முகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை!கோட்டோவியங்களை கோடிக்கணக்கானோரிடம் கொண்டு சேர்த்தவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. பத்திரிகை உலகில் கணிப்பொறி வரைகலையிலும், அனிமேஷனிலும் முன்னோடியாக புன்னகைப்பவர். இப்போதும் விருதுகளைக்குவிக்கும் மருது, கோலிவுட்டிலும் சிறகடிப்பவர். இயக்குநர்கள் மகேந்திரன், இராமநாராயணன், நாசர், என்.கே.விஸ்வநாதன் என பலரின் படங்களில் கலை இயக்குநராகவும், விஎஃப்எக்ஸ் இயக்குநராகவும் பணியாற்றியவர் இவர்.

‘‘சென்னையில் ஸ்டூடியோக்கள் ஆரம்பித்த காலங்களில் இங்கே வேலை வாய்ப்பு அதிகரிச்சது. காஸ்ட்யூம் டிசைனர், கேமராமேன்னு டெக்னீஷியன்கள் நிறையப் பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தாங்க. அவங்களோடு சேர்ந்து மராட்டிய சினிமாவும் இங்க வந்திடுச்சு. அப்ப அது தமிழ் பேசிச்சே ஒழிய, நம்ம வரலாறைப் பேசல. பழைய படங்கள்ல சோல்ஜர்ஸ் பைஜாமா போட்டுட்டு இருப்பாங்க. நம்ம ஊர் வழக்கப்படி அப்படி எந்த சிப்பாயும் இருக்க மாட்டான்.

தமிழ் எழுத்தாளர்கள் கதை இலாகாவில் இருப்பாங்க. அவங்களுக்கு ‘அவ்வையார்’ மாதிரி நம்மளோட கதைகள் தெரியும். ஆனா, டெக்னாலஜி தெரியாது. அந்த டெக்னீஷியன்களுக்கு இங்குள்ள நம்ம பண்பாடு கலாசார, பக்திக் கதைகள் தெரியாது. ‘திருவிளையாடல்’ எடுத்தாலும் அதுல ஒரு ராஜா சிம்மாசனத்துல உட்கார்ந்திருப்பார். மந்திரிகள் கீழே வரிசையா உட்கார்ந்திருப்பாங்க. இதெல்லாம் வடநாட்டு தாக்கம்தான்.
சினிமாவின் சக்தியை முதன்முதலில் முழுசா புரிஞ்சவங்க ஃபிலிம் எடிட்டர்ஸ்தான். ‘அவர் திரும்பினதும்’ பத்து செகண்ட்ல அதை கட் பண்ணணும். வாசல் பக்கம் வந்ததும், ஒரு க்ளோஸ் அப் ஷாட் கட் பண்ணணும்னு விஷுவலா கொண்டு வந்தாங்க.

தென்னிந்திய சினிமாவில் முதலில் பாப்புலரான இயக்குநர்கள் பலரும் எடிட்டர் கம் டைர்க்டர்ஸ்தான். அப்புறம் எல்லா சினிமாவையும் புரிஞ்சுக்கிட்டு படம் எடுக்க வந்தவர்னு தரைச் சொல்ல முடியும். ராஜா சாண்டோ, மதுரம், என்.எஸ்.கே. எல்லாம் இங்கிருந்து மும்பைக்கே போய் நடிச்சிட்டு வந்திருக்காங்க.

இதெல்லாம் சொல்றதுக்கு காரணம் இருக்கு. 150 வருஷ சினிமா வரலாற்றை எங்க கல்லூரி லைப்ரரியில் படிச்சிருக்கேன். பழைய சினிமா, மேற்கத்திய சினிமா, புது சினிமானு... எல்லாம் பார்த்ததுனால அதெல்லாம் நம்ம வரலாறு கிடையாதேனு தோணுச்சு. ஏதோ ஒரு இமேஜ் தப்பா இருக்கேனு உணர்ந்தேன். இதுக்கெல்லாம் ஒரு பெரிய வடிகாலா ‘தேவதை’ வந்துச்சு...’’ மடமடவென பேசும் மருது, இன்னும் வியக்க வைக்கிறார்.

‘‘வார்த்தைகள் இல்லாமல் இமேஜ் மூலமாக கம்யூனிகேட் பண்ற சித்திரக்கதைகள் மேல எனக்கு எப்பவும் ஈர்ப்பு உண்டு. காமிக் புக்ல ஆர்வம்
இருந்ததனால எல்லோருக்கும் முன்னாடி கம்ப்யூட்டரை தேடிப் போனேன்.

என்னைப் போன்ற கலைஞர்களாலதான் - ஹாலிவுட்டையும் சேர்த்து சொல்றேன் - அனிமேஷனுக்கான மென்பொருட்கள் எழுதப்பட்டன. ஓவியத்தை லேயர் லேயரா வரைஞ்சா அதுதான் அனிமேஷன். அதை சினிமா படமாக்கி பார்க்க விரும்பினதாலதான் ‘ஸ்டார் வார்ஸ்’ மாதிரி படங்கள் வர ஆரம்பிச்சது.

