ரத்த மகுடம்-80



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கடவுளின் மாயை அற்புதமானது. அநித்தியத்தை நித்தியமாகக் காட்டக் கூடியது.  உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் தோற்றமளிக்கச் செய்ய வல்லது.தினசரி  கணக்கற்ற மக்கள் கண்ணுக்கு எதிரே மடிந்து மயானம் செல்வதைக் கண்டாலும் தன்  வாழ்வு மட்டும் சதமென்று நினைத்து மனிதன் பொய்யான மண்ணையும் பொன்னையும்  கட்டிக் கொண்டு திண்டாடக் கூடிய மனோநிலையைச் சிருஷ்டிக்கக் கூடிய மாயையின்  வல்லமையை வர்ணிக்க முடியாது.

மனிதனுடைய கண்ணுக்கும் உண்மைக்கும் இடையே  சட்டென்று திரைபோடக் கூடிய இப்பேர்ப்பட்ட மாயையைப் பெரியவர்கள் பெண் இனத்தில்  சேர்த்திருக்கிறார்கள்.எந்த உண்மையையும் கணத்தில் மறைத்து ஆண்கள் கண்ணில் மண்ணைப் போடும் திறமை பெண்களுக்கு உண்டு என்பது பெரியோர்கள் சித்தாந்தம்.

எப்பேர்ப்பட்ட  அசந்தர்ப்பமான நிலையில் இருந்தும் பெண்கள் தங்களை விடுவித்துக்கொண்டு  ஆண்களைத் தங்களின் நிரந்தர அடிமைகளாக வைத்துக் கொள்கிறார்கள்.இந்த சக்தியை மட்டும் ஆண்டவன் பெண் இனத்துக்கு அளிக்காமல் இருந்தால் கரிகாலனின் கதி அன்று அதோகதியாகத்தான் போயிருக்கும்!ஏனெனில் மதுரை மாநகரின் கோட்டைக்கு வெளியிலும் கோட்டைக்குள்ளும் இதை கரிகாலனே அனுபவபூர்வமாக உணர்ந்தான். மாறுவேடம் தரித்து சாதாரண பணிப்பெண்ணாகக் காட்சி அளித்த சிவகாமி அதை உணர வைத்தாள்.

இந்த உண்மையை கரிகாலன் உணர்வதற்கு முன்னால் மெய்மறந்து நின்றான். அப்படி அவனை மெய்மறக்கச் செய்தது மதுரை மாநகரம்தான்.
கடிகை பாலகனைப் பின்தொடர்ந்து கால்நடையாக சிவகாமியுடன் ஒரு நாழிகை பயணம் செய்த கரிகாலன் மதுரைக் கோட்டையை நெருங்கியதும் அப்படியே நின்றுவிட்டான். கண் முன்னால் விரிந்த காட்சி அவன் சித்தத்தைக் கட்டிப் போட்டது.  

மனோகரமான அந்த மாலை வேளையில் மெல்ல மெல்ல மங்கிக் கொண்டிருந்த மஞ்சள் வெயிலின் மயக்கம் தரும் பிரகாசத்தில், மதுரை மாநகர் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது.அதைப் பார்க்கப் பார்க்க அவனுக்குள் பல்வேறு உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.பைந்தமிழும் பாவலரும் இரண்டறக் கலந்து உறவாடியதால் எழுந்த பல இன்பக் கவிதைகளின் இருப்பிடமான

மதுரை மாநகர் -

ஆழ்கடலில் இருந்து முதன் முதலாக எழுந்த ஒரே நிலப்பரப்பான ஜம்பூத்வீபத்தின் ஆரம்பக் காலத்திலேயே ஏற்பட்டதால் மூதூர் (பழைய ஊர்) எனப் பிரசித்தமாகி பின்பு காலத்தின் வாக்கினிலே மதுரை என மருவிவிட்டதுமான ஆதி மதுரை ஒன்று இருந்ததற்கு அத்தாட்சியாக இன்றும் விளங்கும் மதுரை மாநகர் -மூதூரை மும்முறை கடல்கொண்டும் அதன் தமிழ் மக்கள் மாளாது பின்னடைந்து வாழ இடம் கொடுத்ததால் சரித்திரத்திலும் இறவா இடம் பெற்றுள்ள மதுரை மாநகர் -கண்ணன் அடிவைத்த வட மதுரைக்கு ஒரு சவாலாகவும், ஆண்டவன் திருவிளையாடல்களாலும், அவற்றால் மலர்ந்த அடியார்களின் உள்ளத்திலிருந்து தெள்ளமுதென எழுந்த தீந்தமிழ்ப் பாக்களாலும் தெய்வீகம் பெற்றுத் துலங்கும்

