ரத்த மகுடம்-78



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

அரச பரம்பரையினர் வேட்டையாடுவதற்காகக் காட்டு முகப்பில் கட்டிவைத்த அந்த வேட்டுவ மாளிகையின் மாடிஅறையிலே அந்தக் கட்டழகியைக் கண்ணெடுத்து ஆராய்ந்த கரிகாலனின் மனம் படாதபாடு பட ஆரம்பித்தது.அவள் ஒரு காலை எடுத்து கட்டிலின் மேல் ஊன்றி முழங்காலுக்குக் கீழும் கணுக்காலுக்கு மேலும் கட்டப்பட்டிருந்த மான் தோல் கச்சையை அவிழ்க்க குனிந்து நின்றிருந்ததால், அவள் உடல் வானவில்லைப் போல் வளைந்திருந்தது.

ஆனால், சிறு தூற்றல் ஏற்படும்போது சூரியக் கிரணங்களால் உதயமாகும் அந்த வானவில்லில் இத்தனை வர்ணஜாலங்கள் எங்கிருக்கின்றன என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் கரிகாலன். விடையேதும் கிடைக்கவில்லை!தான், உள்ளே வந்த சத்தம் கேட்டு திடீரெனத் திரும்பிப் பார்த்ததால் அவள் விழிகளில் தெரிந்த பிரகாசத்தில் ஓர் இம்மி கூட வானவில்லில் என்ன... இயற்கையின் எந்த சிருஷ்டியிலும் இருக்க முடியாது என கரிகாலன் நினைத்தான்.

கட்டிலின் மேல் வைத்த ஒற்றைக் காலை எடுக்காமலேயே அவள் அவனைப் பக்கவாட்டில் பார்த்தபடியாலும், அறையின் தூங்கா விளக்கு சற்று அவளைத் தள்ளியே தொங்கிக் கொண்டிருந்ததாலும் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்தின் ஒரு பாகத்தில் மட்டும் அடித்ததன் காரணமாக ஏதோ செடிகளில் மறைந்து ஒளிந்து விளையாடி ஒரு பாதி முகத்தைக் காட்டும் வனமோகினி போல் விளையாடினாள் அந்தக் கட்டழகி.

செண்பகப்பூவின் மஞ்சள் நிறத்தையே தோற்கடிக்கவல்ல அவளுடைய கன்னத்தைத் தடவிய விளக்கொளி கூட அந்தக் கன்னத்தின் மினுமினுப்புக்கு முன்னால் பளபளக்க மாட்டாமல் சற்று மங்கியே கிடந்ததாகத் தோன்றியது கரிகாலனுக்கு.கருமை பாய்ந்த இமைகளாலும், இமைகளுடன் இணைந்து நின்ற சின்னஞ்சிறு பட்டுச் சருமக் குழிகளாலும் பாதுகாக்கப்பட்ட அவளதுஇரு விசால விழிகளும் சிப்பியால் பாதுகாக்கப்பட்ட பாண்டி நாட்டின் பெரு முத்துக்களைப் போல் பளபளப்பதைக் கண்ட கரிகாலன், ‘முத்தினிடையே கரும்புள்ளி இருந்தால் குறைபாடு என்று சொல்வார்களே... அது என்ன முட்டாள்தனம்! அதோ அவள் இமைக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் இரண்டு பெரும் முத்துக்கள் எத்தனை அழகாக இருக்கின்றன!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

இப்படி ஒரு முறை பார்த்த பார்வையிலேயே அவள் கண்களால் பலவந்தமாக இழுக்கப்பட்ட கரிகாலனின் விழிகள், பெரிய சமுத்திரத்தில் விழுந்துவிட்ட துரும்புகள் போல் அவளுடைய சவுந்தர்ய சாகரத்தின் சுழல்களில் சிக்குண்டும் அலைகளால் தூக்கி எறியப்பட்டும் திணறின.
அவளது விசாலமான நெற்றியில் இட்டிருந்த திலகம் பயணக் களைப்பால் சிறிது அழிந்து கிடந்தாலும், அதிலும் ஒரு தனிச்சிறப்பு இருந்ததையும், அது அழிந்து சற்றுக் கீழே இறங்கியிருந்த வகையே முகத்துக்கு இணையற்ற கம்பீரத்தைக் கொடுக்க முற்பட்டதையும் கரிகாலன் கண்டான்.