ஓவியத்திலிருந்துதான் புகைப்படக்கலை வளர்ந்தது. அதுலயிருந்து அனிமேஷன் வளர்ந்தது. இப்ப இது எல்லாத்தையும் கம்ப்யூட்டர் ஒன்றிணைச்சிடுச்சு.
என்னோட சின்ன வயசிலிருந்தே எனக்கு சினிமாக்கலை சார்ந்த விருப்பம் இருந்துச்சு. எங்க தாத்தா எம்.எஸ்.சோலைமலை சினிமாக்காரர். ‘பாகப் பிரிவினை’, ‘பதிபக்தி’, ‘பாவ மன்னிப்பு’னு பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்திருக்கார்.

அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு. அப்பவும் தாத்தாவுடன் இருந்து சினிமா தயாரிப்பு வேலைகளைப் பார்த்திருக்கேன். அதிலிருந்து ஏற்பட்ட ஆர்வத்தாலதான் ஓவியரானேன். அப்புறம் இயங்குபடஅனிமேஷன் மற்றும் கலை இயக்குநராகவும் ஆனேன். ‘தேவதை’, ‘சாசனம்’, ‘சரியான ஜோடி’, ‘முகம்’, ‘அசுரன்’, ‘ராஜகாளியம்மன்’, ‘பாளையத்தம்மன்’னு நாற்பது படங்கள்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கேன். அதில் தெலுங்குப்
படங்களும் சேரும்...’’ முகம் மலரும் மருது, கலை இயக்குநர் அனுபவத்திற்குள் வந்தார்.

‘‘நாசரின் ‘அவதாரம்’ படத்துக்கு கலை நான் பண்றதா இருந்துச்சு. எனக்கு வேற சில வேலைகள் இருந்ததால, என் நண்பரை சிபாரிசு செய்தேன். ஆனாலும் சில போர்ஷன்கள் மட்டும் ஒர்க் பண்ணிக் கொடுத்தேன். அதோட கேமராமேன் தர், ‘அவளுக்கென்று ஒரு மனம்’னு ஒரு டிவி சீரியல் பண்ணினார். அதுல கிடைச்ச பணத்துல ‘பொய் முகம்’னு ஒரு படம் பண்ணினார். நாசர் அதுல சீரியல் கில்லர். அதுல நான் ஒர்க் பண்ணும்போதுதான், ‘ஃபேன்டஸி ஃபிலிம்’ பண்றது பத்தி பேச்சு வந்தது.

‘தேவதை’ பண்றதுக்கு நாசர் ரெடியானார். அந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல், முதன் முதலா ஸ்டோரி போர்டு பண்ணினோம். காஸ்ட்யூம்களை கோடம்பாக்கத்தில் இருந்து வாடகைக்கு எடுக்காமல் பார்த்துப் பார்த்து வடிவமைச்சோம். ‘தேவதை’யோட க்ளைமேக்ஸ் டைம்ல டிஜிட்டல் பாசிபிளிட்டீஸும் வந்திடுச்சு. பொம்மலாட்டம் சீன்ஸை அப்ப ப்ளூமேட்ல ஷூட் பண்ணினது புது விஷயம்.

முதன் முதல் அந்தப் படத்துக்காக ஒரு ஸ்கிராப் புக் ரெடி பண்ணினோம். (இன்னமும் நாசர் அதை பத்திரமாக வைத்திருக்கிறார்). அதோட இசை
வெளியீட்டு விழா நிகழ்வில் கூட அந்தப் படத்துல பயன்படுத்தப்பட்ட அத்தனை விஷயத்தையும் எக்ஸிபிஷனா வச்சிருந்தோம்.
‘தேவதை’ பார்த்துட்டு மம்மூட்டியே ‘தமிழ் சினிமா எங்கோ போயிடுச்சு’னு பாராட்டினதா அப்போ கேள்விப்பட்டேன். அதுக்கு முன்னாடியே ஆர்.கே.செல்வமணி படத்துக்கு (  ‘அசுரன்’) எஃபெக்ட்ஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன். அவரோட ஒரு படத்தின் க்ளைமேக்ஸுக்கு மினியேச்சர் சீக்குவென்ஸ் செய்தேன். வேலுபிரபாகரனின் ‘சரியான ஜோடி’க்கு அனிமேஷன் பண்ணினேன்.

அதோட ஷூட் பிரசாத் லேப்பில் போனப்ப அங்கிருந்த மும்பை டெக்னீஷியன்ஸ் அத்தனை பேரும் வியந்து பார்த்தாங்க. விஜயகாந்தின் ‘அலெக்சாண்டர்’ ஒர்க் பண்ற டைம்ல ‘3டி’ டெக்னாலஜியை கத்துக்கிட்டிருந்தேன். மகேந்திரனோட ‘சாசனம்’ ஒர்க் பண்ணியிருக்கேன். இயக்குநர் ராமநாராயணனின் பதினாறு படங்களுக்கும் எஃபெக்ட்ஸ் பண்ணிக் குடுத்திருக்கேன்!

