துல்லியமாய் ஒரு தாக்குதல்



செல்போன் ஒலித்தது. ரிங் டோனில் ஒரு காஸ்மிக் ஒலி கேட்டது.“சந்திரசேகர் ஹியர்...” என்றார்.“ஒரு திருத்தம். விஞ்ஞானி சந்திரசேகர்...” என்றது மறுமுனை குரல்.“இருக்கலாம். இதை நான் பொது வெளியில் சொல்லக் கூடாது...”
“உங்களை நான் சந்திக்க வேண்டும்...”

“ஏதாவது திருமணப் பத்திரிகை கொடுப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரலாம். அப்போது நான் வேட்டி கட்டியிருப்பேன். விஞ்ஞானியாக இருக்க மாட்டேன்...”“நான் விஞ்ஞானியைத்தான் சந்திக்க வேண்டும்...”“அது முடியாது...”“தேசத்தின் பாதுகாப்பு பற்றிய விஷயம்.

நீங்கள் நான் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும்...”சந்திரசேகர் யோசித்தார். ஏதாவது விபரீதமான விஷயமாக இருக்கலாம். ஒன்றும் இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு பிற்பாடு வருத்தப்பட முடியாது.“சரி. வருகிறேன். நீங்கள் பேசலாம். நான் அதிகம் பேச மாட்டேன். பேசக் கூடாது...”“புரிகிறது. மாலை ஆறு மணி...”  இடத்தைச் சொன்னது குரல்.

மாலை 5:55க்கு அங்கே இருந்தார் சந்திரசேகர்.சந்திரசேகரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் இருந்தால்தான் அடுத்து வரும் நிகழ்வுகளின் முக்கியத்துவம் புரியும்.ராணுவ ஆராய்ச்சிக்கென அரசாங்கத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு பிரிவில் சந்திரசேகர் விஞ்ஞானி. விஞ்ஞானி என்றால் குடுவையில் அமிலத்தைக் கரைத்து கண்ணால் அளவு பார்க்கும் சினிமா விஞ்ஞானி இல்லை. அரசாங்க சம்பளம் பெறும் ஓர் ஊழியர்.

விஞ்ஞானிகளில் பல கிரேடுகள் உண்டு. இவர் உயர் கிரேடில் இருந்தார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு பெறும் ஆசாமி. முழுக்கை சட்டை போட்டு இன் செய்து கொண்டு டப்பாவில் மதிய உணவு கொண்டு போவார்.சரியாக ஆறு மணிக்கு போனில் கூப்பிட்டவர் வந்தார். காபி நிறத்தில் அரைக்கை சட்டை போட்டிருந்தார். இன்னும் மூன்று வருடத்தில் தலை முழு வழுக்கையாகிவிடும் என்ற அபாய கட்டத்தில் தலைமுடி இருந்தது. ரிம்லெஸ் கண்ணாடி போட்டிருந்தார்.

“நாடு அபாயக் கட்டத்தில் இருக்கிறது...” என்றார் எடுத்த எடுப்பில்.
“என்ன சொல்கிறீர்கள்?”“ஆம். உன் நாடு அல்ல. என் நாடு...”
“நீ வேறு நாடா?”“ஆமாம். உன் எதிரி நாடு...” நாட்டின் பெயரைச் சொன்னார்.
“நான் உன்னுடன் பேச முடியாது. நீ யாரென்றே தெரியாது. உன் பெயர் கூடத் தெரியாது...”
“என்னை ஏஜண்ட் என்று அழைக்கலாம்...”
“எனக்கு உன் பேச்சு பிடிக்கவில்லை...” எழுந்தார் சந்திரசேகர்.