அந்த நெற்றிக்கு மேலே அவள் எடுத்துக் கட்டியிருந்த கார்மேகக் குழல் தன்னை வளைத்து நின்ற கதம்ப மலர் சரத்தைப் பல இடங்களில் ஊடுருவி உதிரி உதிரியாகத் தொங்கிக் கொண்டிருந்ததால், சிவபிரானுடன் நாட்டியமாடிக் களைத்துவிட்ட சக்தியே இந்த உலகத்தில் வந்து குதித்துவிட்டாளோ என்ற பிரமையை ஏற்படுத்தியது.

வழவழப்பும் செழுமையும் நிரம்பிய அவள் கன்னங்களின் ஓரங்களைத் தொட்டவண்ணம், செண்பக மொட்டையும் பழிக்கும் நாசிக்கும் கீழே அமைந்திருந்த செவ்விய உதடுகள் இருக்கவேண்டிய அளவுக்கு மேல் கொஞ்சம் பெரியதாக இருந்தபடியாலும், அவற்றின் அசாத்தியச் சிவப்பை அவற்றிலிருந்த நீரோட்டம் இன்னும் அதிகமாகக் காட்டியபடியாலும் இரண்டு உதடுகளும் பிரமாத நீரோட்டமுள்ள கெம்புக் கற்களின் வரிசையைப் போல் பிரகாசிப்பதை கரிகாலன் கண்டான்.

உறுதியாக அழகாகக் கீழ்நோக்கி இறங்கிய கழுத்தில் அவள் அதிக நகைகளை அணியாமல் ஒரே ஒரு முத்து மாலையை மட்டுமே அணிந்திருந்தாள்.
அதைக் கண்ணுற்ற கரிகாலன், அவை செய்த பாக்கியத்தை,தான் என்று பெறப்போகிறோமோ என்ற நினைப்பின் காரணமாக ஒருமுறை பெருமூச்சு விட்டான்.வளைந்த அவள் உடலின் விலாப்புறத்தில் தெரிந்த அவளுடைய இடையின் உறுதியைக் கவனித்த கரிகாலன், எத்தனை பயிற்சிகளை அவள் மேற்கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டதோடு, அத்தனை திண்மையிலும் அந்த இடை மிகவும் குறுகிக் கிடந்ததைப் பார்த்து, நல்ல வேளை, இத்தனை போர்ப் பயிற்சியிலும் பெண்மை குன்றவில்லையே என மகிழ்ச்சி அடைந்தான்.

ஆனால், குறுகிப் போன இடையை இயற்கை வேறு இடங்களில் ஈடு செய்திருந்ததையும், இடையை அடுத்து இலங்கிய பிரதேசங்களில் அளவோ அழகோ இம்மியும் குறையாமல் எதேஷ்டமாக மண்டிக் கிடந்ததையும் கண்டவன், இயற்கையை விடச் சிறந்த வள்ளல் இருக்க முடியாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

இயற்கை செப்பனிடும் எதிலும் மர்மமும் புதைந்து கிடக்கிறது. வெளிப்படையாகச் சிலவற்றையும் மர்மமாகச் சிலவற்றையும்
தோற்றுவிக்கின்றன, இயற்கையின் காட்சிகள்.மேகத்தைச் சிருஷ்டிக்கும் இயற்கை அதன் கருமையைக் கண்ணுக்குக் காட்டுகிறதே தவிர அதில் கர்ப்பமாக இருக்கும் நீரைக் கண்ணுக்குத் தோற்றுவிப்பதில்லை.

உலகத்தின் சிருஷ்டி எதிலும் தெரிவது பாதி, தெரியாதது பாதி. தெரிந்ததை மட்டும் அறிந்து திருப்தி அடைகிறான் அறிவு குறைந்தவன்; ஆராய்ச்சியாளன் தெரியாததிலும் ஊகத்தைச் செலுத்த முயல்கிறான். அந்த ஊகத்திலும் ஆராய்ச்சியிலும் விளையும் இன்ப துன்பங்கள் ஏராளம்.
சில ஆராய்ச்சிகளில் துன்பமும் இன்பமாக இருக்கும்; இன்பமும் துன்பமாக இருக்கும்.

