நான்... ஜார்ஜ் மரியான்‘‘திருநெல்வேலி மாவட்டம் விளாத்திக்குளத்துல 1963ல பிறந்தேன். அப்பா பெயர் முத்தையா. அம்மா பெயர் புஷ்பம். அப்பா கிளாரினெட் இசைக் கலைஞர். வானொலில நிலைய வித்வானா இருந்தார்.

விளாத்திக்குளம் அரசுப் பள்ளில படிச்சேன். 12 வயசுல குடும்பத்தோடு சென்னை கோடம்பாக்கம் வந்தோம். இதுக்கு அப்புறம் வளர்ந்ததெல்லாம் ராம் தியேட்டர் எதிர்லதான்.குழந்தைப் பருவம் எல்லாம் சினிமாக்காரங்க மத்திலதான் கழிஞ்சுது. மெயின் ரோடு ஓரமா வந்து கும்பலா நின்னுப்போம்.
கே.ஆர்.விஜயா மேடம், இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் சார், டி.எம்.சௌந்தரராஜன் சார் இப்படி பலரும் கடந்து போவாங்க. அங்க இருந்த எல்லா ஸ்டூடியோக்கள் உள்ளயும் ஓடி விளையாடுவோம். ஏவிஎம் ஸ்டூடியோ செக்யூரிட்டிகளை எல்லாம் ஓடவிட்டிருக்கோம்! ஸ்டூடியோவுக்குள்ள வேகமா சைக்கிளை மிதிச்சுட்டு போயிடுவோம்.

ஒவ்வொரு ஸ்டூடியோக்களையும் விடாம ஏறி எட்டிப் பார்த்து திட்டு வாங்கிட்டு வர்றது எல்லாம் தமாஷா இருக்கும். அப்படியான நேரத்துல ஒரு முறை ராஜா சார் ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு ரிக்கார்டிங் செய்திட்டு இருந்தார். அப்ப படம் பிளாக் & ஒயிட்டில்தான் இருந்தது. படம் வெளியாகும்போது கலர்! எனக்கோ ஆச்சர்யம்.

+2 முடிச்சு ரேடியோ மெக்கானிக் கோர்ஸை டிப்ளமோ மாதிரி ஒரு ஆறு மாசம் படிச்சேன். அடுத்து கிடைச்ச வேலைகளை எல்லாம் செய்துட்டு இருந்தேன். ரேடியோ மெக்கானிக் கத்துக்கிட்டதால கொஞ்சம் நல்ல வேலையும் கிடைச்சது.  இதுக்கிடைல வடபழனிக்கு வீடு மாறினோம். அங்க இருந்து வேலை, வீடு... இப்படிதான் போயிட்டு இருந்தது. பிறகு அமிஞ்சக்கரை. அந்த ஏரியா சர்ச்சில்தான் எங்களுக்கு பங்கு. அந்த சர்ச்சுல கிறிஸ்துமஸ், புனித வெள்ளிக்கு எல்லாம் சின்னச் சின்னதா நாடகங்கள் போடுவோம்.

இந்த நேரத்துல லயோலா கல்லூரி கல்ச்சுரல் கம்யூனிகேஷன் அமைப்பைச் சேர்ந்த ஃபாதர் அகஸ்டின், எங்க சர்ச்சுக்கு சமயப் பணிகள் செய்துட்டு இருந்தார். அவர் எங்களை கல்லூரிகளுக்கு கூட்டிட்டுப் போய் நாடகங்கள் போட வைச்சார்.இதன் வழியா சினிமா இன்ஸ்டிடியூட்டில் பயிற்சியாளரா இருந்த மதன் கேப்ரியல் தொடர்பு கிடைச்சது. இவர், ஃபாதர் அகஸ்டினுடைய நண்பர்.

ஒருநாள் அவர்கிட்ட ‘எங்க பசங்களுக்கு நாடகப் பயிற்சி கொடுங்க’னு கேட்டேன். அவரும் மகிழ்ச்சியோடு சமூக விழிப்புணர்வு, நன்னெறி நாடகங்களுக்கு டிரெயினிங் கொடுத்தார். இப்படி உருவான நாடகங்கள்ல ஒண்ணுதான் ‘நல்லவன் வாழ்வான்’. அப்பல்லாம் நாடகங்கள்தான் பெரிய பொழுதுபோக்கு. எல்லா வார இறுதிக்கும் சர்ச் சர்ச்சா போய் நாடகம் போடுவோம். இந்த நேரத்துல நண்பர்கள் மூலமா ‘கூத்துப்பட்டறை’ ந.முத்துசாமி சார் அறிமுகமானார். இன்னிக்கி டாப் ஸ்டார்கள்ல ஒருத்தரா இருக்கற விஜய் சேதுபதி வரை பலருக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் அவர்தான்.

முத்துசாமி சார் எங்களுக்கு அறிமுகமானப்ப அவர் தேசிய நாடகப் போட்டிக்காக பயிற்சி கொடுத்துட்டு இருந்தார். அவர் நாடகத்துக்கு நிறைய நடிகர்கள் தேவைப்பட்டதால எங்களை எல்லாம் கூப்பிட்டார். அதாவது இளம் நாடக இயக்குநர்களை ஊக்குவிக்க இந்தியாவின் எல்லா திசைகள்ல இருந்தும் ஒரு குழுவை தேர்வு செஞ்சு பணம் கொடுத்து நாடகம் போட வைப்பாங்க.

