சென்னையைக் கலக்கும் Walk for Plastic!தனி ஆளாக ஆரம்பித்து 800 தன்னார்வலர்கள் வரை...

‘‘நம்ம மக்களுக்கு இன்னும் சுத்தம்னா என்னனு புரியலை. துப்புரவுப் பணியாளர்கள் தினம் தினம் அவங்க வேலையை சிரமத்தோட செய்றாங்க. ஆனா, மக்கள் அவ்வளவு அலட்சியமா குப்பையைக் கீழே போட்டுக்கிட்டேதான் இருக்காங்க. வீட்டுல அதுமாதிரி செய்வாங்களா… அதென்ன ேராட்டுல மட்டும் செய்றது? இந்தக் கேள்விதான் எனக்குள்ள பூதாகரமா எழுந்துச்சு...’’ அழுத்தம் திருத்தமாகப் பேசும் கௌதம் ஒரு எஞ்சினியரிங் பட்டதாரி.

கடந்த வாரம் சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கீழே போடாதீர்கள் என்பதை வலியுறுத்தி ‘வாக் ஃபார் பிளாஸ்டிக்’ என இருபத்தைந்து கி.மீ தூரம் ஒரு நடைபயணத்தைத் தனது நட்புகளுடன் இணைந்து வெற்றிகரமாக முடித்துள்ளார் இந்த இளைஞர்.மட்டுமல்ல.

அந்தப் பயணத்தின் வழியில் சுமார் 90 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்துள்ளது இவரின் குழு!   ‘‘இந்த நடைபயணத்தை 144 நாட்களா செய்திட்டு வர்றோம். எல்லாமே அந்தந்த ஏரியாக்கள்ல நடந்துச்சு. இப்ப 145வது நாளையொட்டி வில்லிவாக்கத்துல தொடங்கி பெசன்ட் நகர் வரைக்கும் ஒரு பெரிய நடையா செய்திருக்கோம். அவ்வளவுதான்...’’ என்றவரிடம், எதற்காக இப்படியொரு நடை?’’ என்றோம்.

‘‘பிளாஸ்டிக் மாசு… தீங்குனு நம்ம எல்லோருக்குமே தெரியும். அரசும் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிச்சிருக்கு. ஆனா, இந்த மாசு ஏற்படக் காரணம் அதைக் கீழ வீசறதுதான். ஏற்கனவே, அரசு மக்கும் குப்பை, மக்காத குப்பைனு ஒரு திட்டத்தைச் செயல்படுத்திட்டு இருக்கு. ஆனாலும், மக்கள் இன்னும் மாறல. பிளாஸ்டிக்கை தூக்கிப் போட்டுட்டுதான் இருக்காங்க. அதிலும் குறிப்பா தண்ணீர் பாட்டில்கள்.
இதுக்காக ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. உடனே, வாக் ஃபார் பிளாஸ்டிக் பயணத்தைத் தொடங்கினேன்...’’ என உற்சாகமாகப் பேசும் கௌதம் சுவர் ஓவியராகப் பணிசெய்கிறார்.

‘‘எனக்குச் சொந்த ஊர் சென்னை வில்லிவாக்கம். என்னோட கனவே ஓவியர் ஆகணும்ங்கிறது. அதனால, வீட்டுக்காக எஞ்சினியரிங் படிச்சிட்டு பிறகு கனவை நோக்கி வந்திட்டேன். இப்ப பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சுவர் ஓவியம் செய்து கொடுக்கறேன். இதுக்கிடையே சமூகம் சார்ந்து சில வேலைகளையும் செய்றேன். இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வைக் கூட இதுக்கு முன்னாடியே செய்திருக்கேன். குறிப்பா, நாம் அலட்சியமா தூக்கி எறிந்த 40 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடியைக் கொண்டு திமிங்கலம் செய்தேன்.

இப்படி இருந்தப்பதான் இந்தப் பயணத்தை கடந்த ஜூன் 1 ம் தேதி தொடங்கினேன். ஆரம்பத்துல நான் மட்டும் தனியா நடந்தேன். வில்லிவாக்கத்துல இருந்து பாடி வரை சுமார் நாலு கி.மீ தூரம் போயிட்டு வருவேன். வழியில பார்க்கிற தண்ணீர் பாட்டில், பெட் பாட்டில், ஆட்டோமொபைல் பாகங்கள், ஆயில் கேன், உணவு பேக்கேஜ் பிளாஸ்டிக்ஸ்னு மறுசுழற்சி செய்யக் கூடிய குப்பைகளை மட்டும் சேகரிச்சு பையில போடுவேன். சில நேரங்கள்ல ரெண்டு கிமீ போறதுக்குள்ளே நான்கு கிலோ சேர்ந்திடும். அதுக்குமேல தூக்க முடியாது. அதனால, வீட்டுக்கு வந்திடுவேன்.

