தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் அதிகரிப்பது ஏன்..? பாடலாசிரியர்கள் குறைவாக இருப்பது ஏன்..?



கோலிவுட்டில் படத்திற்கு படம் புது இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. முந்தைய 2018ம் ஆண்டைக் காட்டிலும் சென்ற ஆண்டில் அதிகம் ஒலிக்கிறது.

அதிலும் 2019ல் முழுமையடைந்து ரிலீஸுக்கு தயாரான சுமார் எழுபது படங்களில், இருபது பேர்களுக்கு மேல் புது இசையமைப்பாளர்கள் என்கிறார்கள்.ஆனால், பாடலாசிரியர்களின் எண்ணிக்கை நேர் எதிர். வருடத்திற்கு வருடம் அவர்கள் எண்ணிக்கை சரிகிறது. இதுபற்றி திரையுலக பிரபலங்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘இந்தியாலயே நம்ம தமிழ்நாட்லதான் சிறந்த இசையமைப்பாளர்கள் இருக்காங்க. நம்ம ஊர்ல ரசனையான இசையமைப்பாளர்கள் அதிகரிச்சிட்டே இருக்க காரணமிருக்கு. கர்னாடக சங்கீதமே தமிழ் மண்ணில் இருந்து தோன்றியதுதானே! இளையராஜால இருந்து ஹாரிஸ் வரை எல்லாரும் இன்னமும் பீக்லதான் இருக்காங்க.

இங்க இசையமைப்பாளர்கள் அதிகரிப்பதுல ஆச்சர்யமில்ல...’’ உற்சாகம் பொங்க பேச ஆரம்பித்தார் மகிழ்திருமேனி. சென்ற ஆண்டில் கவனம் ஈர்த்த ‘தடம்’ படத்தை இயக்கியவர். அதில் அருண் ராஜ் என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியிருந்தார் அவர்.

‘‘என் முந்தைய படங்கள்ல தமன்னோடுதான் ஒர்க் பண்ணியிருந்தேன். ‘தடம்’ டேக் ஆஃப் ஆகி உடனே ஷூட் போகணும் என்கிற சூழல். தவிர சின்ன பட்ஜெட் படம் வேறு. படம் ஆரம்பிச்சு அது ரீலீஸ் வரை என் கூடவே ட்ராவல் பண்ற இசையமைப்பாளர் ஒருத்தர் வேணும்னு விரும்பினேன்.
அப்படித்தான் அருண் ராஜை அறிமுகப்படுத்தினேன். திறமையானவர் அவர். அவரோடு அமர்ந்தே சீனுக்கு என்னென்ன வேணும்னு ஒர்க்கை கேட்டு வாங்கினேன்.

புதியவர்கள் ஜஸ்டின் பிரபாகர், அரோல் கொரேலி, அருண்னு இப்ப வர்றவங்ககிட்ட புது ஃப்ளேவர் இருக்கு. எல்லோர் இசையையும் உள்வாங்கி, தங்களுக்கென தனித்துவமா வெளிப்படுத்தவும் செய்றாங்க...’’  பெருமிதப்படுகிறார் மகிழ்திருமேனி. பாடலாசிரியர் விவேகாவும், இசையமைப்பாளர்களுக்கு வெல்கம் பொக்கே நீட்டுகிறார். ‘‘இசையமைப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கறது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமானதுதானே...’’ என்றபடி பேச ஆரம்பித்தார்.

‘‘பாடலாசிரியர்கள் எண்ணிக்கை குறைவா இருக்குனு சொல்ல முடியாது. மொழி ஆளுமை இருந்தால்தான் பாடல்கள் எழுத முடியும். இம்ப்ரஸ் பண்ற மாதிரி வரிகள் எழுதலைனா, அவங்கள யாரும் பயன்படுத்த மாட்டாங்க. ஓர் இசையமைப்பாளர் ஒரு படத்துக்கு ஆறு பாடலாசிரியர்
களைக்கூட எழுத வைக்கிறார். ஒரே நாளில் ஏழெட்டு படங்களுக்குக் கூட நான் பாடல் எழுதியிருக்கேன்.

இப்ப நான் ஐம்பது படங்களுக்கு மேல பாடல் எழுதிட்டிருக்கேன். இப்படி ஹிட் கொடுத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கறதால கூட, புதியவர்களுக்கு சான்ஸ் கிட்டாம போயிடுது...’’ என்கிறார் விவேகா. ஆனால், த்ரிஷாவின் ‘ராங்கி’ இசையமைப்பாளர் சி.சத்யாவிடம் பேசினால் வேறு கோணம் தெறிக்கிறது.‘‘சினிமாவில் யங்ஸ்டர்ஸ் நிறைய வந்துட்டிருக்காங்க. ஒவ்வொருத்தரும் குறும்படங்கள் இயக்கி தங்கள் திறமையை நிரூபிச்சு அப்புறமா படங்கள் பண்றாங்க.

