மல்லர் கம்பம் விளையாட்டு அசத்தும் மாற்றுத் திறனாளிகள்!



‘‘தமிழர்களின் உடல்திறன் சார்ந்த பாரம்பரிய விளையாட்டுகள்ல மல்லர் கம்பம் முக்கியமானது. சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும் இந்த விளையாட்டுல கரை கண்டிருக்காங்க.  

ஆனா, இன்னைக்கு தமிழகத்துல அழிஞ்சிட்டு வர்ற கலைகள்ல ஒண்ணா இது இருக்கு. இந்த சூழல்ல அதை மக்கள்கிட்ட பரவலாக்கும் ஒரு சின்ன முயற்சிதான் மாற்றுத்திறனாளிகளுக்கான மல்லர் கம்பம்...’’ நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் ஆதித்யன். விழுப்புரத்தில் மல்லர் ஃபிட்னஸ் சென்டரை நடத்தி வரும் இந்த இளைஞர், இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளாலும் மல்லர் கம்பத்தில் பங்கெடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அந்த மாற்றுத்திறனாளிகள் குழு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் டிவி ஷோக்களில் மல்லர் கம்ப விளையாட்டைச் செய்து காட்டி பலத்த அப்ளாஸ் அள்ளியிருக்கிறது. ‘‘அந்தக் காலத்துல மல்யுத்தப் போட்டிகள் சிறப்பா நடந்திருக்கு. அதுக்கான பயிற்சியின்போது வீரர்கள் இறந்திருக்காங்க. அதைத் தவிர்க்கவே மரத்துல கம்பங்கள் செய்து அதுல பிடிபோட்டு பயிற்சி எடுத்திருக்காங்க. அதனால, தசைகள் வலிமையானதா மாறியிருக்கு. காலப்போக்குல அதுவே ஒரு விளையாட்டா உருவாச்சு. அதுதான் மல்லர் கம்பம்.

ஆனா, இதை தொடர்ந்து முன்ெனடுத்திட்டுப் போகாம விட்டுட்டாங்க. பிறகு, மல்யுத்தம் மாதிரி இந்த விளையாட்டும் அழிஞ்சிடுச்சு. 18ம் நூற்றாண்டுல மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பலம்பத்தா தாதா தியோதர் என்பவர் இந்த விளையாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தார்.
இன்னைக்கு தமிழகத்தைவிட வட இந்தியாவுலதான் இந்த விளையாட்டைக் கொண்டாடறாங்க. மத்தியப் பிரதேச மாநில அரசு இதை மாநில விளையாட்டா அங்கீகரிச்சிருக்கு...’’ என்கிற ஆதித்யன் இந்த விளையாட்டை ஐந்து வயதிலேயே கற்றுள்ளார்.

‘‘விழுப்புரத்துல கணேஷ், ஜனார்த்தனன்னு ரெண்டு மாஸ்டர்ஸ் இதைச் சொல்லிக் கொடுத்தாங்க. அதை எங்க அம்மா பார்த்திட்டு வந்து என்னைச் சேர்த்து விட்டாங்க. மாஸ்டர்ஸ் ரெண்டு பேரும் உலகதுரைனு ஒரு மாஸ்டர்கிட்ட கத்துக்கிட்டாங்க. உலக துரை மாஸ்டர்தான் எங்க எல்லோருக்குமே குரு. தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டைப் பரப்பி அசோசியேஷனா செயல்பட்டு வர்ற ஒரே மாவட்டம் விழுப்புரம்தான்.

யோகாவும், ஜிம்னாஸ்டிக்கும் சேர்ந்த கலைதான் மல்லர் கம்பம். எட்டு அடி தேக்குமரக் கம்பத்துல இந்த விளையாட்டை விளையாடணும். இதுல மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கு மல்லர் கம்பம்னு மூணு வகை இருக்கு. கயிறு மல்லர் கம்பம் பெண்களுக்கானது. தொங்கும் கயிற்றுல விளையாடுவாங்க. அதேமாதிரி தொங்கு மல்லர் கம்பம்ங்கிறது நான்கு அடி தேக்கு மரக் கம்பத்தையே கயிற்றுல தொங்கவிட்டிருப்பாங்க. அதுல விளையாடணும்.

நான், ஸ்கூல்ல படிக்கும்போதே மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டிகள்ல பங்கெடுத்து தங்கம், வெள்ளி, வெண்கலம்னு நிறைய பதக்கங்கள் வாங்கினேன். பிறகு, சேலத்துல தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துல ஃபிசிக்கல் எஜுகேஷன் படிச்சேன். 2012ல் அகில இந்திய பல்கலைக்கழக அளவுல தங்கம் வாங்கினேன். தமிழகத்துல இந்த விளையாட்டுல முதல்முறையா பங்கெடுத்ததும், பதக்கம் வென்றதும் நான் ஒருத்தன்தான்...’’ எனப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஆதித்யன்.

‘‘ஃபிசிக்கல் எஜுகேஷன்ல பிபிஎட் முடிச்சிட்டு நான் படிச்ச சென்டர்ல பயிற்சியாளரா இருந்தேன். கடந்தாண்டு மல்லர் ஃபிட்னஸ் சென்டரை துவக்கினேன். காலைல அசோசியேஷனிலும் மாலைல என் சென்டரிலும் இடைல சில தனியார் பள்ளிகளிலும் இந்த விளையாட்டுக்குப் பயிற்சி அளிக்கிறேன்.

