சங்கத்தமிழன்



உயிருக்கே உலை வைக்கும் ஆலையை ஊருக்குள் வராமல் தடுக்கும் போராட்டத் தமிழனே ‘சங்கத்தமிழன்’.ஊர்ப் பெரியவரான நாசர் தலைமையின் கீழ் எல்லாமே நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்க... மும்பையில் இருந்து வந்து தாமிர ஆலையை நிறுவப் பார்க்கிறார்கள். அதன் ஆபத்துகள் புரிபட ஊரே ஒன்றுபடுகிறது.

அங்கே நடக்கும் போராட்டங்களின் விளைவாக ஊரின் தலைக்கட்டு குடும்பங்களின் தலைகள் உருள காட்சிகள் மாறுகின்றன.

சென்னையில் அதே உருவ(!) ஒற்றுமையுடன் விஜய் சேதுபதி, அதே ஆலை அதிபரின் மகள் ராசி கண்ணாவின் அன்புக்கு ஆட்படுகிறார்.

கல்யாணத்துக்கு ஆலையைக் கொண்டு வந்து நிறுவ தடை இருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்க ஊருக்கு வருகிறார் சேதுபதி. ஆலையை நிறுவும் முயற்சி நடந்ததா என்பதே க்ளைமாக்ஸ்.

அவ்வப்போது அதிரடியாகக் களம் இறங்குகிறார் விஜய் சேதுபதி. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய களத்தில் அவர். நூறு அடிக்கு ஒரு தடவை சண்டை போடுவதில் பத்தாயிரம் வாலா பவரில் நெருப்பு பறக்கிறது. படம் நெடுக மாஸ் வசனம் பேசுவதும் நெஞ்சில் ஏறி மிதிப்பதுமாக எக்கச்சக்க மாஸ் ஹீரோ பில்டப். நடித்து நடித்து அலுத்துப் போய் ஓங்கி அடித்து ஃபைட் பண்ணுவதில் தடம் மாறியிருக்கிறார் சேதுபதி.

தொழிலதிபர் மகளாக ராசி கண்ணா. இறங்கிவந்து சேதுபதியைக் காதலிக்கிறார். அந்தக் காதல் அத்தியாயங்களில் சுவாரசியம் நீள்கிறது. அந்த ஈறு தெரிகிற சிரிப்பில் மயக்கம் ஏற்படுவது உண்மை. அந்த உயரத்தில் நிவேதா பெத்துராஜ் வந்து ‘மாமா மாமா’ என்று கொஞ்சிவிட்டு மறக்கமுடியாமல் இறந்துபோகிறார். அவரிடம் முதல் படத்தில் பார்த்த அந்த தெளிவும் அழகும் எங்கே எனக் கேட்கத் தோன்றுகிறது.

திரையில் விஜய் சேதுபதிக்கு ஒற்றை வேடமா, இரட்டை வேடங்களா என நமக்கும் சந்தேகம் வந்த மாதிரி இயக்குநர் விஜய் சந்தருக்கும் வந்திருக்கிறது. இடைவேளைக்கு பின்பான திரைக்கதை சறுக்கல்.சூரி கிட்டத்தட்ட சேதுபதிஉடன் வருகிறார். இரண்டுபேரும் சேர்ந்து கலகலக்க வைக்கிறார்கள்.

நாளடைவில் அந்தப் பொறுப்பை ஹீரோவிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார் சூரி. இரண்டு பேர்களின் ஒன்லைனர்களில் தியேட்டர் அதிர்கிறது.
வேல்ராஜின் கேமரா தொடக்கத்தில் சுவாரசியம் காட்டி பின்னர் வலுவிழக்கிறது. விவேக் மெர்வின் இசையில் பாடல்களோ, பின்னணி இசையோ மனதைத் தொடவில்லை.

பழைய படம் பார்க்கிற உணர்வு, பார்த்துப் பழகிய பழைய திரைக்கதை, லாஜிக் இல்லாத துண்டான காட்சிகள் படத்தின் பலவீனம்.   
கதையின் பழைய நெடியையும் குழப்பத்தையும் சீர்படுத்தியிருந்தால் ‘சங்கத்தமிழனை’க் கொண்டாடியிருக்கலாம்.   

குங்குமம் விமர்சனக் குழு