நான்ஸ்டாப் காமெடிக்கு நாங்க கேரண்டி! இயக்குநர் இராணா பளீர்



‘‘சந்தோஷமா உங்களை வைச்சுக்க முடிகிற காமெடிப் படம்தான் ‘நான் சிரித்தால்’.
நிஜமாக காமெடி பண்றதுதான் ரொம்ப கஷ்டம்.

இப்பவும் சார்லி சாப்ளின்தான் உலகின் மிகப் பெரிய காமெடியன். அவருடைய படைப்புகளில் சிரிக்கச் சிரிக்க நமக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்திருக்கார்.இந்தப் படம் கலகலன்னு காமெடியில் பயணமாகும். நிறைய கேரக்டர்கள் இதில் இருக்காங்க.
சந்தோஷமாக போற கதை. ஆட்டம் பாட்டம், ஊர்த்திருவிழா மாதிரி படம் கொண்டாட்டமாக இருக்கும். மிடில் கிளாஸ், சென்டிமென்ட், எமோஷனல், காமெடினு குடும்பமா பாக்குற மாதிரி செம ஜாலியா போகும்...’’ நேரடியாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் இராணா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பட்டறையிலிருந்து வந்திருப்பவர்.

எப்படியிருக்கும் ‘நான் சிரித்தால்’?
இதுவரைக்கும் ஆதி இளைஞர்களுக்குத்தான் படம் பண்ணியிருக்கார். இது எல்லாருக்குமான படமாக அமைந்து விட்டது. ஹீரோவுக்கு ஒரு பிரச்னை. சோகம் வந்தால் சிரிப்பு வந்திடும். கோபமாக இருந்தாலும் சிரிச்சிடுவார். எந்த உணர்ச்சிக்கும் அவரோட பதில் சிரிப்பாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட இடத்தில் அவருக்கு வீணாக சிக்கல்கள் வந்து சேர்கிறது.

சரி, காதலிக்க வைப்போம்னா அதிலும் ஆதியைத் தாண்டி நிற்கிற பொண்ணு. அடுத்தடுத்து சுவையான சம்பவங்களால் படம் நிற்கும். ஒரு விஷயத்தை வெளியே நின்னு பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். அதையே பக்கத்தில் நின்னு பார்த்தால் தீர்க்க முடியாத பிரச்னையாக இருக்கும்.
இதையெல்லாம் ஹீரோ எப்படி சமாளிச்சு வழி நடத்துறார்ங்கிற சின்னஞ்சிறு கதைதான் ‘நான் சிரித்தால்’. ஆனால், உங்களை இரண்டு மணி நேரத்திற்கு உள்ளே உட்கார வைச்சு சந்தோஷமாக அனுப்பி வைக்கிற படம்.

சினிமாவில் ஸ்டைல், படம் எடுக்கிற விதம் மாறியிருக்கு. ஆனால், உணர்வுகள் மாறவேயில்லை. சினிமாவின் புரிந்துகொள்ள முடியாத எளிமையாக இதைப் பார்க்கிறேன். அப்படிப் பார்த்தால் இது எல்லா எளிய மக்களுக்கான ஜாலியான படம். மக்களுக்கு குடைச்சல் கொடுக்காமல் சந்தோஷமாக இரண்டு மணி நேரத்தை செலவழிக்க வழியமைச்சுக் கொடுத்திருக்கேன்.

ஆதி தொடர்ந்து ஹிட் கொடுத்திட்டே இருக்கார்... இதுல பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி வருவார். எல்லாத்தரப்பு மக்களிடமும் போய்ச் சேரணும்னு அவர் நடிச்ச படம். படத்தில், நாம் வாழ்ந்துகிட்டு இருக்கிற இந்த வாழ்க்கைக்கு வெளியே இருந்து எதையும் எடுத்துக்கிட்டு வரலை. நாம் கேட்டுக் கேட்டு உணர்ந்த விஷயங்களை ஜாலியாகச் சொல்லியிருக்கேன்.

