கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -47
பூமி சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வாகும் பூபாலன்!
அருகில் இருப்பது யார் என்பது கூட தெரியாத மை இருள். மிதமான சந்திர ஒளியை துணையாகக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள் அந்த இருவரும். புதர்கள் மண்டியிருந்த இடமாகப் பார்த்து, மறைந்து மறைந்து சென்றார்கள். பக்குவமாக பாதம் வைத்து நடந்தார்கள். சருகுகள் காலில் மிதிபடும் சத்தத்தைக் கூட, வெகு லாவகமாக நடப்பதன் மூலம் அவர்கள் தவிர்த்தார்கள்.
 சிறிது கூட சத்தம் வரக் கூடாது என்பதிலும், யாருடைய கண்களிலும் பட்டுவிடக் கூடாது என்பதிலும் இருவரும் தெளிவாக இருந்தார்கள். ஆனாலும் இருவரின் உடலும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே? ஆற்காட்டு நவாப்பின் அந்தப்புரத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தால் நடுக்கம் வரத்தானே செய்யும்?
 அந்த இருவரில் ஒருவர் தனது கேசத்தை பின் குடுமியாக போட்டிருந்தார். இடையில் துலங்கும் பஞ்சகச்சமும், மார்பில் ஆடும் முப்புரி நூலும், உடலில் சொல்லி வைத்தாற் போல பன்னிரண்டு இடங்களில் தீட்டியிருந்த திருமண் காப்பும், அவர் வேதம் அறிந்த வைஷ்ணவர் என்பதைப் பறைசாற்றின. அவர் அருகில் இருந்தவரின் நெற்றியிலும் திருமண் பிரகாசித்தது. அங்கங்களில் மின்னும் தங்க ஆபரணங்களும், உடுத்தியிருந்த பட்டாடையும், அவர் நிச்சயம் ஒரு பெரும் செல்வந்தர் என்பதை உணர்த்தின. சிதம்பரம் என்பது அவரது திருநாமம்.
சரி, எதற்கு இருவரும் இப்படி கள்ளத்தனமாக அரண்மனைக்குள் நுழைகிறார்கள்?
எல்லாம் காலம் செய்த கோலம். பாரத அன்னையைப் பிடித்த சனி. மிலேச்சர்கள் என்ற கரையான்கள் பாரத அன்னையை அரித்துக் கொண்டிருந்த சமயம் அது. அவர்களின் பொல்லாத அராஜகத்தால் அழிந்த கோயில்கள், கலைப் பொக்கிஷங்கள் என பெரிய பட்டியலே உருவாகிக் கொண்டிருந்த காலம் அது.
அதன் ஓர் அங்கமாக, ஆற்காட்டு நவாப்பின் ஆட்கள் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள். அத்தோடு நில்லாமல் அநியாய வரி விதித்து அதற்கு தண்டல் என்ற பெயரையும் சூட்டினார்கள். ஒருமுறை அப்படி அவர்கள் வரி வசூலிக்க சீர்காழி வந்தபோது, அநியாய வரி வசூலித்ததோடு சீர்காழி தாடாள (தடாளன் என்றும் சொல்லுவதுண்டு. ஆனால், ஆழ்வார்கள் எல்லாம் தாடாளன் என்றே சொல்லுவதால் நாமும் அவர்களையே பின்பற்றுவோம்) பெருமாளின் உற்சவ விக்ரகத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
விஷயம் அறிந்த ஊர் மக்கள் தங்கள் உடலைவிட்டு உயிரே பிரிந்தது போல உணர்ந்தார்கள். சிறியவர் முதல் முதியவர் வரை ‘தாடாளா... தாடாளா...’ என்று ஒரே புலம்பல். ஊர் மக்கள் அனைவரும், துயரக் கடலில் மூழ்கிப் போனார்கள். அர்ச்சகரும், சிதம்பரமும் மட்டும் வருந்தவில்லை. மாறாக, ‘பெருமாளை மீண்டும் எப்படி ஊருக்குக் கொண்டுவருவது’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.போர் செய்து மீட்க திறன் இருந்தது. ஆனால், மிலேச்சர்கள் யுத்த தர்மத்தை ஒருபோதும் பின்பற்ற மாட்டார்கள். தந்திரமாக யுத்தம் புரிவார்கள். தந்திர யுத்தத்தில் பல உயிர்களைப் பறி கொடுக்க இருவருக்கும் மனது வரவில்லை.
என்ன செய்வது? தெரியவில்லை. இறுதியாக சீர்காழியில் கோயில் கொண்டிருக்கும் திருவிக்ரம பெருமானை (மூலவரின் திருநாமம்) சரண் புகுந்தார்கள். உண்ணாமல் உறங்காமல் அவனது திரு முன் விரதம் இருந்தார்கள். ‘‘ஒன்று, எங்கள் ஊருக்கு திரும்பி வா! இல்லை, எங்கள் உயிரை எடுத்துக் கொள்! நீ இல்லாத ஊரில் நாங்கள் இருக்க மாட்டோம்...’’ என்று பெருமானிடம் முறையிட்டு அவர்கள் அழுதார்கள்.
