முகம் மறுமுகம்-Perfume Maker சுஹாசினி!



கோலிவுட்டே கொண்டாடும் ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் உதவி ஒளி ஓவியராக சினிமாவில் தன் கேரியரை ஆரம்பித்த சுஹாசினி, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’வில் ஹீரோயினாகி, ‘சிந்துபைரவி’யில் தேசிய விருது பெற்றார். ‘இந்திரா’வில் இயக்குநரானார். ‘இருவர்’, ‘ராவணனி’ல் டயலாக் ரைட்டரானார்.இது தவிர சமூக ஆர்வலராகவும் வலம் வரும் சுஹாசினி, இப்போது விதவிதமாக மணம் வீசும் பர்ஃப்யூம் மேக்கிங்கிலும் அசத்தி வருகிறார்.

‘‘இந்த உலகத்துல பர்ஃப்யூமை பிடிக்காதவங்கனு யாருமே கிடையாது. ஒருத்தர்கிட்ட இருந்து எந்தவிதமான வாசனை வருதோ அதுக்கு ஏற்பவே அவர் மேல அட்ராக்ட் ஆகறோம். நல்ல வாசனை எப்பவும் ஈர்க்கும். Animal instinctsனு சொல்வாங்களே... அதுபோல நமக்குள்ள இருக்கற குணம் அது. முக்கியமா கணவன் - மனைவிக்கு இடைல ரசனையான பேச்சுவார்த்தையே பரஸ்பரம் வர்ற மணத்தை வைச்சுதான் அமையுது.

சிலருக்கு பர்ஃப்யூம்னாலே அலர்ஜியா இருக்கும். யாராவது பர்ஃப்யூம் போட்டுட்டு வந்தாங்கனா தும்மவும் செய்வாங்க. கண் எரிச்சல்ல தவிப்பாங்க. இதுக்குக் காரணம், பர்ஃப்யூம் இல்ல. அதுல கலக்கப்படற கெமிக்கல்.இதை மனசுல வச்சே நான் ஆர்கானிக் பயோ தயாரிப்பை முன்னெடுத்தேன். இயற்கை தயாரிப்பு என்பதால் நம்ம உடம்பும் மணக்கும். ஆரோக்கி யமும் கமகமக்கும்...’’ டைமிங் ரைமிங்காக புன்னகைக்கும் சுஹாசினி, முறைப்படி பர்ஃப்யூம் தயாரிக்கக் கற்றிருக்கிறார்.

‘‘எங்க குரூப்ல இருந்த அருணாதான் (இவரது கணவர் டாக்டர் ஜே.ஆர்.சுப்ரமணியம், கமலில் இருந்து அஜீத் வரை பலருக்கும் டாக்டர்) இந்த விஷயத்தை சொன்னாங்க. ‘டபிள்யூ ஸ்கொயர்ல பர்ஃப்யூம் மேக்கிங் கத்துக் கொடுக்கறாங்க. உங்க ‘நாம் ஃபவுண்டேஷன்’ லேடீஸ் யாராவது அந்த கிளாஸுக்கு போக விருப்பமா’னு கேட்டாங்க.

அது ஒருநாள் கோர்ஸ். பேஸிக் தெரிஞ்சுட்டா... ஃபார்முலா கத்துக்கிட்டா... அடுத்தடுத்து நாமே இம்ப்ரூவ் செய்துக்கலாம்னு புரிஞ்சுது.
எங்க ஃபவுண்டேஷன்ல இருந்தவங்களுக்கு அப்ப நேரமில்லாததால நானே கத்துக்க முடிவு செஞ்சேன். கோர்ஸுக்கும் போனேன். ஆர்வம் இருந்ததால அந்த ஒரு  நாள்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.

தனியா பர்ஃப்யூம் தயாரிக்க ஆரம்பிச்சப்ப சிரமப்பட்டேன். இப்ப தேறிட்டேன்னு நினைக்கறேன்! ஏன்னா, என் ப்ராடக்ட் குட் குவாலிட்டில இருக்கறதா அதைப் பயன்படுத்தறவங்க சொல்றாங்க! பர்ஃப்யூம் மேக்கிங்குல பொதுவா தப்பு வரக் காரணம், மேத்ஸும் சயின்ஸும்தான். கலவைக்கு கணக்கும், பொருளுக்கு அறிவியலும் அவசியம். இதுல தப்பாச்சுனா நம்ம ப்ராடக்டே தப்பாகிடும்.

