அத்தனை பிரச்னைகளையும் மறந்து மக்கள் சிரிக்கணும்! சுமோ ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் சிவா



‘‘நானும் துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டு பறந்து பறந்து சண்டை போடலாம்னா விட மாட்டேங்கிறாங்க பாஸ்!நம்ம நடிப்பு ஏற்கனவே இங்க பிரச்னையா இருக்கு. ‘அவர் எங்கே நடிக்கிறாரு. சிவா சிவாவாகவே வந்துட்டுத்தானே போறாரு’னு
பலவிதமா பேசுறாங்க!

இப்பல்லாம் அடுத்த தெருவில் இருக்கிற ஃப்ரண்ட் வீட்டுக்குப்  போகக் கூட ஜெமினி பாலத்தை சுத்த வேண்டியிருக்கு. தியேட்டர்கிட்டே போனா அங்கே ‘ஒன் வே’ போர்டு தொங்குது. இப்படி ஊரையே சுத்தி கஷ்டப்பட்டு ஒரு படத்துக்குப் போனா சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே வரணும்.
அதுதான் நம்ம பாலிஸி. அது ‘சுமோ’ படத்தில் அப்படியே வந்திருக்கு!’’ சிரிக்காமல் சிரிக்கப் பேசுகிறார் சிவா. ஜப்பான் வரைக்கும் போய் புதுவிதமான கதையில் வித்தியாசம் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்.

திரைக்கதை, வசனம், நடிப்புனு பெரும் அம்சங்களோடு இறங்கிட்டிங்க. அடுத்து டைரக்‌ஷனிலும் இறங்குவீங்களா?
என்ன சார், கேள்வியெல்லாம் டேமேஜ் பண்ற மாதிரியே வருது. நிஜமாகவே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். குழந்தைகளையும் இதில் ஃபோக்கஸ் பண்ணியிருக்கேன். குழந்தை மனசு கொண்டவங்களும் இந்தப் படத்தைப் பார்க்கலாம். சந்தோஷமா சிரிச்சுப் பார்த்துட்டு வீட்டுக்குப் போய்ப் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரும்.

இந்தப் படத்தோட விஷயமே அன்புதான். உண்மையான அன்பு எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பதுதான் கான்செப்ட். அப்புறம் சார்லி சாப்ளின்தான் எனக்குப் பிடிச்ச மனுஷன். அன்பு, காதல், வறுமை, கொடுமை, பாசம், நேசம் அத்தனை விஷயங்களையும் காமெடியோடு பிசைந்து கொடுத்த மகா கலைஞன்.

வாழ்க்கையை அப்படி நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டா எல்லோரும் தப்பிச்சிடலாம். காமெடி கண்ணாடியைப் போட்டுட்டுப் பார்த்தா, உலகமே அழகா இருக்கு. அதனால ஒரு வாழ்க்கையை, அன்பை கடல் கடந்து சொல்லியிருக்கோம்.
சுமோ விளையாட்டுக்காரர்களைச் சேர்த்திருக்கீங்க…

ஜப்பானில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கு. பார்க்க மல்யுத்தம் மாதிரி இருக்கும். விளையாட்டுக்காரர்களைப் பார்த்தால் குழந்தை மாதிரி இருப்பாங்க. சதா ஒரு சிரிப்பு முகத்தில் இருந்துக்கிட்டே இருக்கும். அவங்க போடுகிற சண்டையை ஊரே கூடி வேடிக்கை பார்க்கும். தொந்தியும், தொப்பையுமா அவங்க இருந்தாலும், அவங்களைப் பார்க்க பெரும் கூட்டம் ரசிகர்களாக மாறி நிற்கும்.

இதில், தஷிரோங்கிற சுமோ வீரரை எங்களின் முக்கியமான நடிகராகத் தேர்ந்தெடுத்தோம். ஜப்பானுக்கு இதுவரைக்கும் பாட்டுக்குத்தான் போயிருக்காங்க. அங்கேயே ஒரு மாதத்திற்கு மேலே தங்கியிருந்து ஷூட்டிங் எடுத்தோம். நம்ம மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் எட்டாத தூரம். நீங்க சும்மா இருங்கனு ஒரு வார்த்தையை மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லி புரிய வைக்க இரண்டு மணி நேரமாகுது! அதனால் இத்தனை நாள் நாங்க ஷூட் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு பாருங்க.

