3ம் ஆண்டில் GST



பொ துவாக நேரடி, மறைமுகம் என இரண்டு வகைகளாக வரி பிரிக்கப்படுகிறது. இதில் மறைமுக வரி பலவிதங்களிலிருந்து பெறப்படுகிறது. ஒரு வரி, யார் மீது விதிக்கப்படுகிறதோ அதை அவர்கள் செலுத்தாமல் வேறொருவருக்கு மடை மாற்றி விடுவது மறைமுக வரி. உதாரணத்துக்கு, ஒரு கடையில் போய் சாப்பிடுகிறோம். அதற்கு விற்பனை வரி போடுகிறார்கள். விற்பனை வரி செலுத்துவது கடைக்காரராக இருந்தாலும், அதை அவர்கள் வசூலிப்பது வாடிக்கையாளர்களிடம் இருந்துதான்!

நேரடி வரி என்பது யார் மீது வரி விதிக்கப்படுகிறதோ அதை அவர்களே கட்டுகிறார்கள். அதை மற்றவர்களிடம் தள்ள முடியாது.
மறைமுக வரியில், விற்பனை வரி, எக்ஸைஸ், அடிஷனல் எக்ஸைஸ்… எனப் பல விதமான வரிகள் உள்ளடங்கி இருக்கின்றன. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கென்று தனித்தனியாக வரிகள் உள்ளன.

ஏன் ஜிஎஸ்டி?

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதில் மத்திய, மாநில அரசுகள் இந்த நிலப்பரப்பை ஆளும் என்றும், இவ்விரண்டிற்கும் அதிகாரங்களும், உரிமைகளும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டன.  இதன் அடிப்படையில் பகிர்ந்தபோது பெரும்பாலான நேரடி வரிகளை மத்திய அரசும், மறைமுக வரிகளை மாநில அரசும் வசூல் செய்தன.மக்களுக்கு நேரடியாகச் செய்யக்கூடிய எல்லா பொறுப்புகளும் மாநில அரசுக்கு இருக்கிறது.

மத்திய அரசுக்கு நாட்டைப்பாதுகாப்பது, மாநிலங்களுக்கு இடையே சச்சரவு ஏற்படாமல் உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது ஆகியவை கடமைகளாக்கப்பட்டன.
இதில் நீதிமன்றங்களின் பங்கும் உண்டு.  வரிகள், சட்ட திட்டங்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகின்றன. இதில் சிக்கல் எங்கு வருகிறதென்றால் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் ஒருவர் 28 மாநிலங்களின் வரிகள் பற்றியும்தெரிந்திருக்க வேண்டும்! அங்கு இருக்கும் நடைமுறைகள், அதில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பின்பற்றினால்தான் மற்ற மாநிலங்களிலும் வியாபாரம் செய்ய முடியும். இதே போல் ஒவ்வொரு மாநிலத்தைக் கடக்கும்போதும் அவ்வளவு செக் போஸ்ட்.

ஒரே நாடாக இருந்தாலும் வரி விதிப்பு முறை அப்படியில்லை. இது பெருநிறுவனங்களுக்கு வியாபாரம் செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தியது. மாநிலங்களுக்கு மாநிலம் ஏற்படும் வேறுபாடுகளைக் களைந்து ஒரே மாதிரியான அமைப்பாக்கினால் நாடு முழுவதும் ஒரே சந்தையாக மாறும்; சந்தைக்குள் வேறுபாடுகள் இருக்காது என கோரிக்கை வைத்தார்கள்.

உலகம் முழுவதும் வர்த்தகத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் தடைகளைக் குறைக்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் உண்டு. இதன் விளைவாக எல்லா ஊருக்கும் ஒரே சட்டம், அதில் பெரிய வேறுபாடுகள் இல்லாமல் சிறிய அளவில் வைத்துக் கொள்வது என்கிற முறையில் WTO உருவாக்கப்பட்டது.

இதனால் பல நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் எளிமையானது. என்றாலும் இந்தியாவில் வர்த்தக நடைமுறை சிரமமாக இருக்கிறது என்று பெரு முதலாளிகள் முணுமுணுத்தார்கள். WTO வில் வர்த்தகத்தை ஏதுவாக்குவது என்று ஒரு கிளாஸ் இருக்கிறது. அதாவது எல்லைகளை எடுத்துவிட்டு கஸ்டம்ஸ் எல்லாம் ஒரே மாதிரி ஆக்க வேண்டும். இதில் இந்தியா கையெழுத்துப் போட்டிருக்கிறது. இத்துடன் பெரு முதலாளிகளின் அழுத்தம் வேறு.
இந்த இரு முக்கிய காரணங்களுக்காக ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்பட்டது.

