முகம் மறுமுகம்-டாக்டர் சார்லி!



தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் நடிகர் சார்லி.
எண்பதுகளில் அறிமுகமாகி, நகைச்சுவை, குணச்சித்திரம் என பல தளங்களில் மகிழவும் நெகிழவும் வைத்தவர், வைப்பவர். கிட்டத்தட்ட 800 படங்களைத் தொட்டுவிட்ட சார்லி, இப்போதும் நூறு கிலோமீட்டர் ஸ்பீடில் பரபரக்கிறார்.

‘‘ஒரு ஆய்வாளன் என்கிற முறைல ஒரு விஷயத்துக்காக சந்தோஷப்படறேன். இந்தியாவிலேயே மொழிக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எங்க தஞ்சைப் பல்கலைக்கழகம்தான். தொழில் முறை நடிகராக இருந்து முதல்வராக உயர்ந்த பிறகு எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அது.

அதுல தொழில் முறை நடிகரான இந்த சார்லி, முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டதை பெரும் பாக்யமா கருதறேன். என் தாய்மொழி தமிழ்ல ஆய்வறிக்கையை கொடுக்க வாய்ப்பளித்தது அந்த பல்கலைக்கழகம்தான். என்னை நானே புதுப்பிக்க ரிசர்ச் ஒர்க் உதவிச்சு.

என் முன்னோடிகளுக்கு வணக்கத்தை சொல்லிட்டு ரொம்ப தீவிரமா மூணு படங்கள்ல ஒர்க் பண்ணிட்டிருக்கேன். அதுல ஒரு முழுநீள காமெடி படமும் அடங்கும். அதை உலக அளவிலான அத்தனை ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கும் அனுப்பி விருதுகளையும் குவிக்கப் போறோம்...’’ உற்சாகமாகப் பேசும் சார்லி, சுவாரஸிய தகவல்களையும் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘என்னுடைய ஆய்வுக்கட்டுரைல தமிழ் சினிமாவுக்கு எத்தனை நடிகர்கள் பங்களிப்பு செய்திருக்காங்க என்பதை தகவல்களா சொல்லாம தரவுகளா முன் வைச்சிருக்கேன்.உதாரணமா தமிழ்சினிமால நகைச்சுவை எத்தனை வகைப்பாடுகளா இருக்குனு பதிவு செய்திருக்கேன். உரையாடல் நகைச்சுவை, உடல்மொழி நகைச்சுவை, நையாண்டி நகைச்சுவை, தொழில்நுட்ப நகைச்சுவை, ஒலி நகைச்சுவைனு பல classifications இருக்கு.

நடிகர்கள் காளி என் ரத்னம், தேங்காய் சீனிவாசன்... இவங்க எல்லாம் ஒலி நகைச்சுவைல பின்னியெடுத்திருக்காங்க. ஒவ்வொரு ரக நகைச்சுவையையும் உதாரணங்களோடு பதிவு செய்திருக்கேன். ரோஜா முத்தையா நூலகத்துல 1945ல் வெளியான ஒரு செய்தியை படிச்சேன். அதுல ஒரு நகைச்சுவை நடிகரைப்பத்தி படிச்சதும் எனக்கு குப்புனு வியர்த்திடுச்சு. மிகப்பெரிய ஜாம்பவானான சாரங்கபாணி, அதுல பேட்டி கொடுத்திருக்கார். நிருபர்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கறார்.

‘பேட்டியில் குறிப்பிடும் போது, காமெடி நடிகர் சாரங்கபாணினு என் பெயரை போட்டுடாதீங்க. காந்தி பக்தன் சாரங்கபாணினு போடுங்க’னு சொல்றார். இப்படி பல அரிய தகவல்களை ஆய்வு செய்தது சந்தோஷமா இருக்கு...’’ என்ற சார்லி, சட்டென டாபிக் மாறுகிறார்.
‘‘எல்லாரும் டே அண்ட் நைட் ஷூட் இருந்தால், சோர்வாகிடுவாங்க. நேத்து நைட் ஷூட் முடிச்சுட்டு, காலைல எட்டுமணிக்குத்தான் ஸ்பாட்ல இருந்தே வந்தேன். ஆனா, நான் செம ஃப்ரெஷ்ஷா இருப்பேன். ஏன்னா எனக்கு ஒர்க்தான் எனர்ஜி...’’ என கலகலத்தவர், தனது லைப்ரரிக்குள் அழைத்துச் சென்றார்.

‘‘எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். நான் பிறந்தது விருதுநகர்ல. ஆனா, படிச்சது, வளர்ந்தது எல்லாமே கோவில்பட்டிலதான். அங்க ஜிவிஎன் கல்லூரில பி.யூ.சியும், பி.எஸ்சி கெமிஸ்ட்ரியும் முடிச்சேன். கல்லூரில பேச்சுப் பேட்டிகள், மைமிங், மோனோ ஆக்ட்டிங்னு எல்லாத்திலும் பரிசுகள் வாங்கியிருக்கேன்.

