கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -38



கணக்கு பாடத்தில் உயர வைக்கும் இன்னம்பூர் ஈசன்!

தெரு முனையில் நின்று கொண்டிருந்தார்கள் கண்ணனும் அவன் நண்பன் ஷ்யாமும். ஷ்யாம் அழுதுகொண்டிருந்தான். ‘‘இந்த முறையும் நான் மேத்ஸ்ல ஃபெயிலு. எவ்வளவு படிச்சாலும் இது மட்டும் மண்டைலயே ஏறமாட்டேங்குது. நான் சரியான தத்தி. நான் ஃபெயில் ஆனது தெரிஞ்சா என் அம்மாவும் அப்பாவும் என்னை ஸ்போர்ட்ஸ் பிராக்டீஸ்க்கு அனுப்பவே மாட்டாங்க...’’ விம்மியபடியே கண்ணனிடம் புலம்பினான் ஷ்யாம்.

‘‘என்ன பேசற..? உனக்கு கணக்குப் பாடம் சரியா வரல. அவ்வளவுதான். அதுக்காக நீ முட்டாள்னு அர்த்தம் கிடையாது. விளையாட்டுல உன்னை இதுவரை யாருமே ஜெயிச்சது இல்ல. நீ எவ்வளவு பரிசு வாங்கி இருக்க அதுக்காக? இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி ஒடைஞ்சு போலாமா..?’’ கண்ணன் அவனைத் தேற்ற முயன்றான்.

‘‘கவலைப்படாத... கணக்கு ஒண்ணும் பெரிய விஷயமில்ல... ஈசியா வந்துரும். ஆனா, அதுக்கு நான் சொல்றத நீ செய்யணும்...’’

அசரீரி போல் ஒலித்த குரல் யாருடையது என்பது கண்ணனுக்குத் தெரியும். ஷ்யாமுக்கு தெரியாதே..?
அதிர்ச்சியுடன் குரல் வந்த திசையை ஷ்யாம் நோக்கினான்.அங்கே, காய்கறி, பூ பைகளோடு நாகராஜனும் ஆனந்த வல்லியும் நின்றிருந்தார்கள்.
ஷ்யாமின் நல்ல நேரம்... அவனது கவலைக்கான தீர்வு நொடியில் காய் பையுடன் வந்துவிட்டதை எண்ணி கண்ணன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான்.

‘‘ஷ்யாம்... வயசுல எனக்கு இவர் தாத்தா முறைனாலும் ஃப்ரெண்ட். பக்கத்து வீட்ல இருக்கார்... பேரு நாகராஜன்...அவங்க பாட்டி... பேரு ஆனந்தவல்லி... தாத்தா, இவன் ஷ்யாம்...’’ என பரஸ்பரம் மூவரையும் அறிமுகப்படுத்தினான். ‘‘ஷ்யாம்... உனக்கு லக் அதிகம். அதனாலதான் தாத்தாவை இம்மீடியட்டா மீட் பண்ணிட்ட. தாத்தா பெரிய பக்திமான். இவர் சொல்ற சாமிய கும்பிட்டா நம்ம கஷ்டம் விலகிடும். கண்டிப்பா உன் பிரச்னைக்கும் தாத்தாகிட்ட தீர்வு இருக்கும்... சரிதானே தாத்தா..?’’ நாகராஜனிடம் நம்பிக்கையோடு கேட்டான் கண்ணன்.

ஷ்யாமின் கண்களிலும் அதே நம்பிக்கை எதிரொலித்ததை ஆனந்தவல்லி பார்த்துவிட்டு புன்னகைத்தாள். ‘‘கண்டிப்பா கணக்குல நல்ல மார்க் எடுக்க ஒரு கோயில் இருக்கு. இவர் அதை சொல்லுவார்... வாங்க வீட்டுக்குள்ள போய் பேசலாம்...’’ எல்லோரும் நாகராஜனின் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

‘‘தாத்தா... மேத்ஸ்ல நல்ல மார்க் எடுக்கக் கூட கோயில் இருக்கா..?’’ ஆச்சர்யத்துடன் ஷ்யாம் கேட்டான்.
அந்தக் கோயிலைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கண்ணனும் அவரை ஏறிட்டான்.புன்னகைத்த நாகராஜன், தன் ஃப்ளாட்டின் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். கண்ணனையும் ஷ்யாமையும் சோபாவில் அமரச் சொல்லிவிட்டு, தானும் உட்கார்ந்தார்.
ஆனந்தவல்லி கொண்டு வந்து கொடுத்த நீரைக் குடித்துவிட்டு சொல்லத் தொடங்கினார்...

எங்கும் பனி படர்ந்திருக்கும் அந்த மலையை தேவர்கள் அனைவரும் பணிந்த படி இருந்தார்கள்.  பூத கணங்கள் ‘‘நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க...’’ என ஆத்மார்த்தமாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.ரிஷி முனிவர்கள் சங்கநாதமும் வேதகானமும் செய்தார்கள். கந்தர்வர்களும், யட்சர்களும் பலவித வாத்தியங்களை இசைத்து இனிய ஒலி எழுப்பினார்கள்.