அப்படி நாங்க நடிச்சோம். அங்க எங்களுக்கு சம்பளமும் கொடுத்தாங்க. கேரளா பண்டிகை அப்ப நான்கு குழுக்கள் நான்கு நாட்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுல நாடகம் போட்டோம். இந்த நிகழ்ச்சி முடிஞ்சதுமே நாங்க அப்படியே முத்துசாமி சார் கிட்ட சேர்ந்துட்டோம்.
காலையும் மாலையும் நாடகம். இந்த சமயத்துல ஃபோர்ட் ஃபவுண்டேஷனுக்கு எங்க முத்துசாமி சார் ஒரு ப்ரொபோசல் கொடுத்தார். அது ஓகே ஆச்சு. தொடர்ந்து மூணு வருடங்கள் நாடகம் போட்டோம். பணம் வந்துட்டு இருந்தது.

இந்த திட்டத்தை இந்திக்காரரான அனுமோல் விலானி ஐயாதான் சாங்ஷன் பண்ணினாங்க. அவங்கதான் அப்ப ஃபோர்ட் கம்பெனிக்கு மானேஜர்.
எங்களுக்கு மாசம் ரூ.800 முதல் ஆயிரம் வரை கொடுக்கறதா முத்துசாமி சார் சொன்னார். எனக்கு வேலைலயும் அவ்வளவு
தான் கிடைச்சது. அதனால முழுநேர நடிகனா வந்துட்டேன்.எனக்குப் பிறகு முத்துசாமி சார்கிட்ட சேர்ந்தவங்கதான் நடிகர் பசுபதி, குமரவேல், ரவிவர்மா எல்லாம். அவங்க பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துல நாடகப் படிப்பு படிச்சுட்டு வந்தாங்க. இப்ப இந்த பேட்ச்சுல ரவிவர்மா மட்டும் பாண்டிச்சேரி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்ல பேராசிரியரா இருக்கார்.

எங்க எல்லாருக்கும் முறைப்படி நடிப்புன்னா என்னனு யோகா தொடங்கி எல்லாத்துக்கும்  முத்துசாமி சார்  பயிற்சி கொடுத்தார்.
நடனம், சண்டை, சிலம்பம், களரி... எல்லாமே கத்துக்கொடுத்தாங்க. ஒவ்வொரு கலைக்கும் யார் சிறப்பானவங்களோ அவங்களே வந்து கத்துக் கொடுத்தாங்க அங்கேயே சாப்பாடும்.

இந்த வாழ்க்கைக்கு நடுவுல எனக்குத் திருமணமாச்சு. சினிமாக்காரனுக்குக் கூட பொண்ணு கிடைக்கும்... நாடகக்காரனுக்கு..? அதனால வீட்ல என்னை ரேடியோ மெக்கானிக்குனு பொண்ணு வீட்ல சொன்னாங்க.எனக்கு மனசு கேட்கலை. நான் உண்மையை சொல்லிட்டேன். அந்தப் பொண்ணு மனசார என்னைக் கட்டிக்கறேன்னு சொல்லிட்டாங்க. அவங்க பெயர் ரூபி ஜார்ஜ். எங்களுக்கு ஒரு பையன். பெயர் பிரிட்டோ ஜார்ஜ். பயோ டெக்னாலஜி முடிச்சுட்டு அது தொடர்பான வேலைல இப்ப இருக்கார்.

பொண்ணு நான்சி ஜார்ஜ். இப்ப M.Phil படிச்சுட்டு இருக்காங்க. அமைதியான சாதாரண குடும்பம். சரி... திரும்பவும் என் வாழ்க்கைக்கு வர்றேன்... பம்மல் சம்பந்த முதலியார் ஐயா எழுதின ‘சந்திரஹரி’ காமெடி நாடகத்தை நான் இயக்கினேன். என்னுடைய முதல் இயக்கம் அது. அந்த நாடகத்துலதான் விமல், விதார்த், சோமசுந்தரம், மரணம் அடைந்த ‘அழகிய தீயே’ பாலா... இவங்க எல்லாம் நடிகர்களா அறிமுகமானாங்க!

அப்பப்ப நாசர் சாரை சந்திச்சு சினிமா வாய்ப்பு கேட்டுட்டு இருப்பேன். ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி சார்... எங்க முத்துசாமி சாரோட நண்பர். அப்ப அவர் ‘அழகி’ படம் பண்ணிட்டு இருந்தார். எங்க எல்லாரையும் தங்கர்பச்சான் சார்கிட்ட அறிமுகப்படுத்தினார்.இப்படித்தான் ‘அழகி’ல வாத்தியாரா அறிமுகமானேன்.

அப்புறம் நாசர் சாரோட ‘மாயன்’. தொடர்ந்து சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சேன். ‘ஜேஜே’ படத்துல ‘கல்யாணம் நின்னு போயிடுச்சு’னு வசனம் பேசி படத்துக்கு சுபம் போடுவேன்!‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பொய் சொல்லப்போறோம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘ஆண்டவன் கட்டளை’னு படிப்படியா நகர்ந்து இந்த தீபாவளிக்கு வெளிவந்த ‘பிகில்’, ‘கைதி’ ரெண்டு படத்துலயும் நல்ல கேரக்டர் பண்ணின அளவுக்கு வந்திருக்கேன்.

லோகேஷ் தம்பி ‘கைதி’ல அந்த ரோலையே என்னை மனசுல வைச்சு எழுதினதாதான் சொன்னார். இதை விட என்னுடைய இத்தனை வருஷ போராட்டத்துக்கு வேற என்ன வேணும்..? ஒரு நல்ல நடிகனா பெயர் எடுக்கத்தான் தொடர்ந்து போராடிட்டு இருக்கேன்!’’

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்