இனி சமையலறை எதற்கு?!



சமையல் செய்ய உங்கள் வீட்டில் ஓர் அறையை வீணடிக்கிறீர்களா?
இந்த வினாவைத்தான் இனி வரும் காலங்களில் வீடுகளை வடிவமைப்பவர்கள் கேட்கப் போகிறார்கள்!ஆம். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் வீட்டில் சமையலறையே இருக்காது!உடனே, அப்படியானால் யாரும் சாப்பிடவே மாட்டார்களா என்று கேட்காதீர்கள். சாப்பிடுவார்கள். ஆனால், வீட்டில் சமைத்துச் சாப்பிடமாட்டார்கள்!

அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் குடும்பத்தினர், தாங்கள் நடத்திய நிறுவனங்களில் ஒரு முக்கிய முடிவை 1980களில் எடுத்தார்கள். இனி எந்தத் துறையில் முதலீட்டை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற முதலீட்டாளர்களின் கேள்விக்கு ஆய்வு செய்து அவர்கள் கண்டறிந்த விடை, ‘உணவுத் துறை!’ இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ரெடிமேடாக விற்கும் உணவுகளைத்தான் அதிகம் வாங்குவார்கள். வேகமெடுக்கப் போகும் வாழ்க்கைக்கு ரெடிமேட் உணவுகளும், துரித உணவுகளை வழங்கும் கடைகளும்தான் எதிர்காலம்... என்பதை உணர்ந்து அதில் முதலீடுகளைக் குவிக்கத் தொடங்கினார்கள்.

இவர்களைப் பின்பற்றி வரிசையாக பலரும் ரெடிமேட் மற்றும் துரித உணவுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். 1980களில் அவர்கள் கணித்தது சரியாகிவிட்டது. இதன் ஒரு பகுதிதான் இனி எதிர்காலத்தில் வீட்டில் சமையல் செய்ய ஏன் ஓர் அறையை வீணடிக்க வேண்டும் என்ற கேள்வி!
நமக்கு என்ன வேண்டுமோ அந்த உணவு பதப்படுத்தப்பட்டு ‘ரெடிமேட்’ ஆக கடைகளில் கிடைக்கிறது.

அதை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம். தேவைப்படும்போது அதை சூடுபடுத்தி சாப்பிடலாம். சூடு படுத்தவும் கேஸ் தேவையில்லை. மின்சாரத்தில் இயங்கும் இண்டக்‌ஷன் ஸ்டவ் அல்லது Oven (அவன்) போதும்! சில மாதங்களுக்கு இந்த உணவு கெடவும் கெடாது!

வீட்டில் ஒரு பெரிய ‘ஃபிரிட்ஜ்’ வைக்க 6 X 3 அடிக்கு இடம்.... ஒரு ‘அவன்’ வைக்க 1 X 1 அடி இடம். போதாதா? இதற்காக ஓர் அறையையே வீணடிக்காமல் அதை படுக்கையறையாக மாற்றலாமே?! ஏன் வீட்டில் சமைக்க வேண்டும்?

இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறது... என்றெல்லாம் பேச நேரமில்லை. காலம் நம் கையிலோ நம் கட்டுப்பாட்டிலோ இல்லை!பசிக்கிறதா? உங்கள் ஸ்மார்ட்போனை எடுங்கள்.

விதவிதமாக உணவுகளை வழங்கும் apps உள்ளன, அவற்றில் ஒன்றில் ஆர்டர் செய்துகொள்ளுங்கள். எல்லோருமே தள்ளுபடியில்தான் இப்போது விற்கிறார்கள். இது போதாதா? ஏன் சமைக்க நேரத்தையும், இடத்தையும் வீணடிக்கிறீர்கள்?
இதெல்லாம் அமெரிக்க வாழ்க்கை முறை என்று நக்கலாக சிரித்தால், உங்களுக்கு தாமஸ் ஃப்ரீட்மேன் எழுதிய ‘உலகம் தட்டை’ (The World is Flat) என்னும் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை!

அந்த நூலில் அவர் வைக்கும் முதல் வாதமே மெல்ல உலகம் முழுக்க கலாசாரமும் உணவும் ஒரே மாதிரியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான்! இன்று உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றால் அது கோலா என்றாகிவிட்டது. எந்த நாட்டு கல்லூரிகளுக்குச் சென்றாலும் அங்கு மாணவர்கள் அருந்தும் குளிர்பானம் கோலாதான்.  

வேகமான வாழ்க்கை முறைக்கு நேரத்தை வீணடிக்கும் எதுவுமே தேவையில்லை! ஏற்கனவே நம் இரவுத் தூக்கத்தை தொலைக்காட்சியும், ஸ்மார்ட்போனும் திருடிவிட்ட நிலையில், காலையில் அரைத்தூக்கத்தில் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து இன்னும் சில மணித் துளிகளில் குளித்து கிளம்பத்தான் நேரம் இருக்கிறது. இந்நிலையில் எப்படி சமைக்க..?

இருக்கவே இருக்கிறது துரித உணவு. குளிக்கப் போகும் முன் அவனில் வைத்தால் போதும். குளித்துவிட்டு வந்ததும் சுடச் சுட சாப்பிடலாம். இதில் இன்னொரு விசேஷம், தமிழ் நாட்டு ஃபேமஸ் இட்லி, பொங்கல் முதல் ஆந்திர ஃபேமஸ் பெசரட்டு, கேரள ஃபேமஸ் புட்டு, இத்தாலியின் பீஸா, சைனீஸ் நூடுல்ஸ்... என சகலமும் இரண்டே நிமிடங்களில் தயாராகிவிடும் என்பதுதான்.

அவனில் சூடு செய்யும் நேரம் கூட குறைய வேண்டுமா..? ஆர்டர் செய்துவிட்டு அலுவலகம் கிளம்பினால்... ஆபீஸ் வாசலில் நமக்காக பிரேக் ஃபாஸ்ட் காத்திருக்கும்! இது கலிகாலம் என தலையில் அடித்துக் கொண்டாலும் சரி... சமைத்துச் சாப்பிடும் உணவின் மகத்துவத்தை வாட்ஸ் அப்பில் பரப்பினாலும் சரி... காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. உங்கள் வீட்டில் சமையலறை எதற்கு என்ற வினாவைத்தான் முகத்தில் அறைந்து கேட்டுக் கொண்டிருக்கிறது!  

வினோத் ஆறுமுகம்