எல்லாத்தையும் விட முக்கியம் ஞாபக மறதி இருக்கவே கூடாது. அதுவும் சாலிட் பர்ஃப்யூம் பண்ணும்போது, இன்னும் கவனம் தேவை. Perfume blend ரொம்ப முக்கியம். இதுக்கு நம்ம மூக்கு ஷார்ப்பா இருக்கணும்; நுகரணும். அப்பதான் பிளண்ட் பண்ணும்போது ஒரு வாசனைக்கும் இன்னொரு வாசனைக்குமான வித்தியாசம் தெரியும்.

இதுக்காகவே காபி கொட்டையை ரோஸ்ட் செஞ்சு அரைச்சு முகர்ந்து பார்த்துப்போம். சில concentrated oils பயன்படுத்தும்போது கவனமா இருக்கணும். விரல்ல பட்டா, நகம் பாதிக்கும். இதுக்கு அடிப்படையா jojoba oil பயன்படுத்தணும். இது இந்தியாவுல கிடைக்காது. மெக்சிகோவுல இருந்து வரவழைக்கணும். இதனாலதான் தயாரிப்புச் செலவை விட அதிகமா பர்ஃப்யூம் விலை இருக்கு.

ஆனா, ஜோஜோபா ஆயிலுக்கு பதிலா பாதம் ஆயிலை பயன்படுத்தியும் தயாரிக்கலாம். வாசனை நீக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கிடைக்குது. இதைப் பயன்படுத்தியும் சிலர் பர்ஃப்யூம் தயாரிக்கறாங்க...’’ என்று சொல்லும் சுஹாசினி, இப்போது எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரில் பர்ஃப்யூம் தயாரிக்க ஏதேனும் பொருள் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்திருக்கிறார்.

‘‘இப்ப அஞ்சாறு ஃப்ளேவர்ல நானே பர்ஃப்யூம் ரெடி பண்றேன்... இப்படி முழுமையா நான் தயாரான பிறகு எங்க ‘நாம் ஃபவுண்டேஷன்’ பெண்களுக்கு கத்துக்கொடுத்தேன். முதல்ல இது ஏதோ பெரிய வித்தை போலிருக்குனு அவங்க பயந்தாங்க. ‘உங்களுக்கு காஃபி போடத் தெரியுமா’னு அவங்ககிட்ட கேட்டேன். ‘தெரியும்’னு சொன்னாங்க. ‘அவ்ளோதான். அப்ப உங்களால பர்ஃப்யூமும் தயாரிக்க முடியும்’னு உணர்த்தினேன்...’’ என தனது டிரேட் மார்க் புன்னகையை சிந்தியவர், தனது தயாரிப்புகளுக்கு Haas Perfumes என பெயரிட்டுள்ளார்.

‘‘முன்னாடி எகிப்தியர்களும் இந்தியர்களும் வாசனையா இருந்தாங்க. காரணம், சாம்பிராணி. தவிர மல்லிகை, ஜவ்வாது, வெட்டிவேர், பூனைப்புனுகு,
அத்தர், சந்தனம், ரோஜாப் பூ... இப்படி எல்லாத்துல இருந்தும் பர்ஃப்யூம் தயாரிச்சுப் பயன்படுத்தினாங்க. முன்னாடி  லிப்ஸ்டிக்  போட்ட வங்களை தப்பா பார்த்தாங்க. அதே மாதிரி பர்ஃப்யூம் பூசினவங்க பக்கம் வர பயந்தாங்க.

