என்னதான் நடக்குது இங்கே? பறிபோகும் வேலை வாய்ப்பு… தடுமாறும் பொருளாதாரம்...
இந்தியாவின் பெரிய பலமே அதன் தொழிலாளர் வளம்தான். பெருகிக்கொண்டே இருக்கும் மக்கள் தொகையால் மனிதவளத்துக்கு இங்கு என்றுமே பஞ்சமில்லை. ஆனால், மக்கள் தொகை ஒருபுறம் பெருகிக்கொண்டிருக்க, மறுபுறம் வருடந்தோறும் பல லட்சம் பேர் வேலை இழந்து வருகிறார்கள் என்று கவலை தெரிவிக்கிறது தேசிய மாதிரிப் புள்ளிவிவர ஆய்வு.
 கடந்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2012க்குப் பிறகு மட்டும் பல லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்களாம். இப்படி வேலையிழப்புக்கு ஆளாகியிருப்பவர்களில் பெரும்பகுதியினர் பள்ளி இறுதிஆண்டு வரை கற்றவர்கள். குறிப்பாக பெண்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்று விரிவாகப் பேசுகிறது அந்த ஆய்வு.
 தேசிய மாதிரிப் புள்ளிவிவரம் (National Sample Survey - NSS), ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர் வளம் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிடும். கடந்த 2017 - 18ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை இதற்கு முந்தைய 2011 - 12ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேலை வாய்ப்பில் சமீபமாக எவ்வளவு பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
 தேசிய மாதிரிப் புள்ளிவிவரத்தின் அலுவலகம் (NSSO) வெளியிடும் ஆய்வு விவரங்கள்தான் ஆதாரபூர்வமானவை. கடந்த 1972ம் ஆண்டு முதலே இந்திய அரசின் தொழிலாளர்நல இலாக்காவின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு இது. இந்த ஆய்வின்படியே வேலையிழப்பு பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த 2013 - 14 மற்றும் 2015 - 16ம் ஆண்டுகளிலேயே இந்த வேலை இழப்பு பற்றி எச்சரித்திருந்தது. இதைத் தவிர மேலும் சில நம்பத்தகுந்த தனியார் புள்ளிவிவர ஆய்வு நிறுவனங்களும் இதைக் குறிப்பிட்டிருந்தன.
ஆனால், இது அரசின் பார்வைக்கு முறையாகக் கொண்டு செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.கடந்த 2004 - 05ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2011 - 12ம் ஆண்டின் வேலை வாய்ப்பு உயர்வு வெறும் 4.5 சதவீதமாக மட்டுமே இருந்தது. எனவே, நாம் இதற்கு முந்தைய சர்வேயான 1983ம் ஆண்டிலிருந்தே விஷயங்ளைப் பரிசீலிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
உண்மையில் இந்த வேலை இழப்பு என்பது கடந்த சர்வே ஆண்டான 2017 - 18ம் ஆண்டில் மட்டும் ஏற்பட்டதில்லை. அது 2004 - 05ம் ஆண்டே தொடங்கிவிட்டது என்பது அவர்கள் வாதம். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு இடையிலான ஊடாட்டத்தை கவனித்தால் இது நன்கு புலப்படும் என்கிறார்கள்.
அதாவது, தொழில் வளர்ச்சி ஒரு சதவீதம் இருந்தால் வேலை வாய்ப்பு விகிதமும் ஒரு சதவீதம் என்று இருக்கவில்லை. சில வருடங்களில் ஒரு சதவீதத்துக்குக் குறைவாகவும் சென்றுள்ளது. சொல்லப்போனால் தொழில்வளர்ச்சி ஒரு சதவீதமாக இருக்க வேலை வாய்ப்பு எதிர்மறை விகிதத்தில் (அதாவது நெகடிவ்வாக) இருக்கிறது. இது வேலை வாய்ப்பில் ஏற்பட்ட சரிவுக்கு அடையாளம்.
இந்த வேலைவாய்ப்பற்ற பொருளாதார வளர்ச்சி நமக்குச் சொல்வது என்ன?
ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்காமல், இருப்பவர்களைக் கொண்டே உற்பத்தியைச் சமாளித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மட்டும் அல்ல... செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் நிறுவனங்கள் சிக்கியிருக்கும் அவலத்தையும்தான்.
பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். கடந்த 1983 - 94ம் ஆண்டுகளில் இவர்களுக்கு பதினான்கு கோடியாக இருந்த வேலை வாய்ப்பு 1994 - 2005ம் ஆண்டுகளில் 15.20 கோடியாக உயர்ந்தது. ஆனால், இதுவே, 2005 - 12ம் ஆண்டுகளில் 13.70 கோடியாக சரிந்து, 2012 - 18ம் ஆண்டுகளில் 12.83 கோடியாக மேலும் சரிவடைந்துள்ளது.
கடந்த 1983 - 94ம் ஆண்டில் 5.69 கோடியாக இருந்த புதிதாய் வேலைக்கு வருவோர்க்கான வேலைத் தேவை 1994 - 2005ம் ஆண்டில் 5.79 கோடியாக சற்றே உயர்ந்தது. இது கடந்த 2005 - 12ம் ஆண்டில் 1.47 கோடியாகக் குறைந்து சமீபத்திய 2012 - 18ல் -4.8க்கு சென்றுவிட்டதை பொருளாதார அறிஞர்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகிறார்கள்.
பால் விகித அடிப்படையிலான வேலை வாய்ப்பு ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போதும் இந்த சரிவு தெளிவாகவே தெரிகிறது. புதிதாக வேலைக்கு வருபவர்களில் கடந்த 1983 - 94ல் 7.28 கோடி ஆண்களும் 6.78 கோடி பெண்களும் வேலை வாய்ப்பை பெற்றிருந்தார்கள். இது 1994 - 2005ல் 7.86 கோடி ஆண்கள், 7.34 கோடி பெண்கள் என உயர்ந்தது.
ஆனால், 2005 - 12ல் 6.56 கோடி ஆண்கள், 7.19 பெண்கள் என்று குறைந்தது. இது மேலும், சமீபத்திய 2012 - 18ல் 6.49 கோடி ஆண்கள் மற்றும் 6.33 கோடி பெண்கள் என்று குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்களில் மட்டும் 86 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த புள்ளிவிவரம் நமக்கு மேலும் சில தெளிவுகளை வழங்கியுள்ளது.
இப்படி வேலையிழந்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பணித்திறன் குறைந்த தொழிலாளர்கள்தான். அதாவது, பணித்திறன் மிகுந்த பணியாளர்கள் குறைவான ஊதியத்துக்கு எடுக்கப்பட, குறைவான ஊதியத்திலிருந்த பணித்திறன் குறைந்தவர்கள் வேலை இழப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால், பணித்திறன் குறைந்த தொழிலாளர்களுக்கான வேலைச் சந்தை இல்லாமலாக்கப்பட்டு அவர்களின் பொருளாதார எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளிவிவர ஆய்வின் படி கடந்த 2011 - 12ம் ஆண்டில் 46.77 கோடி தொழிலாளர்களும் 2017 - 18ம் ஆண்டு 46.15 கோடி தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள். இதன்படி பார்த்தால்கூட சுமார் 61 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2011 - 12 மற்றும் 2017 - 18ம் ஆண்டுகளுக்கு இடையிலான புதிய வேலை வாய்ப்பு அதிகரித்தல் மற்றும் குறைதல் பற்றிய அறிக்கையிலும் சில முக்கிய அம்சங்கள் உள்ளன.
இதில் கிராமப்புறங்களில் ஆண்களுக்கு 1.6 சதவீத வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. இதுவே நகர்ப்புறங்களில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் பெண்களுக்கோ கிராமப்புறங்களில் ஏற்கெனவே இருந்த வேலை வாய்ப்பில் 24.8 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது வளர்ச்சி மைனஸில் செல்கிறது. நகர்ப்புறங்களிலோ 10.7 சதவீத வளர்ச்சியுள்ளது.
நகரங்கள் தொடர்ந்து வீங்கி வருவதையும் நகர்ப்புறங்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருகிக்கொண்டே போவதையும் இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதே சமயம் பெண்களுக்கு சுத்தமாகவே கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் துடைத்தழிக்கப்பட்டுள்ளதையும் இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது.
இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருக்கும் நாட்கள் இவை. அது எல்லாம் கிடையாது என்று ஒருபுறம் ஆளுங்கட்சித் தரப்பு சொல்லிவந்தாலும் இந்தப் புள்ளிவிவரங்கள் அது உண்மைதான் என சொல்லாமல் சொல்கின்றன. இந்தியாவின் மனிதவளம் ஈடு இணையற்றது. அதை விழலுக்கு இறைத்த நீராக நமது புதியபொருளாதாரக் கொள்கைகள் மாற்றிவிடக் கூடாது. அது நிச்சயம் நம் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்பதும் இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் இன்னொரு மறுக்க முடியாத உண்மை.
இளங்கோ கிருஷ்ணன்
|