சிவ நகரமான கைலாசம் சிவ மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அதன் மாட வீதிகளில் நடந்துகொண்டிருந்தார்கள் அம்மையும் அப்பனும்.
ஜெகன்மாதா பார்வதியின் நடை அழகு அன்னங்களையே நாணச் செய்தது. ராஜ தோரணையுடன் ஈசன் நடக்கும் நடையில்தான் எத்தனை மிடுக்கு! அப்பப்பா எத்தனை கம்பீரம். அவர்கள் இருவரின் கால் சிலம்புகளும் கைலாயத்து ரிஷிகளோடு சேர்ந்து கொஞ்சிக் கொஞ்சி வேத கானம் செய்தன.
அம்மையப்பனின் அருகில் அவர்களோடு உரையாடியபடியே ஒரு முனிவர் நடந்து கொண்டிருந்தார்.

அத்தனை உயரம் இல்லாத, சிறிய தோற்றம் அவருக்கு. பார்வையிலே கோடி சூரிய பிரகாசம். உருவத்தால் சிறியவர்தானே... என்று நினைத்து விட வேண்டாம். பெரிய உருவம் எடுத்து விந்திய மலையின் மமதையை அடக்கிய அருந்தவசி அவர்! அவரது பெருமையை என்ன என்று சொல்வது? கடலை குடித்ததை சொல்வதா, இல்லை இராமனுக்கு (விஷ்ணுவுக்கே ) விஷ்ணு தனுசு கொடுத்ததை சொல்வதா?

ஆனால், இத்தனை ஆற்றல் இருந்தும் எப்போதும் அடங்கி இருப்பவர். அகத்தில் எப்போதும் ஈசனை வைத்து பூஜிப்பவர்.
அதனாலேயே அவருக்கு அகத்தியர் என்று திருநாமம்! மாலும் அயனும் தேடியும் காணா பரம்பொருளோடு உலா வர, தான் என்ன பாக்கியம் செய்தோமோ என்று வியந்தார் அகத்தியர். மெல்ல மெல்ல மூவரும் நடந்து கைலாயத்தில் இருக்கும் அற்புதமான அந்த  நூலகத்துக்கு வந்தார்கள்.

அங்கே விதவிதமாக, ரகம் ரகமாக பல நூல்கள். அங்கு இல்லாத நூல்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனையும் அங்கே இருந்தன.
அத்தனை நூல்களையும் ஒரே இடத்தில் கண்ட அகத்தியர் பெரிதாக வாயைப் பிளந்தார். ‘‘இன்று இந்த நூல்கள் அனைத்தும் முழுமை பெற்று விட்டன மகாதேவா...’’ என்றபடி கை குவித்தார்.

அவர் சொன்னது விளங்கியதால் அர்த்தபுஷ்டியுடன்நகைத்தார் பரமன். அகத்தியர் தொடர்ந்தார். ‘‘ஆம் பிரபோ! உலகிற்கே ஞானத்தை போதிக்கும் இந்த நூல்கள் இன்று, தாமும் அந்த ஞானத்தைப் பெற்றுவிட்டது! ஞானமே வடிவான தங்களின் தரிசனம் இன்று இவைகளுக்கு கிடைத்து விட்டது...’’
‘‘ஆச்சரியமான உண்மை அகத்தியா!’’ அம்பிகை அகத்தியரின் கருத்தை ஆமோதித்தாள்.

குழலும் யாழும் தோற்றே விட்டன அந்தக் குரலில்! அப்போது திடீரென்று அங்கே சந்தனம், ஜவ்வாது, அகில், சாம்பிராணி, குங்குமப் பூ இவை அனைத்தையும் விஞ்சும் ஒரு தெய்வீக சுகந்தம் வீசியது.

அதை மெல்ல தனது நாசியால் நுகர்ந்தார் அகத்தியர். முன்பு எப்போதும் இது போன்ற ஒரு தெய்வீக மணத்தை அவர் சுவாசித்ததில்லை. ‘‘அப்பா பரமேஸ்வரா! தாயே ஜெகன்மாதா! எங்கிருந்து வருகிறது இந்த அற்புத நறுமணம்..? இதற்குமுன் இந்த தெய்வீக மணத்தை நான் முகர்ந்ததே இல்லையே...’’ வியந்தபடியே கேட்டார் அகத்தியர்.

அவர் கேட்டு வாயை மூடுவதற்குள் அவரது கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு நூலகத்தின் ஓர் இடத்திற்கு வந்தார் பரமன்.

நூலகத்தின் அந்த இடம்தான் அந்த சுகந்தத்தின் உற்பத்தி ஸ்தானம் என்று அங்கு வீசும் அதிகபட்ச பரிமளம் சொல்லாமல் சொல்லியது.
அங்கே மலை போல பல நூல்கள் குவிந்திருந்தன.