இணையற்ற இன்பத்தையும் வேதனையையும் கலந்து தருவது எழில் ஆராய்ச்சி. அதுவும் பெண்ணின் எழிலில் ஓர் ஆண்மகன் ஊகத்தைச்
செலுத்தும்போது, எத்தனை மனவேதனைகள்! எத்தனை இன்ப அலைமோதல்கள்! எத்தனை கொந்தளிப்புகள்! சொல்லுக்கே
அடங்காத மகா விசித்திரம் அது!

வேட்டையாடும் யானைகளின் துதிக்கையைப் பழிக்கும் அவள் தொடைகளுக்குக் கீழேயிருந்த முழங்காலையும், முழங்காலுக்குக்
கீழேயிருந்த ஆடு சதை அமைந்து இறங்கிய மாதிரியையும் கவனித்த கரிகாலன், இவற்றுக்கு எல்லாம் கவிகள் சொன்ன உவமை சரியா என்று கூட யோசித்தான்.யானைத் துதிக்கையின் கடினம் எங்கே? இவற்றின் வழவழப்பு எங்கே? கவிகள் எத்தனை பார்வைக் குறைபாடு கொண்டிருக்கிறார்கள் என்று கவிகளைக் கண்டிக்கவும் தொடங்கினான்.

இந்தக் கண்டிப்புடன் ஓடிய கரிகாலன் கண்கள், அவள் இடையில் வரிந்து கட்டப்பட்டிருந்த சேலையைக் கண்டன. மனமோ, ‘எதற்காக இவ்வளவு வரிந்து கட்டவேண்டும்? பூவைவிட மென்மையான இடை கன்றிப் போகாதா?’ என்று கோபத்தால் கொந்தளித்தன!

இப்படி எழிலை ரசிக்க அக்கக்காக அலசியதால் அவள் உணர்ச்சிகள் கணவேகத்தில் சுழன்றன. உயிர் அணுக்கள் ஊசி முனையில் நின்றன.
கால் கச்சையை அவிழ்க்க முயன்று அவனை நோக்கித் திரும்பிய அந்தப் பெண், அவன் கலக்கத்தை கணப்பொழுதில் கண்டு கொண்டாலும் அதைப்பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல் கால் கச்சைகளை நிதானமாகவே அவிழ்த்து முடித்தாள்.

தோளிலிருந்த புலிக்கச்சையையும் எடுத்துவிட்டு சேலையைப் பிரித்து உடலை மூடிக்கொண்டதால் முழுப் பெண் உருவம்
கரிகாலன் கண் எதிரே எழுந்தது.அவள் நிதானமாகத் தன் வேட்டுவக் கோலத்தைக் களைந்து அவனை நோக்கி புன்முறுவல் செய்துவிட்டு கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.அப்படி உட்கார்ந்து கொண்டவள், எதிரே ஓர் ஆண்மகன் நிற்கின்றானே என்ற நினைப்பு சிறிதும் இல்லாமலும், அவனை உட்காரக் கூடச் சொல்லாமலும் அமைதியாக இருந்தாள்.

கரிகாலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த வேட்டுவ மாளிகையையே மரத்தின் உச்சியில் மறைந்திருந்தபடி பல கணங்கள் ஆராய்ந்தான் அந்த கடிகை பாலகன். இல்லாத வேளிர்களின் தலைவனாக சில திங்களுக்கு முன் ரகசியமாக, தான் முடிசூடப்பட்டதை அப்போது நினைத்துக் கொண்டான். அதில் அவனுக்கு வருத்தமேதும் இல்லை. தமிழ் பேசும் நிலங்களின் பூர்வகுடிகள் தாங்களே... இன்று பிடி மண் கூட சொந்தமில்லாமல் இருக்கலாம்... ஓரடியை ஆட்சி செய்யக் கூட இயலாத நிலை இருக்கலாம்... ஆனால், காலம் மாறும்.

பல்லவர்கள் யார் என்ற சர்ச்சை சாளுக்கியர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் இது குறித்து எந்த அக்கறையையும் காட்டவில்லை. அவர்கள் எப்போதும் அப்படித்தான். அவர்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வரை தங்களை ஆள்பவர்கள் யார் என ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்கள். யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு விளைச்சலில் பங்கும் வரியும் செலுத்திவிட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள்.

