லவ் ஸ் டோரி- மனைவியை புரிந்து கொள்வது மிக எளிது! காதலியை புரிந்து கொள்வது கடினம்!



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

காதலை எப்படி உணர்ந்திருப்பேன்னு எனக்குத் தெரியாது. அடிப்படையா அம்மாவைத்தான் ஒரு பெண்ணா முதன் முதலில் பார்த்திருக்கேன்.

அவ்வளவு வசதி வாய்ப்போட இருந்தவங்க. வீட்டுக்கு நிலை வைக்கும்போது பவுன் வைத்து கட்டின வீடு.
ஆனாலும் அம்மா சாகும் போது போட்டுக்க குண்டுமணி தங்கம் இல்லை. அவங்க கடைசி பயணம் போகும்போது அவ்வளவு பாந்தமா சேலை உடுத்தி அழகுபட இருந்தாங்க.

அழகு, அன்பு, காதல் எல்லாத்தையும் முதலில் எனக்கு படிச்சுக் கொடுத்தது அந்த முகம்தான். அதுவும் ஒரு வகையான காதல்தான். பதினாலு வயசு வரைக்கும் டிராஜடி. சிரிக்கவே மறந்திருக்க மத்ததெல்லாம் எதுக்குன்னு ஆகிப்போச்சு.

முதன் முதலில் ஒரு பொண்ணாப் பார்த்து ரசித்தது ஓவிய டீச்சரைத்தான். அந்த உயரத்துக்கும், சேலைகள் கட்டுகிற முறையில்தான் அழகு பெறுகின்றன என பிரபஞ்சன் சொன்னதுக்கும் அவ்வளவு சம்பந்தம் இருக்கு. ஸ்கூல்ல இருந்து எங்க ஊருக்கு ஏழு கிலோமீட்டர் நடந்து போகணும். அப்ப கார் எல்லாம் கடந்து போகும். ‘காரின் ஓசையாய் கரைந்து போனாள்’னு சட்டுன்னு ஒரு வரி வந்துட்டு போனது உண்மை.

ஆரம்ப வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் பிடித்தமானவர்களில் டீச்சர் இல்லாமல் முடியாது. அந்த ஓவிய டீச்சரை வர்ணிக்கணும்னா நீங்கள் எனக்கு ஒரு இசைக்கருவியை பரிசளிப்பதே முறையானது. ஆனால், எதையும் தொடர்ந்து ரசிக்க முடியாமல் வாழ்க்கை சென்னைக்கு என்னைத் துரத்தியது.
தொடக்கத்தில் இந்த வாழ்க்கை சலுகையையும், ஈவு இரக்கத்தையும் கண்ணில் காட்டவில்லை. ஒன்று ஊருக்கு டெட் பாடியா போகணும் அல்லது பென்ஸ் காரில் போகணும்னு ஒரு திட்டத்தோடதான் வந்தேன். நாம நல்ல நிலைக்கு வருகிற வரை எப்படி இருக்கோம்னு ஊருக்கு தெரியக்
கூடாதுன்னு நினைச்சேன்.

யாருக்கும் முகவரி சொல்லவில்லை. அப்படியான பொழுதில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு ஒரு கடிதம் வருது. இல்லாத அம்மா எழுதுன கடிதமா வருது. ‘நான் நலம். நீ நல்லா இருக்கியா? எட்டு மணி நேரம் கண்டிப்பா தூங்கு. சனிக்கிழமை அவசியம் எண்ணெய் தேய்ச்சுக் குளி. பக்கத்து வீட்டு வெள்ளை மாடு கன்னுக்குட்டி போட்டுடிச்சு. அய்யாவு பொண்ணு வயசுக்கு வந்துட்டா. பெரியாத்தா பொண்ணுக்கு போன வாரம் கல்யாணம் முடிஞ்சுடுத்து‘ன்னு கடிதத்துல எழுதியிருந்தது.

