கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-43



நம் பாவங்களைப் பந்தாடும் நாயகி

அந்த ஆமணக்குக் காட்டின் அடர்ந்த ஒரு பகுதியில் நின்றிருந்தார் பத்திரயோகி. எதிரே பரமேஸ்வரர் ரிஷபம் மீது அமர்ந்தபடி அற்புதமாக சேவை சாதித்துக் கொண்டிருந்தார். ‘‘நான் கோடி உருவங்களில் உனக்கு அம்பிகையாக, விநாயகனாக, குமரனாகக் காட்சி தந்த போது நீ எந்த வேத வசனத்தை உணர்ந்தாய்..? தயக்கமின்றி மனதில் பட்டதைச் சொல் பத்திரா!’’ ஈசன் கருணை பொங்க ஆணை பிறப்பித்தார். அதற்காகவே காத்திருந்தவர் போல, முனிவர் விளக்கம் தர ஆரம்பித்தார்.

‘‘‘ச பிரம்ம ச சிவச்ச ச ஹரி சேந்திர சோக்ஷர பரம ஸ்வராட்’ என்று வேதம் சொல்கிறது. அதாவது பிரம்மனாகவும், ஹரியாகவும், சிவனாகவும், அம்பிகையாகவும், அனைத்துமாய் நிற்கும் தெய்வம் ஒன்றே என்பது வேதத்தின் இறுதியான உறுதியான முடிவு. இங்கு இன்று கோடி அம்பிகையாகவும், முருகனாகவும், கணேசனாகவும் தாங்கள் காட்சி தந்து, வேதத்தை மீண்டும் நிலைநாட்டி விட்டீர்கள் பரம்பொருளே!’’ என்றபடி ஈசனை நமஸ்கரித்தார் முனிவர்.

‘‘இப்படி பத்திரயோகிக்காக, கோடி கோடியா காட்சி கொடுத்ததாலதான் சுவாமிக்கு கோடீஷ்வரர்னு திருநாமம்...’’ என்று நிறுத்தினார் நாகராஜன்.

‘‘சுருசி என்கிற ராஜகுமாரன்சாபத்தால, பிரம்ம ராட்சஷனா மாறினான். அவன் இந்த சிவனை பூஜை செய்து நல்ல கதி அடைஞ்சான். அதே மாதிரி ஆத்ரேய மகரிஷியும் இந்த சிவனை வழிபட்டிருக்கார். இவ்வளவு பெருமை அந்த சிவனுக்கு இருந்தாலும் அந்த ஊர் அம்பாளைப் போல வராது...’’ மனதுக்குள் அம்பிகையையை நினைத்தபடி கரம் குவித்தாள் நாகராஜனின் மனைவி ஆனந்தி.

கேட்ட கண்ணனுக்கும் ஷ்யாமுக்கும் இருப்புக் கொள்ளவில்லை.இருவரது முக மாறுதலை வைத்தே அவர்களது மனதில் இருப்பதை நாகராஜன் உணர்ந்தார். புன்னகைத்தார். ‘‘அந்த அம்பிகை பத்தியும் தெரிஞ்சுக்க விரும்பறீங்க... அதானே... சொல்றேன்...’’ என்றபடி ஆரம்பித்தார்.

துள்ளித் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது அந்தப் பந்து. அந்தப் பந்தை உதைத்து உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது இரு பாதமலர்கள்.
மரகத சிவப்பாக இருந்தது அந்த தாள்கள் இரண்டும்.

பிறவி என்னும் கடலைக் கடக்க முனிவர்களும் யோகிகளும் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பாதங்கள் அல்லவா..? அவர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதால் அந்த பிஞ்சுப் பாதம் சிவந்திருக்க வேண்டும்! தேவர்களும் முனிவர்களும் மட்டும் அப்பாதங்களைப் பற்றவில்லை. அந்த பரமேஸ்வரனும் அதைப் பற்றி இருக்கிறாரே! ஆம்.

அந்தப் பத்ம பாதத்தில் ஜொலிக்கும் மெட்டி, ஈசனும் அதைப் பற்றி இருக்கிறான் என்று சொல்லாமல் சொல்லியது!ஆனால், மலரை விட மென்மையான அந்தப் பாதங்களை அவர் எப்படித்தான் ஒரு அம்மிக் கல்லின் மீது வைத்து, பின்பு மெட்டி அணிவித்தாரோ? அதை அவரே அறிவார்! இந்தப் பிஞ்சுப் பாதங்களை அம்மியில் ஏற்றியதால்தான் சிலர் அவரது மனம் கல்லாகிவிட்டது என்று ஏசுகிறார்கள் போலும்!பந்தாடும் அந்த நாயகியை, முனிவர்களும், யோகிகளும் நெக்குருகி சேவித்துக்கொண்டிருந்தார்கள்.