இந்த மனநிலையை பல்லவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிராகிருதத்தை ஆட்சி மொழியாகக் கொண்டவர்கள் இப்பொழுது மெல்ல மெல்ல தமிழ் எங்கள் மூச்சு என அறிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கிறார்கள்! சொல்வதற்கில்லை... இதே நிலை நீடித்தால் நாளை ஏதேனும் ஒரு பல்லவ மன்னன், தானே கவிதையோ கலம்பகமோ இயற்றி வரலாற்றில் இடம் பிடித்துவிடுவான்!

இதைத் தடுத்தே ஆகவேண்டும்... உடனடி எதிரியான பல்லவர்களை வீழ்த்த தற்காலிகமாக சாளுக்கியர்களுடன் கூட்டு சேர்ந்திருக்கிறோம்... மெல்ல மெல்ல இனி மக்கள் மனதில் வேளிர்களின் பழம்பெருமைகளைக் குறித்து கூத்துப்பாட்டு வடிவில் பிரசாரம் செய்யவேண்டும்... நடைபெறவிருக்கும் போரில் பல்லவர்களை வேருடன் அழித்துவிட்டு பிறகு பாண்டியர்களுடன் சேர்ந்து சாளுக்கியர்களை வீழ்த்த வேண்டும்.
எங்கிருந்தோ வந்த பல்லவர்களால் இந்த மண்ணை ஆள முடியும் என்னும்போது மண்ணின் மைந்தர்களான வேளிர்கள் நூற்றாண்டு
களுக்குப் பிறகு மீண்டும் தலையெடுக்க முடியாதா என்ன..?

முடிவுடன், தான் இருந்த மரத்தைவிட்டு இறங்கிய கடிகை பாலகன், அங்கிருந்த ஒன்பது சாளுக்கிய வீரர்களையும் மூன்று குழுக்களாகப் பிரித்தான்.
‘‘ஒரு காத தொலைவில் இருக்கும் வேட்டுவ மாளிகையை நாம் சுற்றி வளைக்க வேண்டும். இருப்பது இருவர்தான். ஆனால், ஒவ்வொருவரும் முப்படைக்கும் சமமானவர்கள். புரிந்ததா..? சருகுகள் மிதிபடும் ஓசைகூட கேட்கக் கூடாது... கால்நடையாகவே நிதானமாக மாளிகையை நோக்கி நகர்வோம்!’’

‘‘புதிதாகப் பார்ப்பதுபோல் அப்படிப் பார்க்கிறீர்களே..?’’ அமைதியைக் கிழித்தபடி அந்தப் பெண் கேட்டாள்.
‘‘புதிதாகத்தான் இருக்கிறது, சற்று நேரத்துக்கு முன் நீ தரித்திருந்த மான் தோல் உடை...’’ கரிகாலன் இழுத்தான்.
‘‘ம்...’’‘‘இப்பொழுது அணிந்திருக்கும் சேலை...’’
‘‘ம்...’’

‘‘இவை எல்லாம் நான் காணாதவை!’’
‘‘எப்பொழுதும்போல் சிவப்பு நிறக் கச்சையுடன் மட்டும் உங்களுக்கு தரிசனம் தரச் சொல்கிறீர்கள்... அப்படித்தானே..?’’
கேட்டவளின் குரலில் கோபமோ வெறுப்போ இல்லை. ஏன்,உணர்ச்சிகளின் கொந்தளிப்பும் பொங்கி வழியவில்லை. சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால், கரிகாலனுக்கு அதுவே அசாதாரணமாகத் தென்பட்டது.

மெல்ல நடந்து வந்து அவள் முன்னால் மண்டியிட்டான்.தலையை உயர்த்தி அவள் நயனங்களை ஊடுருவினான்.அந்தப் பெண்ணும் தன் பார்வையை விலக்காமல் அவனை எதிர்கொண்டாள்.மறுகணம் அவளை அள்ளி அணைத்து உயரே தூக்கினான். அவள் தன் கால்கள் இரண்டையும் அவன் கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டாள்.அப்படியே முன்னோக்கி குனிந்து அவன் உதட்டில் தன் ஆதுரங்களைப் பதித்தாள்.‘‘சிவகாமி...’’ என்றபடி கரிகாலன் அவள் உதட்டைக் கடித்தான்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்