4 ஆயிரம் முறை தேனீக்கள் என்னை கடிச்சிருக்கு!
பெருமையாகச் சொல்கிறார் தீப்பந்தம் இல்லாமல் தேன் கூட்டை அகற்றும் முறையை தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி இருக்கும் இளைஞர்.சமீபத்தில் சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியில் நடந்த சம்பவம் இது. அங்குள்ள பூங்காவில் மக்களால் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. காரணம், அங்கிருந்த தேன் கூடு. அதனைக் கலைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தகவல் தீயணைப்புத் துறைக்குப் போனது.

தீப்பந்தத்தைக் கொண்டு மொத்தத் தேனீக்களையும் விரட்டி விடுவதுதான் வழக்கம். ஆனால், இம்முறை தீயணைப்புத் துறையினர் அதைச் செய்யவில்லை. மாறாக, தேனீக்களை அழிக்காமல் பத்திரமாக அந்தக் கூட்டை எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் விட்டுவிட்டு வந்தனர்! இது சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டது இதுவே முதல்முறை என ஆச்சரியப்படுத்துகின்றனர்.
இதைத் தீயணைப்புத் துறையுடன் இணைந்து செய்தவர் சுதந்திரச்செல்வன் என்ற இளைஞர். எம்.எஸ்சி தோட்டக்கலை படித்துள்ள இவர், இப்போது தேனீக்களை அழிக்கக்கூடாது என்கிற விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரவலாக ஏற்படுத்தி வருகிறார். ‘‘நாம் இப்ப வரை தீப்பந்தத்தைத்தான் தேனீக்களை விரட்டும் ஒரே ஆயுதமா பயன்படுத்திட்டு இருக்கோம். ஆனா, அதை விரட்டுறோங்கிற பேர்ல அழிக்கிறோம். அதனாலயே, இந்த முயற்சியை தீயணைப்புத் துறையுடன் மேற்கொண்டேன்.
 அதாவது, அந்தத் தேன் கூட்டை அங்கிருந்து எடுத்திட்டுப் போய் காட்டுப் பகுதியில விட்டுட்டு வந்தோம். அங்க அந்தத் தேனீக்கள் மீண்டும் புதுசா கூடு கட்டிக்கும். இப்படியா, தேனீக்கள பாதுகாக்க முடியும்...’’ என்கிறவருக்குச் சொந்த ஊர் விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமம்.
‘‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல தோட்டக்கலை படிச்சேன். பிஎஸ்சி முடிச்சதும் பிசினஸ் பண்ணணும்னு நினைச்சேன். ஏன்னா, காலேஜ்ல படிக்கும்போதே அரசு திட்டத்துல அட்டைப் பெட்டில அடுக்குத் தேனீக்களை வளர்த்து தேன் எடுத்தேன். இதன் வழியா தேனீக்களுடன் பழகற வாய்ப்பு அமைஞ்சது.
பொதுவா தேனீக்கள்ல மலைத் தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத் தேனீ, கொசுத் தேனீனு நாலு வகை இருக்கு. இதுல அடுக்குத் தேனீயும், கொசுத் தேனீயும் மறைஞ்சு வாழும். அதை வீடுகள்லயே பெட்டிகள்ல வச்சு வளர்த்து தேன் எடுக்கலாம். மலைத் ேதனீ மரம், கட்டடம்னு உயரமான இடங்கள்ல கூடு கட்டும். இந்த மலைத் தேனீயே வீரியமானது. கொட்டினா, வலி உயிர் போயிடும். செய்திகள்ல தேனீ கொட்டி இறப்புனு படிக்கிறோம் இல்லையா... அதெல்லாம் இந்த மலைத் தேனீக்கள்தான்.
இதன் கூட்டை தொட்டுப் பார்த்ததை வாட்ஸ்அப்ல வீடியோவா போட்டதும் பூச்சித்துறை பேராசிரியர்களே ஆச்சரியமானாங்க. அந்தளவுக்கு வீரியம் கொண்டது...’’ என்கிறவர், எல்லா வகைத் தேனீக்களையும் எளிதாகக் கையாள்கிறார்.‘‘தேனீக் கூட்டத்துல ராணித் தேனீதான் பிரதானம். அது எங்க இருக்கோ அங்க எல்லா தேனீக்களும் வந்துடும்.
