ஹீரோக்கள் எப்படி கதை கேட்கிறார்கள்? உண்மையை உடைக்கும் கோலிவுட்



சமீபத்தில் வெளியான சில படங்களைப் பார்க்கும்போது, ‘ஹீரோக்கள் கதை கேட்கிறார்களா...’ என எண்ணியிருப்பீர்கள்.இன்னொரு புறம், ‘இந்தக் கதையை எல்லாம் எப்படி அவர் ஓகே பண்ணினார்...’ என வியந்தும் இருப்பீர்கள்.

கோலிவுட்டில் இருக்கும் ஒன்றரை டஜன் ஹீரோக்களுக்கும், பல நூறு டஜன் இயக்குநர்கள் கதை சொல்கிறேன் என்று வலைவீசுவது அன்றாட நிகழ்வு. உண்மையில் ஹீரோக்கள் கதை கேட்டுத்தான் படம் பண்ணுகிறார்களா… ஹீரோக்களிடம் எப்படி அப்ரோச் செய்கிறார்கள்..? அறிய பிரபலங்கள் சிலரிடம் பேசினோம். ஆஃப் த ரெக்கார்டாக அவர்கள் அளித்த அதிர்ச்சிகள் இனி..

ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு பாணியில் கதை கேட்பார்கள். சிலரிடம் ஒன்லைன் சொன்னாலே, ‘சூப்பரா அமைஞ்சிருக்கு. ஸ்டோரியா டெவலப் பண்ணிடுங்க’ என க்ரீன் சிக்னல் கொடுத்துவிடுவார்கள்.

சிலர், ‘பைண்டட் ஸ்கிரிப்ட்டா கொடுங்க.. படிச்சிட்டு சொல்றேன்’ என்று கேட்டு வாங்கிக் கொள்வதும் உண்டு. சமீபத்தில் ஹிட் கொடுத்த ஹீரோ அவர். அவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் ஓர் இயக்குநர். மறுநாள் அவரை வரவழைத்து தனது அண்ணனிடம் கதையை சொல்லச் சொல்லியிருக்கிறார் அந்த ஹீரோ. அதன்பின், வேறொருவர்… கதை கேட்டார்.

இப்படி தொடர்ந்து ஐந்து நாட்கள் அந்த இயக்குநர் தன் கதையைச் சொல்லி ஹீரோவிடம் ஓகே செய்திருக்கிறார். அந்தக் கதை ஓகே ஆன பிறகு, ஹீரோ தனது இமேஜ் விஷயங்களையும் சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். அந்த அறிமுக இயக்குநர், மறுப்பேதும் சொல்லாமல் ஹீரோ சொன்ன விஷயத்தை ஸ்கிரிப்ட்டில் கொண்டு வந்துவிட்டார். இப்போது படம் ஷூட்டிங்கில் பரபரக்கிறது.

இன்னொரு உதாரணம். மாஸ் ஹீரோவான அவர் ஒரு கதையைக் கேட்டுவிட்டு புது இயக்குநர்களிடம் ‘தயாரிப்பாளர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேனுங்ணா’னு சொல்லிவிட்டாரென்றால் அந்த கதை அவருக்குப் பிடிக்கவில்லையென்று அர்த்தமாம். அதுவே அவர் ஒருவரிடம் கதை கேட்டு முடித்தவுடன் ‘ப்ரோ உங்க நம்பர் சொல்லுங்க’ என்று போன் நம்பர் கேட்டு குறித்துக் கொண்டாரென்றால், புது நபர் சொன்ன கதை ஹீரோவுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என அர்த்தமாம்.

அடுத்து ஒரு அட்ராசிட்டி. ரசனையான ஹீரோ அவர். இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடிப்பவர். அவரிடம் கதை சொல்ல வேண்டுமெனில் இருபது நிமிஷத்துக்குள் கதையைச் சொல்லி அவரை இம்ப்ரஸ் செய்துவிட வேண்டும். அதற்குள் அவர் இம்ப்ரஸ் ஆகிவிட்டால், இன்னொரு நாள் முழுக்கதையையும் கேட்க இரண்டு மணி நேரம் ஒதுக்கி சின்ஸியராக கேட்பார்.