அந்தக் கடிதம் எங்க அம்மா எழுதவில்லை. அது நானாக எனக்கு எழுதி போஸ்ட் பண்ணின கடிதம்தான். குடியிருந்த வீட்டுல இருந்து தீபாவளி, பொங்கலுக்கு எல்லோரும் ஊருக்கு போவாங்க. நான் மட்டும் போக மாட்டேன். நமக்கு யாருமே இல்லைன்னு வீட்டுக்காரங்க நினைச்சுடக் கூடாதுன்னுதான் அந்தக் கடிதத்தை நானே எழுதினேன்.

இந்த சமயம் என் மனைவி ஷர்மிளாவை நான் சந்திக்கிறேன். ஒரு துக்க வீட்டுக்கு போயிருந்தபோது அவங்க அறிமுகம் ஆகுறாங்க. பார்த்ததும் பிடித்துப் போனது. இந்தப் பொண்ணு காலத்துக்கும் எங்கூட வர்ற மாதிரி தெரியுது. அப்ப எனக்கு ஓர் அடையாளமும் இல்லை. நான் ஒரு நல்ல மனிதனாக வடிவெடுத்தது அவங்களை சந்திச்ச நேரத்துல இருந்து ஆரம்பிக்குது.

முகவரி கொடுக்குறேன். எனக்கு நிஜமாகவே ஒரு ெலட்டர் வருது. நான் எழுதின அம்மா கடிதம் மாதிரியே வருது. ஊருக்குப் போகக் கூடாது, பென்ஸ் கார் வாங்கிட்டுதான் ஊருக்குப் போகணும் என்கிற திட்டமெல்லாம் மறந்துவிட்டது. பொங்கல்,தீபாவளிக்கு லாரியை புடிச்சாவது ஊருக்குப் போய் நாலு வார்த் தை பேசிட்டு வர்றேன். ஒரு காஃபி ஷாப்பில் நடந்த சந்திப்பில் ‘நீங்க யாரையோ கல்யாணம் பண்ணிக்க போறீங்க… நான் யாரையோ கல்யாணம் பண்ணிக்க போறேன். ஏன் நாம கல்யாணம் செய்துக்கக் கூடாது’ன்னு கேட்டேன்.

யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘என் மேல காதல் எப்படி வந்தது’ன்னுஅவங்க கேட்டாங்க. ‘காதல் ஒரு நிமிஷத்துல வரலாம். பல வருஷம் வராமலே போகலாம். இப்ப நான் அளவெடுத்து சட்டை வாங்கிப் போடுறேன். வேலையில இன்னும் கவனிப்பா இருக்கேன்’னு சொல்லிட்டே போறேன்.

ஆனால், இப்படியெல்லாம் எனக்கு எடுத்துக் கூட்டி பேசத் தெரியாது. பேச வைத்தது காலம். அன்பும், அறிவும், தெளிவும், உறுதியும் கலந்திருக்கும் ஷர்மிளாவைப் பார்த்தபிறகே நான் காதலன் ஆனேன். இப்பவும் ஷர்மிளாவுடன் பேசிய நாட்களை நினைத்தால் என் சோர்வு அடியோடு நீங்கும். மனசுக்கு பிடிச்ச விஷயத்தை ஆராதிக்கிறதுதான் காதல். என்னை மாதிரியானவர்களுக்கு தேவைப்படுகிற ஆறுதல், ஆதரவு, அன்பு எல்லாமே ஒரேயொரு பொண்ணுகிட்ட கிடைச்சதுதான் எனக்கு பெரும் பாக்கியம்!