“அமருங்கள். நீங்கள் ஏவுகணை விஞ்ஞானிதானே?”
“எப்படித் தெரியும்?”“தெரியும். எனக்கு இதுதான் வேலை. நீங்கள் புதிதாக ஒரு ஏவுகணை தயரிப்பில் ஈடுபட்டுள்ளீர்கள். அதற்கான ஆராய்ச்சிக்கு நீங்கள்தான் தலைவர். சரிதானே?”“நீ வரம்பு மீறுகிறாய்...”“நீங்கள் தயாரிக்கப் போகும் ஏவுகணை மிகவும் நவீனமானது. பொதுவாக ஏவுகணைகள் பெரிய விஸ்தீரணமான பரப்பளவு உள்ள கட்டிடங்களைத்தான் தாக்கும். உதாரணமாக பாலங்கள், அணைகள் என்று. நீங்கள் இப்போது தயாரிப்பது மிகவும் துல்லியம்...”சந்திரசேகருக்கு வியர்த்தது. இவனுக்கு எப்படித் தெரிந்தது?

“ஏவுகணைகள் வெறும் குண்டுகள் அல்ல. அவை லேசர் மூலம் வழி நடத்தப்படுகின்றன. தாக்க வேண்டிய இடத்துக்கு லேசர் கூட்டிச் சென்றுவிடும். சரிதானே?”சந்திரசேகர் பதில் பேசாமல் இருந்தார்.“இப்போது நீங்கள் தயாரிக்கப் போவது இன்னும் சக்தி வாய்ந்த ஏவுகணை. வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு சைக்கிளின் முன்சக்கரத்தைத் தாக்கு என்று கட்டளையிட்டால் அதே மாதிரி தாக்கும். லேசர் தொழில் நுட்பத்துடன் கணினி மென்பொருளையும் கலந்துள்ளீர்கள்...”“நான் உடனே அவசர போலீஸுக்கு போன் செய்யப் போகிறேன். நீ ஓர் உளவு ஏஜண்ட்...”
“உண்மை. நான் முழுவதும் சொல்வதைக் கேட்டுவிட்டு நீ போலீஸுக்கு போன் செய்யலாம்...”
“சொல். பத்து நிமிடம்தான் காத்திருப்பேன்...”

“நீங்கள் இந்த ஏவுகணையை செய்வதை எங்கள் நாடு விரும்பவில்லை...”“ஏன்?”“ஏனென்றால் நீங்கள் செய்து விடுவீர்கள். உங்களுக்கு சக்தி இருக்கிறது. அறிவு இருக்கிறது...”“நன்றி...”“இதேபோன்ற ஓர் ஏவுகணையை நாங்களும் முயன்று வருகிறோம்...”“உங்களால் முடியாது...”“உன்னிடம் சொல்வதில் தயக்கம் என்ன? கிட்டத்தட்ட நாங்கள் முடித்துவிட்டோம். விரைவில் செயலுக்கு வந்துவிடும்...”சந்திரசேகர் சிரித்தார்.“எங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். எங்களுக்கு இப்போதைக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஏவுகணைத் திட்டம் தோல்வி அடைய வேண்டும்...” அவர் முகத்தில் குரூரம் தெரிந்தது.

“தோல்வியடையாது. நான்தான் சூத்திரதாரி. என் பலம் எனக்குத் தெரியும்...”
“உங்கள் பலவீனமும் எனக்குத் தெரியும்...”
“என்ன?”
“உங்களுக்கு கொஞ்சம் பணத்தாசை இருக்கிறது. சுக வாழ்க்கை மேல் ஆர்வம் இருக்கிறது...”
“அப்படியெல்லாம் இல்லை...”

“எனக்குத் தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிறிய செயல். அதற்கு சன்மானமாக உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் தொகை மிகவும் பெரியது. அட்லாண்டிக் கடலில் ஒரு சிறிய தீவை நீங்கள் வாங்கி அங்கேயே குடியேறலாம். குடும்பத்துடன்...”“நீ என்னைத் தவறாக எடை போட்டுவிட்டாய்...”“நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் உள்ளது.அதை உங்கள் ஏவுகணை சிஸ்டத்துக்குள் ஒரு மாதம் முன்பாகவே நுழைத்து விட வேண்டும். அது இப்போது எதுவும் செய்யாது. தூங்கிக் கொண்டிருக்கும்.

