நான்... ஆர்.டி.ராஜசேகர்



எம்.எஸ்சி டிஸ்கன்டினியூட்; டி.சி வாங்கி நான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தது அப்பாவுக்குத் தெரியாது.

‘கேமரா’ - நாங்கள் மூன்று நண்பர்கள் வெளியிட்ட முதல் பத்திரிகையின் பெயர் அதுதான். ‘கொஞ்சமும் சினிமா பின்னணி இல்லாத குடும்பம். மாயவரம் பக்கம் குத்தாளத்தில் பிறந்தேன். தாத்தா பெயர் ராஜு. அப்பா பெயர் தனசேகர். அதனால்தான் நான் ஆர்.டி.ராஜசேகர். அம்மா பெயர் அம்சவள்ளி.

டி.இ.எல்.சி ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து அங்கிருந்த அரசுப் பள்ளியில் மேல்படிப்பு முடித்தேன். அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். வீட்டில் நான் மூத்தவன். எனக்குக் கீழே பிரேமா, சித்ரா, கீதா என மூன்று தங்கைகளும் ரமேஷ் பாபு என்கிற ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.

‘படி... படி’ என்ற வார்த்தை மட்டுமே வீட்டில் ஒலிக்கும். இதனாலேயே அப்பா பணிபுரியும் பள்ளியில் படிக்க மாட்டேன் என அடம் பிடித்தேன்! எனக்காக மட்டுமே அப்பா இதற்கு ஒப்புக் கொண்டார் என்பதை பின்னால்தான் அறிந்தேன். ‘உங்க மகனே நம்ம பள்ளில படிக்கலையே’ என பலரும் அப்பாவைக் கேட்டு சங்கடப்படுத்தி இருக்கிறார்கள்.

5ம் வகுப்பு படிக்கையில் பேண்ட் அணிந்து ‘நான் ஆணையிட்டால்...’ பாட்டுப் பாடினேன். 5ம் வகுப்பில் பேண்ட் அணிந்தவன் நான் மட்டும்தான். ‘உங்க பையன் சினிமாவுக்குப் போயிடுவான்...’ என பலரும் அப்பொழுதே என் வீட்டில் சொன்னார்கள்! என் பள்ளிக்குப் பின்னால் காவிரி ஆறு. பள்ளியில் மணி அடிக்கும் வரை நதிக்கரையில் அமர்ந்திருப்பேன்.

ஏதேதோ யோசிப்பேன். இப்படியே பள்ளிப் படிப்பு முடிந்தது. பல கல்லூரிகளின் பெயரை அப்பா சொன்னார். எல்லாவற்றையும் மறுத்தேன். ‘எதையோ மிஸ் பண்றேன்பா...’ என்றேன். ‘அதான் நான்... உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இருக்கோமே’ என்றார் அப்பா. ‘இல்லப்பா... காவிரி ஆறு...’ என்று இழுத்து கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜ் குறித்து சொன்னேன்.

அப்பாவும் ஓகே சொன்னார். ‘சேது’ படம் அந்தக் கல்லூரியிலும் எடுக்கப்பட்டது! பி.எஸ்சி விலங்கியியல் படிப்பு. காவிரி... தண்ணீர் மீது இருந்த காதலால் பிறகு எம்.எஸ்சி மெரைன் பயாலஜி படித்தேன்.இதற்கிடையில் நண்பர்களை சந்திக்க முடியாமலேயே போய்விட்டது. சனி, ஞாயிறாவது கண்டிப்பாக நாம் சந்திக்க வேண்டும் என முடிவெடுத்தோம். இதன் விளைவுதான் ‘கேமரா’ பத்திரிகை. அதாவது கேசவன், மனோகரன், ராஜசேகர்… என எங்கள் மூவரின் முதல் எழுத்துகள்!

சைக்ளோஸ்டைலில் எழுதியதை அச்சு எடுத்து பத்திரிகையாக்கினோம். அருகில் இருந்த லைப்ரரியில் வார - மாதப் பத்திரிகைகள் இருக்கும். அதனுடன் எங்கள் பத்திரிகையையும் வைத்துவிட்டு மறைந்திருந்து பார்ப்போம். கடைசியில் இருந்த வெள்ளைத் தாளில் ‘உங்கள் கருத்துகளை எழுதுங்கள்’ என அறிவித்திருந்தோம்.

பிறகு எண்ணிக்கையை அதிகரித்து ஏரியா கடைகளில் போட்டோம். ‘தம்பி... உங்க பத்திரிகை நல்லா விக்குது...’ என்றார்கள். சந்தோஷமாக இருந்தது.
‘தண்ணீர் தண்ணீர்’ படத்தின் ஷூட்டிங் நேரத்தில் கோமல் சுவாமிநாதனை பேட்டி எடுக்கச் சென்றோம். அவர்தான் ‘ஏம்பா நீங்க எல்லாம் சினிமாவுக்கு வரலாமே’ என முதல் முறையாகக் கேட்டார். திரைப்படக் கல்லூரி இருக்கும் தகவலையும் சொன்னார். இல்லையென்றால் யாரிடமாவது உதவியாளராக சேருங்கள் என்றார்.

