நம்மால் முடியும் -கை, கால்களில் எனக்கு மூட்டே கிடையாது!



எத்தனை பெரிய சம்பவம் தன்னை பாதித்தாலும் ஜஸ்ட் லைக் தட் என கடக்கும் ரூபா ராஜேந்திரனின் டிரேட் மார்க் எப்போதும் புன்னகைதான். அத்தனை எளிதில் எதற்காகவும் அவர் தளர்வதில்லை. வரட்டும் பார்த்துக்கலாம் என்பதே பெரும்பாலும் அவரது பதிலாக இருக்கிறது.‘‘நான் வீட்டில் ஐந்தாவது பெண்.

கடைக்குட்டி. என்னை வேண்டாம் என நினைத்த அம்மா, மருத்துவர் அறிவுரை இல்லாமலேயே கருத்தடை மாத்திரைகளை எடுத்தார். அதன் பாதிப்பு என் வளர்ச்சியைத் தடைப்படுத்திவிட்டது...’’ மிகப்பெரிய விஷயத்தை மிக இயல்பாகச் சொன்னபடி பேச ஆரம்பித்தார் ரூபா ராஜேந்திரன்.

‘‘வளர வளர என் வளர்ச்சி இயல்பாக இல்லை. 6 மாதக் குழந்தையாக இருந்தபோது மருத்துவரிடம் என்னைக் காண்பித்தார்கள். ‘கை மற்றும் கால் முட்டிகள் இல்லை... எலும்பு வளர்ச்சியும் இல்லை...’ என உதட்டைப் பிதுக்கி இருக்கிறார்கள்...’’ என்றபடி முட்டிகளற்ற தன் கைகளையும், கால்களையும் நம்மிடம் காண்பிக்கிறார்.

‘‘பிறப்பிலேயே இப்படி இருப்பதால் சரி செய்ய இயலாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். பத்து வயதிற்குமேல் நடப்பதும் தடைபட்டது. எனக்கிருப்பது வளர்ச்சிக் குறைபாடு (dwarfism)...’’ ஜஸ்ட் லைக் தட் ஆக சொல்லும் ரூபா, இன்று ‘ஏற்றம் அறக்கட்டளை’யின் செயல்பாட்டாளர்களில் ஒருவர்.

கூடவே போஸியா விளையாட பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் வரை சென்று தனிநபர் பிரிவில் தங்கம் வென்றவர். பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் ஆர்வத்தோடு பங்கேற்று, மலர்ச்சியான முகத்தோடு தன்னை வெளிப்படுத்தி பலர் மனதில் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருப்பவர்.
‘‘எனது ஊர் தூத்துக்குடி அருகே ஒரு குக்கிராமம். அப்பா ராஜேந்திரன் அச்சுத் துறைக்குத் தேவையான வண்ண மைகளைத் தயாரிக்கும் ரூபா இங்க் (RUPA INK) நிறுவன உரிமையாளர். தொழில் சார்ந்து எனது குடும்பம் சென்னைக்கு மாறியது.

எட்டு வயது வரை ஓடி ஆடி விளையாடிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக  நடை தடுமாற, முதுகெலும்பும் (spinal cord) வளைந்து, வளர்ச்சியைத் தடுத்தது. நடக்கவும், படிகளில் ஏறவும் முடியாமல் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினேன். படிப்பின் முக்கியத்தை அந்த வயதில் நான் உணரவில்லை. பெற்றோரும் அறிவுறுத்தவில்லை. படித்தவரையில் பள்ளியில் பலமுறை ஸ்டார்களைப் பெற்ற மாணவியாக இருந்திருக்கிறேன். கூடவே விளையாட்டு, பாட்டு, டிராயிங்... எனவும் ஆர்வமிருந்தது.

வீட்டில் சுவற்றைப் பிடித்து மெதுவாக நடக்க, 14 வயதிற்கு மேல் அதுவும் முடியாமல் போனது. எங்கு சென்றாலும் அம்மாவும் அப்பாவும் என்னை மாற்றி மாற்றி தூக்கிச் சுமந்தனர். வீல்சேர் பயன்பாடு அப்போது என்னிடமில்லை. எங்கு உட்கார வைக்கிறார்களோ அதே இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்தே இருப்பேன்.

என்னைச் சுற்றிலும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா எனக் குடும்ப உறுப்பினர்கள் அன்பால் நிறைத்தனர். கேட்டதெல்லாம் உடனே கிடைத்தது. கூடப் பிறந்தவர்கள் மாறி மாறி கல்லூரியில் படிக்க, அவர்கள் வீட்டில் இருந்த கம்ப்யூட்டரை இயக்குவதை அருகே இருந்து கண்ணிமைக்காமல் பார்ப்பேன்.

