சிஎம்சி மருத்துவமனையை நிறுவிய டாக்டர் ஐடா ஸ்கட்டரின் மாணவி நான் !



நெகிழ்கிறார் நெல்லை பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய 92 வயது டாக்டர்

ஒரு காலத்தில் பாளையங்கோட்டையில் மிகச் சிறந்த மகப்பேறு மருத்துவராகத் திகழ்ந்தவர், டாக்டர் ரமாபாய் பொன்னுதுரை.இன்று அறுபது வயதில்

இருக்கும் பாளையைச் சேர்ந்த எந்தப் பெண்மணிக்கும் நிச்சயம் டாக்டர் ரமாபாய் பரிச்சயமாக இருப்பார்.
ஏனெனில், பிரசவத்திற்காகவோ அல்லது தங்கள் குழந்தைகளைக் காட்டவோ இவரிடம் வந்திருப்பார்கள்.அந்தளவுக்கு பாளையின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் மிக முக்கியமானவர். தவிர, வேலூர் சிஎம்சி மருத்துவமனையை நிறுவிய டாக்டர் ஐடா ஸ்கட்டரின் மாணவியும் கூட.

இப்போது 92 வயதில் பழுத்த அனுபவங்களுடன் நிற்கிறார். ‘‘அப்பல்லாம் பெண் பிள்ளைங்க படிக்கிறதே அபூர்வம். வயசு வந்ததும் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுவாங்க. ஆனா, எங்கப்பா அப்படி செய்யலை. நாங்க ஆறு பெண் பிள்ளைங்க. எல்லோரையும் டிகிரி முடிக்க வச்சார். நான், மருத்துவம் படிச்சேன்...’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் டாக்டர் ரமாபாய்:‘‘அப்பா ரிவிங்டன் தேவதாசன், அந்தக் காலத்து வக்கீல். எல்எல்பி படிச்சவர். அம்மா இசபெல்லா.

அப்பாவுக்கு திருச்செந்தூர் பக்கத்துல ஒரு கிராமம். அம்மாவுக்கு உவரி பக்கத்துல ஆனைக்குடி. அப்பாவுக்கு காங்கிரஸ் கட்சி மேலயும், சமூகப்பணிகள் செய்றவங்க மேலயும் அதீத ஈர்ப்பு. அதனால எங்க எல்லோருக்கும் சமூகப் பணி செய்தவங்களின் பெயர்களை வச்சார்.
மூத்த அக்காவுக்கு மட்டும் ரோசெட்னு பாட்டி பெயர். அடுத்த அக்காவிற்கு சரோஜினி நாயுடுவின் பெயரால் சரோஜினினு பெயரிட்டார். இவங்கதான், அ.மாதவையாவின் ‘கிளாரிந்தா’ நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவங்க!

அடுத்து, நான். பண்டித ரமாபாய் பெயர். எனக்குப் பிறகான முதல் தங்கச்சிக்கு காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் பெயரும், அடுத்தவளுக்கு அன்னை தெரசா பெயரும், கடைசி தங்கச்சிக்கு காருண்யா எனவும் பெயர் வச்சார்.என்னோட ஆரம்பக் கல்வி கதீட்ரல் சர்ச் பக்கத்துல இருக்குற மேரி சர்ஜென்ட் பள்ளியில தொடங்குச்சு.

 அங்க எட்டாம் வகுப்பு முடிக்கிற நேரம், ‘எல்லோரும் எதிர்காலத்துல என்னவாகப் போறீங்க’னு கேட்டாங்க. நான், டாக்டர்னு சொன்னேன். ஏன்னு தெரியலை. என்னை ஆசீர்வாதம் செய்து, வில்லியம் கேரி எழுதின ஒரு புத்தகமும், ‘டாக்டர்ஸ் இன் மெனி கன்ட்ரீஸ்’னு ஒரு புத்தகமும் கொடுத்தாங்க.

பிறகு, சாராள் தக்கர்ல ஹைஸ்கூலும், எம்.டி.டி.காலேஜ்ல இன்டர்மீடியட்டும் முடிச்சேன். அப்பாவுக்கு நான் டாக்டர் ஆகணும்னு ஆசை.
1946ம் வருஷம். வேலூர் சிஎம்சிக்கு இன்டர்வியூவுக்குப் போனேன். அப்பா என்னை ரயில்ல தனியா அனுப்பி வச்சார். அதுவரை நான் எங்குமே தனியா போனதில்ல. பதினெட்டு வயசிருக்கும். ஒரு ராணுவ அதிகாரி அப்பதான் திருமணமாகி வேலைக்குத் திரும்பினார். அவர்கிட்ட, ‘இவள விழுப்புரத்துல இறக்கி விட்டுடுங்க’னு சொல்லிட்டு போயிட்டார்.