எனக்கு வாசிப்பைத் தூண்டியது, சிந்துபாத் படக்கதைதான். ஊர்ல உள்ள சின்னத்தம்பி சலூன்ல டெய்லி பேப்பர்ல வரும் படக்கதையை வாசிக்க ஆரம்பிச்ச பிறகுதான் புத்தகங்கள் பக்கம் என் பார்வை திரும்புச்சு.எங்க அப்பாவும் எனக்கு நிறைய புத்தகங்கள் பரிசளிப்பார். அவர் கையெழுத்திட்டு கொடுத்த புத்தகங்களைக் கூட என் லைப்ரரியில வச்சிருக்கேன். 1980ல சென்னை வந்துட்டேன். செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துல நாடகம் மற்றும் பாடல் துறைல இந்திய அரசுக் கலைஞராக ஒர்க் பண்ணினேன்.

சென்னைல எங்கெல்லாம் இலவச மெம்பர்ஷிப் உள்ள நூலகங்கள் இருக்கோ, அங்கெல்லாம் நான் மெம்பராகிட்டேன். அமெரிக்கன் எம்பஸியில படிச்ச ‘The professional actor’ங்கற புத்தகம், எனக்குள் நடிப்பைப் பத்தின புரிதலை உண்டாக்குச்சு. ஒரு ஃபங்ஷனுக்கு கெஸ்ட்டா பேசப் போயிருந்தேன். அங்க வந்திருந்த ஒரு விஐபி என்கிட்ட ‘நீங்க பாயிண்ட்ஸை எல்லாம் ரொம்ப பர்ஃபெக்ட்டா பேசுறதை பார்த்தா எம்ஏ வரலாறு படிச்சிருப்பீங்கனு நினைச்சேன்’னார்.

முதுகலை படிக்கணும் என்கிற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் அவர்தான். அதன்பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல தொலைதூரக் கல்வி வழியா எம்.ஏ படிச்சேன். பிடிச்ச வேலை களைப்படையச் செய்யாது. ஸோ, என்னை நானே புதுப்பிக்க படிச்சேன். படிப்பதும், ஆய்வுகள் செய்வதும் என் வேலை இல்ல. நடிப்பதுதான் என் வேலைனு உணர்ந்து படிச்சேன்.

அடுத்ததா, எம்.ஃபில் பண்ணினேன். அதுல ‘தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு’னு ஒரு ஆய்வு பண்ணினேன். 1937 முதல் 1967 வரையிலான காலகட்டத்தை அதுல பதிவு பண்ணியிருக்கேன்...’’ என்றவர், முனைவர் பட்டத்துக்கு உந்துதலாக இருந்தவர் வி.கே.ராமசாமி என்கிறார்.‘‘இடையே இன்னொரு விஷயமும் பண்ணினேன். நான் நேசிக்கக் கூடிய கவிஞர் மீனாட்சியம்மாகிட்ட இருந்து ஒரு போன் வந்துச்சு. ‘தாகூருக்காக சாகித்ய அகடமி ஆய்வு கருத்தரங்கம் ஒன்று நடத்துறாங்க. அதுக்கு நீங்க ஒரு ஆய்வுக்கட்டுரை தரணும்’னாங்க.

‘தாகூருடைய நாடகங்கள், நவீன தமிழ் நாடகங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள்’ என்கிற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை அது.
நாடகப் பேராசிரியர் மு.ராமசாமி, நாடகமேதை ராமானுஜம் இவங்ககிட்ட நேர்காணல் செய்து அந்தக் கட்டுரையை சமர்ப்பிச்சேன். அதைப் படிச்ச ராமானுஜம் ஐயா, ‘நீங்க பேசுற ஒவ்வொரு விஷயமும் ரிசர்ச் தொடர்பாவே இருக்கு.

ஒரு நடிகனுடைய பார்வையில் திரைப்படம் என்பது பதிவு செய்தல், நாடகம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்  என்பது போன்ற விஷயங்களை உதாரணமா சொல்லமுடியும். நீங்க எங்க தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பண்ணலாமே’னு அழுத்தமா சொன்னதுடன், முனைவர் இரவீந்திரனையும் எனக்கு அறிமுகப்படுத்தி வச்சார்.

அதுக்கு முன்னாடி ஒரு ஃப்ளாஷ்பேக். ‘மணமகளே வா’ பட ஷூட்டிங் ஏவிஎம்ல நடந்தது. தூர்தர்ஷன்ல இருந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கண்ணன் சார், ‘உங்கள வி.கே.ராமசாமி சார் உடனே வரச் சொன்னார்’னு சொல்லி எனக்கு கார் அனுப்பியிருந்தார்.