அப்போது கணினி எனக்குள் பல ஆச்சரியங்களை விதைத்தது. வீட்டில் யாருமில்லாத நேரம் கேம் விளையாடியபடி கம்ப்யூட்டர் ஆப்ஷன்களைஆராயத் தொடங்கினேன். தெரியாதவற்றை அண்ணன் அக்காவிடம் கேட்டு செய்யப் பழகினேன். ஒரு கட்டத்தில் கேம் போரடிக்கவே, இணையத்தில் தேடத் தொடங்கி அதுசார்ந்த பரிச்சயம் மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது.

என் பெரிய அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றியதால், அவரோடு மெயில், சாட்டிங் எனத் தொடங்கி கூகுளில் எதையாவது தேடுவது என எப்போதும் இணையத்தில் இருக்கத் தொடங்கினேன். ஆர்குட் செயல்பாட்டில் இருந்த நேரம் அது. நான் படித்த பழைய பள்ளி நண்பர்களின் தொடர்புகள் கிடைக்க, பத்து வயதில் பார்த்த நண்பர்களை இணையம் வழியே கண்டுபிடித்தது ஆச்சரியமாய் இருந்தது. அவர்களில் பலரும் வெவ்வேறு துறைசார்ந்து இருந்தார்கள். சிலருக்கு திருமணமும் முடிந்திருந்தது.

அதில் இருபத்தி நான்கு பேரை ஒருங்கிணைத்து, கெட் டுகெதர் ஏற்பாடு செய்தோம். அந்த சந்திப்பில் நானும் படித்திருக்கலாமே என்ற ஏக்கம் வந்தது...’’ மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் ரூபா. ‘‘வயது ஏற ஏற என்னைத் தூக்குவது பெற்றோரால் இயலாமல் போக, அப்பா எனக்காக பவர் வீல்சேர் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். வீட்டின் வாசலில் இருந்து ஹால், பெட் ரூம், கிச்சன், ரெஸ்ட் ரூம் என தடையின்றி அனைத்து இடத்திற்கும் போகும் வசதியை அப்பா வீட்டிற்குள்ளே செய்து கொடுத்தார்.

சுவிட்சுகளை கை எட்டும் தூரத்தில் தாழ்வாக அமைத்தார்...’’ என்ற ரூபா, நம் நாட்டில் மட்டுமே வங்கி ஏ.டி.எம்.கள்கூட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை... வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் தங்களைப் போன்றவர்கள் பணத்தை இறைத்து கால் டாக்ஸியின் உதவியை மட்டுமே நாட வேண்டியிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.

‘‘அப்பா, அம்மா கூட சிங்கப்பூர், மலேசியா, துபாய்... எல்லாம் போயிட்டு வந்தேன். அங்க எல்லா இடத்திலும் ஸ்லோப் இருக்கு. வீல்சேருடன் கழிவறை வரை போகலாம். ரெஸ்ட் ரூம்லயும் பிடித்து உட்கார கைப்பிடிகள் அருகருகே பாதுகாப்பா இருக்கு. பிளாட்பாரத்தோடு லோ ஃப்ளோர் பேருந்துகள் வந்து நிற்க, வீல்சேரோடு ஏறி இறங்க அது ரொம்ப வசதியாக இருக்கு... தீம் பார்க்குகள்கூட அங்க மாற்றுத் திறனாளிகளும் விளையாடி மகிழ பாதுகாப்பான இருக்கைகளோடு இருக்கு.

மால், தியேட்டர்னு எந்தஒரு இடத்திலும் நான் உள்ளே நுழைய முடியவில்லை என லாக்காகவில்லை. அந்த அளவுக்கு அவங்க கட்டமைப்புகள் சிறப்பா, பாதுகாப்பா இருக்கு...’’ என்ற ரூபா, மீண்டும் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

‘‘என்னுடன் பிறந்த நால்வருமே திருமணம், குழந்தைகள், குடும்பம் என வெவ்வேறு ஊர்களில் செட்டிலானார்கள். அம்மா டிமென்ஷியா (dementia) என்கிற மூளைச் சுருக்க நோய் தாக்குதலுக்கு ஆளாகி குழந்தையானார். அப்போது நான் 25 வயதைக் கடந்திருந்தேன். நானும், அம்மாவும் அப்பாவிற்கு இரட்டைச் சுமையானோம். நிறுவனத்தையும் கவனித்து, அம்மாவையும் என்னையும் சேர்த்தே முகம் சுளிக்காமல் அன்பைக் கொட்டி கவனித்தார்.

நோய் முற்றி அம்மா நிரந்தரமாய்ப் பிரிய, நான் தனித்து இயங்கும் நிலைக்கு ஆளானேன். வீட்டுத் தேவைக்காகவும், என் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வெளியில் செல்லத் தொடங்கி, பொருட்களின் விலை, தரம் என வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தொடங்கியது. அதுவரை உலகம் தெரியாமல் இருந்ததை உணரத் தொடங்கி, அடிக்கடி வெளியில் போகத் தொடங்கினேன்.

