தொல்(லைக்) காப்பியம்



வாயில் வடை சுடும் ட்ராக்கர்ஸ்!

தீபாவளி திருவிழா நேரத்துல குழந்தைங்க வெடிக்கிற க்ரேக்கர்ஸ் சத்தத்தை விட அதிகமானது, புதுப் படங்கள் ரிலீசப்ப, புதுசா முளைச்ச இந்த ட்ராக்கர்ஸ் விடுற சத்தம். சின்ன நடிகர் படங்களுக்கு பிச்சு போட்ட பிஜிலி வெடி மாதிரியும், பெரிய ஸ்டார் படங்களுக்கு பத்தவச்ச பத்தாயிரம் வாலா சரவெடி மாதிரியும், பட்ஜெட்டுக்கு தகுந்த ரேஞ்சுல வெடிக்கத் தெரிஞ்சவங்கதான் இந்த பிழைக்கத்
தெரிஞ்ச ட்ராக்கர்ஸ்.

யாரு இந்த ட்ராக்கர்ஸ்னு கேட்கிறவங்களுக்கு, பத்து வருஷத்துக்கு முன்னால வரைக்கும் நூறு நாள் ஓடுன படம் எவ்வளவு கல்லா கட்டுச்சுன்னே யாருக்கும் தெரியாது. ஆனா, இன்னைக்கு ஆறு நாள் ஓடுன படம் நூறு கோடி வசூல் பண்ணிடுச்சுன்னு நோகாம சந்தைக்குள்ள வந்து குந்த வைக்கிறவங்கதான் நம்ம ட்ராக்கர்ஸ்.

தெளிவா சொல்லணும்னா, தியேட்டர் ஓனருக்கே தன்னோட தியேட்டர்ல எத்தனை சீட்டுன்னு தெரியாது. ஆனா, இவனுங்க பைக் பாஸ் வருமானத்துல இருந்து பாப்கார்ன் வருமானம் வரைக்கும் ஓனருக்கே தெரியாததை ஓட்டை கால்குலேட்டர்ல கணக்குப்போட்டு உலகத்துக்கே சொல்வாங்க. சிம்பிளா சொல்லணும்னா வாய்ல எண்ணெயைக் காய்ச்சி, வார்த்தைல வடைய சுட்டு, வயித்தை கழுவறவங்க.
டீ விக்கிறது டீக்கடை; பூ விற்கிறது பூக்கடை; அப்ப சாக்கு விக்கிறதுதான் சாக்கடைன்னு திரும்பத் திரும்ப சொல்லி நம்மளை நம்ப வைக்கிறதுதான் இவங்க வேலை.  

முதல் நாள்ல தூத்துக்குடில மட்டும் அஞ்சு கோடி வசூல், முதல் வாரத்துல துபாய்ல மட்டும் அம்பது கோடி வசூல்னு அடிச்சு விடுவாங்க.
விநியோகஸ்தரே வாய்பிளந்து எனக்குத் தெரியாம கணக்கு எப்படிப்பான்னு கேட்டாக்கூட தலை மேல ஏரோபிளேன் பறந்து போனா எனக்கென்னன்னு தரை மேல எருமை மாடு தாம்பாட்டுக்கு மேயுற மாதிரி அசால்ட்டா டீல் பண்ணுவாங்க.

பொதிகை மலைக்கு பின்பக்கம் என்ன இருக்குன்னு பார்க்கிற மாதிரியான டெலஸ்கோப் போன்ற கண்ணும், பூ மலருவதைக்
கூட கேட்கக்கூடிய நுண்ணிய ஸ்டெதஸ்கோப் போன்ற காதும் கிடைச்ச மனுஷனால கூட இவங்கள போல பட வசூலை டிராக் செய்ய முடியாது.
முதல் வாரம் முந்நூறு கோடி வசூல்னு பூப்பந்து ஆடிட்டு, மூணாவது வாரமே முப்பதாயிரம் கோடி வசூல்னு பூமிப் பந்தையே ஆட்டுவாங்க. படம் கோடில போயிக்கிட்டு இருக்கும்... பாவம் புரடியூசர் குடியிருக்கிற மாடியை காலி பண்ணிக்கிட்டு இருப்பாரு.

உலகம் முழுக்க, ஊர் பேரு கூட தெரியாத படம் ஓடுகிற தியேட்டர்களின் ஒட்டுமொத்த வசூலை சொல்ற இவங்களால, 500 / 1000 செல்லாதுன்னு சொன்னபிறகு அடிச்ச மொத்த 2000 ரூபாய் நோட்டு எவ்வளவுன்னு சொல்ல முடியாது. இவங்க அடிச்சுவிடுற கணக்கெல்லாம் உண்மைன்னா, இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சிகள் எவ்வளவு செலவு செஞ்சுதுன்னு எதிர்க்கட்சிகள் இந்நேரம் வேலைக்கு கூப்பிட்டு இருப்பாங்க.  

நாட்டை ஆளணும்னு நினைக்கிற நடிகர்களுக்கோ, புதுசா ரெண்டு வீட்டை வாங்கிப்போடணும்னு நினைக்கிற இயக்குநர்களுக்கோ வேணா வசூல் வேட்டைன்னு அடிச்சு விடுறது இனிக்கலாம்.