இதையெல்லாம் விட, ஒரு படம் ஒர்க் பண்ணும் போதே உதவி, அசோசியேட்இயக்குநர்களின் ஒர்க்கில் மயங்கி, ‘கதை எதுவும் வச்சிருக்கீங்களா’ எனக் கேட்டு கமிட் பண்ணும் ஹீரோக்களும் உண்டு. அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸில் இருந்து புதுமுக இயக்குநர்கள் வரை பலரையும் அப்படி உதாரணமாகச் சொல்ல முடியும்.

அறிமுக இயக்குநர்களிடம் ஜாதகம் கேட்டு வாங்கிக்கொண்டு, அதன்பிறகு கதை கேட்கும் ஹீரோக்களும் கோலிவுட்டில் இருக்கிறார்கள்.
ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒருதடவை என படம் பண்ற ஹீரோ அவர். கதையை விட ஜாதகத்தை அனுப்பி வைங்கனு கேட்பதுதான் அவரது முழு நேர வேலை.

அறிமுக இயக்குநர்களின் ஜாதகத்தை வாங்கினதும் தனக்குத் தெரிந்த ஜோதிடர்களிடம் கொடுத்து விடுவார். ‘இவருடன் ஒர்க் பண்ணலாமா’னு ஜாதக பலன் கேட்டுவிட்டு, ‘உங்க ராசிக்கும் என் ராசிக்கும் சுக்ரன் சரியில்லைனு சொல்றாங்க. ஸோ, அடுத்த குருப் பெயர்ச்சி வரை வெயிட் பண்ணுங்க. நாம ஒர்க் பண்ணலாம்’ என்பார்.  

முக்கியமான விஷயம். அவர் இன்று வரை படமே பண்ணாமல் இருக்கிறார். ‘‘ஒரு லக்னத்துல ஒன்பது கிரகங்களும் ஒண்ணு சேரும் போதுதான் படம் பண்ணுவார் போல…’’ என கலகலக்கிறார் அந்த இயக்குநர். ‘முன்னாடியெல்லாம் நீங்க யார்கிட்ட இருந்தீங்க? என்ன ஒர்க் பண்ணியிருந்தீங்க? எத்தனை படங்கள் ஒர்க் பண்ணியிருக்கீங்கனு கேட்பாங்க. சினிமா டிஜிட்டலுக்கு மாறின பிறகு சூழலும் மாறிடுச்சு...’ என்றபடி பேச ஆரம்பித்தார் அந்த இயக்குநர்.

‘‘மாஸ் ஹீரோவோ, ஹிட் ஹீரோவோ, சுமார் ஹீரோவோ... எல்லா ஹீரோக்களுமே பணத்துக்காகத்தான் படம் பண்றாங்க. ஆனா, ஒரு ஹீரோவைப் பிடிச்சு, அவங்ககிட்ட கதை சொல்வது என்பது சாதாரண விஷயமில்ல. புரொடக்‌ஷன் மேனேஜர்கள், டெக்னீஷியன்கள்னு வலுவான ஒரு தொடர்பு நமக்கு இருக்கணும். அவங்க கொடுக்கற அறிமுகத்துலதான் ஒரு ஹீரோ அப்ரோச் எளிதானதா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும்.

இங்கே ஹீரோக்கள் கதை கேட்பதில் இயக்குநர்களை மூன்று கேட்டகிரியா பிரிச்சு வைச்சிருக்காங்க. இதில், முதல் கேட்டகிரி புதுமுக இயக்குநர்கள். ரெண்டாவது,ஏற்கெனவே ஒரு படம் பண்ணினவர்கள். மூணாவது வகை சூப்பர் ஹிட் இயக்குநர்கள் என பிரித்து வைத்துள்ளனர்.

ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு பேட்டர்ன் வச்சிருக்காங்க. சில ஹீரோக்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கியதுமே கதையைச் சொல்லிவிட முடியாது. முதல் வாரம் நட்பு வாரம், ரெண்டாவது வாரம் நல விசாரிப்பு வாரம் அல்லது மரியாதை நிமித்த நினைவூட்டல், மூணாவது வாரம்தான் ஹீரோ அவரிடம் கதையைக் கேட்க ரெடியாவார்.

