ஸ்போர்ட்ஸ் சினிமாஸ்!



‘‘சமூக மாற்றங்களை, புத்துயிர்ப்பை சினிமா உருவாக்குமா எனத் தெரியாது. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு சினிமா ஒரு வாகனமாக இருந்து செயலாற்றும் என்பது மட்டும் உண்மை.

மனிதனும் சமூக விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இதோ இங்கே எவ்வளவோ விஷயங்கள் சினிமாவில் எடுத்துரைக்கப்படவில்லை. பெண்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. அதைச் சொல்லும் திரைப்படங்கள் வரவில்லை. இவ்வளவு பெரிய நாட்டில் ஒலிம்பிக்கில் நாம் பெறும் இடங்கள் இன்னும் நமக்குக் கனவு. இன்னும் விளையாட்டுக் கலையின் இடங்கள், சிறப்புகள் சினிமாவில் சித்தரிக்கப்படவில்லை.

சினிமா இப்படி வாழ்க்கையின் ஊடாக பிரவேசித்து உணர்ச்சிகளையோ அல்லது அறிவையோ ஊட்டலாம்...’’ என்றார் நம் பெருமைக்குரிய தலைமகன் சத்யஜித் ரே. அவருக்கே ஒரு ஸ்போர்ட்ஸ் படம் செய்ய வேண்டும் என்கிற பெரு விருப்பம் இருந்திருக்கிறது! ஆனால், இப்போதுதான் அதற்கான விடியல் நடந்திருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு அமீர்கான் தன் கதாநாயகத் தன்மையை மீறிக்கொண்டு வந்த ‘லகான்‘ இதற்கான முதல் விதை. பிறகு, ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இதற்கான ஆரம்ப கட்டங்கள் தெளிவான வடிவத்துடன் வந்தன. ‘வெண்ணிலா கபடிக்குழு’ என்ற சிறிய படம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. தொடர்ந்து ‘ஜீவா’ திரைப்படம் கிரிக்கெட்டில் சமூகத்தின் ஒரு சாரார் முன்னுரிமை பெறுவதையும், தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் சாதுர்யமாகச் சொன்னது. பிறகும், இந்தியில் அமீர்கான் மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து ‘தங்கல்’ எடுத்தார். இத்தகைய வேளையில் நடிகர் விஜய் பெண்களுக்கான கால்பந்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் செய்து கொடுக்க முன்வந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஏற்கனவே ஸ்போர்ட்ஸ் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும், அந்தப் பணியை சிரமேற்கொண்டு நிரூபித்தவர்களிடம் இதுபற்றி பேசினோம்.
ஆரம்பகட்டத்தில் இதற்கான முன்முயற்சி எடுத்தவர் இயக்குநர் சுசீந்திரன்: ‘‘நான் உதவி இயக்குநராக இருக்கும்போது ‘லகான்’ பார்க்க நேர்ந்தது. அந்தப் படம்தான் என் முதல் படத்திற்கான கருவைத் தந்தது.  

எனது அப்பா கபடி விளையாட்டு வீரர். நான் தூங்கி எழுவதற்கு முன் இரண்டு நாள் துணியை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச்
சுற்றி கபடி ஆடுவார். அவர் விளையாட்டின் சுவாரஸ்யத்தை வீட்டிற்கு வந்து கூறும்போது சின்ன வயதில் அவை பதிந்துவிட்டன. ஆனால், அது ஒரு திரைக்கதைக்கான விஷயம் என்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது. அந்த விளையாட்டை மட்டுமே வைத்து எடுத்தால் எல்லோருக்கும் போய்ச் சேராது. எனவே, அதில் எனது காதல் அனுபவத்தையும் சேர்த்தேன்.

ஸ்போர்ட்ஸ் பிலிம் எடுப்பது சாதாரணமானதில்லை. மும்மடங்கு உழைப்பு தேவைப்படும். அதனாலேயே நிறைய பேர் ஸ்போர்ட்ஸ் பிலிம் எடுக்க பயப்படுகிறார்கள். ‘வெண்ணிலா கபடிக் குழு’வை எடுக்கும்போது முழுக் குழுவிற்கும், கபடி பயிற்சியாளரை வைத்து பயிற்சி கொடுத்தேன். அவர்களின் பாவனையில் விளையாட்டு வீரருக்கான ஸ்டைலைக் கொண்டு வந்தேன். அது சாதாரண விஷயமில்லை. அதனால், கடைசியில் பார்க்கும்போது எல்லோரும் கபடி விளையாட்டில் ஒன்ற முடிந்தது.