விழுப்புரத்துல ஒரு பொண்ணு என்னை மாதிரி இன்டர்வியூவுக்கு வந்தா. அங்கிருந்து அவளும் நானும் காட்பாடிக்கு ரயில் ஏறினோம். அப்புறம், ஜட்கா வண்டி பிடிச்சு சிஎம்சி போனோம். எங்களுக்கு மூணு நாள் இன்டர்வியூ வச்சாங்க. எட்டு பேர்களை குரூப் குரூப்பா பிரிச்சு இன்டர்வியூ நடந்துச்சு. அப்பவே குரூப் டிஸ்கஷன் வச்சாங்க...’’ எனக் கலகலவென சிரித்த டாக்டர் ரமாபாய், தொடர்ந்தார்:

‘‘கலந்துகிட்ட முந்நூறு பேர்ல 27 பேரைத் தேர்ந்தெடுத்தாங்க. அதுல நான் எட்டாவது ஆளா செலக்ட்டானேன். எனக்கு இந்த விஷயம் தெரியாது. நான் வீட்டுக்குப் போக திருவனந்தபுரம் மெயிலைப் பிடிக்க இருந்தேன். அப்பதான் ரிசல்ட் வந்துச்சு. நான் ரொம்ப அழுதேன். உடனே, ஐடா ஸ்கட்டர் மேடம் எங்கிட்ட, ‘ஏன் அழுறே? உனக்கு மகிழ்ச்சி இல்லையா’னு கேட்டாங்க.

நான், ‘வீட்டை விட்டு இதுவரை தனியா இருந்ததில்ல’னு சொன்னேன். என்னை கட்டி அணைத்து நெற்றியில முத்த
மிட்டு, ‘நீ தேர்ந்தெடுக்கப்பட்டது இந்திய பெண்களுக்கு உதவுவதற்காக’னு தைரியம் சொன்னாங்க. பிறகு, ஒரு சீனியர் பெண்ணைக் கூப்பிட்டு, ‘இவளை நல்லா கவனிச்சுக்கோ’ன்னாங்க.

டாக்டர் ஐடா ஸ்கட்டர் கதை தனித்துவமானது. அவங்க மாமா ஆற்காட்டுல ஒரு ஹாஸ்பிட்டல் வச்சிருந்தார். அவரைப் பார்க்க அமெரிக்காவுல இருந்து விடுமுறை நாட்கள்ல ஐடா இங்க வருவாங்க.ஒருமுறை மூணு முஸ்லிம் பெண்கள் ஒரே நாள்ல பிரசவத்துல இறந்திருக்காங்க. ஆண்கள் பிரசவம் பார்க்கக் கூடாதுங்கிறதால அந்த மரணம் நேர்ந்திருக்கு. அதைப் பார்த்து வருத்தப்பட்டவங்க, அமெரிக்கா போய் மருத்துவம் படிச்சிட்டு இங்க வந்து சிஎம்சியை ஆரம்பிச்சாங்க.

ஒரு பெட், ஒரு நர்ஸுடன் தொடங்கப்பட்ட மருத்துவமனைதான் இன்னைக்கு தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்ததா மாறியிருக்கு...’’ என்ற டாக்டர் ரமாபாய், கல்லூரி வாழ்க்கையின் நினைவுக்குள் வந்தார்:‘‘அன்னைக்கு சிஎம்சி பெண்களுக்காக மட்டுமே இருந்த காலேஜ். முதல்ல, டி அண்ட் எம்எஸ் கோர்ஸா இருந்துச்சு. 1942ல்தான் எம்பிபிஎஸ் வந்திருக்கு. நான் நான்காவது பேட்ச். அடுத்த வருஷமே இருபாலர் கல்லூரியா மாறுச்சு. ஏன்னா, பெண்களுக்கு மட்டும் சொல்லித் தந்தா அவங்க திருமணமாகிப் போயிடுவாங்க. அதனால, ஆண்களுக்கும் கத்துக்கொடுக்கணும்னு அரசு சொன்னது. அதனால, 1947ல் பத்து பசங்கள எடுத்தாங்க.