இவை எல்லாமே எங்களுக்கு புதிய தகவல்கள். இத்தனைக்கும் நாள்தோறும் நான் படம் பார்ப்பேன். க்ளைமாக்ஸ் மட்டும் பார்க்க மாட்டேன். ஏனெனில் கடைசி ரயில் போய்விடும். ஆனால், வீட்டுக்கு வந்து நானாக அப்படத்தின் க்ளைமாக்ஸை எழுதுவேன். மறுநாள், படம் பார்த்தவர்களிடம் க்ளைமாக்ஸ் என்ன என்று கேட்பேன்.

நான் எழுதியதும் படத்தில் இருந்ததும் ஒன்றாக இருந்தால் என்னை நானே பாராட்டிக் கொள்வேன்!இந்த நேரத்தில்தான் கோமல் சுவாமிநாதன் திரைப்படம் சார்ந்த படிப்பு குறித்தும், யாரிடமாவது உதவியாளராக சேரலாம் என்றும் சொன்னார். அது அப்படியே மனதில் ஆணி அடித்து இறங்கியது.

இந்த சூழலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி மெரைன் பயாலஜி படித்துக் கொண்டிருந்தேன். மனம் அலைக்கழிக்க புனே திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இண்டர்வியூவுக்கு அழைத்தார்கள். அங்கு ஆங்கிலம், இந்தி மட்டுமே. சீட்டு கிடைக்கவில்லை. சென்னை திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்.

ஒரு வருடம் ஆகியும் தகவல் இல்லை. மறுபடியும் விண்ணப்பித்தேன். சீட்டு கிடைத்தது! ஆனால், ஒளிப்பதிவா இயக்கமா என முடிவு செய்ய வேண்டிய நிலை. அங்கிருந்த மாஸ்டர், ‘ஒளிப்பதிவு கற்றால் இயக்கம் குறித்து புத்தகங்களைப் படித்தும் அறியலாம்... ஆனால், டைரக்‌ஷன் படித்தால் ஒளிப்பதிவு குறித்து தெரிந்து கொள்ள முடியாது...’ என்றார்.

உடனே ஒளிப்பதிவுத் துறையில் சேர்ந்தேன். எம்.எஸ்சி டிஸ்கன்டினியூட். டி.சி வாங்கி நான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தது அப்பாவுக்குத் தெரியாது. மாதந்தோறும் பணம் மட்டும் அனுப்பிக் கொண்டிருந்தார்.ஒருநாள் என்னைப் பார்க்க அவர் கல்லூரிக்கு வந்தார். டி.சி வாங்கி நான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த தகவலை அறிந்தார். நேராக என் அறைக்கு வந்தார்.

தூங்கி எழுந்தால்... என்னையே பார்த்தபடி என் முன்னால் அப்பா! எதுவும் சொல்லாமல் கையில் ரூ.500 கொடுத்து விட்டு, ‘உனக்கு என்ன தோணுதோ அதை செய்...’ என்று சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.அப்பா ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி. நிம்மதியுடன் படித்து கோல்ட் மெடல் வாங்கினேன். யாரிடம் உதவியாளராக சேருவது என்று யோசிக்கையில் பி.சி.ராம் சார்தான் கண் முன்னால் வந்தார். ஆனால், என் நண்பன் ‘நேத்தே அவரைப் பார்த்து அவர்கிட்ட சேர்ந்துட்டேன்...’ என்றான். சரி என ராஜீவ்மேனன் சாரை சந்திக்க முயன்றேன்.

எப்போது அவர் வீட்டுக்குச் சென்றாலும் அவர் கிளம்பிவிட்டார் என்றே பதில் வந்தது. ஒருநாள் அதிகாலை 5 மணிக்குச் சென்று அவர் வீட்டு காலிங்பெல்லை அழுத்தினேன். சார் இருந்தார். அவரிடம் அசிஸ்டெண்ட் ஆக விரும்புவதாக சொன்னேன். ‘அஞ்சு மணிக்கு சான்ஸ் கேட்க வந்த ஒரே ஆள் நீதான்! எனக்கு ஆபீஸ் இருக்கே தெரியுமா...’ என புன்னகைத்தவர், யாருக்கோ போன் செய்து, ‘நமக்கு ஓர் அடிமை கிடைச்சிட்டான்! பிளாக்பேக்கை அவன் கிட்ட கொடுத்திரு’ என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். ‘இங்கேயே இரு... சந்துனு ஒரு பையன் வந்து உன்னை அழைச்சிட்டு போவான்’ என்றார்.