அவர்களது இந்தச் செயலைக் கண்டு ஊரே ‘இப்படி ஒரு பக்தியா?’ என்று பிரமித்துப்போனது.உண்ணாமல் விரதம் இருந்ததால் இருவரும் மயங்கினார்கள். அவர்கள் இருவரது கனவிலும் தாடாள பெருமான் காட்சி தந்தார். ‘‘வருந்தாதீர்கள்! நாளை இரவு, யாரிடமும் சொல்லாமல் பயணத்தை ஆரம்பியுங்கள். நேராக ஆற்காட்டு நவாப்பின் அந்தப்புரத்திற்கு வாருங்கள்.
அதன் வடக்கு மூலையில் முதல் தளத்தில் இளவரசியின் அறை இருக்கிறது. நீங்கள் இருவரும் மாளிகைக்குள் நுழைய வேண்டாம். அந்த இளவரசியின் அறையின் உப்பரிகையின் அடியில் மறைவாக நாளை இரவு நின்று ‘வெண்ணெய் உண்ட தாடாளா வா! தவிட்டுப் பானை தாடாளா வா!’ என்று அழையுங்கள். நான் ஓடிவந்து விடுவேன்...’’ என்று கூறி மறைந்தார்.
கனவில் வந்து இட்ட இந்த கட்டளையை நிறைவேற்றத்தான் இருவரும் சீர்காழியில் இருந்து ஆற்காடு வரை வந்திருக்கிறார்கள். ‘‘ஒரு கனவை நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இது தெரிந்தால் உலகம் நம்மை நகைக்காதா?’’ சிதம்பரம் அருகில் இருந்த பட்டரின் காதில் கிசுகிசுத்தார்.
‘‘அது வெறும் கனவாக இருந்தால் ஏன் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக வர வேண்டும்?’’ நொடியில் வந்தது பட்டரின் பதில். என்ன பதில் சொல்வது என்று சிதம்பரத்துக்கு தெரியவில்லை. ஆனால், நவாப்பிடம் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் என்ற வினா மட்டும் அவரது மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.
‘‘மன்னரிடம் மாட்டிக் கொள்வோமோ என்று பயமாக இல்லையா உங்களுக்கு?’’ கேட்டார் சிதம்பரம்.‘‘முதலில் இருந்தது. இப்போது இல்லை...’’‘‘எப்போதிலிருந்து பயம் போனது?’’‘‘இங்கு நாம் வரும்போது கோட்டைக் காவலன் நன்கு தூங்கிக் கொண்டிருந்ததோடு கோட்டைக் கதவையும் திறந்தே வைத்திருந்தான். அதனால்தானே நம்மால் அந்தப்புரம் வரை ஒரு பாதகமும் இல்லாமல் வர முடிந்தது? அந்தக் கணத்தில் பயம் என்னைவிட்டு ஓடிவிட்டது...’’
‘‘அது என்னவோ உண்மைதான் சுவாமி. அவன் உறங்குவதைப் பார்த்தபோது, கண்ணன் பிறக்கும்போது அனைவரும் ஒரு மாய நித்திரையில் இருந்தார்களே... அதைப் பயன்படுத்தி வசுதேவரும் கண்ணனை மதுராவில் இருந்து கோகுலம் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தாரே... அதுதான் என் நினைவுக்கு வருகிறது...’’ நெகிழ்ந்தார் சிதம்பரம்‘‘இப்போது கூட பாருங்கள்! நாம் பதுங்கி நடக்கத் தேவையே இல்லை என்பதுபோல் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் நமது மனத் திருப்திக்காக மறைந்து மறைந்து நடக்கிறோம்...’’ பட்டரின் இதழ்கள் மெல்ல மொழிந்தன.
பட்டர் சொன்ன பிறகுதான் சிதம்பரம் அதை கவனித்தார். அவரால் நம்ப முடியவில்லை. ஒரு முறை, தான் காண்பது கனவு இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள தன்னைக் கிள்ளியும் பார்த்தார். வலித்தது. இது எப்படி சாத்தியம்? சிதம்பரம் வியந்தார்.
