மனைவியை காப்பாத்த முடியலை... வாடகை கட்ட முடியலை... பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியலை...



வறுமையில் வாடும் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்

‘கிருஷ்ணலீலை’ படம் வெளியாகாமல் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கிறேன். வாடகை பாக்கி, மகன் பள்ளிக் கட்டணம் புரட்டிப் போடுது. உதவுங்கள் பணத்தால்’ என்ற நாலைந்து வரிகளை முகநூலில் இயக்குநர் ஸெல்வன் எழுதிப் பார்த்ததும் மனம் துணுக்குற்றது.
பொதுவான கூச்சத்தை இழந்து, தாளமுடியாத துயரத்தின் இறுதிக்கட்டம் வரை போய்த்தான் அவர் இதைப்பதிவு செய்திருக்கவேண்டும். வாழ்வதற்கான எல்லைகள் சுருங்கிக்கொண்டு வரும்போது யாரிடமாவது சொல்ல, சிலவற்றைப் பகிர்ந்து எந்தப் பக்கமிருந்தாவது கதவு திறந்தோ, காற்று புகுந்தோ பார்த்தால் நல்லது என அவர் நினைத்திருக்கலாம்.

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர், ‘கவிதாலயா’ தயாரிப்பில் ‘கிருஷ்ணலீலை’ படத்தின் இயக்குநர் என பெரிதும் அறியப்பட்ட ஸெல்வனின் வீட்டை அடைந்தோம். எப்படி இருக்கிறார் ஸெல்வன் ?‘‘எல்லாமே சுமூகமாகவே இருந்தது. ஷங்கர் சார்கிட்டே அஸிட்டெண்ட்டாக இருந்த காலம் அவ்வளவு நல்லாயிருக்கும். அவர்கிட்டேயிருந்து அடுத்தடுத்து உதவியாளர்கள் தனியாக வந்து படம் செய்து புகழ் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

அப்படித்தான் நாலைந்து கம்பெனிகள் ரெடியாக இருந்த நேரத்தில் நான் தேர்ந்தெடுத்தது ‘கவிதாலயா’. கே.பாலசந்தர் கம்பெனிக்கே கதை சொன்னேன். கதையைக் கேட்டுட்டு, அட்வான்ஸ் கொடுத்து, ஜீவனை வைத்து படம் எடுத்து எல்லாமே நல்லபடியாக முடிந்தது. அப்புறம் ஐங்கரன் நிறுவனம் அதை வாங்கிக் கொள்ள, என்ன நடந்ததோ படத்தை வெளியிடாமல் அவர்களே வைத்துக் கொண்டார்கள்.

இந்தச் சமயத்தில்தான் திருமணம் செய்துகொண்டேன். அவள் இருந்த வரைக்கும் என்னிக்கு அந்தப் படம் தியேட்டரில் வரும்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. கடைசி வரைக்கும் அவங்க நான் எடுத்த படத்தைப் பார்க்காமல், அடுத்த படம் செய்யறதையும் பார்க்காமல் இறந்து போயிட்டாங்க.

முன்னாடி சாலிக்கிராமத்தில் இருந்தவன், செலவுகளைச் சமாளிக்க முடியாமல் குன்றத்தூர் போயிட்டேன். மனைவியைக் கை நழுவ விட்டுட்டேன்னு இறுக்கம் தாங்க முடியலை. அவங்களுக்குப் பின்னாடி ஒட்டு மொத்த வாழ்க்கையே மாறிப்போச்சு. சாதாரணமாக சுகர் அதிகமாகித்தான் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால், இறந்திட்டாங்க.

நல்ல மருத்துவமனையில் வைத்துப் பார்த்திருக்கலாம். அருமையான மனைவி இல்லாமல் போன துயரத்தை தாங்க முடியவில்லை. இப்ப என் மகன் தன்யன்என் கூடத்தான் இருக்கான். எங்க வீட்டிலும், அவங்க வீட்டிலும் பிள்ளையை வளர்த்துக்கிறோம்னு சொன்னாங்க.

எனக்கு இப்போ மனைவி இல்லை. ஆனால், பையன் இருக்கான். நல்ல கணவனா இருக்க முடியாத நான், நல்ல அப்பாவாக இருக்க முயற்சி பண்றேன்...’’ என்றவரிடம் இவ்வளவு தூரம் பொருளாதாரத்தில் பின் தங்கிப் போனது எப்படி என்றால் வேதனையுடன் தொடர்கிறார்.

‘‘நண்பர்கள் எனக்கு உதவாமல் இல்லை. எனக்கு எப்பவும் உதவி செய்துவருவதில் சாத்துக்குடல் நடராஜன் குருக்கள் முன்னணியில் நிற்கிறார். இயக்குநர்கள் மாதேஷ், சமுத்திரக்கனி, வெற்றிமாறன் போன்றவர்கள் அவ்வப்போது உதவுகிறார்கள். ஆனால், எவ்வளவு நாள் அவர்களைத் தொல்லைப்படுத்துவது! என் குரு ஷங்கர் சாரை நான் போய்ப் பார்க்கவில்லை.

