அரசியல்வாதிகள் இரு துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளலாம்! சொல்கிறது ஆயுத சட்டத் திருத்தம்



பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலரின் அழுத்தம் காரணமாகச் சமீபத்தில் ஆயுதச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக நல்லது நடப்பதற்குப் பதில் ஆபத்தே அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். ஒரு தனிநபர் அதிகபட்சமாக மூன்று ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என இருந்தது.
இதை ஒன்றாகக் குறைக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்துவந்த நிலையில் இரண்டு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் எனத் திருத்தி அந்த மசோதாவை அவையில் நிறைவேற்றி இருக்கிறார்கள். தங்களிடம் இருக்கும்  3வது துப்பாக்கியை 90 நாட்களுக்குள் அரசிடமோ, விற்பனையாளரிடமோ திரும்ப  ஒப்படைக்க வேண்டும்.

கள்ளத்தனமாகத் துப்பாக்கி தயாரிப்பது, விற்பது, பழுது  பார்ப்பது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு (14 வருடங்கள்)  பதிலாக ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

அதுபோலவே துப்பாக்கி  அனுமதி (லைசென்ஸ்) 3 ஆண்டு களுக்கு வழங்கப்பட்டுவந்த நிலையில், இப்போது 5  ஆண்டு களுக்கு  உயர்த்தப்பட்டு, மின்னணு முறையில் அனுமதி வழங்க ஆயுதச் சட்டம்  வகை செய்கிறது.

அதாவது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஆயுதச்  சட்டத்தில் இப்போது மேற்கண்டபடி திருத்தங்கள் செய்திருக்கிறார்கள்.
ஒருவேளை இரண்டு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என்பது ஒன்றாகக் குறைக்கப்பட்டிருந்தால் அது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், சமூக நீதி அமைச்சர் தவார் சந்த் கெலாட் மற்றும் உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் அர்சீம்ராத் கவுர் படால் ஆகியோருக்கு பிரச்னையாக முடிந்திருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கண்சிமிட்டுகிறார்கள்.

சரி... அரசுத் தரப்பு என்ன சொல்கிறது? “காவல் நிலையங்கள் ஒன்றுக்கொன்று தூரமாக இருப்பதும், எளிதில் தொடர்பு கொள்ள முடியாததுமான
சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமான ஒன்றாகிறது. சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் சமூகத்தின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது...” என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில்தான் இந்த மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
2019 பொதுத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 18% மக்களவை உறுப்பினர்கள் துப்பாக்கி ஆயுதங்களை வைத்துள்ளனர். அவை இந்தியாவில் உற்பத்தியானது மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என ரூ.4,000 முதல் ரூ. 7,00,000 வரை விலை கொண்டவை.

பெயர் குறிப்பிட விரும்பாத ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இவற்றின் விலை, அவற்றின் தோற்றம் மற்றும் தரத்தின் அடிப்படையில் குறைவாக மதிப்பிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது...” என்கிறார்.ஜக்தாம்பிகா பால் (பாஜக), அசாதூதின் ஓவைசி (All-India Majlis-e-Ittehadul Muslimeen), அஜய் நிஷாத் (பாஜக), மொஹமத் அஸாம் கான் (சமாஜ்வாடி) ராம் ஷஹிரோமனி (பிஎஸ்பி) போன்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.
உத்திரப் பிரதேச சரஸ்வதி மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஷிரோமணி இது குறித்துக் கூறுகையில், “புதிதாக உரிமம் கோருபவர்களுக்கு மட்டும் இரண்டு ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி என்றோ அல்லது ஏற்கனவே மூன்று ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றோ திருத்தப்பட்ட மசோதா தெளிவுபடுத்தவில்லை...” என்கிறார்.

“எம்எல்ஏ, எம்பி மற்றும் அரசியல் சார்ந்த பிரமுகர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி துப்பாக்கிக்கான உரிமத்தை வாங்குகிறார்கள். ஆனால், பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அரசு இதில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பதவியிலிருந்து அவர்கள் விலகியபின் வைத்திருந்த ஆயுதங்களை திருப்பித் தருவார்கள். ஆனால், அரசு இந்த ஏற்பாட்டைச் செய்யாமலேயே இருக்கிறது...” என தன் வருத்தத்தைத் தெரிவிக்கும் அந்தப் பெயர் குறிப்பிட விரும்பாத ஐபிஎஸ் அதிகாரி, “மத்திய அமைச்சர்கள் மற்றும் இன்னும் பல விஐபிகளுக்கு உயரிய பாதுகாப்பு கொடுத்தும், அவர்களே துப்பாக்கிகளை உபயோகப் படுத்துபவர்களாக இருந்தால், சாதாரண மனிதன் என்ன செய்வான்?” என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

உரிமம் வாங்கிய மத்திய அமைச்சர்களான, மகேந்திர நாத் பாண்டே (revolver), கஜேந்திர சிங் ஷேக்வார் (pistol), ஃபாகன் சிங் குல்சடே (revolver), சஞ்சீவ் குமார் பால்யான் (pistol), அனுராக் தாகூர் (pistol), நித்யானந்த் ராய் (rifle) ஆகியோர் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

1987ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை 756 துப்பாக்கிகள் எம்பி, விஐபிகளிடமிருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இதில் நிரந்தரமாகத் துப்பாக்கி வாங்குபவர்களாக, உமா பாரதி, விஜய் கோயால், யோகி ஆதித்திய நாத், மாயாவதி, ஜகதீஷ், டைட்லர், பூபேந்திரசிங் ஹூடா, சையத் ஷான்வாஷ் ஹுசேன் போன்றோர் முக்கியமானவர்கள்.

சில அரசியல்வாதிகள், எம்பிகள் தேர்தல் நேரங்களில் தங்கள் மனைவியின் பெயரில் துப்பாக்கிக்கான உரிமத்தைப் பெறுகின்றனர். இப்படிப் பெற்றவர்களில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜகவினர் அதிகம். அரசியல் பகையானது வன்முறையாக மாறும்போது துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் ஒருசில நேரங்களில் உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன.

இப்போது நிறைவேற்றியிருக்கும் ஆயுதங்கள் திருத்தச் சட்டத்திற்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.  விளைநிலங்களை நாசம் செய்யும் வன விலங்குகளிடமிருந்து தங்களது பயிர்களைக் காக்க விவசாயிகளுக்குத்தான் ஆயுதம் தேவை என்கிறார்.ஒவ்வொரு சட்டம் இயற்றப் படும் போதும் அந்தச் சட்டங்களும் சலுகைகளும் ஆளுபவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்குமே பயன்படுகிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

அன்னம் அரசு