அப்பவெல்லாம் எஃபெக்ட் ஸ்னா... ஊருக்கு நடுவுல உள்ள கோயிலை குண்டு வச்சு தகர்க்கிறது, மெயின்ரோட்டுல குண்டு வெடிக்கிறது மாதிரியான சீன்ஸ்தான் அதிகம் வரும். அப்படி சீன்ஸ் நிஜத்துல எடுக்க முடியாது. ஸோ, எஃபெக்ட்ஸ்தான் கைகொடுத்திருக்கு. அப்ப ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஒரு எஃபெக்ட் ஸ்பாட் கூட வச்சிருந்தேன். இங்க ஒர்க் பண்ணிட்டு அங்க போய் ஷூட் எடுத்துட்டு வந்திருக்கேன். கேமராமேன் வின்சென்ட் ஒருமுறை என்னை கட்டியணைச்சு பாராட்டியிருக்கார்.

சின்ன வயசுல இருந்தே காமிக் புக், போட்டோகிராஃபி, அனிமேஷன் ஃபிலிம்னு ஒண்ணோட ஒண்ணு கனெக்ட் ஆகிட்டே இருந்ததாலதான், ஓவியத்துறைல என்னால வரமுடிஞ்சது. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா, ராமநாராயணனின் படங்கள்ல அதிகம் வேலை பாத்துருக்கேன். ‘வில்லனை கதாநாயகியா மாத்தணுமா? கதாநாயகியை பாம்பா, குரங்கா மாத்தணுமா?’னு அவர்கிட்ட கேட்பேன்! அவரும் சீனை சொல்லிடுவார்.

ஏன்னா, அதுல எஃபெக்ட்ஸ்தான் என் வேலை. என்னை அவர் ரொம்பவும் என்கரேஜ் பண்ணுவார். ஒர்க்கை அவ்ளோ ரசிப்பார். சில நேரங்கள்ல அவர் சில ஹாலிவுட் படங்களை ரெஃபரன்ஸ் காட்டுவார். ‘அதெல்லாம் வேணாம் சார். நம்ம ஊர் அய்யனார் சிலை எழுந்து வந்து, வில்லனைப்
போட்டுத்தள்ளுறார்னு எழுதுங்க. அதை பண்ணித்தர்றேன்’னு விளையாட்டா சொல்வேன்.

அவர் அதை சீரியஸா எடுத்து, அடுத்த படத்துல பண்ணிடுவார். மொத்த படமும் 35 நாட்கள்ல அவர் எடுத்து முடிச்சிடுவார். அதே டைம்ல பேரலல்லா எஃபெக்ட்ஸையும் ஷூட் பண்ணிப் போயிட்டே இருப்பேன். ‘ராஜகாளியம்மன்’ ஒர்க்கை பார்த்து வியந்த ரம்யா கிருஷ்ணன், ‘எங்க ஒர்க்கை இவ்ளோ ஈஸியாக்கிட்டீங்களே சார்’னு ஆச்சரியமாகி டோலிவுட்ல என்னை புகழ்ந்து சொல்லியிருக்காங்க.

அதைப்போல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான என்.கே.விஸ்வநாதன் சார் இல்லாமல் போனது பெரிய வருத்தம். அவர் இன்கேமரா எடுக்கறதுல எக்ஸ்பர்ட். டபுள் ஆக்‌ஷன் ஷூட் பண்றதுல கில்லி. என்னோட ஒர்க்கை ஆச்சரியமா பார்த்து, உற்சாகப்படுத்திக்கிட்டே இருப்பார்.

எஃபெக்ட்ஸ் ஒர்க் பண்ணும் போது, அது படத்தோட அசிஸ் டென்ட்களுக்கு புரியாது. அப்ப என்.கே.வி. சொல்லுவார். ‘மருது மந்திரத்துக்குள்ள வேற ஒரு மந்திரம் பண்றார். உங்களுக்கு படம் பார்க்கும்போதுதான் புரியும்’பார்.இப்ப சினிமா மாறியிருக்கு. கேமரா, ஆர்ட் டைரக்‌ஷன், காஸ்ட்யூம் எல்லாமே இன்டர்நெட் சோர்ஸ்ல இருந்து எடுத்துக்குடுக்கறதாகிடுச்சு.

ஒரு படம் எடுத்தா அதுல உள்ள வாழ்க்கை முறை, அவங்க உடைகள், அமைப்பு, பேக்ட்ராப்னு ஒவ்வொண்ணும் கனெக்ட் ஆகாம இருக்கு... மிகையிலும் மிகைச்சித்திரமா இருக்கு. இப்பவும் நான் அப்டேட்டடா இருக்கேன். சமீபத்துல வந்த படங்கள்ல ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ படங்கள் பிடிச்சிருக்கு. புரொடக்‌ஷன் டிசைனிங் பிராசஸ்ல ஒர்க் பண்ற இன்ட்ரஸ்ட் இருக்கு. எனக்கு தீனி போடுறது மாதிரி படங்கள் அமையும்போது அதில் நானுமிருப்பேன்...’’ புன்னகைக்கிறார் மருது.                   

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்