தனி மனுஷன் மாதிரி இருந்தாலும் ஓர் அரசாங்கம் மாதிரி இருப்பாங்க... ‘மாஃபியா’ சீக்ரெட்ஸ்



‘‘‘மா ஃபியா’தான் படத்திற்குப் பெயர். ரொம்பவும் பொருத்தமான பெயரும் கூட. கேங்ஸ்டர் ஸ்டோரி. எனக்கு இந்த வகையில் கதை சொல்லணும்னு ரொம்ப நினைவாகவே இருந்தது. நாம ஈஸியாக கேங்ஸ்டர்னு சொல்லிட்டு போயிடுறோம். அதில் நிறைய விஷயங்கள் இருக்கு. பூனை, எலியை துரத்திப் பிடிக்கிற விளையாட்டுதான்.

கேங்ஸ்டர் உலகமே தனி. சதா திட்டங்களோடும், பயத்தோடவும், அதேநேரம் தெளிவாகவும் இயங்கிட்டு இருப்பாங்க. தனி மனுஷன் மாதிரி இருந்தாலும் ஓர் அரசாங்கம் மாதிரி இருப்பாங்க. அது ஒரு ஹீரோயிசம். அது தருகிற த்ரில் அவங்களுக்குப் பிடிச்சிருக்கும். இன்னொருத்தரின் பயம் தன்னோட பலம்னு சந்தோஷமாகிடுறாங்க. பிளானிங் லெவலில் பின்னியெடுக்கிற புத்திசாலிகள்.

பொதுவா கேங்ஸ்டர்ஸ்கிட்ட திட்டமிடல் படு ஷார்ப்பாக இருக்கும். ஐந்தாண்டுத் திட்டம் கூட கவர்மெண்ட்டால் அப்படிப் போட முடியாது. அந்த உலகத்தைப் புரிஞ்சு செய்ததில் இந்தப்படம் புதுவகையாக இருக்கும்.இந்த உலகத்திற்குள்ளே நடக்கிற விஷயங்களை புரிஞ்சிக்க முயற்சி பண்ணி உருவான ஸ்கிரிப்ட்தான் ‘மாஃபியா’. பார்க்கவும் அடுத்தடுத்து துரிதமாகப் போகிற போக்குலயும் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்...’’ என அழுத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் பளிச்சென்று கவனத்திற்கு வந்த மிக இளைஞர்.
அருண் விஜய் தோற்றத்தில் ரொம்ப நேர்த்தியாக இருக்கார்…

எல்லோரும் சொல்லிக்கூட கேட்டிருப்பீங்க... ‘ஸ்கிரிப்ட் எழுதும்போதே இன்னார் ஞாபகத்தில் இருந்தாங்க’னு. ஆனால், நிஜமாகவே நான் திட்டமிட்டு எழுதினது அருண் விஜய்யை வைச்சுத்தான். அருண் விஜய் சாரின் ஸ்பெஷல் என்னன்னா ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரை வைச்சு ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். நாம் என்ன ஃபீல் பண்றோம்ங்கிறதை அவர் பெட்டரா புரிந்து வெளிக் கொண்டு வந்து விடுவார். நாம் நினைக்கிறதை அடைகிறவரைக்கும் அவரும் நமக்குத் துணையாக நிற்பார்.

நல்ல திடகாத்திரமான கேரக்டர். அவருக்குத் தலைமைப் பண்பும், துணிச்சலும், உடனே முடிவெடுத்து வழி நடத்துகிற திறனும் இருக்கணும்.
கதை சொல்லி முடிஞ்சதுமே, ‘இந்தப் படத்தை நான் பண்றேன்’னு முடிவுக்கு வந்தார். பிரமாதமாக செய்திருக்கார். அதிகாரிக்கான உடல் அமைப்பு, அதில் அனுதினமும் கவனமாக இருக்கிற உழைப்பு... எனக்கு இன்னைக்கு நினைச்சாலும் ஆச்சரியம்.