அதற்குள் இளவரசியின் அறை வந்துவிட்டது. அதன்மேல் தளத்தில் இருந்தாள் இளவரசி. சொல்லி வைத்தாற் போல அவள் மட்டுமே விழித்துக் கொண்டிருந்தாள். அவளது கையில் அழகாக தாடாள பெருமாள் வீற்றிருந்தார். அவரை அவள் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். இவை எதையும் சிதம்பரமும், பட்டரும் கவனிக்கவில்லை. இருவரும் முதல் தளத்து உப்பரிகையின் அடியில் நின்று கொண்டார்கள். ஒரே சமயத்தில் கை குவித்தார்கள். மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
‘‘வெண்ணெய் உண்ட தாடாளா வா! தவிட்டுப் பானை தாடாளா வா!’’ இரண்டு மூன்று முறை ெஜபித்திருப்பார்கள். அடுத்த முறை ஜெபிக்க ஆரம்பிக்கும்போது ‘‘அய்யோ...’’ என்று இளவரசியின் குரல் பலமாக ஒலித்தது. என்ன என்று பார்க்க சிதம்பரம் கண்களைத் திறந்தார். நொடியில் நடப்பதை உணர்ந்து தாவினார். தாவியவர், இளவரசியின் கை நழுவி உப்பரிகைக்கு வெளியே கீழே விழுந்து கொண்டிருந்த தாடாளப் பெருமானை லாவகமாகப் பிடித்தார்.
நடந்ததை நம்ப முடியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பட்டர். அவரது வலது கையைத், தனது இடது கையால் பிடித்துக் கொண்டார் சிதம்பரம். பெருமானை வலது கையால் பிடித்துக் கொண்டார். ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார். வழியில் மறந்தும் ஒரு முறை கூட ஓய்வெடுக்காமல் ஓட்டமும் நடையுமாக சீர்காழிக்கு பெருமானை மீண்டும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.‘‘நம்பவே முடியல தாத்தா! திருமங்கை ஆழ்வார் கைல ஓடிப் போய் சுவாமி உட்கார்ந்துகிட்டார்னு சொன்னா நம்பாதவங்களுக்கு இந்த சரித்திரச் சம்பவம் பெரிய எடுத்துக்காட்டு இல்லையா?’’
தன்னை மறந்து கதை சொல்லிக் கொண்டிருந்த நாகராஜனை இடைமறித்தான் கண்ணன். அதைக் கேட்டு சுய நினைவுக்கு வந்த நாகராஜன், மெல்ல ஒரு புன்னகை பூத்து கண்ணனை ஆமோதித்தார். ‘‘அது மட்டுமில்லை கண்ணா! இந்தப் பெருமாளை திருவள்ளுவரே புகழ்றார் தெரியுமா?’’ பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு கண்ணனைப் பார்த்து கண் சிமிட்டினாள் ஆனந்தி‘‘என்ன பாட்டி சொல்றீங்க..?’’ நம்பமுடியாமல் கேட்டாள், தொலைந்து போனாள் என்று எண்ணியிருந்த தன் குழந்தை பவித்ராவை தாடாளன் அருளால் மீட்டெடுத்த பத்மினி மாமி.
‘‘ஆமாம், பத்மினி! திருக்குறளோட 610ம் பாட்டு இந்த பெருமாளையே குறிக்குதுனு குறளை ஆங்கிலத்தில மொழிபெயர்த்த .வி.வி.எஸ்.ஐயர் சொல்றார். மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தா(அ)யது எல்லாம் ஒருங்கு - இதுல ‘தாயது அடி அளந்தான்’னு திருவள்ளுவர், இந்த திவ்ய தேசத்து பெருமாளையே குறிப்பதாக சுதந்திர போராட்ட வீரரும் பேரறிஞருமான வராஹனேரி வெங்கடேச சுப்ர மணிய ஐயர் சொல்றார்...’’ பெரிய போடாகப் போட்டாள்ஆனந்தி.
‘‘நிலம் சம்பந்தமான எல்லா பிரச்னைக்கும் இந்த பெருமாள் ஒரு பெரிய தீர்வு. இன்னிக்கும் நிறைய பக்தர்கள், அவங்க அவங்க நிலத்து மண்ணை முடிஞ்சி எடுத்துகிட்டு வந்து இந்த பெருமாள் கிட்ட வைச்சு வேண்டிக்கிறாங்க. அவங்க அத்தனை பேரோட பிரச்னையும் சில நாள்லயே நல்லவிதமா தீர்ந்திருக்கு...’’ நாகராஜன் சொன்னார்.அதைக் கேட்ட பத்மினி மீண்டும் அந்த தாடாள பெருமானை மனதால் நினைத்த படி கை குவித்தாள்!
(கஷ்டங்கள் தீரும்)
கோயில் பெயர்: காழி சீராம விண்ணகரம் - திருவிக்ரம பெருமாள் கோவில் சிறப்பு: நீண்ட ஆயுள், போட்டியில் முதன்மை, தொலைந்ததை மீட்டுத் தருதல், பூமி பிரச்னைகளுக்கு தீர்வு என பல பிரச்னைகளைப் போக்கும் கோயில். அமைவிடம்: சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் 8:30 வரை
ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்
|