மற்றபடி ஆண் தேனீக்களும், வேலைக்காரத் தேனீக்களும் தங்கள் பணியைச் செய்திட்டு இருக்கும். ஆண் தேனீக்களுக்கு கொடுக்குகள் கிடையாது. வேலைக்காரத் தேனீக்குக் கொடுக்கு விழுந்துட்டா மீண்டும் வளராது. வேலைக்காரத் தேனீக்கள் முப்பது முதல் நாற்பது நாட்களே வாழும். இதுல 18 முதல் 21 நாட்கள் வயதுள்ள தேனீக்களே கொட்டும்.
இப்படியான விஷயங்களெல்லாம் தெரிஞ்ச பிறகுதான் தேன்கூட்டை கையால் தொட்டுப் பார்க்க ஆரம்பிச்சேன். பொதுவா, தேன் கூட்டைத் தொடும்போது ஒரு அஞ்சாறு தேனீக்கள்தான் கையில ஏறி கொட்டும். அப்படி கொட்டுகிற போது, ‘ஐசோபென்டைல் அசிடேட்’ என்ற திரவத்தை வெளியேற்றும். இந்தத் திரவம்தான் மற்ற தேனீக்களைக் கொட்டத் தூண்டும்.
நான் ஆரம்பத்துல அடுக்குத் தேனீ, கொசுத் தேனீ கடிக்குப் பழக்கமானேன். இப்ப, மலைத் தேனீயும் பழக்கமாகிடுச்சு. இதுவரை 4 ஆயிரம் முறையாவது தேனீக்களிடம் கொட்டு வாங்கியிருப்பேன்...’’ என்கிறவர், மலைத் தேனீக்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாக வருந்துகிறார். ‘‘நம்ம பகுதிகள்ல மலைத் தேனீக்கள்தான் அதிகம் அழிக்கப்படுது. கட்டடங்கள்ல அதுகூடு கட்டுறதுதான் இதுக்குக் காரணம். இதைக் கலைக்க முதல்ல தீயணைப்பு நிலையத்துக்குத்தான் போன் செய்வாங்க. அதனால, நேரடியா தீயணைப்புத் துறையிடம் பேசினேன். அதன் தலைவர் சைலேந்திரபாபு சாரைப் பார்த்தேன்.
அவர் மூலம் கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோயமுத்தூர், சென்னை இங்கெல்லாம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தேனீக்களை அழிக்காமல் தேன்கூட்டை அகற்றப் பயிற்சி கொடுத்தேன். அப்ப அம்பத்தூர் தீயணைப்புத் துறைக்கும் பயிற்சி கொடுத்திருந்தேன். அவங்கதான் அண்ணா நகர் பகுதியில தேன்கூட்டை அகற்ற என்னை அழைச்சாங்க.
ஓர் இரவு நேரம் பாதுகாப்பான டிரஸ்ஸுடன் மரத்துல ஏறி கத்தியால் அந்தக் கூட்டின் மேல்பகுதியை கட் பண்ணி மொத்தமா அப்படியே கோணிப்பையில கட்டினேன். பிறகு, காட்டுப் பகுதியில போய் விட்டுட்டு வந்தேன். இதனால, தேனீக்கள் எதுவும் அழிக்கப்படலை.
அநேகமா தமிழ்நாட்டுல இப்படி தேனீக்களை அழிக்காமல் பாதுகாத்தது இதுதான் முதல் தடவை...’’ என்கிறவர், ‘‘பூக்களின் மகரந்தச்சேர்க்கைக்குத் தேனீக்கள்தான் காரணம். மகரந்தச்சேர்க்கை நடக்கலன்னா உணவு உற்பத்தியே இருக்காது. அதனாலயே அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தேனீக்கள் இல்லன்னா மனித இனம் அடுத்த நாலு ஆண்டுகள்ல அழிஞ்சிடும்னு அன்னைக்கே சொன்னார்.
தேனீக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. அதனாலதான் தேன்கூட்டை அழிக்கக்கூடாது. பாதுகாக்கணும். தேவைப்பட்டா வேறு இடத்துல கொண்டு போய்விட்டுறணும்னு விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு இருக்கேன்...’’ என்கிறார் சுதந்திரச்செல்வன்.
பேராச்சி கண்ணன்
|