ஆர்வ மிகுதியில் அதில் ஒன்றை எடுத்தார் அகத்தியர். மெல்ல வாசிக்கவும் செய்தார். ஆச்சரியத்தில் அவரது கண்கள் அகண்டு விரிந்தன. ‘‘மகாதேவா! இவை அத்தனையும் தேன் தமிழ் காவியங்கள், நாடகங்கள் மற்றும் கவிதைகள்...’’‘‘ஆம் அகத்தியா! சுந்தரத் தமிழின் சுகந்தம்தான் நீ உணர்ந்த அந்த தெய்வீக மணம்! அந்த வாசம் தெய்வீகமானது என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.

காரணம், தமிழ் வேறு ஈசன் வேறு அல்ல! ஈசனே தமிழ்... தமிழே ஈசன்! அதனால்தான் ‘பண்ணிடை தமிழ் ஒப்பாய்...’ என்று இவரை சுந்தரர் என்ற தமிழ்ப் புலவர் பின்னாளில் பாடப் போகிறார்! ஆகவே, நீ உணர்ந்த நறுமணம் தெய்வீகமானதுதான்... அது நமது தெய்வம் ஈசனின் வடிவான தமிழின் சுகந்தம்தான்...’’ பெரிய விளக்கம் தந்தாள் ஜெகன்மாதா.

அத்தனையும் கேட்ட அகத்தியரின் மூளையில் ஒரு பொறி தட்டியது. இந்த அற்புத மொழியை பூலோகத்தில் உலவ விட வேண்டும் என்பதே அந்த எண்ணம். ஈசனே தமிழ், தமிழே ஈசன் என்றால் அதை பேசுபவர்கள் அனைவரும் ஈசன் அருள் பெறுவார்கள்! தவத்தால் அடையும் அருளை, ஒரு மொழியில் பேசுவதாலேயே அடையலாம் என்றால் யார்தான் அந்த அற்புத வாய்ப்பை தவற விடுவார்கள்?

அகத்தியர் தனது கைகளைக் குவித்தார். ‘‘பரம் பொருளே! கைலாச வாசா! அம்மா ஜெகன் மாதா! இந்த தமிழ் மொழியின் இலக்கணத்தை எனக்கு போதித்து அருளுங்கள். நான் அதை வையகத்திற்கு போதிக்கிறேன்...’’ பக்தியோடு விண்ணப்பித்தார் குறுமுனி. ஈசன் மெல்ல நகைத்தபடியே பதில் சொன்னார். ‘‘பேராசைதான் அகத்தியா உனக்கு! தவமே செய்யாமல் தெய்வ தரிசனம் வேண்டும் என்கிறாயே?’’ஈசன் போட்ட புதிர் விளங்காமல் விழித்தார் அகத்தியர்.

அதைக் கண்ட அம்பிகையின் தாயுள்ளம் இளகியது. ‘‘பூலோகத்தில், பாரத தேசத்தின் தென் பகுதியில் உள்ள செண்பக வனத்தில் தவம் இரு அகத்தியா! சமயம் வந்ததும் ஐயன் அருள் புரிவார்...’’ வாய் மலர்ந்து அகத்தியருக்கு ஓர் அற்புத மார்க்கம் உரைத்தாள் அம்பிகை. ‘‘உடன் எனக்கு விடை தாருங்கள் பிரபோ! தமிழ் கற்கும் ஆவல் என்னை உந்துகிறது...’’ கைகுவித்து குனிந்து வணங்கினார் அகத்தியர்.
அவருக்கு ஆதரவாக அம்மையும், அப்பனும் தங்களது அபய ஹஸ்தத்தை உயர்த்தினார்கள்.

தண்ட கமண்டலத்தோடு தென் திசை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் அகத்தியர். அம்மையப்பனின் அருள் அவரைப் பின்தொடர்ந்தது.
தமிழ் கற்க வேண்டும் என்ற ஆவல் அவரை உந்தவே வேகமாக நடையிட்டார். பல காத தொலைவை நொடியில் கடந்து தென் பாரதம் வந்து சேர்ந்தார். செண்பக வனத்தில் நுழைந்த அவரை அந்த வனத்தின் மரங்கள் செண்பகத்தைத் தூவி வரவேற்றன.

தவம் செய்ய இடம் தேடி வனமெங்கும் தன் பார்வையை அகத்தியர் சுழலவிட்டார். அப்போது வனத்தின் மத்தியில் அன்பே உருவாய், அழகே வடிவாய் அருளை வாரி வழங்கிக் கொண்டிருந்த சிவலிங்கம் ஒன்று அவர் கண்களில் பட்டது.

தென்றல் காற்றில் பறந்து வந்த செண்பக மலர் சரியாக அந்த லிங்கத்தின் மீது அர்ச்சனை செய்வதுபோல் விழுந்தது.நல்ல ஆகிருதியாக இருந்த அந்த சிவலிங்கத்தை, தென்றல் காற்றே பூஜிப்பது போல இருந்தது அந்தக் காட்சி!அதைக் கவனிக்கத் தவறாத அகத்தியருக்கு இந்த லிங்கத்தின் பின் ஏதோ மர்மம் இருக்கிறது என்பது புரிந்தது!  

(கஷ்டங்கள் விலகும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்