தொல்(லை)க் காப்பியம்



‘கைதி’ கோடம்பாக்க வெர்ஷன்ஸ்!

ஒரு வரில சொல்லணும்னா -போலீஸ்காரர்களை நிரப்பிக்கிட்டு ஒத்த லாரிங்க, கமிஷனர் ஆபீசில் காத்திருக்கும் நூறு ரவுடிங்க, லாரியை ஓட்டுறது ஒரு கைதிங்க - இவ்வளவுதாங்க தீபாவளிக்கு திரைக்கு வந்து தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்கும் ஒரு புதுப் படத்தோட கதை!
இதே ஒன்லைன் நம்ம கோடம்பாக்கத்தோட சினிமா சிற்பிகள் வேறு சிலரிடம் சிக்கியிருந்தா என்ன நடந்திருக்கலாம்? இஞ்சினை அணைச்சு இருட்டுக்குள்ள இறக்கிவிட்டு, கைதியையும் போலீசையும் கால்நடையாவே காட்டுக்குள்ள சுத்த விட்டு, நம்ம body முழுக்க நாடித் துடிப்பு கேட்கிற மாதிரி நமக்கு டென்ஷனை ஏத்திருப்பாரு வெற்றிமாறன்.

சாமானை சுமக்கிறதுக்கு நூறு பேரு இல்லாட்டி என்னடா? சூடா சமைக்கிறதுக்கு ஆறு பேரு வந்தா போதும்னு, லாரியை ரிவர்ஸ் எடுத்து வண்டிய கோவாவுக்கு கொண்டு போயி டென்ஷனை குறைச்சிருப்பாரு வெங்கட்பிரபு. ஏற்கனவே லாரிக்குள்ள மொத்தம் மூணு பொண்ணுங்க இருந்ததாகவும், அதுல ரெண்டு ஹீரோவோட அத்த பொண்ணுங்கன்னும் கருப்பு கேன்வாஸை கலர்ஃபுல்லாக்கி கலகலப்பை கூட்டியிருப்பாரு சுந்தர்.சி.

மூணு பொண்ணுங்கள்ல முதல் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருந்ததா சொல்லி, லாரியை பெரிய புளியமரத்தடில பார்க் பண்ணி, கொள்ளி வச்ச இடத்துல மண்ணை அள்ளி எடுத்து வந்து, புள்ளி வச்சு புதுசா கோலம் போட்டு காமிச்சி ஹிட்டடிச்சிருப்பாரு ராகவா லாரன்ஸ்.  
இப்படியே லாரி போனா எப்படி, போற வரைக்கும் பொழுது போகணும்லன்னு பரோட்டா சூரியை சொல்லவிட்டு, பின்னால லோடு ஏத்துற ஏரியாவுல நாலு கோடு போட்டு கபடியாட விட்டிருப்பார் சுசீந்திரன்.

கமிஷனர் ஆபீஸ்தானே போகணும், ஏறுங்கன்னு சொல்லி, ஃபர்ஸ்ட் கியருக்கு காட்பாடி, செகண்ட் கியருக்கு கன்யாகுமரி, தேர்ட் கியருல காஷ்மீர், டாப் கியருல கமிஷனர் ஆபீஸ்ன்னு நிறுத்துவாரு ஹரி. போற வழில பட்டுக்கோட்டை பெரியப்பாவையும் சூரக்கோட்டை சித்தப்பாவையும் ஏத்திக்கிட்டு, அத்தை சுட்ட அதிரசத்தையும், பெரியம்மா கொடுத்த பழரசத்தையும் பானைல வச்சு பகிர்ந்து தின்னுக்கிட்டே, இன்னைக்கே நாம துறவியாகப் போனாலும், என்னைக்கும் உறவுதான் முக்கியம்னு எடுத்துக் கூறியிருப்பாரு பாண்டிராஜ்.

லாரியை நேரா ராமநாதபுரம் விட்டு, பத்து வீட்டு பங்காளிங்க இருக்காங்க, எதுவா இருந்தாலும் முதல்ல பஞ்சாயத்து பேசிக்கலாம் வாப்புன்னு சொல்லியனுப்பிட்டு, கோடாலியை எடுத்து கூர்தீட்டி கொலவெறில காத்திருப்பாரு முத்தையா. இன்ஜின் சாவிய இருட்டுல தொலைச்சிட்டு ஹீரோ தேடுறதையே, காலுக்கு அடில கேமரா வச்சு க்ளைமேக்ஸ் வரை கித்தாப்பா கொண்டு வந்திடுவாரு மிஷ்கின்.

ஒரு கிலோமீட்டர் லாரி ஓடுனவரைக்கும் மைலேஜ் என்ன? வேஸ்ட்டான டீசலுக்கு வீணாகிப்போன ஜிஎஸ்டி எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாமலே கணக்கைப் போட்டிருப்பாரு எஸ்.பி.ஜனநாதன். போலீச தூக்கி வெளிய போட்டு, பொலிட்டீசியன்ஸை உள்ள போட்டு, கைதி கைல ஏரோப்ளேன கொடுத்து பிரமாண்டத்தை சேர்த்திடுவாரு ஷங்கர்.