 தென்மதுரை மாநகர் -‘நாவலம் பெரும் தீவினில் வாழ்பவர்’ என அப்பர் பெருமானும் மற்றோரும் போற்றிப் புகழ்ந்த பெருமக்கள் வாழ்ந்த தமிழன்னையின் மடியெனத் திகழும் மதுரை மாநகர் -

எட்டுரெண்டும் தெரியாத கெட்ட மானிடர் உய்யப் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படியும் பட்டதால் ஆண்டவனும் அடியாரும் ஒன்றே என்பதையும், சிற்றுயிர்கள் எல்லாம் பேருயிர் பாவித்து கிடக்கிறதென்ற பிரபஞ்ச தத்துவத்தையும் உலகுக்கு விளக்கிக் காட்டிய எம்பெருமான் கோயில் கொண்ட மதுரை மாநகர் -அர்த்தநாரீசுவரியான அம்பாளும் அடியார்களை ஆட்கொள்ள அரசன் உடலில் இருந்து பிரிந்து இறங்கினாளோ என ஐயுறும்படி அவதரித்து தன் அருள் விழிகளால் அஷ்ட ஐசுவரியத்தையும் அளித்ததோடு அரியணையில் இருந்து அரசும் ஆண்ட தேவி மீனாட்சியின் தலைமைத் தலமாம் மதுரை மாநகர் -காவியத்துக்கும் ஓவியத்துக்கும் வாணிபத்துக்கும் விவசாயத்துக்கும் ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்த மதுரை மாநகர் -வைர வைடூரியங்களும் முத்துக்களும் குவியல் குவியலாகக் கடைத் தெருக்களில் கிடந்ததால் செல்வத்துக்குப் பேர்போன மதுரை மாநகர் -கற்பரசி கண்ணகி சிலம்பெறிந்து தீப்பொறி கிளப்பி அக்கினிப் பிழம்பிலே குளிக்க வைத்ததால் தூய்மை பெற்றுத் தீயிட்ட தங்கம்போல் புது மெருகுடன் ஜொலிக்கும் மதுரை மாநகர் -அப்பப்பா... இன்னும் இன்னும் என விவரணைக்கு அடிகோலும் அத்தகைய புராதன நகரம் பெரிய கோபுரங்களுடனும் வானத்தைத் தொடும் கட்டடங்களுடனும் ஓங்கி உயர்ந்த கோட்டைச் சுவர்களுடனும் மிக அழகாகத் தன் கண்முன்னால் எழுந்து நின்றதைப் பார்த்தான் கரிகாலன்.

அவனையும் அறியாமல் உள்ளம் நெகிழ்ந்தது. எப்பேர்ப்பட்ட பழம் பெருமை வாய்ந்த நிலத்தில் தன் காலடி படுகிறது... இதற்காக, தான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணி உள்ளம் கசிந்தான்.கரிகாலனின் உள்ளக்கிடக்கையை அறிந்ததற்கு அறிகுறியாக சிவகாமி அவனை நெருங்கினாள். அவன் கரத்தைப் பற்றி அழுத்தினாள்.

அந்தக் கரங்கள் சொன்ன செய்தியை அவன் மனம் அறிந்தது. அதற்கு அறிகுறியாக அவளைப் பார்த்த அவன் நயனங்களில் காதல் சொட்டியது.தன் கண்களால் ‘வாருங்கள்’ என்றழைத்த சிவகாமி, நிற்காமல் முன்னால் சென்று கொண்டிருந்த கடிகை பாலகனை பார்வையால் சுட்டிக் காட்டினாள்.புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையசைத்த கரிகாலன், அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான்.