இந்த இடைப்பட்ட காலத்துக்குள் அந்த இயக்குநர் குறித்து ஹீரோ விசாரித்தும் விடுவார். சில இயக்குநர்கள் வரிசையாக தோல்விப் படங்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். சுமாராகக் கூட ஓடியிருக்காது. ஆனால், அவங்க அடுத்தடுத்து படங்கள் இயக்கிக்கிட்டே இருப்பாங்க.
அதன் ரகசியம் வேறெதுவும் இல்லை. அந்த இயக்குநருக்கு சரளமா கதை சொல்லத் தெரிந்திருக்கும்.

எமோஷனல் சீனில் இயக்குநரும் அழுது, ஹீரோவையும் கண்கலங்க வைப்பார். ரம்மியமான காலைப் பொழுதில் சாரலும் தூறலும் பொழியுதுனு சொன்னால், ஹீரோ அந்த சாரல்ல நனைவார். அப்படி ஒரு விஷுவல் வித்தையுடன் ஃப்ளோவாக சொல்லும் இயக்குநர்களை பெரும்பாலான ஹீரோக்கள் விரும்புகின்றனர்.

புதுமுக இயக்குநர்களுக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். அவர்கள் சிலரிடம் கதை சொல்லி ஓகே வாங்கினால், சம்பந்தப்பட்ட ஹீரோவின் படத்தைத் தயாரிக்க புரொடியூசர்கள் பலரும் முன்வரமாட்டார்கள். ‘அவருக்கு பிசினஸே இல்லையே’னு தயாரிப்பு தரப்பு கைவிரிப்பதும் சகஜமானதுதான்.

சில ஹீரோக்களிடம் கதை சொல்லும்போது, ஹீரோவின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள், முன்பின் தெரியாதவர்கள் கூட இருப்பார்கள். கொஞ்சம் சங்கோஜத்துடன்தான் கதையைச் சொல்ல வேண்டியிருக்கும். சமீபகாலமாக எந்த வெற்றியையும் கொடுக்காத ஹீரோ அவர். அவரிடம் புது இயக்குநர் ஒரு கதையைச் சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.

அடுத்த நாள் அக்ரிமென்ட் போடும் சமயத்தில், ஹீரோவின் அம்மாவிற்கு அந்தக் கதையைக் கேட்கும் ஆவல் வந்திருக்கிறது. ஹீரோவிற்கு பிடித்த கதை ஹீரோவின் அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அப்புறமென்ன? அந்த இயக்குநர் வேறு ஒரு ஹீரோவிடம் இப்போது அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

சில ஹீரோக்கள் அறிமுக இயக்குநர்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைத்து வைத்து செய்வார்கள். ஆனால், ஹிட் கொடுத்த இயக்குநர்கள் பலரும் எந்த ஹீரோக்களிடமும் ரெண்டு மணி நேரம் கதையெல்லாம் சொல்வதில்லை. ஸ்கூலில் எக்ஸாமுக்கு பிட் கொண்டு போகும் பேப்பர் போல, ‘இப்படி இப்படி இருக்கு... இப்படி இப்படி போகுது’ ரேஞ்சில் சில ஹின்ட்ஸ் மட்டும் சொல்வார்கள்.

ஷங்கர், முருகதாஸ் ரக இயக்குநர்கள் என்றால் ஒன்லைன் கூட கேட்காமல் கமிட் ஆவார்கள். அவர்களிடம் ஹீரோக்களின் பாட்சா பலிக்காது...’’ என்கிறார் அந்த இயக்குநர். ‘ஹீரோக்கள் கதை கேட்கும் விஷயத்தில் இவ்வளவு பிராசஸ் இருந்தும் படங்கள் சொதப்பி விடுவது ஏன்...’ என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம்தான் அதற்கான பதிலும் இருக்கிறது என்கிறது கோலிவுட்.  

மை.பாரதிராஜா