அப்ப ஷார்ட் ஃபிலிம் காலத்துல இருந்தே, தங்களோடு பயணிப்பவர்களை முதல் படத்துல அறிமுகப்படுத்தறாங்க. அடுத்தடுத்து அவங்க ஹிட்ஸ் கொடுக்கும் போது, கவனம் ஈர்க்கறாங்க. பிரபுதேவாவின் ‘தேள்’ படத்துக்காக ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தறேன். அவர் வரிகளைக் கேட்ட பிரபுதேவா சார், மேலும் ரெண்டு பாடலுக்கான வாய்ப்புகளை அவருக்கு கொடுத்தார். இப்படி நம்ம திறமையை நிரூபிச்சா, அதுக்கான மரியாதை கிடைக்கும்...’’ என்கிறார் சத்யா.

‘தமிழ்த் திரைப்பா கூடம்’ என்ற அமைப்பின் மூலம், பாடலாசிரியர்களை உருவாக்கி வரும் ப்ரியனிடம் பேசினோம். ‘‘அந்தக் காலகட்டத்துல இசையமைப்பாளர்களின் பங்கு பின்புலமா இருந்தது. இப்ப இசையமைப்பு, கிரியேஷன்ல இருந்து தொழில்நுட்பமா மாறிடுச்சு. ராகம், தாளம், ஸ்ருதி தெரியணும்னு அவசியமில்ல. ரிதம் பீட்ல ரெண்டு மூணு சிங்க் ஆச்சுனாலே இசையமைக்க முடியுது.

யாரையும் குறையா சொல்லல. டெக்னாலஜி வந்துடுச்சு. இசை ஒரு படைப்பா இருக்கற வரை, ஒரேயொரு ஆர்மோனியம் போதுமானதா இருந்துச்சு. காலத்தால் அழியாத பாடல்கள் அதில்தான் பிறந்திருக்கு. இன்னமும் இளையராஜா ஆர்மோனியத்துலதான் ட்யூன் போடுறார். டெக்னாலஜி வந்த பிறகு இசை எளிதாகிடுச்சு.

ஆனா, பாடலாசிரியர்கள் எண்ணிக்கை குறைஞ்சதுக்கு இந்த சமூகமே காரணம். இங்க டெக்னாலஜி கைகொடுக்காது. கிரியேஷன் முக்கியம். மொழி மேல இப்ப யாருக்கும் மரியாதை இல்ல. பணத்தைத் தேடி சமூகம் ஓடிட்டு இருக்கு. ஒரு கவிதையை நாலு பேர் பாராட்டறப்பவும், ஒரு பாடலுக்கு வரவேற்பு கிடைக்கறப்பவும் ஏற்படுற போதை இருக்கே... அதுலதான் நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம். இதைத்தாண்டி பெருசா எதுவும் சொல்லிட முடியாது.

இசைல இருந்து நடிப்பு வரை எல்லாத்துக்குமே முறையான கோர்ஸ் இருக்கு. ஆனா, திரைப் பாடல் எழுத எந்த கோர்ஸும் இல்ல. அதனாலதான் தமிழ்த் திரைப்பா கூடம் ஆரம்பிச்சேன். யாப்பு, அணி இலக்கணத்துல ஆரம்பிச்சு, சங்க இலக்கியங்கள், பின் நவீனத்துவ கவிதைகள் வரை எல்லாமே பாடமா வச்சிருக்கோம்.

நான் பாடல் எழுதறப்ப சிலர், ‘ரொம்பவும் கவிதையா வேணாம்... பேச்சு மொழில எழுதுங்க’னு சொல்வாங்க. இலக்கியம் தெரிஞ்சா, பேச்சு நடையைக் கூட கவிதையா மாத்தி எழுத முடியும். இளையராஜா சார் பாடல்கள்ல சரணத்துல கூட மூணு சேன்ஜ் ஓவர்ஸ் வந்துடும். சந்த நுட்பம் மிளிரும்.
உதாரணமா, ‘வளையோசை கலகல...’ பாடல் அவ்ளோ சந்த நுட்பமானது. இன்னொரு விஷயம், வாய்ப்பு கிடைக்கறதே போராட்டமாதான் இருக்கு...’’ என்கிறார் ப்ரியன்.

ஆனால், ‘கத்துக்குட்டி’ , ‘மிருகா’ இசையமைப்பாளர் அருள்தேவோ, ‘‘இன்ஸ்டன்ட் டீ, காஃபி மாதிரி மியூசிக் டைரக்டர் ஆகறதும் இன்ஸ்டன்ட் ஆகிடுச்சு...’’ என அதிர வைக்கிறார்‘‘நான் இசையமைப்பாளரா அறிமுகமாகறதுக்கு முன்னாடி வித்யாசாகர் சார்கிட்ட ஒர்க் பண்ணிட்டிருந்தேன். ஏழெட்டு வருஷங்கள் அவர்கிட்ட இருந்தேன்.

