இந்தியாவில் அதிகரிக்கும் லாக்அப் மரணங்கள்
‘அப்படியானால், வேறு எந்த நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தச் சொல்வது? இன்ன நீதிபதிதான் விசாரணையைக் கண்காணிக்க வேண்டும்; இன்ன மருத்துவர்தான் உடற்கூறாய்வை பார்வையிட வேண்டும் என்றெல்லாம் கேட்பது, விசாரணை அமைப்புகளின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாகிவிடாதா?’ - போலீஸ் கஸ்டடியில் இறந்த ஒருவரின் தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பாதிக்கப்பட்ட மனுதாரரிடம் இந்தக் கேள்வியைத்தான் எழுப்பியுள்ளது.

போலீஸ் என்பது குற்றங்களைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு; அதே, போலீஸ் காவலில் குற்றம் நடந்தால், அதைக் கட்டுப்படுத்த வேறு சில அமைப்புகளிடம் புகார் அளிக்க வாய்ப்புகள் இருந்தும்கூட போலீஸ் காவலில் வன்முறைகள், மரணங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை வதாலா கிழக்கு பெட்ரோல் பங்க் அருகே நள்ளிரவில் ஒரு தம்பதியிடம் வாக்குவாதம் செய்த விஜய் சிங் என்ற 26 வயது வாலிபர், போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அந்த வாலிபர் மரணமடைந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 இவ்விவகாரம் தொடர்பாக மஹாராஷ்டிர மாநில மனித உரிமைகள் ஆணையம் (எம்எஸ்எச்ஆர்சி) வதாலா வாலிபர் கஸ்டடி மரணம் குறித்து நவம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க துணை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.முன்னதாக போலீஸ் கஸ்டடியில் இறந்த விஜய் சிங்கின் உடலை முதலில் அப்பகுதியில் இருந்த சியோன் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அவர்கள் விஜய் சிங் இறந்ததை உறுதி செய்தனர். அடுத்ததாக ஜே.ஜே மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை முடித்து, சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.
ஆனால், அவர்கள் சடலத்தைப்பெறவில்லை. மாறாக, இரண்டாவது கருத்துக்காக கே.இ.எம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதனால் அந்த மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஒரு முறை பிரேத பரிசோதனைக்கு சடலம் உட்படுத்தப்பட்டது. ஆனால், அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
தடயவியல் நிபுணர்கள், ‘விஜய் சிங்கின் சடலத்தில் இருதயம் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் காணவில்லை’ என்றனர்! அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இருதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் மேலதிக பரிசோதனைகளுக்காக ஜே.ஜே. மருத்துவமனையின் தடயவியல் குழுவால் பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தெரிந்தது. அதன்பின் ஒருவழியாக மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கஸ்டடி மரண விவகாரத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், 3 கான்ஸ்டபிள்கள் என 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்தியபோது, சம்பவம் நடந்த நாளில் நின்றிருந்த தஷ்ரத் தேவேந்திரா மற்றும் அஃப்ரீன் தம்பதியினர் மீது, விஜய் சிங் தனது பைக்கின் ஹெட்லைட்களை வேண்டுமென்றே அணைத்து அணைத்து எரியவிட்டதாகத் தெரிகிறது.