தொழில் கற்றுக் கொடுத்த அவரிடம் போய் நான் பணத்திற்காக நிற்க முடியாது. அப்படியும் சொல்ல முடியாது. நான் ஒரு தடவை பெரிய விபத்தில் சிக்கியபோது என்னை வந்து பார்த்தார்.

பொருள் உதவியும் செய்தார்.‘கவிதாலயா’ படம் ஏன் வெளிவரவில்லை என்றுதான் எங்கே போனாலும் கேட்கிறார்கள். விஜய் சாரிடம் முன்பு மூன்று மணி நேரம் கதை சொன்னேன். அவர் கேட்டுவிட்டு, ‘இன்னும் இரண்டு வருடத்திற்கு உங்கள் பக்கம் வரமுடியாது. இரண்டு படம் இருக்கிறது. அவ்வளவு நாட்கள் நீங்கள் காத்திருக்க முடியாது’ என்றார்.

அப்படியும் ‘நான் காத்திருக்கிறேன்’ என்றேன். ‘முதல்வனே ரஜினியை வைத்து செய்திருக்க வேண்டியது. அவர் அர்ஜூனை வைத்து செய்து வெற்றி காணவில்லையா. இன்னொரு ஹீரோவை வைத்து செய்யுங்கள். பிறகு பார்க்கலாம்’ என சொல்லிவிட்டார்.

அந்த வாய்ப்பும் கை நழுவிவிட்டது. பிறகு குன்றத்தூர் வீட்டை விட்டுவிட்டு, என் மனைவியையும் இழந்து, என் மகனோடு இந்த சிறு வீட்டுக்குக் குடி வந்திருக்கிறேன். பெரிய வீடுகளில் இருந்து பழகியவனுக்கு முதலில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகி விட்டது.

ஒரு தாய் எப்படி மகனுக்கு செய்வாளோ, அப்படியே மகனை பார்த்துக்கொள்கிறேன்.ஆனாலும் இந்த குறைந்த வாடகையைக் கூட என்னால் தொடர்ந்து தரமுடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு கரண்டை கட் செய்துவிட்டார்கள்.

எனக்கொரு கஷ்டம் இருக்கும்போது, வீட்டு ஓனருக்கும் சில கஷ்டங்கள் இருக்கலாம். ரொம்ப நாள் கரண்ட் இல்லாமல் இருந்தோம். இப்போதுதான் என் மனைவிக்கு முதலாண்டு நினைவு நாள் வந்தது. அதற்காக கெஞ்சிக் கேட்டு பணம் தந்து விடுவதாகச் சொல்லி மறுபடியும் கரண்ட் போட்டிருக்கிறார்கள்.

நானும் மகனும் வீட்டிற்கு வருவது ஹவுஸ் ஓனருக்கு தெரிந்துவிடும் என்பதற்காக, லைட்டை கூட போடாமல் வருவோம். கேட்டை திறக்கும் சத்தம்கூட கேட்காமல் கதவைத் திறக்க எனக்கு தெரியும்.முதல் வகுப்பு படிக்கும் என் மகனை ரஜினி, எஸ்.ஏ.சந்திரசேகர், எடிட்டர் மோகன், இயக்குநர் கஸ்தூரி ராஜா வளர்த்தது மாதிரி வளர்க்கணும்னு ஆசைப்படுகிறேன். என் மகனை இன்னும் நல்ல பள்ளியில் சேர்க்க முடியாமலும், கட்டணங்களைக்
கூட கட்ட முடியாமலும் தவிக்கிறேன்.

வறுமையில் நல்ல நல்ல கதைகள் கிடைக்குது. ரஜினிக்காக ‘பேரரசன்’ என்ற அட்டகாசமான கதையிருக்கிறது. மற்ற கதாநாயகர்களுக்காக ‘காத்து’, ‘ஜா’, ‘கட்சி ஆரம்பிக்கலாமா மாப்ள’ என்ற கதைகள் ரெடியாக இருக்கின்றன. வீழ்ந்துவிட்டது உண்மைதான்.

எழ உங்கள் கைகளை நீட்டுங்கள். தூக்கிவிடுங்கள். நல்ல திறமைகள் உள்ளது. நல்ல படைப்புக்களைத் தருவேன். உண்மையில் வெற்றிக்கும் தோல்விக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஒரு கோல், ஒரு ரன்தானே! விளையாடத் தெரியாமலோ, தவறாக விளையாடியோ எவரும் தோற்பதில்லையே!

கவிக்கோ முன்பு சொன்னது மாதிரி ஒவ்வொரு விதைக்கும் தெரியும், அது என்ன செடியாகப் போகிறதென்று. என்னைப் பூக்க விடுங்கள். எனக்கான வாய்ப்புக்களை கொடுங்கள். கொஞ்சமாவது எழுந்து கொள்ள உதவுங்கள்...’’ என்கிறார் ஸெல்வன். முகத்தசைகள் புன்னகைக்க ஒத்துழைக்க மறுப்பதால், கண்களால் மட்டும் சிரிக்கிறார்.அந்தச் சிரிப்பு, குளத்தில் வீசிய கல் மாதிரி அலைகளை ஏற்படுத்தியபடி, பெரிதாகவும், ஆழத்திற்கும் போய்க் கொண்டே இருந்தது.        

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்