அவருக்கு இருக்கிற கம்பீரம், ஆக்‌ஷன், நடை, உடை, பாவனை எல்லாம் அருமையாக இருக்கும். தொழில்முறை நடிகர். எனக்கு திருப்தி வருவது எத்தனையாவது டேக்காக இருந்தாலும் மலர்ச்சியோடு நிற்பார். கேரக்டரின் தேவையை, நியாயத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஸ்பாட்டுக்கு வருவதுதான் ஒரு நல்ல நடிகருக்கு அழகு. அந்த விதத்திலும் என்னைக் கவர்ந்தார்.

அருண் விஜய் - பிரசன்னா காம்பினேஷன் புதுசா இருக்கு…பிரசன்னா வில்லன் என்பதை நடிப்பில் காட்டக்கூடாது. அது அவரின் நடவடிக்கையில் ஒரு தினுசாக வெளிவரணும். பெரிய கேரக்டர். படத்தை நடத்திச்செல்லும் நாயகனும் கூட. சரிக்கு சமமாக அருண் விஜய்யோடு வருகிற விதமெல்லாம் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கும்.

இரண்டுபேரும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் அருமையாக செய்தாங்க. இந்தக் காலத்து நடிகர்கள் கடுமையாக உழைக்கிறாங்க. தங்களை நிலைநிறுத்திக்க வெயில், மழை பார்க்கிறதில்லை. என் படத்தில் கொஞ்சம் கூடுதலாக அந்த உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். அதை இருவருமே கச்சிதமாக செய்திருக்காங்க. ப்ரியா பவானி சங்கர் வேறு விதத்தில் இருக்காங்க…

இதுவரைக்கும் நாம் அவரை அடுத்த வீட்டுப் பெண் மாதிரிதான் பார்த்திருக்கோம். இதில் அவங்களுக்கு நல்ல அருமையான ரோல். அதை அவங்க கொண்டு சேர்த்த விதத்திலும் உழைப்போடு திறமையையும் காட்டியிருக்காங்க. இன்னும் அவங்களைப்பத்தி நிறைய சொல்லலாம். பிரமாதப்படுத்தி இருக்காங்க. அருமையான பெர்ஃபார்மராகவும் அவருடைய வளர்ச்சி இதில் தெரியும். அவருடைய இதுவரையிலான நடிப்பில் இது ஒரு புது இன்னிங்ஸா கூட இருக்கும்.

பாட்டு பின்னுது... மியூசிக் ஃபிரஷ்ஷா இருக்கு...‘துருவங்கள் பதினாறு’வொர்க் பண்ணின பிஜோய்தான் மியூசிக். பின்னணியிலும், பாடலிலும் அவர் நல்ல இடம் கொடுப்பார். அதில் அவர் இறங்கி ஆழம் வரைக்கும் போவார். கோகுல் பினாய், படத்தோட கேமராமேன். ரொம்ப இளமையான கேமராமேனாக இருந்து கொண்டு, பல படங்களுக்கு முக்கியமானவராக இருந்து வருகிறார். படத்தை உயிரோட கொண்டு வந்திருக்கார்.

தயாரிப்பில் லைகா ரொம்ப சுதந்திரம் கொடுத்தாங்க. நாங்க எல்லோருமே ஒருத்தரை ஒருத்தர் ரசிச்சிக்கிட்டு ‘வெரிகுட்’னு சொல்லிக்கிட்டு இருக்கோம். அதை மக்களும் சொல்லணும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.‘நரகாசுரன்’ எப்ப வரும்? நிஜமாகவே நல்ல எதிர்பார்ப்பு இருக்கு...

கண்டிப்பாக ‘நரகாசுரன்’ திரையைத் தொடணும்னு நானுமே நினைக்கிறேன். தயாரிக்கும் போது சில பிரச்னைகள் வந்தது. அந்தப் பிரச்னைகள் இன்னுமே இருக்கு. இப்போதைக்கு அந்தப் பிரச்னைகள் முடியும்னு நான் நினைக்கலை.

நானும் கௌதம் மேனன் சாரும் எப்படியாவது வெளியில் கொண்டு வந்திடணும்னு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கோம். எங்களுக்குள் வருத்தங்கள் படிப்படியாகக் குறைஞ்சு, வெளிவருவதற்கான வேலை நடந்திட்டு இருக்கு. அதனால், என்னோட இரண்டாவது படமாக ‘மாஃபியா’ இருக்கும்!                

நா.கதிர்வேலன்