சூப்பர் குட் சௌத்ரி சாரை கடற்கரையில் பார்த்து கதை சொன்னேன்! நாஞ்சில் பி.சி.அன்பழகன் பளீர்



சினிமா, கவிதை, அரசியல் என பிஸியாக இருக்கிறார் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். அவரது அடுத்த முயற்சி எழுத்தாளர் பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலைப் படமாக்குவது. முதல் படம் ‘காமராசு’ மூலமாக கவனம் ஈர்த்தவர் கைகளில் இப்பொழுது ‘கரிசல்’ தவழ்கிறது.
‘‘‘கரிசல்’ நாவல் ஏதோ ஒரு இடத்தின் வாழ்க்கை கிடையாது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குறுக்குவெட்டுத் தோற்றம்தான். வலிமையற்றவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்களை எல்லாம் இந்த நாவல் கொண்டாடுகிறது. அவர்களின் துயரங்களை அவர்களின் மொழியிலேயே சொல்கிறது. சாதி, மதம், இனம், மொழின்னு அத்தனை எல்லைகளையும் உடைத்துக் கொண்டு உண்மைகளைத் தேடிப் போற பயணம்.

நாவலைக் கேட்டதும் பொன்னீலன் அய்யா சந்தோஷமாக் கொடுத்தார். வாழ்க்கையில் உழைத்துக்கொண்டே இருக்கும் மனிதர்களைப் பற்றி மட்டும் சொல்கிறதா, அவர்களின் பெரும் பாடுகளை வரையறுக்கிறதா என்று கேட்டால் எல்லாம்தான் என்று சொல்லும் ஒரு நாவல் ‘கரிசல்’. என் முன்னோர்களான பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள் நடிப்பதற்கு முன்னுரிமை தரப்போகிறேன்...’’ புன்னகைக்கிறார் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

‘காமராசு’க்குப் பிறகு அவ்வப்போது இடைவெளி தருகிறீர்கள்?
ஆரம்பத்தில் இலக்கியம்தான் எனக்கு உத்வேகமாக இருந்தது. அப்பொழுது சூப்பர் குட் மூவீஸ்தான் எல்லோருக்கும் கலங்கரை விளக்கம். சௌத்ரி சாரைப் பார்க்க அவரது அலுவலகத்தில் எல்லோரும் தவம் கிடப்பார்கள். நான் ஒரு புது வழி கண்டுபிடித்தேன். அவர் காலையில் தினமும் கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டேன். அங்கேயே அவரைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு மொத்த திரைக்கதையையும் கவிதை வடிவிலே கொடுத்துவிட்டேன். அவர் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் உடனே ஒப்புக்கொண்டு ஆரம்பித்த படம்தான்
‘காமராசு’.

அடுத்து வேறுபட்டு ‘அய்யா வழி’ என உங்களால் படம் எடுக்க முடிந்தது…ஓர் இயக்குநர் பல சோதனைகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இப்பொழுது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வைகுண்டசாமி திருக்கோயிலுக்குப் போனபோது சாமியின் மகத்துவம் பற்றி என்னிடம்தான் விசாரித்தார்கள். நான் அய்யா வைகுண்டரைப் பற்றி விவரித்தபிறகு கோயிலுக்குச் சென்றார்கள்.

இத்தனை வருடங்களில் மூன்று படங்கள்தான் செய்திருக்கிறேன். என் படங்கள் பார்த்து வெளியே போகிற ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை மேல் நம்பிக்கை வரும். சக மனிதர்கள் மீது இன்னும் நம்பிக்கை கூடும். வன்முறை, ஆபாசம் எதுவும் என் படங்களில் இருக்காது. அதுதான் என் அடையாளம். ‘அடிக்கடி உங்கள் ஸ்டைலை மாற்றிக்கொண்டு வெவ்வேறு வகைகளில் படம் செய்கிறீர்களே...’ என்று என்னைக் கேட்கிறார்கள். வெயில் காலத்தில் என்னால் கம்பளி விற்க முடியாது. எனக்கே ஒரு மாறுதல் தேவைப்பட்டது. அவ்வளவுதான்.

முன்பு தாதா சீஸன் வந்தது. பூமிக்குக் கீழே குண்டு வைத்து 15 குவாலிஸ் வெடித்து ஆகாயத்தில் சிதறியது. ஹீரோ என்ட்ரி ஆகிற சீனுக்காக பில்டப் கொடுக்க 20 லட்ச ரூபாய் செலவு செய்றாங்க. அப்படிப்பட்ட தெலுங்கு சினிமாவிலேயே இப்பொழுது நல்ல கதைகள் மட்டும் க்ளிக் ஆகுது. உறவுகளின் அற்புதத்தை சொல்கிற படங்கள்தான் அங்கே சூப்பர் ஹிட்.

அந்த மாதிரி ட்ரெண்ட் இங்கேயும் வரும். எவ்வளவு நாள்தான் கோக், பீட்ஸான்னு உயிர் வாழ்வீங்க. கமகமன்னு இட்லி, சட்னி, சாம்பார், டிகிரி காபிக்காக மனசு ஏங்கும் சார்! அதனால்தான் ‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’க்குப் பிறகு பொன்னீலன் அய்யா கொடுத்த பொக்கிஷத்தோட வரேன்.

‘கரிசல்’ ரொம்ப உணர்வுபூர்வமான கதை. அவ்வளவு கஷ்டத்திலேயும் வாழ்க்கைய அந்த ஓட்டத்தோட சந்தோஷமா வாழ்ந்துட்டு போற விதம் இருக்கே, அதை வெச்சு ஆயிரம் கதைகள் சொல்லலாம். இவ்வளவு வேலையிலேயும் நான் கவிதை எழுதறதையும் கைவிடலை. காதல் இங்கே தீர்ந்துவிட்டால் பேரன்பு வற்றிப்போகும். இந்தப் பிரபஞ்சம் செத்துப் போகும்!  

நா.கதிர்வேலன்