின் நிலை’, ‘கிராமிய இந்தியா’, ‘மனித உரிமைகள்’,  ‘சுற்றுச் சூழல்’ போன்ற பாடங்கள்.

‘Secularism’ (மதச் சார்பின்மை) என்ற பாடம் இந்தியாவிலேயே எங்கள் பல்கலையில்தான் முதலில் தொடங்கப்பட்டது. பாபர் மசூதி 1992 டிசம்பரில் இடிக்கப்பட்ட போது, அதைக் கண்டித்து, பெரும் ஊர்வலம் என் தலைமையில் நடத்தினோம். இந்துத்துவத் தலைவர்கள் சிலர் ஆத்திரப்பட்டார்கள். ‘துணைவேந்தருக்கு இதுவா வேலை? பாடத் திட்டம் வகுப்பது, பரீட்சை நடத்துவது அத்துடன் நிற்க வேண்டியதுதானே?’ என்று சாடினார்கள்.

துணை வேந்தராக இருந்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். கல்லூரி நிர்வாகங்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இப்படிப் பல தரப்பினருடன் மோதிக்கொண்டுதான் இருந்தேன். ஆனால், என்னை எதிர்த்தவர்களைவிட ஆதரித்தவர்கள், அன்பு செலுத்தியவர்கள் பல மடங்கு அதிகமாக இருந்தனர் என்று நினைக்கிறேன்.

மகளிர் ஆணையத்தில் இருந்த மூன்று ஆண்டுகள் இதற்கும் மேலான போராட்டங்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்பவர் சக்தி வாய்ந்த எதிர்ப்புகளை சந்திக்க நேரும் என்பது உண்மை. அதிலும் முக்கிய மோதல்கள் ஏற்பட்டது காவல்துறையுடன்.

ஒவ்வொரு பொது விசாரணையின் போதும் தலைமைப் பணியில் இருந்த அதிகாரிகளிலிருந்து, ஏராளமான காவல்துறையினரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கி இருக்கிறேன். எதிர்ப்பு இல்லாமல் எப்படி இருக்கும்?

பல ஆண்டுகளாக நான் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை, பெண்ணுரிமை, கல்வி போன்ற தளங்களில் இயங்குபவற்றில் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறேன். மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் பகுதியான மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவராக எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்று, நாட்டின் இருபது மாநிலங்களின் பள்ளிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் மனித உரிமைக் கல்வியைக் கொண்டு சென்றிருக்கிறோம்.

இப்போது, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறேன். அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்குகிறோம்.

எனக்கு வரித்துக்கொண்ட லட்சியங்களை, புது உலகம் படைக்கும் லட்சியங்களை, அமைப்பின் உள்ளிருந்தும், அமைப்பின் வழியாகவும், அமைப்பிற்கு வெளியே அதனைச் சுற்றியும், அமைப்பை உடைத்தும் தொடர முற்பட்டிருக்கிறேன். ஏமாற்றங்கள் பல விளைந்தாலும், சோர்வடைந்துவிடாத அளவிற்காவது நம்பிக்கையும் தந்தன.  

ஆ.வின்சென்ட் பால்