ஏவு கணையைச்செலுத்தியவுடன் அது தானாகவே விழித்துக் கொள்ளும். உள்ளே இருக்கும் ப்ரோக்ராம்களை மாற்றும். சீறிப் பாய்ந்த ஏவுகணை அப்படியே யூ டர்ன் அடித்து செலுத்திய இடத்தையே வந்து தாக்கும். மிகவும் துல்லியமாக!”“இது அக்கிரமம். பாதகச் செயல்...”

“உங்கள் இலாகாவில் இருக்கும் அத்தனை பேரின் ஆயிரம் வருட சம்பளத் தொகைக்கு ஈடு நான் கொடுப்பது. மேலும் போனஸாக உங்களுக்கு வாழ்நாள் முழுக்க பாதுகாப்பு...”“நீ எனக்கு ஆசை காட்டுகிறாய்...”“உங்களுக்கு ஆசை வந்து விட்டது!”“இல்லை...”

“நாளை மறுபடியும் இதே இடத்தில் சந்திப்போம்...” அவன் புறப்பட்டுப் போனான்.மறுநாள் அதே இடத்தில் அவனைச் சந்தித்தார் சந்திரசேகர். ஒரு சிறிய மெமரி கார்டை அவரிடம் கொடுத்தான் அவன்.“அனைத்து பாதுகாப்பையும் மீறி உங்களால் இந்த வைரஸை உள்ளே நுழைக்க முடியும். செய்யுங்கள்...”“அட்வான்ஸ்?”“நாளை வீட்டுக்கு வரும்...”சந்திரசேகரும் அவர் குடும்பத்தாரும் சிம்லாவில் பனிச் சறுக்கு ஆடிக் கொண்டிருந்தார்கள்.
“திடீரென ஏன் லீவ் போட்டீர்கள்? அதிசயமாக ஒரு சுற்றுலா. நிறைய செலவு செய்கிறீர்கள். ஏன்?” என்றாள் மனைவி மிருணாளினி.
“சந்தோஷமாக இருக்கிறேன்...”

“வீட்டுக்கு புதியதாக ஏதேதோ வாங்குகிறீர்கள். நான்கு லட்ச ரூபாயில் டி.வி வாங்குகிறீர்கள். ஏன்?”
“நீ சந்தோஷமாக இருக்க...”“எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்?”
“என் அறிவின் விலை...”“புரியவில்லை. ஏதாவது தப்பு செய்கிறீர்களா? எனக்கு பயமாக இருக்கிறது...”
“பொறுத்திருந்து பார்...”

மிருணாளினியால் அதற்கு மேல் சுற்றுலாவை ரசிக்க முடியவில்லை. அறைக்குப் போய் படுக்கையில் சாய்ந்தாள். கண்ணயர்ந்தாள்.
சந்திரசேகரின் பின் பக்க பாக்கெட்டில் இருந்த செல்போன் அலறியது.

அந்த ஏஜண்ட் அவருக்காக கொடுத்திருந்த பிரத்யேகமான செல்போன். உள்ளே பிரத்யேகமான சிம் கார்ட்.
“சுற்றுலா அனுபவிக்கிறீர்கள் போல் உள்ளது...”“ஆம்...”“உங்கள் நாட்டு ஏவுகணை இன்னும் இரண்டு வாரத்தில் செலுத்தப்படும். அப்படித்தானே?”
“ஆம். நான் நாளை ஆராய்ச்சிக் கூடத்தில் இருப்பேன். கடைசி கட்ட வேலைகளை கவனிக்க...”
“உங்களுக்கு ஒரு தகவல். எங்கள் நாட்டு ஏவுகணை இன்னும் அரை மணி நேரத்தில் பாயப் போகிறது. நாங்கள் முந்திக் கொண்டு விட்டோம்...”
“பாராட்டுகள். நீங்கள் புத்திசாலி!”

“நான் கொடுத்த வைரஸை ஏவுகணைக்குள் புகுத்தியாகி விட்டதா?”
“ஆயிற்று...”“சபாஷ்...”“ஒரு சிறிய திருத்தம். உங்கள் நாட்டு ஏவுகணைக்குள் புகுத்தியாகி விட்டது!”