இதனால், இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பெண் கொடுத்த புகாரின்படி, விஜய் சிங்கிடம் போலீஸ் விசாரணை நடத்தியபோது அவர் இறந்துவிட்டார்.மேற்கண்ட சம்பவம் காவல்துறையால் கட்டவிழ்த்துவிடும் வன்முறை மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைக் காட்டுவதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் போலீஸ் காவலில் நடக்கும் மரணங்கள் பொதுத் தளம், ஊடகங்கள், சட்டமன்றம், நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘லாக் அப்’ மரணங்கள் பெரும்பாலும் உடலியல் ரீதியான வன்முறை, மனரீதியான சித்திரவதை, குடிநீர், உணவு, தூக்கம் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளைத்தர மறுத்தல், சித்திரவதைக்கு மருந்துகளைப் பயன்படுத்துவது, குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை நோக்கிய அச்சுறுத்தல், உடலில் காயம் ஏற்படுத்துதல், மரண பயத்தை உணரும் அளவுக்கு சித்திரவதை, ஈரமான தரையில் தூங்க கட்டாயப்படுத்துவது, கடுமையான குளிர்காலங்களில் அல்லது அதிக வெப்ப காலங்களில் நிர்வாணமாக வைத்திருத்தல், கூர்மையான பொருள்களால் உடலின் முக்கிய பாகங்களில் காயப்படுத்துதல், மிளகாய்த் தூள் மற்றும் உப்பை உடலின் நுட்பமான பாகங்களில் தூவிவிடுதல் போன்ற முறையில் கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
இவையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் பெரும் சமூக மற்றும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வாய்மொழி பாலியல் துஷ்பிரயோகம் பாதிக்கப்பட்டவர்களின் கவுரவத்தை இழிவு படுத்தி அவருக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றது. இந்திய காவல்துறை மற்றும் பிற விசாரணை ஏஜென்சிகள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பல்வேறு சித்திரவதை விசாரணை முறைகளைப் பின்பற்றுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
அதன்படி, குற்றம்சாட்டப்பட்டவரை முதுகெலும்பில் அடிப்பது, கால்களின் பாதங்களில் லத்தியால் தாக்குவது, துப்பாக்கியை கழுத்தில் வைத்து மிரட்டுதல், மருத்துவ சிகிச்சை மறுப்பு, பற்களை வலுக்கட்டாயமாக பிரித்தெடுப்பது, பனி அடுக்குகளில் படுக்க வைத்தல், அந்தரத்தில் தொங்கவிடுதல், உடலில் மின்சாரம் செலுத்துவது, கால் நகங்களின் கீழ் கம்பிகளை செருகுவது, நீரில் மூழ்க வைத்தல், மூச்சுத் திணற விடுதல், கனமான உருளைகளின் கீழ் நசுக்குதல், கூர்மையான கருவிகளால் குத்துதல் போன்ற முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
இதுபோன்ற விசாரணை முறை சரியானதுதானா? இப்படித்தான் உண்மையைப் பெற முடியுமா? ‘இல்லை’ என்றுதான் சர்வதேச விசாரணை சட்டங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த சில வாரங்களுக்கு முன் 2017ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக மிகவும் தாமதமாக ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், சுற்றுச்சூழல், கொலை, கொள்ளை, சைபர் கிரைம் போன்ற குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.
கும்பல் தாக்கி கொலை, மத சம்பந்தப்பட்ட கொலை, கட்டப் பஞ்சாயத்துகளால் நிகழ்ந்த கொலைகள், செல்வாக்கு மிக்கவர்களால் செய்யப்பட்ட கொலைகள் ஆகியவை சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு அமைப்புகளால் கூறப்பட்டு வருகின்றன. அறிக்கையின்படி, அதிக குற்றம் நடந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் (56,011), இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா (31,979), மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கம் (30,992), நான்காம் இடத்தில் மத்தியப் பிரதேசம் (29,778), ஐந்தாம் இடத்தில் ராஜஸ்தான் (25,993) என அடுத்தடுத்த இடத்தில் மாநிலங்கள் உள்ளன.
பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் மொத்தம் 50,07,044 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், இந்திய தண்டனைவியல் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் மட்டும் 30,62,579. சிறப்பு மற்றும் மாநிலங்களின் சட்டத்தின் கீழ் 19,44,465 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2016ல் நாடு முழுவதும் மொத்தம் 48,31,515 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2017ல், பதிவான வழக்குகளின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில் 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேநேரம், போலீஸ் காவலில் இருந்த கைதிகள் உயிரிழந்ததில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 15 மரணங்கள் நடந்துள்ளன. மொத்தமாக நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 100 லாக்அப் மரணங்கள் நடந்திருந்தாலும், இதற்குக் காரணமானவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில், 33 போலீசார் கைதாகி உள்ளதாகவும், 27 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே 2016ம் ஆண்டு 96 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2017ல் போலீஸ் அதிகாரிகள் மீது 56 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்குகள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டவரை சித்ரவதை செய்ததாகப் பதிவாகியுள்ளன. இதில் 6 வழக்குகள் என்கவுன்டர் தொடர்பானவை. 2017ல் போலீஸ் காவலில் இருந்து 1,163 கைதிகள் தப்பியோடியதாகவும், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் லாக்-அப்பில் இருந்து 319 கைதிகள் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. எப்படியாகிலும், தனிமனித உரிமை பாதிக்கப்படுவதும், அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதும் அரச பயங்கரவாத்தின் மற்றொரு முகமே
செ.அமிர்தலிங்கம்
|