ஆனா, கடன் வாங்கி படமெடுத்த தயாரிப்பாளருக்குதான் தெரியும் வெறும் நம்பர்களை மட்டுமே நம்புவது தெப்பக்
குளத்துல மலரும் தாமரை தமிழ்நாட்டில மலரும்னு நம்புற மாதிரிதான்னு.  தமிழ் சினிமா ரசிகர்கள், ஒரு படம் நல்லாயிருந்தா அது சாகக் கிடந்தாலும், ஸ்பூன்ல சோறூட்டியாவது காப்பாத்திடுவாங்க; நல்லாயில்லாத படம் சிக்ஸ் பேக் காமிச்சுக்கிட்டே நின்னாலும், கள்ளிப்பால் ஊத்தி கொன்னுடுவாங்க!
நாளைய செய்திகள்!

* சென்னையில் திருடர்கள் கைவரிசை. பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் பூட்டி வைத்திருந்த இரண்டு கிலோ சின்ன வெங்காயத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றனர்.

* சேலத்தில் மருமகனுக்கு வரதட்சணையாக ஐந்து கிலோ அவரைக்காய் கொடுத்து அசத்திய மாமனார். தான், ஆடி கார்தான் எதிர்பார்த்ததாகவும், அதைவிட அதிக விலை மதிப்புள்ள அவரைக்காய் கிடைத்தது இன்ப அதிர்ச்சியாக இருப்பதாகவும் மாப்பிள்ளை பேட்டி.

* கோவையில், மார்க்கெட்டிலிருந்து காய் வாங்கிக்கொண்டு வந்த முதியவரிடம் அரைக்கிலோ புடலங்காயையும் கால்கிலோ பாகற்காயையும், பைக்கில் முகமூடி அணிந்து வந்த இருவர் பறித்துச்சென்ற சம்பவம்பரபரப்பைக் கூட்டியுள்ளது.

* மதுரையை அடுத்த மேலூரில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை. விடிய விடிய நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத மூன்று முருங்கைக்காய்கள் கிடைத்ததாக தகவல்.

* தனது மகனின் கல்யாணத்திற்கு சமைக்கத் தேவையான காய்கறிகள் வாங்க வேண்டுமெனக் கூறி, கனரா வங்கியில் 7000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர் அஜய் தொல்லையா வெளிநாட்டுக்கு தப்பிஓட்டம்.

* திருச்சி விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள கடத்தல் தக்காளியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவரைக் கைது செய்தனர்.

* உருளைக்கிழங்கை அடகு வைத்தால், கிராமுக்கு ரூ.2700 கடன் தரப்படும் என ஸ்டேட் பேங்க் அறிவிப்பு.

* ஐம்பதாயிரத்துக்கு மேல் ஜவுளி எடுப்பவர்களுக்கு ஒரு  பிளேட் வெஜிடபிள் பிரியாணி இலவசம் என காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு.

* திருப்பதி உண்டியலில் நூறு கிலோ கத்திரிக்காயைப் போட்டார் கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் உன்னி முகுந்தன்.

* நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு இனி ஒவ்வொரு மாதமும் கால் கிலோ கருணைக்கிழங்கு வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.

* திருநெல்வேலியில், தனக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு கால்கிலோ கேரட், பீன்ஸ் கொடுத்த பணக்கார வேட்பாளர்.

- என்னய்யா செய்திகள் இதுன்னுதானே யோசிக்கிறீங்க?  

கடந்த ரெண்டு வாரங்களில் கோயம்பேடு முதல் கோயமுத்தூர் வரைக்கும், கோவில்பட்டி துவங்கி கன்யாகுமரி முடிய, வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்கச் சென்றவர்களுக்குத்தான் இதன் விபரீதம் புரியும்.

காய்கறிகளின் விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. காய்கறிகளின் விலைகள் இப்படியே ஏறிப்போனா, மேலே சொன்ன நிகழ்வுகள் உண்மையாலுமே நடப்பதற்கான காலம் கனிந்து வந்துவிட்டதாகவே அர்த்தம். இனி முருங்கைக்காய பார்க்கணும்னா ‘முந்தானை முடிச்சு’ பட டிவிடியை போட்டுதான் பார்க்கணும் போல. பீட்ரூட்டெல்லாம் பணக்காரக்காயா மாறினாலும் ஆச்சரியமில்ல.  

விற்கும் வியாபாரிகளுக்கும் வாங்கும் மக்களுக்கும்தான் மன உளைச்சல் அதிகமாகுதே தவிர, விளைச்சலை அதிகரிக்கவைக்க எந்தவொரு நடவடிக்கையும் அரசு எடுத்ததா தெரியலை.விளைச்சலுக்கான லாபமெல்லாம் இடைத் தரகர்களுக்கே போயிடுது, விளைவிக்கிற லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பாவமும், வாங்கும் கோடிக்கணக்கான மக்களோட சாபமும்தான் கடைசியா மிஞ்சுது!

- தோட்டா ஜெகன்