இப்ப இந்த நிலை மாறியிருக்கு. எல்லா பெண்களும் இப்ப லிப்ஸ்டிக் பூசிக்கறாங்க; ஆண், பெண், குழந்தைகள்னு எல்லாரும் இப்ப பர்ஃப்யூம் ஸ்பிரே பண்ணிக்கறாங்க. அதேமாதிரி முன்னாடி பர்ஃப்யூம் காஸ்ட்லியா இருந்தது. பணக்காரங்களால மட்டுமே வாங்க முடிஞ்சுது. இப்ப சாதாரண மக்களும் வாங்கக்கூடிய விலைல தரமாவே கிடைக்குது...’’ என்ற சுஹாசினி, தான், தயாரிக்கும் பர்ஃப்யூமில் எந்த சீக்ரெட்டும் இல்லை என்கிறார்.

‘‘ஓப்பன் டு ஆல் மாதிரி எல்லாருக்கும் எல்லாம் சொல்லிடறோம். இது ஆர்கானிக் வேற. ஸோ, பயமில்ல. ஆரம்பத்துல எங்க பவுண்டேஷன் பெயர்ல இதுக்கு ‘நாம் பர்ஃப்யூம்’னு பெயர் வைக்க விரும்பினோம். ஆனா, ஃபவுண்டேஷனை சேர்ந்தவங்க, ‘இது உன்னோட ஐடியா. ஸோ, Haas bio fragranceனு வை’னு சொன்னதால அப்படியே வச்சிட்டோம். Haasனாலே சந்தோஷம், சிரிப்பு எல்லாமேதான்.  

ஜவ்வாது, அத்தர் மாதிரி சாலிட் (கிரீம் மாதிரி) பர்ஃப்யூம்ஸ்தான் முதல்ல பண்ண ஆரம்பிச்சோம். ஏன்னா, திரவ பர்ஃப்யூமை ஹேண்ட் பேக்ல எடுத்துட்டு போறப்ப சிந்திடும். அதனால வேலைக்குப் போற பெண்களுக்காக சாலிட் பர்ஃப்யூம்ஸ் பண்ண ஆரம்பிச்சோம். தேனீ கூடுகள்ல இருந்து கிடைக்கற மெழுகை பயன்படுத்தி இதை தயாரிச்சோம்.

ஆஸ்திரேலியாவுல இருந்து ரா மெட்டீரியலா ஜாஸ்மின், சந்தனம் வந்துட்டிருக்கு. பாரீஸ், துபாய் எல்லாம் பர்ஃப்யூமுக்கு பெயர் போனது. நான் லண்டனுக்கு போய் பார்த்திருக்கேன். ஆனா, கொடைக்கானல், மூணாறில் கிடைக்கும் லாவண்டர், ரோஸ், மல்லிப்பூ மாதிரி அவ்ளோ தரமா வேற எங்கயுமே கிடைக்கறதில்ல. இப்ப லாவண்டர், ரோஸ், ஜாஸ்மின் ஃப்ளேவர்கள்ல பண்றோம். அடுத்ததா, மதுரையில் இருந்து மரிக்கொழுந்து கேட்டிட்டிருக்கோம்.

எங்க ‘நாம்’ தயாரிப்புகளை மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சுட்டோம். கிறிஸ்துமஸ் ஸ்பெஷலா பர்ஃப்யூம்ஸை கூட ஸ்டால்கள்ல விற்க ஆரம்பிச்சிருக்கோம். பீரோ, வாட்ரோப் எல்லாம் கமகமக்க தனியா ரெடி பண்ணிட்டு வர்றோம். எதுக்கும் லாபம் வைக்காம தயாரிப்பு விலைக்கே விற்கறோம். கையைக் கடிக்காத 250 ரூபாய்ல இருந்து பர்ஃயூம்ஸ் கிடைக்கும்...’’ என மகிழ்பவர், தனது ‘நாம் பவுண்டேஷன்’ பற்றியும் மனம் திறந்தார்.
‘‘Landmark formனு ஒரு அமெரிக்க கம்பெனி. அவங்க வாழ்க்கை முன்னேற்றத்துக்கான பயிலரங்கம் ஒண்ணை பெங்களூருல நடத்தினாங்க. அதுல என்னையும் பங்கேற்கச் சொல்லி ஆசிஷ் வித்யார்த்தி கேட்டுக்கிட்டார். நானும் போய் கலந்துக்கிட்டேன்.