“என்ன சொல்கிறீர்கள்?”“ஏவுகணையை ஆன் செய்தவுடன் வைரஸ் விழித்துக் கொள்ளும். யூ டர்ன் அடித்து உங்கள் ஆராய்ச்சிக் கூடத்தையே திருப்பித் தாக்கப் போகிறது!”“எப்படி நுழைத்தீர்கள்?”

“மிகவும் சிம்ப்பிள். உங்கள் நாட்டு விஞ்ஞானிகள் பாவம் மிகவும் ஏழைகள். நீ எனக்கு கொடுத்த அட்வான்ஸில் கால் வாசி தொகைக்கே ஒப்புக் கொண்டுவிட்டான் ஒருவன். எனக்கு நிறைய லாபம்...”“நீ ஒரு ஏமாற்றுக்காரன்...” கத்தினான் ஏஜண்ட்.“இன்னொரு விஷயம்...”“என்ன?”
“பாவம். உங்கள் நாட்டு விஞ்ஞானிகளுக்கு தேசப் பற்று குறைவு!”                 

குடிசையில் அக்‌ஷய்

‘வாழ்தல் இனிது’ என பூரிக்கிறார் பாலிவுட் அக்‌ஷய்குமார். மும்பையில் ஒரு மழைக்காலைப் பொழுதில் தனது செல்ல மகள் நிடாராவுடன் வாக்கிங் சென்றிருக்கிறார் அக்‌ஷய். அப்போது திடீரென மழை பெய்ததில் அருகே இருந்த குடிசை வீட்டில் அவர்கள் மழைக்கு ஒதுங்கியிருக்கிறார்கள்.
அங்கே வயதான ஒரு தம்பதியினர், இவர்களை இன்முகத்துடன் வரவேற்று, சுடச்சுட சுவையான ரொட்டியும் கொடுத்து உபசரித்துள்ளனர். அந்த எளிய மனிதர்களின் அன்பில் நனைந்ததில் மகிழ்ந்து டுவிட் போட்டிருக்கிறார். ‘Truly, being kind costs nothing but means everything!’

அடுத்த வாரிசு

சந்தோஷத்தில் பளபளக்கிறார் சாயி மஞ்ஜ்ரேக்கர். மாடலிங்கில் இருந்து பிரைட்ஃபுல் சினிமாவிற்குள் வந்தவர். இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘தபாங் 3’யில் ஹீரோயினாக அறிமுகமாகும் பொண்ணு.

பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மகேஷ் மஞ்ஜ்ரேக்கரின் மகள்.திருபாய் அம்பானியின் இன்டர்நேஷனல் ஸ்கூலில் படித்த சாயிக்கு, அஸ்வினி என்ற அக்காவும், சத்யா என்ற அண்ணனும் உண்டு.அக்கா அஸ்வினி தயாரிப்பாளராகவும், அண்ணன் சத்யா மஞ்ஜ்ரேக்கர் நடிகராகவும் அங்கே பரபரக்கிறார்கள்.

சமீபத்தில் மகேஷ் மஞ்ஜ்ரேக்கர் ‘சாஹோ’வில் கூட நடித்திருந்தார். ‘தபாங் 3’யில் இன்னொரு ஹீரோயினும் உண்டு. அவர் ‘லிங்கா’ பொண்ணு சோனாக்‌ஷி சின்ஹா.

அந்தரத்தில் பால்!

ட்ராவல் குயின் அமலாபால், ரிலாக்ஸ் ட்ரிப்பாக பாலித் தீவுகளுக்கு பறந்து வந்திருக்கிறார். கடலுக்கு மேலே அந்தரத்தில் ஊஞ்சல் ஆடும், ஆகாய அட்வென்ச்சர் சாகசத்தில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்திருக்கிறார். கையோடு ஆங்கில நாவல்கள் எடுத்துச் சென்றிருக்கும் அவர், சமீபத்தில் ஸ்டீவன் பிரெஸ்ஃபீல்டு எழுதிய ‘The war of art’ நூலைப்படித்து முடித்திருக்கிறார். கலக்குங்க பாஸ்.   

நந்து சுந்து