டீன் ஏஜில் தமன்னா!
சினிமாவில் பதினான்காவது ஆண்டை கொண்டாடுகிறார் ‘ஆக்ஷன்’ குயின் தமன்னா!‘‘ரொம்ப சீக்கிரம் பதினாலு வருஷங்கள் ஆன மாதிரி தெரியுது. காலம் அவ்ளோ வேகமா ஓடுது. என் கேரியரில் ‘பாகுபலி’, ‘சைரா’ மாதிரி பீரியட் ஃபிலிம்களும், நல்ல படங்களும் பண்ணியிருக்கேன்னு ஒரு மன நிறைவு இருக்கு. பேஸிக்கலி நான் மும்பை பொண்ணு. சினிமாதான் என் கேரியர்னு செலக்ட் பண்ணின பிறகுதான் டோலிவுட், கோலிவுட் இண்டஸ்ட்ரி இருக்கற விஷயமே தெரிய வந்தது!
 இங்க அதிகப் படங்கள் பண்ணுவேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்ல. என் டீன் ஏஜ் காலகட்டத்துல தென்னிந்தியாவுலதான் அதிக வருஷங்கள் செலவிட்டிருக்கேன். தமிழ், தெலுங்கில் பேசக் கத்துக்கிட்டேன். மும்பை பொண்ணு என்கிற எந்த அடையாளமும் என்கிட்ட இல்லைனு மும்பை ஃப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க!
 இந்த இண்டஸ்ட்ரியில இன்னும் ஏதாவது புதுசு புதுசா பண்ணிட்டே இருக்கணும்ங்கற தேடல் நிறையவே இருக்கு. இத்தனை வருஷ அனுபவத்தில் இங்கே நாம என்ன பண்ணிட்டிருக்கோம்னு கொஞ்சம் புரிஞ்சுக்க முடியுது...’’ ஃப்ரெஷ்ஷாக புன்னகைக்கிறார் தமன்னா‘‘தமிழ்ல என் மனசைத்தொட்ட படங்கள் நிறைய இருக்கு. ‘பையா’ இதயத்துக்கு நெருக்கமான படம். ‘தர்மதுரை’ மறக்க முடியாத படம். தமிழ்ல நான் அறிமுகமான ‘கல்லூரி’யைப் பத்தி இன்னமும் பேசிட்டே இருக்காங்க. ஷூட்டிங் போற இடங்கள்ல என்கிட்ட பலரும், ‘கல்லூரி மாதிரி படங்கள் நிறைய பண்ணுங்க’னு சொல்வாங்க. கேட்க சந்தோஷமா இருக்கு.
தமிழ்ல சிவகார்த்திகேயனோட ஒர்க் பண்ண விரும்புறேன். அவரோட ட்ராவல் ரொம்பவும் இன்ஸ்பிரேஷனானது. அதேபோல துல்கர் சல்மான். இப்ப பாலிவுட்டிலும் தெரிஞ்ச முகமாகிட்டார். பான் இந்தியா ஆக்டர். அவரோடவும் படங்கள் பண்ண ஆசை. ஸோ, இனி வரும் ஆண்டு தமன்னா ஆண்டாக இருக்கும்..!’’ தடதடக்கிறார் தமன்னா.‘கே.ஜி.எஃப்’ல ஒரு பாடலுக்கெல்லாம் குத்தாட்டம் ஆடியிருக்கீங்க..?
ஸோ வாட்? தெலுங்கில் ஏற்கெனவே மூணு படங்கள்ல குத்தாட்டம் போட்டிருக்கேனே! ஒரு பாடலுக்கு ஆடறது பெரிய விஷயமில்ல. பேசப்படற மாதிரி நல்ல பாடல்கள் அமைஞ்சா, தமிழ்லயும் ஆடலாம்.
‘ஆக்ஷன்’ல பைக் ஸ்டண்ட்ல பிச்சு உதறியிருக்கீங்க போல..? தேங்க்ஸ். சுந்தர்.சி சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவரோட படங்கள்ல நடிக்கணும்னு நானே முயற்சி பண்ணியிருக்கேன். அதுக்கான சரியான வாய்ப்பு ‘ஆக்ஷன்’லதான் அமைஞ்சது. அந்த பைக் ஸ்டண்ட் போர்ஷன்ல விஷால் இருந்ததால அவருக்கு அந்த சீக்குவென்ஸ்ல இருக்கற ரிஸ்க் பத்தி தெரியும். அவருடைய ரிஸ்க் கால்குலேஷன் கரெக்ட்டா இருந்ததால, என்னாலேயும் அதுல ஈஸியா பண்ண முடிஞ்சது.
தெலுங்கில் நீங்களே டப்பிங் பேச ஆரம்பிச்சிட்டீங்க... தமிழ்ல எப்ப..? இப்பவும் என்னை பார்க்கறவங்க, ‘நீங்க தமிழ் நல்லா பேசுறீங்க’னு ஆச்சரியமா விசாரிப்பாங்க. இத்தனை வருஷம் இங்க இருந்திருக்கேன். அதனால தமிழ் சரளமாகிடுச்சு.
ஆனா, டப்பிங் பேசக்கூடிய அளவுக்கு இன்னும் வரல. ஏன்னா, கிராமத்து சப்ஜெக்ட்ஸ் பண்ணும்போது, அவங்க ஸ்லாங் பேசுறது சிரமம். அப்படியே பேசினாலும் உச்சரிப்புகள் தப்பாகிடக் கூடாதேனு பயமிருக்கு. ஆனா, தெலுங்கில் நானே டப்பிங்பேச ஆரம்பிச்சிட்டேன். அது ஒரு குட் மூவ். யார் கண்டது... தமிழ்லயும் நான் டப்பிங் பேசற காலம் வரும்!
மை.பாரதிராஜா
|