பிறகு, இதையெல்லாம் சமூக வலைத்தளங்கள்ல பதிவேற்றுவேன். இப்படியே பதினைஞ்சு நாட்கள் போச்சு. இதைப் பார்த்திட்டு சில நட்புகள் இணைஞ்சாங்க.இதற்கிடையே வீட்டுல பெரிய பிரச்னையாகிடுச்சு. ஏற்கனவே, சுவர் ஓவியரா இருக்குறது அவங்களுக்குப் பிடிக்கல. காரணம், என்னோட எதிர்காலம் பத்தின பயம். அதனால, ‘ஏன்டா இப்படி குப்பை பொறுக்கிக்கிட்டு திரியிற’னு வருத்தப்பட்டாங்க.

ஆனா, 13ம் நாள்ல நான் செய்ற இந்த விஷயங்களைப் பத்தி ஆங்கில நாளிதழ்ல ஒரு கட்டுரை வந்துச்சு. அப்ப உறவுக்காரங்க, தெரிஞ்சவங்க எல்லாம் வீட்டுக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. பிறகுதான் அப்பாவும் அம்மாவும் சமாதானம் ஆனாங்க.  பிறகு, ஒவ்வொரு ஏரியாவா போய் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிச்சோம். 25ம் நாள் வேளச்சேரியில என்கூட பதினாறு பேர் சேர்ந்தாங்க.

அதே 38ம் நாள் வடபழனி பகுதியில 45 கிலோ கிடைச்சது. நூறாவது நாள் நடைபயணத்துல 360 தன்னார்வலர்கள் கலந்துக்கிட்டாங்க. அண்ணாநகர், முகப்பேர், கூடுவாஞ்சேரி, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, அடையாறுனு வட்டம் பெரிசாச்சு. அன்றிலிருந்து இப்ப வரை 800 தன்னார்வலர்கள் வந்து போயிருக்காங்க. இதுல சில தொலைக்காட்சி விஐபிக்களும் அடக்கம்.

இந்த ‘வாக் ஃபார் பிளாஸ்டிக்’சென்னையில மட்டுமல்ல. பெங்களூர், புனேனு மற்ற மாநிலங்களையும், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், அரபு நாடுகள்னு என் நண்பர்கள் இருக்கிற இடங்கள்லயும் ஆரம்பிக்கப்பட்டு இன்னைக்கு சிறப்பா நடந்திட்டு இருக்கு. இங்க பயணம் 25னு நடந்த மாதிரி பெங்களூர்ல யாத்ரா 27னு நடந்துச்சு. அங்க 27 கி.மீ தூரம் நடந்து பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளியிருக்காங்க...’’ என்கிறார் சந்தோஷமாக!

‘‘இதுவரை நாங்க 27 ஆயிரம் சதுர அடி நிலத்தைப் பாதுகாத்திருக்கோம்னு சொல்லணும். அதாவது, நாங்க எடுத்திருக்கிற பிளாஸ்டிக் குப்பைகளை அடுக்கி வைத்தால் அவ்வளவு சதுர அடி நிலம் பிடிக்கும்!அப்புறம், எங்க வேலையே பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கறது மட்டும்தான். யாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துறதில்ல. ஏன்னா, இங்க யாரையும் மாத்த முடியாது. கீழ போடுறவங்ககிட்ட சண்டையும் போடமுடியாது. நம்ம நேரம்தான் வேஸ்ட்டாகும். சில நேரங்கள்ல கார்ல இருந்து வர்றவங்க பிளாஸ்டிக்கை கீழ போடுறதைப் பார்த்து இனி போடாதீங்கனு சொல்லிருக்கோம். அவ்வளவுதான்.

இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய விரும்புறேன். நம்ம எல்லோரும் வடசென்னைன்னா அசுத்தமான ஏரியானு நினைக்கிறோம். ஆனா, பிளாஸ்டிக் கழிவுகள் ரொம்ப ரொம்ப குறைவா இருக்கிற இடம் அதுதான்.அங்க அரைக்கிலோ பிளாஸ்டிக் கூட உங்களுக்குக் கிடைக்காது.

அந்தளவுக்கு பிளாஸ்டிக்கை கீழ போடாமல் விழிப்புணர்வா வடசென்னை மக்கள் இருக்காங்க. படிச்சவங்க, பணக்காரங்ககிட்டதான் இந்த விழிப்புணர்வு குறைவா இருக்கு. அவங்கதான் மாறணும்...’’ என்றவரிடம், ‘‘சரி, சேகரிக்கிற இந்த பிளாஸ்டிக்கை எல்லாம் என்ன செய்கிறீர்கள்?’’ என்றோம்.

‘‘எல்லாத்தையுமே பேப்பர் மார்ட்ல போடுறோம். இதன்மூலம் இதுவரை 27 ஆயிரம் ரூபாய் வரை கிடைச்சிருக்கு. இதையெல்லாம் நல்ல வழியில செலவழிக்கலாம்னு இருக்கோம். முதல்ல, இந்த மாதிரி குப்பை பொறுக்கி வாழ்ற குடும்பங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்னு நினைச்சோம். ஆனா, அதுல சில பிரச்னைகள் இருக்கு. அதனால, அரசுப் பள்ளிகளுக்கு எங்களால முடிஞ்சதை செய்வோம். அல்லது மாநகராட்சி சுகாதாரக் குழுவின் வழியா ஏதாவது பண்ணுவோம்...’’ என்கிறார் கெளதம்!

பேராச்சி கண்ணன்