கோட்டை வாசலை அவர்கள் மூவரும் நெருங்க நெருங்க ஊர் மக்கள் பேசும் சத்தமும் வீரர்கள் ஆணையிடும் கூச்சலும் வாகனங்கள் புரண்டோடுவதால் ஏற்படும் ஒலியும் எல்லாமாகச் சேர்ந்து பேரிரைச்சலாகக் கேட்ட மதுரை மாநகர் முழு உயிருடன் சஞ்சரிப்பதைப் புலப்படுத்தியது.

இதனை அடுத்து தாரை வாத்தியங்கள் பலமாக முழங்கின.கரிகாலனை விட, கடிகை பாலகனை விட இதனால் அதிகம் அதிர்ந்தது சிவகாமிதான்!
மூவரும் அதிர்ச்சியுடன் தங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள்.

சுற்றிலும் புரவிகள் சூழ நடுவில் வந்த வெண்மை நிறக் குதிரையின் மேல் இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.பார்த்ததுமே கரிகாலனுக்கு அந்த இளைஞன் யார் என்று புரிந்துவிட்டது. வயது இருபதுக்குள் இருக்கலாம். களையான முகம்.

அரச பரம்பரையில் வந்தவன் என்பதற்கு அடையாளமாக அவன் வதனத்தில் கம்பீரம் சுடர்விட்டது. புரவியில் அமர்ந்திருந்த தோரணையும் அதையே எடுத்துக் காட்டியது. சிரசில் மணிமுடி தரித்திருந்தான். ஆனால், அது மன்னர்கள் அணியும் மணிமுடி அல்ல. அளவிலும் வேலைப்பாட்டிலும் சற்றே குறைந்தது. இளவரசர்கள் மட்டுமே அணியக் கூடியது.

இதை வைத்து வெண்புரவியில் வருபவன் இளவரசன்தான் என்பதை கரிகாலன் ஊகித்துவிட்டான். எந்த தேசத்து இளவரசன் என்பதும் அப்புரவி ஊர்வலம் அருகில் வந்ததும் தெள்ளத் தெளிவாக கரிகாலனுக்குப் புரிந்து விட்டது.வருபவன் சாளுக்கிய இளவரசர் விநயாதித்தன்!
மாலைச் சூரியனின் கதிர்கள் தெளிவாகவே புரவியின் மீது வருபவனின் முகத்தில் விழுந்தன.

அதுதான் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கும் புரவியில் வருபவனுக்கும் இடையிலான உறவை கரிகாலனுக்குப் புரிய வைத்தது. அந்தளவுக்கு ஜாடை சரியாக இருந்தது.‘‘வருபவன் சாளுக்கிய இளவரசன்...’’ அருகில் இருந்த சிவகாமியின் செவியில் கரிகாலன் முணுமுணுத்தான்.
‘‘ஆம்... ஒரு திங்களாக இளவரசர் விநயாதித்தர் மதுரையில் இருப்பதாக பல்லவ இளவரசர் தெரிவித்தார்...’’

‘‘ஏன் உன் அண்ணன் என்று சொல்லக் கூடாதா..?’’கேட்ட கரிகாலனின் இடுப்பை சிவகாமி யாரும் அறியாமல் கிள்ளினாள்.
‘ஆ’ எனக் கத்த முற்பட்டவன் சுற்றிலும் மக்கள் இருப்பதை அறிந்து வாயை மூடிக் கொண்டான்.இந்தக் கணத்தில்தான் மாயை சிருஷ்டித்து பாண்டியர்களின் பார்வையில் இருந்தும் சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனின் கவனத்தில் இருந்தும் தாங்கள் தப்பிப்பதற்கான வழியை சிவகாமி ஏற்படுத்தத் தொடங்கினாள்.

அதன் ஒரு பகுதியாக ‘‘வேளிர் குலத் தலைவரே...’’ என ஒதுங்கி நின்றிருந்த கடிகை பாலகனை அழைத்தவள், ‘‘உங்கள் நண்பரான சாளுக்கிய இளவரசர் எங்கோ சென்றுவிட்டு மதுரை மாநகருக்குள் நுழைகிறார்... அவருடன் நீங்களும் செல்லுங்கள். வடக்கு வீதியில் இருக்கும் சத்திரத்தில்தான் நாங்கள் இருவரும் தங்கப் போகிறோம். பாண்டிய மன்னரைச் சந்திக்கும்போது நாளை நாங்கள் அவரைப் பார்க்க வருவதாகச் சொல்லுங்கள்...’’ என்றாள்.