அண்ணன் மூலமாக ஆன்லைன் டிரேடிங், ஷேர் மார்க்கெட் இவற்றில் ஆர்வம் ஏற்பட, அப்பாவிடம் எனக்கென தனியாக லேப்டாப் ஒன்றைக் கேட்டு வாங்கி அதில் டிமேட் அக்கவுண்ட் ஆரம்பித்து, ஷேர்களை வாங்கி கவனத்தை அதில் செலுத்தினேன். லாபமும் நஷ்டமும் மாறி மாறிக் கிடைக்க, வந்த லாபத்தில் ஐ போன் ஒன்றையும் வாங்கினேன். ஷேர் மார்க்கெட் ரொம்பவே டவுனாக, அதிலிருந்து விலகினேன்.

அண்ணனின் வழிகாட்டலில் ‘சிறகுகள்’ எனும் பெயரில் வெப் சேனல் ஒன்றை உருவாக்கி, செய்திகளை எடிட் செய்து, வீடியோவோடு அப்லோட் செய்யத் தொடங்கினேன். செய்தி சார்ந்து இயங்கியதில் புத்தகம், நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இணையத்தில் இயங்கியவாறே முகநூல், வாட்ஸ்அப் மூலம் மாற்றுத் திறனாளி நண்பர்களை நட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்தேன். நண்பர்கள் வட்டம் விரிவடைய, பலரை நேரில் சென்று சந்திக்கவும் செய்தேன். பலவகையான மாற்றுத் திறனாளிகள் இருப்பதும், எல்லோர் பிரச்னையும் ஒன்றுபோல் இல்லை என்பதையும் உணரத் தொடங்கினேன். அவர்களின் கஷ்டங்களை எல்லாம் காது கொடுத்து கேட்கத் தொடங்கியதோடு, என்னால் முடிந்த ஆலோசனைகளை தெரிந்தவர்களிடத்தில் கேட்டு சொல்லத் தொடங்கினேன்.

தொடர்புகளின் எல்லை விரிவடையவே, நண்பர்களுடன் இணைந்து டிரஸ்ட் ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் வரவே, ‘ஏற்றம் அறக்கட்டளை’ உதயமானது. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட மாற்றுத்திறனாளி தோழி ஒருவருக்கு எங்கள் அறக்கட்டளை மூலமாக நிதி திரட்டி பவர் வீல் சேர் வாங்கிக் கொடுத்தோம். தங்கள் மகளுக்கு கால்களே வந்ததுபோல் உணர்வதாக அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து மேலும் ஐவருக்கு பவர் வீல் சேரினை வாங்கிக் கொடுத்தோம்.

தீவிர மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கான போஸியா விளையாட்டை சென்னையில் இயங்கும் ‘ஏக்தா ஃபவுண்டேஷன்’ அறிமுகப்படுத்த... அதில் நானும் இடம் பெற்றேன். பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் இருந்த ஆர்வம் மீண்டும் தலைதூக்கியது. என்னால் விளையாட முடியுமா என முதலில் யோசித்தேன். ஆனால், கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என ஒவ்வொரு வார இறுதியிலும் கோட்டூர்புரம் சென்று பயிற்சி எடுத்தேன்.

விளைவு, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான போட்டியில் எங்கள் டீம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து
20 மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டேன். அடுத்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான தனி நபர் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றேன்! இப்போதெல்லாம் கிடைக்கும் வாய்ப்பினை எதற்காகவும் நான் நழுவ விடுவதில்லை. கிடைத்தால் வெற்றி, இல்லையெனில் அனுபவம்...’’ சொல்லும் ரூபாவின் குரலில் பக்குவம் வழிகிறது.

சென்னையில் நிகழ்ந்த வீல்சேர் மாரத்தான் மற்றும் மெரினாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் டி-3 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ரூபா, சமீபத்தில் ஹெட்வே ஃபவுண்டேஷன் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான ஃபேஷன் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று மேக்கப், ஸ்கின் கேர் மற்றும் டிரஸ்ஸிங் சென்ஸ் குறித்து தெரிந்து கொண்டிருக்கிறார்.

அத்துடன் அந்த அமைப்பினர் நடத்திய ரேம்ப் வாக், போட்டோ ஷூட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்! ‘‘மாற்றுத் திறனாளிகள் என்பதற்காகவே வீட்டுக்குள் அடைபடாமல், விரும்பியதை முயற்சியுங்கள். முயற்சிகள் மட்டுமே வெற்றி தரும்… முயலாமை ‘முயல் - ஆமை’ கதையாக மாறும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ரூபா ராஜேந்திரன்.        

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்