லாரிய விட்டு ரவுடிங்க மேல ஏத்திட்டு, லாரில மேல போலீச ஏத்திட்டு, லாரிய கல்குவாரில குப்புற கவுத்திட்டு, ‘ஏ ஃப்லிம் பை’னு எண்ட் கார்டு போட்டுரு வாரு பாலா! ஆந்திராவில் வசிக்கும் 4 இன்ச் குள்ளர்கள்!ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொல்லூர் என்னும் கிராமம் அருகே நாலு இன்ச் மட்டுமே இருக்கும் குள்ளர்கள் வாழ்வதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு வருடமும், விடாது பெய்யும் அடை மழை நாளில் அவர்கள் தங்களின் பொந்துகளில் இருந்து வெளியே வந்து ஒரு வருடத்திற்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்துக்கொண்டு மீண்டும் ஒளிந்துகொள்கிறார்கள். 1797ம் ஆண்டு கிழக்கிந்தியக்கம்பெனியில் சர்வேயராக வேலை பார்த்த சர்.ஜான் லூயிஸ் டக்வர்த்துக்கு இவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
தனது டைரியில் இவர்களைப் பற்றியும், இவர்களின் வாழ்க்கை முறைகளைப்  பற்றியும் பல குறிப்புகளை படங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முந்தைய இவரது டைரியை சமீபத்தில்தான் அவரது குடும்பத்தினர் கண்டுபிடித் துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, குள்ளர்கள் வெளியே வந்தால் உள்ளூரில் வீடுகள் கட்டி ஓட்டு உரிமையும் தரப்படும் என உறுதியளித்துள்ளார்! தாஜ்மகாலின் நிறம் காவி!

தாஜ்மகால், ஷாஜகான் மன்னரால் நானூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், அது கட்டப்பட்ட போது அதன் நிறம் காவி என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆரஞ்சு வண்ணத்தின் மீது அலாதி பிரியம் கொண்ட மும்தாஜ் மகாராணி, உணவில் கூட ஆரஞ்சு நிறத்தை விரும்பினார். இதனால் தினம் அவர் அருந்தும் பாலில் கூட குங்குமப்பூ கலந்து தரப்பட்டது.

தினமும் தக்காளி அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்ட அவர், உடுத்தும் உடையில் கூட காவி கலர் அதிகம் இருப்பது போல உடுத்தினார்.
மும்தாஜ் மறைந்த பின்னர், தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான், தன் மனைவிக்குப் பிடித்த வகையில் அதனை காவி நிறத்தில்தான் கட்டினார்!
1653ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த அமில மழையில், காவி சாயம் வெளுத்து வெண்ணிறமாக மாறிப்போனது. ஷாஜகானின் அரசவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜாகீர்கான் இதனை தனது நூல்களில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்.

இப்போதும் தாஜ்மகாலின் அண்டர்கிரவுண்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மிச்சமான மார்பிள் கற்கள் எல்லாம் செந்நிறமாகத்தான் இருக்கின்றன!
மேல இருக்கிற ரெண்டு தகவல்களையும் படிக்கிறப்ப நம்புற மாதிரி இருந்துச்சுல்ல? இப்படித்தான் பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்பி, ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி, விட்டா பெருமாளை பின்லேடனாக்கிடுவாங்க!உயர்ந்த ஆடை வாங்கியாச்சு. சரி, ஒரு உள்ளாடையும் வாங்கிடுவோம்னுதான் பலபேரு புது போனை வாங்கின உடனே வாட்ஸ் அப்பையும் போட்டு விட்டுடுறாங்க.

வாட்ஸ் அப்பில் வருவதையெல்லாம் நம்புவது வெட்டி வேரு வாசத்தை நம்பி அண்டர்வேர முகர்ந்து பார்க்கிற மாதிரி. ஒரு நல்ல டெக்னாலஜிய இப்படி ஆதாரமற்ற தகவல்கள் பரப்பவும், சாதி மத பிரிவினைகள் உண்டாக்கவும், பொய் பிரசாரங்கள் செய்து ஆட்சி பிடிக்கவும்உபயோகப்படுத்துறது, கோஹினூர் வைரத்தை வைத்து குழி பறிப்பது போல.  

வாட்ஸ் அப்புக்கு வரும் தகவல்கள் அனைத்தையும் பகுத்தாயும் முன் ஃபார்வேர்ட் செய்வதை நிறுத்துவோம். நாய்கள் எலும்புகளைத்தான் கடிக்கும்; இரும்புகளையல்ல என்பதை ஃப்ராடு மனிதர்களுக்கு உணர்த்துவோம்.

 தோட்டா ஜெகன்