ஒரு பெரிய பிளாக் பேக் கைக்கு வந்தது. ‘பிளாக் பேக் பாய்!’ அதுதான் என் முதல் வேலை. எட்டு வருடங்கள் அவருடன் பயணம் செய்தேன்.
ஒருநாள் அப்பா ‘உனக்காக தில்லி தூர்தர்ஷன்ல அப்ளை செஞ்சேன்... இண்டர்வியூவுக்கு கூப்பிட்டிருக்காங்க...’ என்றபடி வந்தார். என்னைப் பற்றியே என் அப்பா நினைத்துக் கொண்டிருந்தார் என்பதே நெகிழ்ச்சியாக இருந்தது. அதேநேரம் சினிமாதான் வாழ்க்கை என்று இருக்கையில் தூர்தர்ஷன் வேலைக்குச் செல்ல விருப்பவில்லை.

தில்லி சென்று இண்டர்வியூவில் வேண்டும் என்றே தெனாவெட்டாக பதில் சொன்னேன். சென்னை திரும்பியதும் எனக்கு வேலை கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது! என்ன செய்வதென்று தெரியவில்லை. ராஜீவிடம் சொன்னேன். ஆம். அவருக்கு ‘சார்’ என்றால் பிடிக்காது! ‘அப்ப என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல... அப்படித்தானே’ என்றார். அப்பாவின் ஆசை... மறுக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு வேலையில் சேர்ந்தேன்.

இரண்டு வருடங்கள். போனதே தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் திருமண அழைப்பு ஒன்று வந்தது. ராஜீவ்மேனனுக்கு திருமணம். இதற்காக சென்னை வந்தேன். பார்த்தால்... என்னுடன் அசிஸ்டெண்ட் ஆக அவரிடம் இருந்தவர்கள் எல்லாம் பிசியாக இருந்தார்கள். என் தோளில் தட்டிய ராஜீவ்மேனன், ‘மணிரத்னம் இயக்கற ‘பாம்பே’ படத்துல ஒளிப்பதிவு செய்யப் போறேன்’ என்றார்.

‘உங்களுடன் நானும் வரேன் ராஜீவ்...’ என்று சொல்லிவிட்டு தூர்தர்ஷன் வேலைக்கு விடுமுறைக் கடிதம் அனுப்பினேன். அன்று வந்தவன்தான்... இன்று வரை மீண்டும் தூர்தர்ஷன் பக்கம் செல்லவே இல்லை.‘பாம்பே’ படத்தை தொடர்ந்து ராஜீவ்மேனனுடன் எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணி
புரிந்தேன். அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாது. சம்பளம் வந்து கொண்டிருந்ததால் சமாளிக்க முடிந்தது.

இந்த நேரத்தில்தான் கௌதம் மேனன் விளம்பர டீமில் அசிஸ்டெண்ட் ஆகச் சேர்ந்தார். ஒருநாள் கதை ஒன்று எழுதி இருப்பதாகச் சொல்லி அதை சீன் பை சீன் விவரித்தார். ‘நல்லா இருக்கு’ என்றேன். ‘நீதான் கேமராமேன்’ என்றார்!இப்படித்தான் ‘மின்னலே’ வழியாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன். தொடர்ந்து ‘ரெட்’, ‘சிட்டிசன்’, மறுபடியும் கெளதம் மேனனுடன் ‘காக்க காக்க’.

இதில் ‘காக்க காக்க’ பட்டி தொட்டி எங்கும் ஓடி எங்கள் எல்லோருக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. கெளதம் மேனன் பொறுமைக்கு பெயர் போனவர். நானோ பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவன்! ‘மின்னலே’ சமயத்தில் வீட்டில் எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். ஆம். இதற்குள் வீட்டில் என் சினிமா காதல் தெரிந்துவிட்டது. வழக்கம்போல் ‘உனக்குப் பிடிச்சதை செய்’ என்று சொல்லிவிட்டார்கள்!

வீட்டில் பார்த்த சித்ரா பாரதியை திருமணம் செய்து கொண்டேன். அவர் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். சித்தார்த், சம்யுக்தா என எங்களுக்கு இரு குழந்தைகள். கேமரா, குடும்பம்... இவை இரண்டும்தான் என் உலகம். சென்னையில் வீடு வாங்கினேன். அப்பா, அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். இரண்டு வருடங்களுக்கு முன் அவர்கள் காலமாகி விட்டார்கள்.

இப்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’; பாபு யோகேஸ்வரன் டைரக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’; மலையாளத்தில் ஜெயசூர்யா படம்; இந்தியில் ஒரு படம் என பிசியாக இருக்கிறேன்.இப்போதும் கேமராவைக் காதலித்து அதனைக்கொஞ்சி வருகிறேன்!

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்