பெண்கள் பங்கெடுக்கும் போராட்டங்கள்! மாறிவரும் இந்தியாவின் முகம்



ஆயிஷா ரென்னா, லதீடா பர்ஸானா, ஷகீன் அப்துல்லா...
இந்தப் பெயர்கள் பலருக்கும் தெரியாது. சிலருக்கு எங்கோ கேட்டது போல் இருக்கே என்று தோன்றக்கூடும். ஆனால், இவர்களின் புகைப்படங்களைப் பார்த்தால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவீர்கள். ‘ஓ இவர்களா… தில்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவிகள்தானே’ என்று சொல்வீர்கள்.

கடந்த மாதம் மத்திய அரசு சிஏஏ சட்டத் திருத்தம் கொண்டுவந்தபோது அதை வட இந்தியா முழுதும் கடுமையாக எதிர்த்தது. அப்போது தலைநகர் தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக் கழகம் இந்தப் போராட்டத்தில் ஊக்கமுடன் பங்கெடுத்தது.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க காவல் துறை தடியடி நடத்தியபோது, காவல் துறையை நோக்கி, தைரியமாக விரலை உயர்த்திப் பேசியவர்தான் ஆயிஷா ரென்னா. மற்ற இருவரும் அந்த தடியடி சம்பவத்தின் போது உடன் இருந்தவர்கள்.சென்ற மாதம் இவர்கள் தாக்கப்படும் சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து இந்த மாணவிகளின் பேட்டிகளும் சில ஊடகங்களில் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து இவர்கள் மேல் இப்போதும் கவனம் குவிந்துள்ளது.

அதிகாரம் என்றால் அடங்கிப் போவதுதான் பெரும்பாலான சாமானியர்களின் இயல்பு. அதிலும் அதிகாரம் ஆயுதத்துடன் எதிரே வரும்போது ஓடிப் போகிறவர்களுக்கு இடையே இந்தப் பெண்கள் துணிச்சலாக எதிர்த்து நின்றதுடன், ‘இது தவறு’ என்று காவலர்களை நோக்கி எச்சரித்த துணிச்சலைத்தான் உலகமே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்த ஜாமியா பல்கலைக் கழகத்தின் சிஏஏ போராட்டம் என்றில்லை. சமீபமாக நடந்து வரும் எல்லா போராட்டங்களிலுமே பெண்கள் சக்தி முழு ஆவேசத்துடன் பங்கெடுப்பதை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டமாகட்டும், சமீபமாக நடந்து வரும் சிஏஏ, என்ஆர்சி போராட்டங்களாகட்டும் பெண்கள்தான் முன்னணியில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆண்களும் பெண்களும் குழுவாக இணைந்து கோஷமிடுகிறார்கள். பல இடங்களில் பெண்களே போராட்டங்களை வழிநடத்துகிறார்கள்.

பெண்களின் இந்த திடீர் எழுச்சிக்கு என்ன காரணம் என்று சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகள் அடிமட்டம் வரைக்கும் வேர்கொண்டதும், பெண்கள் உட்பட அனைவரின் வாழ்வையும் நேரடியாகத் தாக்கக் கூடியதாக இவை உள்ளதும்தான் பெண்கள் இப்படி அணி திரள்வதன் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். இதில் கொஞ்சம் உண்மை உள்ளதுதான்.

இன்று மத்திய, மாநில அரசுகளும், உலக அரசியல் சூழலும் உருவாக்கியுள்ள பல்வேறு பிரச்னைகள் நமது அரசியல் - சமூக - பண்பாட்டு வெளிகளை கடுமையாகப் பாதித்துள்ளன. பெண்கள், தலித்துகள் உள்ளிட்ட அடையாள அரசியலின் விளிம்பு நிலைப் பகுதியினரில் தொடங்கி சமூகத்தின் அனைத்து மட்டத்தில் இருப்பவர்களையும் கடந்த முப்பது ஆண்டு கால சமூக அரசியல் வாழ்வின் வெடிப்புகள் நேரடியாகத் தாக்கத் தொடங்கியுள்ளன.

வீதியில் இருந்த பிரச்னைகள் வீட்டுக்குள் நுழைந்து, சமையல்கட்டு வரை தாக்குதலைத் தொடங்கவே, இன்று பல இளம் பெண்கள் வீதிக்குள் நுழைந்திருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மீதான வன்முறை, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைக் கட்டுமானங்களில் தன்னிறைவின்மை, நிலையற்ற பொருள்தார சூழல் போன்ற தீவிரமான பிரச்னைகள் பெண்களை நேரடியாகப் பாதிக்கின்றன.

இன்றும் அரசியலை அதிகம் பேசாத, அரசியல் என்றாலே ‘அது ஒரு சாக்கடைப்பா, நமக்கு செட் ஆகாது’ என்று ஒதுங்கிக்கொள்கிற பெண்கள்தான் அதிகம் என்றாலும் பல பெண்களுக்கு சமூக ஊடகங்கள் வழியாக இந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தின் செயல்பாடுகள் மீதும் விமர்சனங்கள் உருவாகியிருக்கின்றன. வருடந்தோறும் அரசியல் உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பெண்கள் விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் பெண்கள் வாக்கு அளிக்கும் சதவீதத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான வளர்ச்சியும், தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் பெண்களின் விகிதமும் அதிகரித்திருப்பதும் இதன் சாட்சிகள்.

இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் நாற்பத்தைந்து சதவீதமாக இருந்த பெண் வாக்காளர்கள் கடந்த 2014ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் அறுபத்தைந்து சதவீதமாக உயர்ந்துள்ளார்கள். ஆண்கள் அப்போது அறுபத்தைந்து சதவீதமாக இருந்து இப்போது அறுபத்தேழு சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளார்கள்.

இடையில் தேர்தலுக்குத் தேர்தல் இந்த மொத்த வாக்குவீதம் பொதுவாகக் குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்டே வந்திருக்கிறது. ஆனால், ஆண் பெண் விகிதாசாரங்களுக்கான இடைவெளி ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாகக் குறைந்து வருகிறது. அதாவது, ஆண்கள் அளவுக்குப் பெண்களும் இப்போது வாக்களிக்கத் தொடங்கிவிட்டார்கள்.  

இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தலை ஒப்பிடும்போது இப்போது கணிசமாக வாக்களிக்கும் விகிதம் அதிகரித்திருக்கிறது அல்லவா? இந்த அதிகரிப்புக்குக் காரணமே பெண் வாக்காளர்கள் அதிகரித்திருப்பதுதான். அநேகமாக வரும் பொதுத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆண்களின் வாக்குகளைவிட அதிகமாக இருக்கக் கூட வாய்ப்பிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

‘பட்டம் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பாரதியின் வாக்கு பலித்தேவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது. பெண்கள் அரசியலைப் பேசுகிறார்கள் என்பது ஒரு சமூகம் முதிர்ச்சி அடைந்துவருகிறது என்பதன் அறிகுறி. அரசியல் என்பது வீதியில் இருந்து வீட்டுக்குள் நுழைவது அல்ல. வீட்டிலிருந்து வீதிக்குள் நுழைவது.

குடும்பம் என்னும் அமைப்பே சமூகம் என்ற அமைப்பின் மிகச்சிறிய அலகுதான். ஜனநாயகமான ஒரு குடும்பமே ஜனநாயகமான ஒரு சமூகத்தின் முன்னுதாரணம். அப்படி ஜனநாயகமான குடும்பங்கள், சமூகங்கள் வேண்டும் என்றால் அரசியலில், சமூகத்தில் பெண்களின் பங்கெடுப்பு மிகவும் அவசியம்.பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, மே தின எழுச்சி தொடங்கி இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் வரை போராட்டத்தில் பெண்களும் இறங்கிய பிறகுதான் அவை வெற்றியை நோக்கி நடைபோடத் தொடங்கின என்பதே வரலாறு.

எனவே, பெண்களின் இந்த எழுச்சியை நாம் வரவேற்கவே வேண்டும். அதேபோல் இன்றைய போராட்டங்களில் நாம் காணும் இன்னொரு முக்கியமான விஷயம், போராட்டக்காரர்கள் எல்லோர் கையிலும் இருக்கும் தேசியக் கொடி!

ஆளும் தரப்பும் அதிகார சக்திகளும் போராட்டக்காரர்களை கருத்தியல் ரீதியாக ஒடுக்கப் பயன்படுத்தும் வார்த்தை ‘தேசத் துரோகிகள்’ என்னும் சொல்தான். அதிலும் இப்போது ஆளும் பாஜக அரசு இந்த தேசத்  துரோகி என்ற சொல்லை முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமாகப் பயன்படுத்துகிறது. தங்களை எதிர்ப்பவர்கள் எல்லோருமே, என்ன நியாயமான காரணங்களுக்காக எதிர்த்தாலும் அவர்கள் தேசத் துரோகிகள் என்பது மோடி உள்ளிட்ட ஆளும் தரப்பினரின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டை வீழ்த்தவும் இந்த தேசியம் உங்களுக்கானது மட்டுமல்ல, எங்களுக்கும் இது சொந்தம்தான் என்பதை உரக்கச் சொல்லவுமே இன்றைய இளம் தலைமுறையினர் கையில் தேசியக் கொடிகளோடு போராட்டக் களங்களுக்கு வருகிறார்கள்.

தேசியத்தில் இருந்துகொண்டே அதன் ஆளும் தரப்பை நிராகரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது மிகச் சிறந்த போராட்ட அணுகுமுறை. அதை முந்தைய தலைமுறையில் ஒரு தலைவர் வெற்றிகரமாகச் செய்தார். அதனால்தான் அவர் பின்னால் நாடே திரண்டது. அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இன்று காந்தி முன்பைவிட அதிகமாக நினைக்கப்படுவதும், போராட்டக்காரர்களின் கையில் அவர் இருப்பதும் தற்செயல் அல்ல. இந்தத் தலைமுறை மிகச் சரியாக யாரிடம் எதைக் கற்றுக்கொள்ள வேண்டுமோ அதைக் கற்றுக்கொண்டுதான் முன்னேறுகிறது!
                                
இளங்கோ கிருஷ்ணன்