கோவளம் குப்பம் பக்கத்தில் நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகிட்டு இருக்கேன். நம்ம பிழைப்பே இங்கே கஷ்டமாக இருந்துக்கிட்டு இருக்கிற வேலை. அப்ப ஒருநாள் பார்த்தால் கடற்கரை ஓரமாய் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடக்குது. அதைக் காப்பாத்தித் திருப்பி கடலுக்குள் சேர்த்திடலாம்ன்னா அது திமிங்கலமே இல்லைனு தெரியுது. அது இந்தத் தஷிரோதான்!

பின்னாடி அவரைக் கொண்டு போய் ஜப்பானில் சேர்த்து, மறுபடியும் அவர் விளையாடுகிற டீமில் சேர்த்துனு… போகும் கதை.
தஷிரோ அவ்வளவு சுத்தம். ஒரு ஈயைப் பார்த்தால்கூட அது உணடாக்குகிற நோய்களைப் பத்தி பெரிய லெக்சரே எடுப்பார். அவர் இங்கேயும் வந்திருந்தார். அவரைக்கையாள்வதே பெரிய வேலையாகப் போச்சு.

அவருக்குத் தனியாக சாப்பாடு, நம்ம ஊர் கொடுமையான வெயில் அவரை பதம் பார்த்திடாமல் அருமை பெருமையாகப் பார்த்துக்கிட்டோம்.
ஜப்பான் நாட்டில் நான் பார்த்தது காலம் தவறாமை. பால்கனியில் நின்னு காலையில் 9 மணிக்கு வெளியே பார்த்தால் கூட்டமாக சைக்கிளில் போவாங்க. அவர்களில் ஒருவரை அடையாளப்படுத்திக்கிட்டால் அடுத்த நாள் அதே 9 மணிக்கு அவரே அந்த இடத்தைக் கடப்பார். எப்படினு இன்னிக்கு வரைக்கும் புரியலை.

இவ்வளவு எரிமலை, பூகம்பம், அணு உலை வெடிப்பைக் கடந்த பிறகும் அவங்க ஏன் பொருளாதாரத்தில் முன்னுக்கு நிற்கிறாங்கனு தெளிவாகப் புரியது.ப்ரியா ஆனந்த், ராஜீவ் மேனன், டைரக்டர் ஹோசிமின்னு ஒரு நல்ல குழு இருக்கே…ராஜீவ் மேனன் ஔிப்பதிவு செய்தால் இந்தப்படத்தை வேற லெவல்ல கொண்டு போக முடியும்னு நினைச்சேன். நினைச்ச மாதிரியே கொண்டு வந்திருக்கார். ஹோசிமினின் கதை, டைரக்‌ஷனில் படம் அருமையாக வந்திருக்கு. ‘வணக்கம் சென்னை’யில் ஜோடியாக நடிச்ச ப்ரியா ஆனந்த்தான் இதிலும் எனக்கு ஜோடி. நிவாஸ் கே. பிரசன்னாதான் மியூசிக்.

இப்படியான படத்தை நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு நல்ல புரடியூசர் வேணும். அதற்கு ஐசரி கணேஷ்தான் பொருத்தமாக இருந்தார்.
இப்படி ஒரு கதையைச் சொன்னதும் நல்லபடியாக ஷூட்டிங் பண்ணிட்டு வாங்கனு சந்தோஷமாக அனுப்பி வைச்சார்.

அப்படி ஒரு பெருந்தகைக்கு வெற்றிப்படம் கொடுக்கணும்னு ஆசையாக இருக்கு. அவர் கொடுத்த  சுதந்திரம்தான் எனக்கு பயத்தையும் அதே சமயம் உற்சாகத்தையும் தருது.ஒரு நாள் கூட கூப்பிட்டு என்ன பண்றீங்கன்னு கேட்டது கிடையாது. என்ன நடக்குதுனு ஒரு பார்வை பார்த்தது கிடையாது. அதுதான் தீயா இறங்கி வேலை செய்றோம்.

படம் பார்த்திட்டு இப்ப இருக்கிற அத்தனை பிரச்னைகளையும் மறந்து மக்கள் சிரிக்கணும். அதற்கான எல்லா வேலைகளையும் செய்து வைச்சிருக்கோம். எல்லோரையும் தியேட்டருக்கு கூப்பிட்டு கலர்ஃபுல்லா ஜப்பானில் வைச்சு கதை சொல்றேன். சில சமயம் சில விஷயங்கள் நாம் ஆசைப்பட்டது மாதிரியே பளிச்னு வந்து நிக்கும்ல... ‘சுமோ’ அப்படியொரு படம்.

நா.கதிர்வேலன்