face to face வாசகர்கள் கேள்விகள்- குஷ்பூ பதில்கள்
நயன்தாராவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்..? - மு.ரா.பாலாஜி, சொர்ணக்குப்பம்.
ரொம்ப அழகான பெண். இனிமே நயன்தாரா திரும்பி வரவே முடியாதுனு சொன்னாங்க. அந்த சூழலில் அவங்க தன்னை மாற்றி, தன் தோற்றத்தையும் மாற்றி மீண்டும் வந்து மிகப்பெரிய ஓர் இடத்தை பிடிச்சு வச்சிருக்காங்க. நிச்சயம் அது பாராட்டக்கூடிய விஷயம்.
வேற எந்த ஒரு ஹீரோயினா இருந்தாலும், ‘கேரியர் ஃபினிஷ்டு’னு சொல்லி காணாமப் போயிருப்பாங்க. ஆனா, நயன்தாரா திரும்பி வந்ததோட நம்பர் ஒன் பொசிஷனையும் பிடிச்சு கம்பீரமா அமர்ந்திருக்காங்க. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
உங்கள் படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமல்லவா..? - விஸ்வநாத் பிரபு, திருச்சி; கவிதா, விழுப்புரம்.
உண்மை! ராஜாதான் வாழ்க்கை. காலையில எழுந்ததுல இருந்து அன்னிக்கு முழுவதும் ராஜா பாடல்கள்தான் கேட்கறேன். கார்ல பயணிக்கும் போதும் அவர் பாடல்கள்தான். சோகம், சந்தோஷம், ரொமாண்டிக் எல்லா சூழலிலும் அவர் பாடல்கள்தான் கேட்கறோம். இதை ராஜா சார்கிட்டேயே கூட சொல்லியிருக்கேன். அவர் சிரிச்சார். எனக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. ஆனா, இசைக் கடவுள்னா அது இளையராஜாதான்.
கலைஞரின் வசனத்தில் பேசி நடித்த அனுபவம்? - எம்.அந்தோணிபாபு, அம்பாசமுத்திரம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
அதை வார்த்தைகள்ல விவரிக்க முடியாது. அவரோட வசனங்கள்ல பேசி நடிக்கணும்னு சினிமாவுல நடிக்கற அத்தனை பேருக்குமே ஒரு லட்சியம் இருந்திருக்கும். அவரோட வசனங்கள்ல ஒருநாள் நானும் நடிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்ல. அவரோட வசனங்களை நான் பேசினதை ஒரு பொக்கிஷ தருணங்களாகத்தான் பார்க்கறேன்.
சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் படத்தை நீங்கள் இயக்குவது போல் கனவு கண்டேன். அது பலிக்குமா? - லாவண்யா,சேலம்.
கண்டிப்பா பலிக்காது. பலிக்கக் கூடாது! கெட்ட கனவு அது. வீட்ல டைரக்ட் பண்ணிட்டிருக்கறதே போதும்!
நீங்கள் ரசித்துப் பார்த்த பழைய தமிழ் சினிமா படங்கள் சிலவற்றை குறிப்பிடுங்களேன்? - மனோகர், மேட்டுப்பாளையம்.
பழைய படங்களின் தீவிர ரசிகை நான். பெரிய லிஸ்ட்டே இருக்கு. ‘சரஸ்வதி சபதம்’, ‘நவராத்திரி’, ‘சவாலே சமாளி’, ‘வசந்தமாளிகை’, ‘புதிய பறவை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘அன்பே வா’, வி.கே.ஆர்.சார், நாகேஷ் அங்கிள் நடிச்ச ‘ருத்ர தாண்டவம்’, ‘ஜானி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘மீண்டும் கோகிலா’னு பட்டியல் நீளம்.
அனுபவம் எந்த வயதில் ஜெயிக்கும்? எந்த வயதில் தோற்கும்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அனுபவம் ஜெயிக்கவோ, தோற்கவோ வயசு முக்கியமல்ல. பொறுமை இருக்கும்போதுதான் அனுபவம் தெரிய வரும். கஷ்டமான காலத்தில் பொறுமையா இருக்க முடியுமா என்பதை அதான் கத்துக்கொடுக்கும். வெற்றியை நோக்கி போய்ட்டிருக்கும்போது, இன்னிக்கு கஷ்டப்பட்டதன் பலன் நாளைக்கே கிடைக்கணும்னு நினைக்கிறப்ப தோல்வி அடையறோம். அங்க அனுபவம் தேவைப்படும்.