சாதகம்

ஒரு பொருள் எங்கு இறுதியாக வாங்கப்படுகிறதோ அங்குதான் அதற்கு வரி விதிக்கப்படுகிறது. இதற்கு முன் வாட் இருந்தது. அதில்,
ஒரு போன் வாங்குகிறோம் என்றால், அதைச் செய்திருப்பவர் ரூ.100 எக்ஸைஸும் சேர்த்து ரூ.1100 என்று கொடுக்கிறார். அது மாநிலத்திற்கு வரும் போது பத்து சதவீத வரிக்கு ஆளாகிறது. ஏற்கனவே ரூ.100 எக்ஸைஸ்.

அந்த நூறு ரூபாய்க்கும் சேர்த்து பத்து சதவீதம் கட்ட வேண்டியிருக்கும். ஜிஎஸ்டியால் வரி மேல் வரி இல்லாமல் போகிறது. ஒவ்வொரு பாயிண்டிலும் என்ன கட்டுகிறார்களோ அது கழிந்து கொண்டே வரும். சங்கிலித் தொடர் போல் பின்னி இருக்கிறார்கள். இதில் அவர்களால் கிளைம் பண்ணவும் முடிகிறது. வரி இழப்பையும் சீர் செய்ய இயலுகிறது.

பாதகம்

இந்த சங்கிலித் தொடரை பழைய முறையில் நோட் புக் போட்டு கணக்குப் போட முடியாது. அனைத்தும் இணையம் வழியே லிங்க் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எண் கொடுத்து, இன்னின்ன பொருட்களை வாங்கியிருக்கிறார்; அதற்கு இவ்வளவு வரி கட்டியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அதை மற்றொருவருக்கு விற்கும்போது அவரிடமிருந்து அதை வசூல் செய்ய முடிகிறது.

இந்த நெட்வொர்க்கில் வாங்குபவரோ விற்பவரோ இல்லையென்றால் இது வேலை செய்யாது. எனவே, யார் ஜிஎஸ்டி வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும்தான் வாங்க முடியும் என்ற நிலை உருவாகிறது. அதேபோல் ஒரு பொருள் என்ன நிலையில் இருக்கிறதோ அதற்கு வரி வசூலித்தால்தான் இந்த சங்கிலி தொடரும். அப்படி இல்லாமல் சில பொருளுக்கு வரி விலக்கு கொடுத்தால் சங்கிலித் தொடர் அறுந்துவிடும்.

உதாரணமாக அரிசிக்கு வரி இல்லை என்று சொன்னால் அரிசி மாவு தயாரிப்பவர் வரி செலுத்த மாட்டார். அரிசி மாவு தயாரிப்பவரை மட்டும் வரி செலுத்து என்று சொல்ல முடியாதே?!

பொருள்கள் என்பது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. இரும்பு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த இரும்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு பொருளுக்கு வரி இல்லை, ஒரு பொருளுக்கு வரி இருக்கிறது என்பதாக நடைமுறை உள்ளது.

இந்த சங்கிலித் தொடரில், ஜிஎஸ்டி பற்றித் தெரியாமல் இருப்பவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அதேநேரம் ஜிஎஸ்டியைக் கையாள்வதற்கான கெப்பாசிட்டி ஒரு வணிகருக்கு இருக்க வேண்டும். ஆன்லைனில் ஏற்றத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அது தெரிந்த பணியாளரை அமர்த்த வேண்டும்.

அடுத்து டெட் லைன். குறிப்பிட்ட தேதிக்குள் செய்யவில்லையென்றால் ஏற்காது. இதையெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாமல்தான் சிறு வியாபாரிகள் அடி வாங்குகிறார்கள்.தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டியால் நாட்டில் வரி வசூல் திறம்பட நடக்கும் என்றார்கள். ஆனால், அரசு சொன்ன அளவிற்கு வரி வசூல் நடக்கவில்லை. மாதம் ரூ.1,10,000 கோடி நிர்ணயித்தார்கள். அது ரூ.90 ஆயிரம் கோடியைக்கூட தாண்டவில்லை.

இப்போது வரி வசூலில் பற்றாக்குறையாக ரூ.1,75,000 கோடி இருக்கிறது. இதனால் இத்தொகையை ஊகித்து அரசு திட்டமிட்ட செயல்கள் நடக்காமல் முடங்கியிருக்கின்றன.காவு வாங்கப்பட்ட மாநில உரிமைகள் எந்த மாநிலமும் பெட்ரோல் போன்ற பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கு இன்று வரி விதிக்க முடியாது.

ஜிஎஸ்டி கவுன்சில் உள்ளது. அதில் எல்லா மாநிலத்தின் நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருக்கிறார். ஏதாவது ஒன்றிற்காக உறுப்பினர்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டாலும், வீட்டோ பவர் கொண்ட தலைவரால் அதை ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும். இதை எதிர்த்து வழக்கம் போல் பெட்டிஷன் மட்டுமே கொடுக்க முடியும். ஆக, மத்தியில் அதிகாரக் குவிப்பு நிகழ்ந்துள்ளது. இதைத் திரும்ப எடுப்பது சாதாரண விஷயமல்ல.