ஆக்சுவலா அவர்கிட்ட இருந்த ஒரு வருஷத்துலயே தனியா மியூசிக் பண்ண எனக்கு ஆஃபர் வந்தது. இன்னும் ஸ்ட்ராங் பேஸ் வேணும்னு நான்தான் அதையெல்லாம் மறுத்தேன்.இப்ப அப்படியில்ல. ஆன்லைன்ல ஆறுமாச கோர்ஸ் படிக்கறாங்க. அடுத்த நாளே இசையமைக்க வர்றாங்க. ஒரு மேக் கம்ப்யூட்டர் வாங்கினா போதும்... ரிதம் தெரியணும்னு அவசியமில்லைனு ஆகிடுச்சு. வாய்ப்புகளும் எளிதாகிடுச்சு.

வாய்ப்பு வந்தா போதும்... சம்பளத்தை கணிசத்திலும் கணிசமா குறைச்சுக்கலாம்னு நினைச்சிருப்போம். அந்த வாய்ப்பையும் தட்டிப் பறிக்கறவங்க இந்தத் துறைல இருக்காங்க. இவங்க இன்ஸ்டன்டா வர்றா மாதிரியே அவங்க இசையும் யூஸ் அண்ட் த்ரோ மாதிரி ஒரே நாள்ல முடிஞ்சுடுது. இன்னிக்கும் இளையராஜாவைக் கொண்டாட காரணம், அவர் மேஸ்ட்ரோ.

என்கிட்ட வாய்ப்பு கேட்டு வர்ற பாடலாசிரியர்களுக்கு சிச்சுவேஷன், மெட்டு கொடுத்து எழுத வைப்பேன். இயக்குநர்கள் சொல்ற கதைகள்ல அந்த மாதிரி சிச்சுவேஷன் வர்றப்ப நான் எழுதச் சொல்லி வாங்கின பாடலைப் போட்டுக் காட்டுவேன். பாடலைக் கேட்ட இயக்குநர்கள், அது டம்மி லிரிக்ஸ்னு முடிவு பண்ணிடறாங்க. இப்படியும் சூழல் இருக்கு.

அதுக்காகவே இடையிடைல ஜிங்கிள்ஸ், தனி ஆல்பங்கள் வெளியிட்டு அந்தப் பாடலாசிரியர்களைப் பயன்படுத்திக்கறேன். சமீபத்துல கூட நான் இசையமைச்ச ‘ஸ்டைலீஷ் தமிழச்சியே’ ஜிங்கிள்ஸை ஒரு படத்துல பயன்படுத்தப் போறேன்...’’ என்கிறார் அருள்தேவ்.
ஆஃப் த ரெக்கார்டாக சிலரிடம் பேசினோம். அவற்றின் தொகுப்பு இது:

‘‘பெரிய இசையமைப்பாளர்கள் எல்லாருமே தங்கள் வேவ் லெங்த்துக்கு செட் ஆனவர் என்கிற பெயர்ல குறிப்பிட்ட சில பாடலாசிரியர்களையே பயன்
படுத்தறாங்க. இந்தப் பாடலாசிரியர்களும் ‘மொத்த பாடல்களையும் நானே எழுதறேன்’னு பேக்கேஜா பேசறாங்க.

இசையமைப்பாளர்கள் நிலை இன்னும் மோசம். சம்பளமே வேணாம்... வாய்ப்பு கிடைச்சா போதும்னு பலர் இருக்காங்க. ஓசில ஒர்க் பண்ணவும் செய்யறாங்க. இயக்குநர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய், படம் ஹிட்டானா வாழ்க்கையே மாறிடும்கிற கனவோட வலம்வர்றாங்க.

இதனாலதான் படத்துக்குப் படம் புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகறாங்க. இங்க, ‘நீ எப்படி வந்தே’னு யாரும் யாரையும் கேட்கறதில்ல. மாறா, ‘லேட்டஸ்ட்டா என்ன ஹிட் கொடுத்தே’னுதான் கேட்கறாங்க. சரக்கு இருந்தா அடுத்த படம் கிடைக்கும். இல்லைனா திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்.

பாடலாசிரியர்களுக்கும் இது பொருந்தும். ஒரேயொரு பாட்டு எழுதிட்டு அடுத்த பாட்டு கிடைக்காம இங்க பலர் இருக்காங்க. ஆனாலும் எல்லார் ஓட்டமும் சினிமாவை நோக்கியே இருக்கு. இந்த மேஜிக்தான் சினிமா!’’  

மை.பாரதிராஜா