எப்போதும் அவர் இசையில் அவ்வளவு வித்தியாசம் கொடுப்பார். எல்லோருக்கும் தெரியும். இதில் காமெடி நடிப்பில் நல்ல உச்சத்திற்கு போயிருக்கார்.
எந்நேரமும் அவர் மனது இசைக்கு ரெடியாக இருக்கும். சாதாரணமாக யாருக்கும் ஷூட்டிங் முடிஞ்சதும் ஓய்வெடுக்கத்தான் தோணும். ஆனால், ஷூட்டிங் முடிஞ்சும் இசைக்கு நேரத்தை செலவிடுவார். அறிமுக இயக்குநர்களுக்கு ஆதி ஒரு வரப்பிரசாதம்.

இதிலும் அழகான ஆறு பாடல்கள் அருமையாக வந்திருக்கு. நிறையப் பாடல்கள் வெளியாகி அதகளம் பண்ணிட்டு வைரல் ஆகியிருக்கு.
உண்மையிலேயே நகைச்சுவைதான் பெரிய விஷயம்னு நம்புறவன் நான். ஒரு மனுஷன் எவ்வளவு கவலையாக இருந்தாலும், மலர்ந்து சிரிக்க வைக்கிற அருமருந்து நகைச்சுவை. எங்கே முரண்பாடு இருக்கோ, அதையே தொலைவில் நின்னு பார்த்தால் விஷயம் ஒண்ணுமே இல்லைன்னு இருக்கும். அதை அழகா புரிஞ்சுக்கிட்டு ஆதி பின்னி எடுத்திருக்கார்.

ஐஸ்வர்யா மேனன் இருக்காங்க...
இரண்டு பேருக்கும் வருகிற ரொமான்ஸ் ரொம்ப அழகு. இன்றைய இளைஞர்களுக்கு பிடிச்ச பொண்ணாக இருப்பார். ஆதி - ஐஸ்வர்யா ஜோடி நல்லாயிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. இரண்டு பேருக்குமான கேரக்டர் வித்தியாசங்கள் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கும்.

கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி சீனியர்கிட்டே ஒர்க் பண்றது அருமையாக இருக்கு. ஒவ்வொரு சீனையும் எப்படி அழகுபட செய்யணும்னு அவர்கிட்டே கத்துக்கலாம். ஒவ்வொரு சீனிலும் அவர் தெளிவு அடைந்து விட்டால் அதை அப்படியே மேலே கொண்டு போய் விடுவார்.
முனீஸ்காந்த் வரவர நல்ல குணச்சித்திரமாக உருவாகிக்கிட்டு வருகிறார். அவரை கேரக்டருக்கும், நகைச்சுவைக்கும் அப்படி அழகாக பயன்
படுத்திக்கலாம்.

கேமிராமேன் வாஞ்சிநாதன் மேஜிக் தெரிந்தவர். இப்ப நிறையப்படங்கள் செய்திட்டு இருக்கார். வடிகால் அமைத்துக் கொடுத்தால் எல்லோரும் பிரமாதப்படுத்திவிடமுடியும் என்பதற்கு அவரே ஒரு உதாரணம். வாஞ்சியோட ‘டக்கர்’ படம் கூட அடுத்து வெளிவருது.
ஷங்கர் என்ன சொன்னார்..?     

கொஞ்சம் குறும்படங்கள் எடுத்துப் பார்த்திட்டு ஷங்கர் சார்கிட்டே சேர்ந்தேன். அவரிடம் இருந்த இரண்டு வருஷ அனுபவத்தில் கத்துக்கிட்டது அதிகம். இப்படி படம் செய்றேன்னு சொன்னதும் ஆசீர்வதிச்சு ‘பிரமாதமாக படம் பண்ணி நல்ல பெயர் வாங்கு’னு அனுப்பி வைச்சார்.

எங்க புரடியூசர் பத்தி சொல்லணும். சுந்தர்.சி சார் என்னிக்காவது ஹலோ சொல்லத்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். படத்தின் தரம் குறைந்து விடக்கூடாதுன்னு என்ன செலவு செய்யவும் தயாராக இருப்பார். படத்திற்காக எது கேட்டாலும் கிடைக்கும். அவருடைய எதிர்பார்ப்பும் நிறைவேறணும். அதற்காக பாடுபட்டிருக்கோம்.

அவருக்கு தொடர்ந்த வெற்றி கொடுப்பதில் என் பங்கு நிச்சயம் இருக்கும். சுந்தர்.சி சாருக்கு நன்றிங்கிற ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு மறந்துவிட
முடியாது!                                   

நா.கதிர்வேலன்