அரசியல்

எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது பெரு நிறுவனங்களுக்கானதுதான். ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டு வந்து கொண்டே இருப்பார்கள். தேர்தல் வரும் நேரங்களில் ஓட்டு திரும்பினால் 28 சதவீதம் 18 சதவீதமாக மாறும். அரசியல்தான் இங்கு எல்லாம். அரசும் முறைகளை மாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ரீஃபண்ட் எடுப்பது தாமதமாகிறது. ஏகப்பட்ட பணம் மாட்டிக் கொண்டிருக்கிறது. சிறு தொழிலைப் பொறுத்தவரை ஒரு பொருளை வாங்கி விற்பவர், வாங்குபவரிடம் மூன்று நான்கு மாதம் அவ காசம் கேட்டு பேமண்ட் செட்டில் பண்ணுபவராக இருப்பார்.

இதைப் பற்றி அரசுக்குக் கவலை கிடையாது. அந்தந்த மாதம் முடியும் போது ஜிஎஸ்டி கட்ட வேண்டும். இதனால் வட்டிக்குக் கடன் வாங்கி வரி கட்டுகிறார்கள். சமீபத்தில் 30 மாதங்கள் கழித்து மத்திய நிதி அமைச்சகம், “மூன்று மாதத்தில் எல்லாம் கொடுக்க வேண்டும்...” என்றது.

உடனே ரீஃபண்ட் கொடுத்தால்தானே தொழில் நடத்த முடியும்? இதை யாரிடமும் நேரில் போய் கேட்க முடியாது. கால் சென்டர்தான். அதில் பிடித்து  வாங்குவது பெரும் பாடு.   

இந்த மூன்று ஆண்டுகளில் ஜிஎஸ்டியில் எதிர்பார்த்த வருமானம் வரவில்லை. பல பொருட்களுக்கு பல விலைகள் இருக்கின்றன. இரண்டு ஸ்லாப், மூன்று ஸ்லாப்பாக பிரித்துள்ளனர். எது நிலையான வருவாய் விலை என்பதை NPFP (National Institute of Public Finance and Policy) என்ற அமைப்பு ஆழமாக ஆராய்ந்து சொல்கிறது.

ஏற்கனவே இருக்கும் ஒரு வரியின் முறையை மாற்றும்போது அதனால் வரி செலுத்துவோரும் அரசாங்கமும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வருடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருகிறது என வைத்துக் கொள்வோம்.

ரேட் மாற்றும் போது - ரெவன்யூ நியூட்ரல் இம்ப்லிமெண்ட் பண்ணும்போது - ஒரு லட்சம் கோடி வந்தபடி இருக்கும். அதுதான் ரெவன்யூ நியூட்ரல் ரேட். இதனால் அரசாங்கமும் இழக்காது. வரி செலுத்துபவரும் இழக்க மாட்டார்.

இப்போது NPFPஐ அழைத்து கேட்டிருக்கிறார்கள். தங்கள் ஆய்வு முடிவை NPFP தெரிவித்திருக்கிறது. ‘ரெவன்யூ நியூட்ரல் ரேட் 28%. இதை வைத்தால்தான்  வருமானம் இதே அளவு வரும். இல்லையென்றால் வராது...’கேட்ட அரசாங்கம் பயந்துவிட்டது. ஏனெனில் இதை அமல்படுத்தினால் விமர்சனம் வரும். சாப்பிடும் பொருள்களுக்கெல்லாம் 28% என்றால் என்னவாகும்?

எனவே, பகுதி பகுதியாக பிரித்தார்கள். நான்கு, ஐந்து ஸ்லாப் ஆக்கி ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற மாதிரி வடிவமைத்தார்கள். குஜராத் தேர்தலின்போது இப்படி ஸ்லாப் மாற்றியதால் ரெவன்யூ சரசரவெனக் கீழே விழுந்தது. இதை சரிசெய்ய முடியவில்லை. மறுபடியும் ஸ்லாப் ஏற்றினால் விமர்சனம் வரும்.

என்ன செய்வது என்று தெரியாமல் அரசு விழிக்கிறது.சுருக்கமாகச் சொல்வதென்றால் ஜிஎஸ்டி முறையை எப்படிச் செயல்படுத்துவது என்று தெரியாமல் செயல்படுத்தி விட்டார்கள். வேகமாக கட்டுக் கோப்புகள் கொண்டு வருகிறார்கள். இதனால் திறன் இருக்கிறவன் பிழைத்துக் கொள்வான். திறன் இல்லாதவன் மறைந்துபோவான். மறைபவர்கள் குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதுதான் சோகம்.
 
தொகுப்பு: அன்னம் அரசு