மலக்குழி மரணங்களை ஊக்கப்படுத்துகிறதா ஸ்வட்ச் பாரத்?



சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் உணவகத்தின் கழிவு நீர் பாதையை சுத்தம் செய்யும் போது 4 பேர் இறந்தனர். இப்போது சென்னை
ஷாப்பிங் மாலில்  இளைஞர் ஒருவர் மரணம்!

மலக்குழி மரணங்களால் பெரும்பாலும் இளைஞர்கள்தான் மரணிக்கின்றனர். அலுவலக செக்யூரிட்டி பணிக்கு சென்றால் கூட ஓரளவு கணிசமான ஊதியம் கிடைக்கும். அப்படியிருக்க இந்தப் பணிக்கு ஏன் இளைஞர்கள் வருகின்றனர்..?

‘‘சாதி ரீதியா எங்களை இதுல கொண்டு வந்து சேர்த்துடறாங்க. உடம்பு சரியில்லாம அப்பாவோ அம்மாவோ இந்த வேலைக்குப் போகலைனா எங்களை வரச் சொல்றாங்க.

இந்த வேலைல இருந்து வெளில போகலாம்னு நாங்க நினைக்கறப்ப எல்லாம் இதை அரசு வேலையா மாத்தித் தர்றோம்... நிரந்தர வேலையா மாத்தறோம்னு சொல்லிச் சொல்லி இதுலயே எங்களை வைக்கறாங்க...’’ வருத்தத்துடன் சொல்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத துப்புரவுப் பணியாளர் ஒருவர்.

2014ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கண்டறியப்பட வேண்டும் என்ற ஆணையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது உச்சநீதிமன்றம். இன்று வரை மத்திய - மாநில அரசுகள் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதுதான் நிஜம் என்கிறார்கள்.

இந்தியாவில் கேரள மாநிலம் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறது. சென்ற ஆண்டு மலக்குழி மரணம் அங்கு ஒன்றே ஒன்றுதான் நிகழ்ந்திருக்கிறது. தவிர மலக்குழி அடைப்பை நீக்கும் எந்திரத்தை உருவாக்கி அந்த மாநிலமே வெற்றிபெற்றிருக்கிறது.

பேண்டிக்கூட் (பெருச்சாளி) என்ற அந்த எந்திரத்தை துப்புரவுத் தொழிலாளர்கள் கையாள்வதில்லை. மாறாக, அதற்கென முறையாகப் பயின்ற ஒருவர்தான் அந்த எந்திரத்தை இயக்குகிறார். கேரளாவால் இப்படியொரு எந்திரத்தை ஒருவாக்கி அதை மாநிலம் முழுக்க நடைமுறைப்படுத்தமுடியும்போது மற்ற மாநிலங்களால் ஏன் முடியாது... என்று கேட்கிறார்கள் சமூக ஆய்வாளர்கள்.

மலக்குழி அடைப்பை நீக்குபவர்களுக்கு 43 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், கையுறையும் சில இடங்களில் கூடுதலாக காலணியும் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் குறிப்புப்படி நாடு முழுக்க 56 ஆயிரம் பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுகின்றனர். இது, இன்றும் தடை செய்யப்பட்ட உலர் கழிவறைகள் அதிகளவில் நம் நாட்டில் இருக்கின்றன என்பதையே காட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கையால் மலம் அள்ளுபவர்களே இல்லை என்று அரசு சொன்னது. ஆனால், இப்போது 56 ஆயிரம் பேர் இப்பணியில் இருப்பதாகச் சொல்கிறது. இதில் எது உண்மை என சமூக அறிஞர்கள் கேட்கிறார்கள்.

2019ம் ஆண்டில் மட்டுமே இதுவரை 40 பேர் கழிவுநீர் தொட்டியைச் சுத்தப்படுத்தும்போது இறந்துள்ளனர். சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 105.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏட்டளவில் மட்டுமே இது இருக்கிறது. எந்திரங்களை பயன்படுத்தாமல், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுக்கு வழி ஏற்படுத்தித் தராமல், அத்தொழிலுக்காக அவர்களைப் பாராட்டி தொடர்ந்து அப்பணியில் அவர்களை ஈடுபடுத்துவதே இப்போது வரை தொடர்கிறது.

சமீபத்தில் பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தப்படுத்த இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். அச்சம்பவத்தில் முறையாக எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்கிறார்கள். மாறாக, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் தொகுதியிலேயே இதுதான் நிலை என்பது வேதனையளிக்கும் விஷயம்.

ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்படி அதிகப்படியான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அதன் அர்த்தம், கழிவறைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதுதான். ஆனால், இப்படி ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்படி கட்டப்பட்ட கழிவறைகள் பல இடங்களில் கழிவுநீர்க் குழாயுடன் இணைக்கப்படவில்லை... இந்தத் திட்டத்தின் வெற்றி என கட்டப்பட்ட கழிவறைகளின் எண்ணிக்கையை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். மற்றபடி இதை சுத்தப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் மலக்கிடங்கை சுத்தம் செய்யச் செல்லும் ஒருவர், விண்வெளிக்குச் செல்வதுபோல் அனைத்து பாதுகாப்பான உபகரணங்களுடனும் எந்திரங்களுடனும் செல்கிறார். இந்தியாவில் மட்டுமே வெறும் கையுறையுடன் மலக்குழிக்குள் ஒரு தொழிலாளி இறங்குகிறார்.

இத்தனைக்கும் மலக்கழிவை சுத்தப்படுத்தும் எந்திரத்தின் விலை ஒன்றும் அவ்வளவு அதிகமல்ல. எனவே, தேவையான எந்திரங்களை வாங்கி அவற்றையே அரசு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை துப்புரவுப் பணியாளர்கள் முன்வைக்கிறார்கள்.  அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, எந்திரங்களை மட்டுமே சுத்தம் செய்ய பயன்படுத்தச் செய்ய வேண்டும். இதுநாள் வரை துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு.

13 லட்சம் குடும்பங்கள்...

கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம் 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, மலக்குழியில் மனிதர்களை முதல்முறையாக இறக்குபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இரண்டாவது முறை மீறினால் ஈராண்டு தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து அளிக்கப்படும் என்கிறது சட்டம். ஆனால், இன்றுவரை இச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றது.

2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, ‘நாடெங்கிலும் 7 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாக’க் குறிப்பிடுகிறது.

‘இந்தப் புள்ளிவிவரம் ரயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கப்படவில்லை’ எனக் குற்றம் சுமத்தும் அரசுசாரா அமைப்புகள், அத்தொழிலாளர்களையும் சேர்த்தால் நாடெங்கும் ஏறத்தாழ 13 லட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன.

திலீபன் புகழ்