ஆரம்பத்தில் சுயநலமா இருந்திருக்கேன். மூணு வேளை சாப்பாடே கஷ்டம்னு ஆனபிறகு இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகிடலாம்னு முதல்ல யோசிச்சேன். பிறகு உழைக்க ஆரம்பிச்சேன். வாழ்ந்தால் போதும்னு இருந்தவன் இறங்கி வேலை பார்க்கிறேன்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஷூட்டிங்கில் இருக்கேன். அவங்க ‘சென்னைக்கு புறப்பட்டுட்டாங்க‘ன்னுசெய்தி வருது. நண்பர்கள் கை கொடுக்க ஷர்மிளாவை என் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கிறேன். சுவத்துல ஆட்டோமேட்டிக் கேமராவைப் பொருத்தி புதுச் சேலை, புது வேட்டி கட்டி யாருமில்லாமல் தாலி கட்டிக்குறோம்.

வீட்டில் இருந்து என்னை நம்பிப் புறப்பட்டு வந்திருக்கிறாள். அன்பான பெற்றோர்களிடமிருந்து, நீங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து புதிய இடத்துக்கு வந்து பாருங்கள். புரியும். அதற்கு முதலில் அனாதை போல் வாழ்ந்து பழக வேண்டும். ருசி, நல்லது கெட்டது, பாசம், கூட்டமாக இருந்தது என ஒதுங்கி,கணவனே என இருந்து பார்க்க வேண்டும்.

சமூகத்தை அப்படி எதிர்கொள்வது எளிமை இல்லை. நாங்கள் பெற்ற பாடம் யாரும் அறியாதது. உங்கள் மீது கொட்டப்பட்ட வெறுப்பை அன்பாக மாற்றவேண்டும். அன்பு ஒவ்வொரு மனித இதயத்திலும் வசிக்கிறது. ஆனால், நான் அதை ஷர்மிளாவிடம் மட்டுமே கண்டடைந்தேன்.

பெரிய தகுதி இல்லாத என்னைத் தூக்கிச் சுமந்தது அவளே. எங்கள் இரு குழந்தைகளை வாஞ்சையாக இன்னும் குழைவான ப்ரியம் சேர்த்து, எங்களை நெருங்கிய துயர்கள் அவர்களை அண்ட விடாமல் வளர்க்கிறாள்.

எங்கள் வாழ்க்கையை அன்பால் கட்டி எழுப்பி அர்த்தமாக்கியது ஷர்மிளாதான். வெகு காலம் கழித்து ஒரு நல்லபுத்தகம் தட்டுப் பட்டது போல கையில் கிடைத்தாள் என் முதல் சினேகிதியும் மனைவியுமான ஷர்மிளா.கொஞ்ச நாளைக்கு முன்பு மழை வெள்ளம் சென்னையைப் புரட்டிப் போட்டதே ஞாபகம் இருக்கிறதா! அந்த ஐந்து நாட்கள் வெளியிலே செல்ல முடியவில்லை. வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறோம். குழந்தைகள் மழை பார்த்து விடுமுறையை அனுபவிக்கிறார்கள்.

‘நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு… ஞாபகம் இருக்கா’ என ஷர்மி கேட்க, ‘பதினெட்டு வருஷங்கள்’ என்கிறேன். ‘அஞ்சு வருஷங்கள்தான் நாம சேர்ந்து இருந்திருக்கோம்’ என்கிறாள் ஷர்மி. எனக்கு தூக்கி வாரிப் போடுகிறது. ‘அது உங்களுக்காக உழைத்ததல்லவா?’ என்கிறேன். ‘நான் உனக்காகத்தானே வந்தேன், ரவி…’ என்கிறாள் ஷர்மி.

மழைக்கு இதமாகக் கொடுத்திருந்த தேநீர்க் கோப்பையை அவசரமாக கீழே வைத்துவிட்டு அவளின் இரு கைகளையும் பற்றிக் கொண்டேன். இன்னமும் அவளின் கருணையே என் பாதையெங்கும் கனிகளைப் போல் உதிர்ந்து கிடக்கிறது.மனைவியைப் புரிந்து கொள்வது மிக எளிது. காதலியைப் புரிந்து கொள்வது கடினம்!

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்