வெற்றியை சீக்கிரமே பார்த்துட்டா, தோல்வியும் சீக்கிரமே வந்துடும். அதே சமயம் வெற்றியை அடையறதுக்கு முன்னாடி தோல்வியைத் தழுவறது நல்லதுதான். அப்பதான் வெற்றியைத் தக்க வைக்கறது எப்படினு புரிய வரும். இன்னொரு விஷயம்- ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுபவம் ஒவ்வொரு மாதிரியா பளிச்சிடும். இதே கேள்வியை என்னோட இருபதாவது வயசுல கேட்டிருந்தா, என் பதில் வேறாக இருந்திருக்கும். அனுபவங்கள்தான் வெற்றியைத் தக்கவைக்கும்.
சுந்தர் உங்களை செல்லமாக எப்படிக் கூப்பிடுவார்..? - எல். அன்புக்கரசி, பாளையங்கோட்டை.
Wifi! வைஃபி. அவர் என்னை குஷ்னு கூப்பிட்டார்னா கொஞ்சம் கோபமா இருக்கார்னு அர்த்தம். மொதல்ல குட்டினு கூப்பிடுவார். இப்ப பசங்க இருக்கறதால அவங்கள குட்டிம்பார். வீட்ல நான் அவரை மாமானு கூப்பிடுவேன். அவர் கூட்டத்துல இருந்தார்னா... ‘என்னங்க’!
உங்களுக்கு எந்தெந்த மொழிகளில் பேசவும், எழுதவும் தெரியும்? - விநாயகமூர்த்தி, ஈரோடு.
ஆங்கிலம், இந்தி, மராத்தி, தமிழ்! இதில் தமிழ் கத்துக்கத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன். ‘மைடியர் மார்த்தாண்டன்’ ஷூட்டிங்கில் என்னைப் பார்க்க ரசிகர்கள் வந்திருந்தாங்க. ஆட்டோகிராப் கேட்டப்போ, இங்கிலீஷ்ல எழுதிக் குடுத்தேன். அப்ப பிரபு சார்தான், ‘என்ன நீ... இங்க இருந்துட்டு தமிழ் தெரியாம இருக்கே’னு திட்டினார். அப்ப எனக்கு தமிழ் எழுதத் தெரியாது. அவர்தான் ‘அன்பு குஷ்பு’னு ஆட்டோகிராப்ல தமிழ்ல எழுத கத்துக் குடுத்தார்.
இப்ப வரை ‘அன்பு குஷ்பு’னு எழுதுறேன். அந்த டைம்ல மூர்த்தினு என் கார் டிரைவர் ஒருத்தர் இருந்தார். தினமும் ஒரு தினத்தந்தி வாங்கி கைல கொடுத்து அதை வாசிக்கச் சொல்லி திருத்துவார். அப்படித்தான் பேசக் கத்துக்கிட்டேன்.
மொபைலில் படம் பார்க்கும் சூழல் வந்துவிட்டதே? - பீர்முகம்மது, சென்னை.
ஆமா. எல்லாமே டிஜிட்டல் ஆகிடுச்சு. இப்பவே பாதி வேலையை மிஷின் பண்ணுது. மோஷன் பிக்சர்ஸ் பிரமிக்க வைக்குது. ஆளே இல்லாமல் அனிமேஷன்கள் வியக்க வைக்குது. எதிர்காலத்தில் சினிமா உங்கள் விரல் நுனியில் இருக்கப்போகுது. என்னால அதை நிச்சயமா சொல்ல முடியும். உங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் தேவைப்படாது. ஓர் உருவம் மட்டும் கிரியேட் பண்ணிட்டு, நினைச்சே பார்க்க முடியாத விஷயங்களை எளிதா பண்ணிட்டு போவாங்க.
இயற்கை பாதிப்புக்கு நிதி கொடுக்க மட்டும் உங்களைப் போன்ற பிரபல நடிகர் நடிகைகளை ஆளும் அரசு பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், நீங்கள் எதாவது கருத்து சொன்னால் மட்டும் பாய்கிறார்களே? - சு.பிரபாகர், தேவகோட்டை.
பழகிடுச்சு. எப்பவும் நல்ல விஷயங்கள் பண்ணும்போது அது பிரேக்கிங் நியூஸ்ல இருக்காது. ஒரு தவறு நடக்கும்போது அதான் முதல் பக்க செய்தியா இருக்கும். இன்னொரு விஷயம்- நல்லது நடக்கும்போது யாரும் கவனிக்கறதில்ல. ஒரு தவறு நடக்கும்போதுதான் கவனிக்கிறாங்க. நாங்களும் மனுஷங்கதான். ஆறாவது அறிவு இருக்கும்போதுதான் தவறுகளை உணர முடியுது.
(பதில்கள் நிறைவுற்றது)
|