அதுல self expression and leadership புரொக்ராம் ரொம்ப கவர்ந்தது. நம்மைச் சுத்தி இருக்கறவங்களை நாம எப்படி பாத்துக்கணும்னு உணர்த்தின ஒரு கோர்ஸ் அது. நம்ம அரசியல்வாதிகள் அப்படி ஒரு கோர்ஸ்ல கலந்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். அங்க தோணின ஐடியாதான் இந்த ‘நாம் ஃபவுண்டேஷன்’. 2010ல ஆரம்பிச்சோம். ஆதரவற்ற பெண்கள், கணவனை இழந்த பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னாலான பங்களிப்பா இதை நடத்திட்டு வர்றேன். அத்தகைய பெண்களுக்கு கைத்தொழில் கத்துக்கொடுத்து அவங்களை வாழ்க்கைல ஒளியேற்றுவதுதான் எங்க லட்சியம்.

இந்த ஃபவுண்டேஷனை ஆரம்பிச்ச முதல் வருஷத்துலயே 68 பேர் வந்துட்டாங்க. அடுத்தடுத்த வருஷங்கள்ல ஐம்பது ஐம்பது பேர்களா எடுத்துக்கறோம். பாதிக்கப்பட்ட பெண்கள்கிட்ட, ‘இப்ப என்ன பண்றீங்க’னு  கேட்டாலே தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கறாங்க. முதல்ல அவங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தறோம். அப்புறம் ஆரோக்கியம். பிறகு குழந்தைகளின் படிப்புச் செலவுகள், குடும்பம் நடத்த தேவையான கைத்தொழில்னு எல்லாமே பண்றோம்.

பேப்பர் மேக்கிங், குக்கிங், ஜூவல்லரி மேக்கிங்னு எல்லாமே இப்ப பண்றாங்க. இதுவரை 350 பேர்களுக்கு மேல பலனடைஞ்சிருக்காங்க. இவ்ளோ இருந்தும் எங்களுக்குனு ஓர் இடம் இல்ல. இவங்க உருவாக்கின பொருட்களை விற்க முறையான இடவசதி இல்லாம இருந்தது. இப்ப இடம் கிடைச்சிடுச்சு...’’ என்றவர் எயிட்டீஸ் ரீயூனியன் குறித்து பேச ஆரம்பித்தார்.

‘‘சமீபத்துல நடந்த எங்க எயிட்டீஸ்  கெட் டுகெதர்ல சீரஞ்சீவி சார் எல்லாருக்கும் காஸ்ட்லி கிஃப்ட்ஸ் கொடுத்தார். ஆனா, நான் தயாரிச்சு கொடுத்த
பர்ஃப்யூம் கிஃப்ட்ஸ்தான் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது!நான் பர்ஃப்யூம் பண்ண ஆரம்பிச்சதும் கிடைச்ச முதல் பாராட்டு வாணி கணபதிகிட்ட இருந்துதான். நான் தயாரிக்க ஆரம்பிச்ச முதல் மாசமே நவராத்திரி வந்தது. அதுக்கு தங்கள் வீட்டு சார்புல கொடுக்க பல்கா வாணி கணபதி ஆர்டர் கொடுத்தாங்க.

வாணியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் சினிமால நடிக்கணும்னு அவங்கதான் ஆசைப்பட்டாங்க. என்னோட ஆக்ட்டிங் கரியரை ஆரம்பிச்சு வைச்சதும் அவங்கதான். இப்ப என் பர்ஃப்யூம் கரியரை தொடங்கி வைச்சிருக்கறதும் அவங்கதான். ஸோ, இதுவும் சக்சஸ்ஃபுல்லா இருக்கும்னு நம்பறேன்!

கமலுக்கும் என் பர்ஃப்யூம்ஸ் பிடிச்சிருக்கு. மணிரத்னம் மட்டும் தனக்கு, ‘வாசனை லைட்டா இருக்கட்டும்’னு கேட்டுகிட்டார். எல்லாரையும் விட நந்தன் மணிரத்னம்தான் ஹேப்பி. ‘நாம் ஃபவுண்டேஷன்’காக இது நடக்கறதால ‘கீப் ராக்கிங்’னு மனசார பாராட்டினார்!’’ உற்சாகத்துடன் சொல்கிறார் சுஹாசினி.

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்