இப்படிப் போயிட்டு இருந்தப்பதான் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. இந்த விளையாட்டை தமிழகம் முழுவதும் பரவலாக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் மாற்றுத் திறனாளிகளுக்குக் கத்துக்கொடுத்து, நார்மலா இருக்கிறவங்க மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளாலும் இந்தக் கலையைப் பயில முடியும்னு எல்லார்கிட்டயும் நம்பிக்கையளிக்க முடிவெடுத்தேன். உடனே, மாற்றுத்திறனாளியான டான்ஸர் பிரபுவைச் சந்திச்சேன்...’’ என்கிற ஆதித்யனை தொடர்ந்தார் பிரபு:

‘‘எனக்கும் விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமம்தான். சின்ன வயசுல மரத்துல இருந்து விழுந்துட்டதால என்னோட வலது கையை இழக்க வேண்டியதாகிடுச்சு. கால்லயும் பலத்த அடி. அப்புறம், விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் ஸ்கூல்ல படிச்சேன். நல்லா டான்ஸ் ஆடுவேன். எனக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர்தான் டான்ஸ் குரு. படிச்சு முடிச்சதும் மாற்றுத் திறனாளிகள் டான்ஸ் ட்ரூப்பை ஏற்படுத்தி நிகழ்ச்சிகள்ல டான்ஸ் ஆடிட்டு இருந்தோம். லாரன்ஸ் மாஸ்டரைச் சந்திச்சு எங்களப்பத்திச் சொன்னோம். எங்க பெர்ஃபாமன்ஸை பார்த்திட்டு அவரின் டிரஸ்ட்ல எங்களைச் சேர்த்துக்கிட்டார்.

‘கை கொடுக்கும் கை மாற்றுத் திறனாளிகள் நடனக் கலைக்குழு’னு நாங்க இயங்கிட்டு இருக்கோம். மாநிலங்கள், மாவட்டங்கள்னு வர்ற ஆஃபர்ல எங்க குரூப்பைக் கொண்டு போய் ஆடுவோம். சில நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட்டாவும் போயிருக்கோம்.

இப்படி போகும்போது விழுப்புரத்துல நண்பர்கள் வழியா ஆதித்யன் அறிமுகமானார். எங்களின் டான்ஸ் விடியோவைப் பார்த்திட்டு அசந்திருக்கார். அவரின் மல்லர் கம்ப விளையாட்டுக்கு நாங்க செட்டாவோம்னு நினைச்சு கூப்பிட்டார். நான் அந்த விளையாட்டைப் பார்த்தேன். ‘எங்களால இதைப் பண்ண முடியும்னு சுத்தமா நம்பிக்கையில்லங்க. வேண்டாம்’னு சொன்னேன். அவர், ‘உங்க குழுவை மட்டும் கூப்பிட்டு வாங்க. கத்துத் தர வேண்டிய பொறுப்பு என்னுடையது’னு தன்னம்பிக்கை கொடுத்தார்.

அவர் சொன்னபடியே போனோம். மூணு நாட்கள்ல கத்துக்கிட்டோம். அஞ்சாவது நாள்ல டெமோ செய்தோம். அதை டிவிகள்ல செய்யும்போது அங்கிருந்தவங்க ஆச்சரியமானாங்க. கேரளாவுல ஃபிளவர் டிவில மல்லர் கம்ப விளையாட்டைச் செய்து காட்டினோம். எல்லோரும் எழுந்து நின்னு பாராட்டினாங்க. உண்மையில மல்லர் கம்ப விளையாட்டால் உடலும் மனசும் இப்ப ரொம்ப நம்பிக்கையா மாறியிருக்கு. இனி, எங்க நிகழ்ச்சிகள்ல மல்லர் கம்ப விளையாட்டும் இருக்கும்...’’ சந்தோஷமாகக் குறிப்பிடுகிறார் டான்ஸர் பிரபு.

‘‘இப்ப மாற்றத்திறனாளிகளுக்கும் போட்டிகள் நடத்த எங்க அசோசியேஷன்ல பேசப் போறேன். இந்த விளையாட்டால் தசைகள் வலுப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கவனிக்கும் திறன் அதிகரிக்கும். அதனால, மாணவர்களுக்கு இந்த விளையாட்டு நிச்சயம் தேவை.

இன்னைக்கு வீட்டுக்கு வெளியே போய் கூட குழந்தைகள் விளையாடுறதில்ல. எப்பவும் செல்போனும் கையுமா திரியிறாங்க. இந்த விளையாட்டுக்கு அவங்கள திருப்பினா வாழ்க்கை மேம்படும். பெற்றோரும் நம் பாரம்பரிய கலையை புரிஞ்சுக்கிட்டு தங்கள் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டை கற்பிக்க முன்வரணும்.

ஏற்கனவே கல்லூரி அளவுல இருந்த இந்த விளையாட்டை இப்ப தமிழக அரசு பள்ளி விளையாட்டாவும் அங்கீகரிச்சு இருக்கு. இருந்தும் மக்கள் முன்னெடுத்தாதான் இந்தப் பாரம்பரியக் கலையை அழியாமல் பாதுகாக்க முடியும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஆதித்யன்.                           

பேராச்சி கண்ணன்