அதுல, ஜெஃப்ரி ஆலன்னு ஒரு ஐரோப்பியப் பையன். ரொம்ப சாப்பிடுவான். எங்களுக்கு இடைவேளை நேரங்கள்ல ஏதாவது சாப்பிடத் தருவாங்க. எங்கிட்ட வந்து ‘உனக்கு வேண்டுமா’னு கேட்பான். வேண்டாம்னு சொல்லிட்டா எங்க பங்கையும் எடுத்துப்பான். நேற்று அவன் இறந்திட்டான்னு வாட்ஸ்அப்ல பார்த்தேன். கஷ்டமா இருந்துச்சு.

அப்ப பொது மெஸ்தான். வாரத்துல ஒருநாள் பேராசிரியர்கள் எங்ககூட அமர்ந்து சாப்பிடுவாங்க. இதுல, டாக்டர் சோமர்வெல்னு ஒரு பிரிட்டிஷ்காரர். அவர் ரெண்டு கையால அறுவை சிகிச்சை செய்வார். கத்திரிக்கோலை வலது கை மாதிரியே இடது கையாலும் கையாள்வார். அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. அந்தளவுக்கு அறுவை சிகிச்சைகளை வேகமா செய்வார்.

அதேபோல, பால்பிராண்ட்னு புகழ்பெற்ற ஆர்த்தோ மருத்துவர். பின்னாடி, தொழுநோய் சிறப்பு மருத்துவரா விளங்கினார். தொழு
நோயாளிகள் விரல்களை நிமிர்த்தி அவங்களுக்கு பாய்முடையிற வேலைகளை கத்துக் கொடுக்க உதவினார். இந்த மாதிரியான டாக்டர்ஸ்கிட்ட படிச்சது என் பாக்கியம்னு நினைக்கிறேன்.

1947ல் இரண்டாம் ஆண்டு படிக்கிறப்ப இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சது. அன்னைக்கு நாங்க பாட்டுப்பாடி, பேனர்ஸ் எல்லாம் போட்டு, ‘வீ லவ் இந்தியா’னு படம் வரைஞ்சு அமர்க்களம் பண்ணினோம். படிப்பு முடிஞ்சு திருநெல்வேலி வந்தேன். 1956ல் திருமணமாச்சு. கணவர் பொன்னுதுரை மெட்ராஸ் எம்சிசியில் எம்ஏ பொருளாதாரம் படிச்சவர். பிறகு, பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் முதல்வரா இருந்து ஓய்வு பெற்றாங்க.

திருமணமான நேரம் திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில வேலை கிடைச்சது. இங்க வந்ததும் தினமும் ஒரு போஸ்ட்மார்ட்டம் கேஸ் பார்க்க வேண்டியதாகிடுச்சு. அப்ப எனக்கு தடயவியல் பத்தி அவ்வளவா தெரியாது. படிக்கிறப்ப ஒரு பேப்பர்தான். அதில், அவ்வளவா ஆர்வம் இருக்கல. அதனால, ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டப்பட்டேன்.

பிறகு, அனுபவம் மூலம் கத்துக்கிட்டேன். இதுக்கிடையில எங்களுக்கு காஞ்சனா, கல்பனானு ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்தாங்க.  
அந்நேரம், குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பரவலாச்சு. லூப் வைக்கிறது, காப்பர் டி பொருத்தறதுனு வெவ்வேறு திட்டங்கள். இதுக்காக நான் கிராமம் கிராமமா போனேன்.

ஆனா, அங்கிருக்கிற தாய்மார்கள், ‘நாங்க பிள்ளை பெத்துக்கிட்டா உங்களுக்கென்ன வந்தது’னு பயங்கரமா சண்டை போட்டாங்க. அவங்களுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. அப்புறம், கடலூருக்கு மாத்தினாங்க. அங்கிருந்து வைகுண்டம் வந்தேன். ஆனா, இங்கயும் எப்பவும் போஸ்ட்மார்ட்டம் கேஸ்தான். நான் தனியொருத்தியா அங்கேயே தங்கியிருந்து ஆஸ்பத்திரியைக் கவனிச்சேன். ஒரு ஆண் மருத்துவர் தினமும் வந்திட்டுப் போவார்.

அப்ப ஒரு ஜமீன்தார் வீட்டுல, வேலைக்காரனை அடிச்சுத் தூக்குல தொங்கவிட்டுட்டாங்க. ஆஸ்பத்திரிக்கு வெளிய ஒரே கூட்டம். மிரட்டல் எல்லாம் வந்துச்சு. நான் எதையும் கண்டுக்கல. பரிசோதனையில, அடிச்சுக் கொன்னுதான் தூக்குல தொங்கவிட்டிருக்காங்கனு தெரிஞ்சது. அதை அப்படியே எழுதி கையெழுத்திட்டு அலுவலக சீல் வச்சு அனுப்பிட்டேன்.  