‘துர்காம் தேவீகும் சரணமஹம் பிரபத்யே’ என்று அவர்களின் இதழ்கள், அம்பிகையின் புகழ் பாடும் வேத மந்திரத்தை ஓதியபடியிருந்தன. அம்பிகை ஒய்யாரமாகப் பந்தாடும் அழகில் மயங்கிய அவர்கள் மேலே சொல்ல வார்த்தை வராமல் திண்டாடி நின்றார்கள். அம்பிகையின் கால் சிலம்பு சற்றும் சளைக்காமல் தேனாக மறை யோதியபடி இருந்தது. ‘சுதர சிதரசே நம:’ என்று அவர்கள் விட்டதை இது சொல்லி முடித்தது!அதற்குள், அம்பிகை பந்தாடும்விஷயம் பரமனை எட்டி விட்டது.

அவரும் பந்தாடும் தனது நாயகியைக் காண ஓடோடி வந்தார். அவரைக் கண்டதும் தனது பாதத்தில் இருந்த பந்தை ஓங்கி ஒரு உதை உதைத்தாள் அம்பிகை. அது உருண்டு ஒரே ஓட்டமாக ஓடியேவிட்டது!கண்களாலேயே அவருக்கு வந்தனங்கள் செய்துவிட்டு, அவரருகில் ஒன்றும் அறியாதவள் போல நின்றுகொண்டாள். ஈசனே முதலில் பேச ஆரம்பித்தார். ‘‘பக்த குழந்தைகளைக் காப்பதில் மட்டுமே உனக்கு நாட்டம் இருப்பதாக நினைத்திருந்தேன்... கண்டும் இருக்கிறேன். ஆனால், இதென்ன தேவி... புதிதாகப் பந்தாடுவதில் நாட்டம்..?’’

‘‘தேவ தேவா! உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். ஆனால், அதற்கு முன்பு நான் கேட்கும் கேள்விக்கு விடை தாருங்கள்...’’ தனது கரிய நீண்ட விழிகளை உருட்டியபடி அம்பிகை கேட்ட பின்பும் ஈசன் பதில் சொல்லாமல் இருப்பாரா?‘‘தாராளமாகக் கேள் தேவி! உனக்கில்லாத உரிமையா? என்னில் பாதியல்லவா நீ...’’ அருகில் இருந்த அம்பிகையின் கரத்தைப் பற்றியபடியே ஈசன் மொழிந்தார்.

‘‘சுவாமி! நீங்கள், அனைவரும் வெறுக்கும் சுடுகாட்டுச் சாம்பலையும் நாகங்களையும் விரும்பி அணிகிறீர்கள். அதே சமயம் புனிதமான கங்கையையும் தலையில் சூடுகிறீர்கள். இதன் காரணம் என்னவோ?’’ ஏதும் அறியாதவள் போல அம்பிகை கேட்டது பரமன் முகத்தில் புன்முறுவல் தோன்றவைத்தது.

‘‘உலகிலேயே புனிதமான கங்கையாக இருந்தாலும் சரி... அருவருக்கத்தக்க சுடுகாட்டுச் சாம்பலாக  இருந்தாலும் சரி... நாகத்தைப் போல கொடியதாக இருந்தாலும் சரி... இந்த உலகில் ஜீவன்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு நீயும் நானும்தானே அம்மையும் அப்பனும்! அப்படி இருக்க நாம் நம் குழந்தைகளிடம் பேதம் பாராட்டலாமா? அதனால்தான் புனிதமான கங்கைக்கும் சுடுகாட்டுச் சாம்பலுக்கும் நாகத்திற்கும் சமமான அந்தஸ்து தந்துள்ளேன்!

பாவமே செய்தவனானாலும் வருந்தி நம் பாதத்தில் விழுந்தால் அவனும் நற்கதி பெறலாம் என்பதை உணர்த்தவே நாகத்தையும் கங்கையையும் சாம்பலையும் அணிகிறேன்!’’ஈசன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே அம்பிகை அவரது மலை போன்ற புஜத்தில் சாய்ந்து கொண்டாள். அப்போது மேகங்களுக்கு நடுவில் இருக்கும் வெண்ணிலவைப் போல இருந்தது அவள் வதனம். அதை ஈசனும் கணிக்கத் தவறவில்லை.

அம்பிகை தொடர்ந்தாள். ‘‘அற்புதம் சுவாமி! ஆனால், இங்கு கொட்டையூரில் நடப்பது வேறாக இருக்கிறதே..?’’

அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பது புரிந்தாலும் அது அவளது திருவாயாலேயே வரட்டும் என்று ஈசன் எண்ணினார் போலும். பதில் ஏதும் சொல்லாமல் அம்பிகையை நோக்கினார். அதை அம்பிகை உணர்ந்து கொண்டாள். தாமதிக்காமல் விளக்கம் தர ஆம்பித்தாள்.