வி.கே.ஆரை நான் அப்பானுதான் கூப்பிடுவேன். அவர் என்கிட்ட, ‘இப்ப உரையாடல் நிகழ்ச்சி பண்றாங்க. என்கிட்ட நீங்க பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனாலதான் உங்களை கூப்பிடச் சொன்னேன்’னார். அதோட பிரேக்ல ‘சார்லி,பழைய நகைச்சுவை நடிகர்களைப் பத்தி நீ பதிவு பண்ணணும்பா’னு கேட்டுக்கிட்டார். அது எனக்கு உந்துதலா இருந்துச்சு.

இப்ப ராமானுஜம் ஐயா சொன்னது தூண்டுதலாகி ரிசர்ச்சும் பண்ணி பட்டமும் வாங்கிட்டேன். என்னோட ஆய்வுக்கட்டுரையை புத்தகமாகவும் ரெடி பண்ணிட்டிருக்கேன். அதுக்கான வேலைகளும் போயிட்டிருக்கு. இந்த ஆய்வில் சினிமா நடிகர்களைப் பற்றி ஏற்கெனவே வெளிவந்த தகவல்கள்தான் இருக்கும். அதை எடுத்துச் செய்வதுங்கறது எளிது. தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை என்பது கடல் மாதிரி. அதுல எல்லாரையும் கொண்டு வருவது கடினம். ஒரு விஷயம் எளிது. இன்னொண்ணுகடினம்.

சில அரிய தகவல்களை கவிஞர் சுப்பு ஆறுமுகம், ராதாரவி சார் மாதிரி சிலரை நேரில் சந்தித்து திரட்டி பதிவு பண்ணியிருக்கேன். கலைவாணர், எம்.ஆர்.ராதா பற்றிய பல அரிய தருணங்களை அவங்க பகிர்ந்தாங்க. ஏழு தலைமுறை தாண்டி, நகைச்சுவையில் சிறந்த படைப்பாளியாக காமெடி ஏ.வீரப்பன் சாரின் படைப்பாற்றலை பதிவு பண்ணியிருக்கேன். இன்னும் முப்பது வருஷம் கழிச்சு, தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகள் வைத்தால் அது ஏ.வீரப்பன் காமெடியில் இருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கும்!

ஒரு தொழில்முறை கலைஞனா இருந்து வரும் என்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவனா ஏத்துக்கிட்டு அனுமதி கொடுத்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் திருமலை, பாஸ்கரன்... ஆய்வை நிறைவு செய்ய முழு ஒத்துழைப்பு தந்த இன்றைய துணைவேந்தர் பாலசுப்ரமணியம், என்னுடைய நெறியாளர் முனைவர் இரவீந்திரன்... ஆகியோருக்கெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

 என் பெற்றோர் - முதல் வகுப்பில் எனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியை ராஜலட்சுமி முதல், இப்போது பாடம் எடுத்த நாடக ஆசான் இரவீந்திரன் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் முனைவர் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்.சமீபத்துல யோகிபாபுவோட ‘கூர்க்கா’வுல ஹுசைன் போல்ட்டா நடிச்சிருந்தேன். என்னோட காமெடிக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நான் நடிக்க வந்த புதுசுல உள்ள காமெடி, இப்ப உள்ள காமெடி எல்லாத்தையும் மக்கள் ரசிக்கறாங்களா இல்ல சிரிக்கறாங்களா என்பதுதான் முக்கியம்.

இப்ப டெக்னிக்கல் விஷயம் வளர்ச்சியடைஞ்சிருக்கு. ஸோ, ரொம்ப ஆரவாரமா செய்யணும்னு அவசியமில்ல. லைட்டா செஞ்சாலே போதுமானதா இருக்கு. காலத்துக்கு ஏற்ப முதல்ல அடாப்ட் ஆகறது நகைச்சுவை உணர்வுதான்.

அன்றைய படங்கள்ல கதைகள் கனமா இருந்துச்சு. அதுல நகைச்சுவை பெரிய அளவுல கொண்டாடப்பட்டுச்சு. இப்ப கதையே நகைச்சுவை கதையா இருக்கு.  தமிழர்கள் நகைச்சுவையையும், இசையையும் ரொம்பவே கொண்டாடுவாங்க. இந்த ரெண்டுமே ஒவ்வொரு தமிழனின் வாழ்வோடும் கலந்தது.
அதனாலதான் காமெடி நடிகன் காலத்தோடு நின்றுகொண்டே இருக்கிறான்!’’ என பெருமிதப்படுகிறார் சார்லி.        
       
மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்