நியூஸ் சாண்ட்விச்திருமணத்திற்கான ‘டிக்கெட்டை’ ஆன்லைனில் விற்கலாம்!

பண்டிகையைப் போல நம் இந்தியத் திருமணங்களும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தியத் திருமணங்களில் நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே உலகெங்கிலும் பிரபலம். பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு நம் இந்தியக் கலாசாரத்தைத் தெரிந்துகொள்வதில் அதீத ஆர்வமுண்டு.

அதனால் Join My Wedding என்ற நிறுவனம், வெளிநாட்டினர் இந்தியாவின் மரபுகளை முழுவதுமாகத் தெரிந்துகொள்ள, இங்கு நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் அவர்களைக்கலந்துகொள்ளச் செய்கின்றனர். இந்த நிறுவனம், வெளிநாட்டு விருந்தினரையும், இந்திய தம்பதியினரையும் இணைத்து, அதில் கிடைக்கும் கணிசமான தொகையை மணமக்களோடு பகிர்ந்துகொள்கின்றது!

ஒற்றை Vs இரட்டை

தில்லியில் காற்று மாசடைந்துவருவதால், நிலைமை மோசமாகியுள்ளது. புகைமூட்டத்தால் மறைந்துபோயிருக்கும் நம் தலைநகரத்தைக் காப்பாற்ற, தில்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மாதம் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் - வாகன கட்டுப்பாட்டை மீண்டும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார்.

இனி ஒற்றைப்படை தேதிகளில் (1,3,5,7…) ஒற்றைப்படை பதிவுகளைக் கொண்ட வாகனங்களையும்; இரட்டைப்படை தேதிகளில் (2,4,6,8…) இரட்டைப்படை பதிவுகளை இறுதியில் கொண்ட வாகனங்களையும் மட்டுமே ஓட்ட முடியும். பெண்கள் மட்டுமே ஓட்டும் வாகனங்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், சிகிச்சைக்காக செல்பவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிப்லாந்திரி என்ற கிராமம் பல ஆண்டுகளாக சுற்றுச்சூழலையும் பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதில் உலகிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது. அந்தக் கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும், அக்குழந்தையின் சார்பாக குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து 111 மரங்களை நடுகின்றனர். அக்குழந்தையையும், 111 மரங்களையும் ஒரே கவனத்துடனும் பாசத்துடனும் வளர்ப்பதாய் வாக்குறுதியும் அளிக்கின்றனர்.
மேலும் பிப்லாந்திரி, Earth Day Network மூலம் ‘ஸ்டார் கிராமம்’ என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அனார்கலி சோனம்; ஃப்ரீடா காலோ சன்னி!

ஆலோவீன் பண்டிகையை இப்போது உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அக்டோபர் 31 அன்று மக்கள் மாறுவேடம் அணிந்து நண்பர்களை பயமுறுத்தி விளையாடுவார்கள். இந்த வருடம் நம் பாலிவுட் பிரபலங்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர். அதில் சோனம் கபூர் அனார்கலியாக வேடமிட்டும்; சன்னி லியோனும், ஸ்வரபாஸ்கரும் ஃப்ரீடா காலோவாகவும் வேடமிட்டனர். நடிகை பிபாஷாவும் கணவர் கரண் சிங் குரோவரும் ‘மென் இன் பிளாக்’ படத்தின் காஸ்டியூமை அணிந்து கலக்கலாக கொண்டாடினர்.

3 நாட்கள் வார விடுமுறை!

ஜப்பானில் இயங்கி வரும் மைக்ரோசாஃப்ட்டின் கிளை நிறுவனம், புது முயற்சியாக ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் வார விடுமுறை அளித்திருக்கிறது.
வாரத்தில் வெறும் நான்கு நாட்களே வேலைக்கு வந்த ஊழியர்கள், 40 சதவீதம் அதிக உற்பத்தியை வழங்கியிருக்கின்றனர். அதன்படி, ஆகஸ்ட் மாதம் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால் ஊழியர்கள் நேரத்தை வீணாக்காமல், மீட்டிங் மற்றும் பிரேக் நேரத்தை குறைத்து வேலை செய்துள்ளனர். மேலும் 23% குறைவான மின்சாரமும், 58% குறைவான பேப்பர்களுமே உபயோகித்துள்ளனர். மூன்று நாட்கள் விடுமுறையால் நல்ல ஓய்வுடன் உற்சாகமாக வேலைக்கு திரும்பி அதிக உற்பத்தித்திறனுடன் வேலை செய்து வந்ததாக ஆய்வில் தெரிகிறது.

ரயிலில் சிலிண்டர் வெடித்து 70 பேர் பலி

பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து ராவல்பிண்டிக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில், பயணிகள் சிலிண்டர் உபயோகித்து சமைத்துள்ளனர்.
நீண்ட தூரப்பயணம் என்பதால் ஒரு குடும்பம் இரண்டு எரிவாயு சிலிண்டரை ரயிலில் கொண்டு வந்துள்ளனர். அது திடீரென வெடித்ததில் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பலரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். முறையான சோதனையும் விழிப்புணர்வும் இருந்திருந்தால் இந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டிருக்கும் என்று மக்கள் வருந்துகின்றனர்.

ஒரே படத்தில் ஷாரூக் - ஆமிர் - சல்மான்?

Laal Singh Chaddha என்ற படத்தில் ஆமீர் கானும், கரீனா கபூரும் நடித்து வருகின்றனர். அதில் ஷாருக் கானும், சல்மான் கானும் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஷருக் கான் சின்ன கேமியோவாக இல்லாமல், கதையோடு ஒன்றி வெயிட்டான பாத்திரத்தில் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆமிர் கான் இன்னும் தான் நடிப்பது குறித்து உறுதி செய்யவில்லை. என்றாலும் அவரும் படத்தில் தோன்றுவார் என்கிறார்கள்.

மீண்டும் பிபாஷா பாசு

பிபாஷா பாசு எப்போதாவது படங்களில் தலைகாட்டினாலும், எப்போதுமே ஹாட் நியூஸாக மீடியாக்களில் இருக்கிறார்.
சமீபத்தில் கணவர் கரண்சிங் குரோவருடன் தீபாவளியைக் கொண்டாடிய பிபாஷா, அழகான லெஹங்காவை அணிந்திருந்தார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

காரணம், அதில் அவர் கருவுற்றிருப்பது போலத் தெரிகிறதாம்!உடனே பிபாஷாவின் ரசிகர்கள், அவரது இன்ஸ்டாகிராம் கமெண்டில் வாழ்த்துகளைக்
குவித்துவருகின்றனர். இதுகுறித்து இந்த காதல் ஜோடி எந்த கருத்தையும் இந்த இதழ் அச்சுக்குச் செல்லும்வரை தெரிவிக்கவில்லை!

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்