‘‘‘கொட்டையூரில் கால் வைத்தால் கட்டை’ என்று ஒரு பழமொழி இருக்கிறது சுவாமி! அதாவது இந்த கொட்டையூரில் புண்ணியம் செய்தவர்கள் வந்து தங்களை சேவித்தால் அவர்களின்புண்ணியம் கோடி மடங்காக பெருகிவிடும். அதே போல் பாவம் செய்தவர்கள் இங்கு வந்தால் அவர்களது பாவம் பல கோடி மடங்காகப் பெருகிவிடும் என்பது அந்தப் பழமொழிக்குப் பொருள்.

ஆகவே பாவம் செய்தவர்கள் யாரும் இங்கு வந்து தங்களைச்சேவிக்கவே இல்லை! எனது தாய் உள்ளம் அவர்களது நிலையைக் கண்டு இரங்கியது. அதே சமயம் விளையாட வேண்டும் என்ற நாட்டமும் ஏற்பட்டது. ஆகவே இந்த உலகத்தில் உள்ள அனைவரது பாவத்தையும் ஒரு பந்தாக மாற்றினேன்.

அதை என் காலால் உதைத்து விளையாடினேன். என் பாதம் பட்டதும் பாவம் கூட நற்கதி பெற்று விட்டது.பாவம் செய்தவர்கள் கூட இனி தங்களை வந்து சேவித்து பிறவிப்பயனை அடையலாம்!’’கேட்ட பரமனின் முகத்தில் ஆச்சரியம், மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து தாண்டவமாடியது.

அம்பிகையை மெல்ல தன்னோடு அணைத்துக்கொண்டார். அவரது இதழ்கள் அவரையும் அறியாமல் பேச ஆரம்பித்தது. ‘‘குழந்தைகளைக் காப்பதில் உன்னை மிஞ்ச யாரும் இல்லை உமா! உண்மையில் நீ என்னையும் மிஞ்சிவிட்டாய்! உன் குணத்தால் என்னை வென்றாய்! கருணையால் இப்போது வையகத்தை வென்று விட்டாய்!

இனி பந்தாடும் கோலத்திலேயே இங்கு இந்த கொட்டையூரில் நீ சேவை சாதிக்க வேண்டும். பூஜிக்கும் அடியவரின் இரு வினைப் பயனையும் நீ பந்தாட வேண்டும். இந்த வையகத்தின் குறை உன்னால் தீர வேண்டும்!’’ஈசனின் ஆசி மொழிகள் அங்கிருந்த தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், இன்ன பிற ஜீவன்கள் என அனைவரையும் மலைக்கச் செய்தது. என்னே அம்மையப்பனின் கருணை என்று அவர்களின் உள்ளம் உருகியது.

‘‘பந்தாடும் நாயகி... வாழ்க... வாழ்க! கொட்டையூர் கோடீஸ்வரர்... வாழ்க! வாழ்க!’’ என்ற ஜெய கோஷம் எங்கும் பரவியது.‘‘நமக்காக... நம்ம எல்லாரோட பாவத்தையும் அம்பாள் பந்தாடிட்டாளா..? பந்தாடிட்டு இருக்காங்களா..?’’ கண்ணனும் ஷ்யாமும் தங்களை மறந்து ஒரே குரலில் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்.

‘‘ஆமா! அதனாலதான் இன்னிக்கும் கொட்டையூர்ல அம்பாள் பந்தாடும் கோலத்துலயே நம்ம எல்லாருக்கும் காட்சி தர்றாங்க! கங்கைக்குப் போய் குளிச்சாதான் பாவம் தொலையும்னு சொல்வாங்க. ஆனா, அந்த கங்கையும் மூணு முறைக்கு மேல ஒரே பாவத்தை செய்திருந்தா மன்னிக்க மாட்டாங்க. இந்த அம்பாள் கங்கைக்கும் மேலானவங்க...’’ ஆனந்தி சொன்னாள்.

‘‘பந்தாடும் கோலத்துல கொட்டையூர்ல அம்பாள் காட்சி தர்றதால விளையாட்டுத் துறைல இருக்கறவங்க இந்தக் கோயிலுக்கு அவசியம் போகணும்... ஈசனையும் அம்பாளையும் வழிபடணும். இப்படி செஞ்சா ஸ்போர்ட்ஸ்ல பெரிய ஆளா வருவாங்க...’’ நாகராஜன் புன்னகைத்தார்.

‘‘ஷ்யாம்... நீ இன்னம்பூர் சிவனையும், கொட்டையூர் பந்தாடு நாயகியையும் வேண்டிக்க. உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்...’’ நண்பனை அணைத்தபடி சொன்னான் கண்ணன்.நாகராஜனும் ஆனந்தியும் அதைப் பார்த்து பூரித்தார்கள்!

(கஷ்டங்கள் விலகும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்