கபடி விளையாட்டின் இறுதிக்கணங்களில் நெஞ்சடைத்தது மாதிரி படத்தைப் பார்த்தவர்களை நான் பார்த்தேன். என் உழைப்பிற்கான இடம் அதுதான். ‘கென்னடி கிளப்’பும் அவ்விதம்தான். 14 நிமிஷம் இறுதி கிளைமேக்ஸ் விளையாட்டுக் காட்சிக்கு ஏழு மணி நேர ஃபுட்டேஜ் எடுக்க வேண்டியிருந்தது. அத்தனை நேர புட்டேஜிலிருந்து 14 நிமிஷக் காட்சியைப் பிரித்தெடுக்க வேண்டியதில் இருக்கிற சிரமத்தை நினைத்துப்பாருங்கள்.

நடிகர்கள் படும் பாடும் இதில் முக்கியமானது. வேறு வேறு கோணங்களில் பல்வேறு ஷாட்கள் எடுக்க வேண்டியிருப்பதால் அவர்கள் களைப்படைந்து விடுவார்கள். இனியும் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் பிலிம் எடுப்பார்கள் என எனக்குத் தோன்றவில்லை. இது ஒரு சீசன். இதற்கான சிரமங்களைக் கருத்தில் கொண்டே இதைச் சொல்கிறேன்.

தொடர்ந்து இந்த விளையாட்டை யாராவது முன்னெடுத்துச் சென்றால் எனக்கு சந்தோஷமே. ஆனால், ‘வெண்ணிலா கபடிக்குழு’ வெளிவந்தபோது அது மூன்று மொழிகளில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தெலுங்கு நடிகர் நானி தெலுங்கு ரீமேக்கில் பெரிய நிலைக்கு வந்தார். அத்தனை பேரும் பாராட்டிய ‘வெண்ணிலா கபடிக்குழு’விற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.

அது எனக்குத் தீராத வருத்தம்தான்...’’ என்கிறார் சுசீந்திரன்.‘கனா‘வை இயக்கி வெற்றியை அணுகிய அருண்ராஜா காமராஜ், தனக்கு இயல்பாகவே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு என்கிறார். ‘‘பெண்களின் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்தால், அது இந்தியாவில் முதல் படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், கிரிக்கெட்டை தெரியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதால், பெண்களின் முன்னேற்றம், அப்பா - மகளின் பிரியம், மகளின் முன்னேற்றத்திற்காக முன்நிற்கும் குடும்பம் என இணைத்து செய்தேன். பலன் கிடைத்தது.

விளையாட்டு என்பது நம் எல்லோரிடமும் ஊறியிருக்கிறது. படிக்கும்போதும் முதல் மார்க் எடுக்கப் படிப்பது என்பது கூட ஒருவிதத்தில் விளையாட்டுதான். வாழ்க்கையை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள் என்பார்கள். அதன் அர்த்தமே நம்பிக்கைதான். இன்று இல்லாவிட்டாலும் நாளை அதன் இலக்கை அடைந்துவிடலாம் என்பதுதான். ஆனால், இங்கே ஸ்போர்ட்ஸ் பிலிம் எடுப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. முன்கூட்டிய பயிற்சிகளும் அதற்கான காலஅவகாசமும் வேண்டும். அத்துடன் செலவும் பிடிக்கும்...’’ என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் ஸ்போர்ட்ஸ் படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்: ‘‘பொழுதுபோக்குப் படங்கள் வரும்போது, நடுநடுவே இப்படியான படங்களும் வருவது அவசியம். இளைஞர்கள் கவனம் ஸ்போர்ட்ஸ் பக்கம் திரும்புவதும் கூட நல்லதுதான். இந்தப்படங்களை எடுக்கும் கலைஞர்களுக்கு மதிப்பளித்து அரசு சிறப்பு விருதுகள் தரலாம். மத்திய அரசும் இதை கவனத்தில் வைக்கலாம். ஒன்றிரண்டு இயக்குநர்களே இதில் ஆர்வம் கொண்டு இயங்குகிறார்கள்.

இது பெருகவேண்டும். காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடிப் படங்கள் இருக்கிற மாதிரி ஸ்போர்ட்ஸ் ஜானரும் இருப்பது நல்லது...’’ என்கிறார் தனஞ்செயன்.ஸ்போர்ட்ஸ் படங்களின் தேவைகள் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் அகன்ற வானத்தைப்போல் நீண்டு தொடர வேண்டும்.
 

நா.கதிர்வேலன்