கட்டளை போல் தொனித்த இந்த வாக்கியங்களைக் கேட்டதும் கடிகை பாலகன் துணுக்குற்றான். அதை அதிகப்படுத்துவது போலவே சிவகாமி அடுத்து பேசினாள்:.

‘‘உங்கள் கைதியாக நாங்கள் மதுரைக்கு வரவில்லை... உங்கள் சகோதரர் கரிகாலர் முன்பு சொன்னபடி பாண்டிய மன்னரைப் பார்க்கவே நாங்கள் வந்திருக்கிறோம். அதுவும் பல்லவ மன்னரின் தூதராக! தூதுவர்களைக் கைது செய்யும் வழக்கம் எந்த தேசத்திலும் இல்லை! இதோ சாளுக்கிய இளவரசர் நெருங்கிவிட்டார். செல்லுங்கள்...’’கடிகை பாலகனை நோக்கிச் சொன்ன சிவகாமி, அதன்பிறகுதாமதிக்காமல் கரிகாலனைப் பற்றி இருந்த தன் கரத்துடன் கூட்டத்தில் கலந்துவிட்டாள்.

செய்வதறியாமல் திகைத்த கடிகை பாலகன், வேறு வழியின்றி விநயாதித்தனின் பரிவாரத்துடன் கலந்தான். தாரை வாத்தியங்கள் பலமாக முழங்க... குதிரைப் படையினர் அணிவகுத்து சாளுக்கிய இளவரசரை எதிர்கொள்ள வந்தார்கள். குதிரைப் படையினரில் இருபது பேர் புடைசூழ விநயாதித்தன் மதுரைக் கோட்டைக்குள் நுழைந்தான்.

நட்பு பாராட்டப்பட்ட சாளுக்கிய நாட்டின் இளவரசன் என்பதால் ஒவ்வொரு கோட்டை வாசலிலும் விநயாதித்தனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. பிரமாதமாகவும்.காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த யானைகள் துதிக்கைகளைத் தூக்கி வணங்கியதோடு சந்தோஷமாகக் கூச்சலும் போட்டன.
குதிரைகள் மீது காத்து நின்ற வீரர்கள் வாட்களைத் தாழ்த்தி வணங்கினார்கள்.

சாளுக்கிய இளவரசர் விநயாதித்தனும் அவரைத் தொடர்ந்து வந்த சிறு குதிரைப் படையும் உட்புகுவதற்காக கோட்டைக் கதவுகளை அகலத் திறந்த காவலாளிகளின் தலைகள் வணங்கின. வீதிகளில் விநயாதித்தரைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் கூச்சல் போட்டார்கள். வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்.

விநயாதித்தர் வருவதற்கான தாரை முழங்கப்பட்டதால் மாடிக் கைப்பிடிச் சுவர்களில் வந்து கூடிய மங்கையர் விநயாதித்தரை சுட்டிக் காட்டி ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

சிலர் வெட்கத்துடன் சிரித்தார்கள்.எதற்கும் அஞ்சாத சிவந்த யவனர்கள் கூட மிக வேகமாக வந்து கொண்டிருந்த தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி இறங்கி நின்று தலை தாழ்த்தி விநயாதித்தருக்கு வழிவிட்டார்கள். என்னதான் நட்பு தேசத்தின் இளவரசன் என்றாலும் மன்னருக்கு உரிய மரியாதையை மதுரை மக்கள் விநயாதித்தனுக்கு அளித்தது கரிகாலனை யோசிக்க வைத்தது.

அவனும் சிவகாமியும் பாண்டிய வீரர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழாதபடி விநயாதித்தனின் பரிவாரத்துடன்தான் மதுரை மாநகரில் நுழைந்தார்கள். எனவே, எல்லா வரவேற்பையும் அருகில் இருந்து அவனால் பார்க்க முடிந்தது. சமயத்தில் இந்த வரவேற்பு எல்லாம் சாளுக்கிய இளவரசனுக்கு அல்ல... தனக்கும் சிவகாமிக்கும்தானோ என்றும் நினைக்க வைத்தது!அது உண்மைதான் என்பதற்கு அடையாளமாக கோட்டைக் காவலனிடம் தன் கரங்களை மீனைப் போல் குவித்து சமிக்ஞை காட்டினாள் சிவகாமி!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்