என் குவார்ட்டர்ஸ் பின்புறம் போஸ்ட்மார்ட்டம் அறை. பிணங்களை அங்க போட்டுட்டு போயிடுவாங்க. காலையில எழுந்ததும், ‘எங்கம்மா போறே’னு அம்மா கேட்பாங்க. போஸ்ட்மார்ட்டம்னு சொல்வேன். அம்மாவுக்கு ரொம்ப கவலையாகிடுச்சு. அடிக்கடி போஸ்ட்மார்ட்டம் பண்றதைப் பார்த்தவங்க ஒருமுறை மாவட்ட அதிகாரி வந்தப்ப, ‘என் பொண்ணை உயிருள்ளவங்களுக்கு வைத்தியம் பார்க்கத்தான் படிக்க வச்சேன். இப்படி செத்த பிணத்தை பார்க்கஇல்ல’னு சொல்லி வருத்தப்பட்டாங்க.

அடிக்கடி வர்ற இறப்புகள், மக்களின் அழுகைனு பார்த்தே என் பெரிய பொண்ணு காஞ்சனா மருத்துவம் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. சின்னவள் மட்டும் மனநல நிபுணரா அமெரிக்காவுல இருக்கா. இப்ப அவங்களும் பேரன் பேத்திகள் எடுத்திட்டாங்க...’’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர், 1968ல் அரசு வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

‘‘பனிரெண்டு வருஷங்கள்தான் சர்வீஸ்ல இருந்தேன். அந்நேரம், புதுக்கோட்டைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினாங்க. அப்ப எனக்கு உடல்நிலை சரியில்ல. அதை அரசு அதிகாரிகள் ஏத்துக்கல. அதனால, ராஜினாமா செய்திட்டு இங்க கிளினிக் ஆரம்பிச்சு நிறைய பிரசவம் பார்த்தேன். எவ்வளவு பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது.

போன வருஷம் சென்னையிலிருந்து ஒரு போன் கால் வந்துச்சு. ‘என் பெயர் ரமா. எனக்கு ஏன் இந்தப் பெயர் வச்சாங்கனு விசாரிச்சப்ப உங்க கிளினிக்ல பொறந்ததா சொன்னாங்க. உங்கள பார்க்க வர்றேன்’னு சொல்லி அந்தப் பொண்ணு வந்து பார்த்திட்டு போனது.அப்ப சிசேரியன் செய்றது ரொம்பக் கஷ்டம். ஸ்கேனும் கிடையாது. ஸ்டெதாஸ்கோப்பை வச்சுதான் குழந்தைகளின் நகர்வை கணிக்கணும். அப்புறம், மயக்க மருந்து தர்ற டாக்டர் வரணும். அறுவை சிகிச்சை செய்ய நல்ல தியேட்டர் வேணும். இப்படி நிறைய விஷயங்கள் தேவையா இருந்துச்சு.

அந்நேரம், வேலாயுதம்பிள்ளைனு இங்கிலாந்துல இருந்து படிச்சிட்டு வந்த டாக்டர், நல்ல தியேட்டர் வச்சிருந்தார். கடவுள் கருணையால் அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்தார்...’’ என்ற டாக்டர் ரமாபாய், இப்போது மருத்துவத் தொழில் கமர்ஷியலாக மாறிவிட்டதை எண்ணி வருத்தப்படுகிறார்.

‘‘ஆனா, பணத்துக்காக சிசேரியன் செய்றாங்கனு சொல்றதை ஏத்துக்கமாட்டேன். முக்கால்வாசி பெண்களுக்கு இடுப்பெலும்பு ரொம்ப குறுகி இருக்கும். அதன் வழியே குழந்தையால் வரமுடியாது. ஸோ, சிசேரியன் செய்யலன்னா செத்துப் போயிடுவாங்க.

வேலைகள் அதிகம் செய்தா ஈஸியா பிறக்கும்னு அவங்க நினைப்பாங்க. ஆனா, அப்படியில்ல. ஊட்டச் சத்தான உணவை உட்கொண்டாலே போதும். இன்னைக்கு மருத்துவம் நல்லா வளர்ந்திருக்கு. பிரசவ இறப்பு ரொம்பக் குறைஞ்சிடுச்சுங்கிறது சந்தோஷமான விஷயம்...’’ என்கிறார் நிறைவாக!

பேராச்சி கண்ணன்