கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -36



திருப்புகழ் பாடப் பாட வாழ்க்கை மணக்கும்!

அஷ்டமா சித்திகளையும் அருணகிரிநாதருக்கு உபதேசித்து விட்டு அவரைக் கருணை பொங்க பார்த்தார் கந்தன். அதைக் கண்ட அருணகிரி, குகப்பெருமானைப் போற்றி மெழுகாக உருகினார்.

பக்தன் அடைந்த இன்பத்தைக் கண்டு தானும் அளப்பரிய ஆனந்தம் அடைந்தார் கந்தன். ஆனாலும் அருணகிரியை சோதிக்க வேண்டிய சமயம் வந்துவிட்டதால் தன் இன்பத்தை கட்டுப் படுத்திக் கொண்டார். மெல்ல பன்னிரு விழியாலும் அவரை நோக்கி பேச ஆரம்பித்தார். ‘‘என்ன அருணகிரி... மகிழ்ச்சிதானே? இனிமேல் உன்னால் ஆகாதது எதுவும் இல்லை. அஷ்ட மா சித்தியை நீ அடைந்து விட்டாய்!’’ கந்தன் கேட்ட த்வனியில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அதை அருணகிரி உணர்ந்தாரா என்று தெரியாது. ஆனால், முருகன் சொன்னதைக் கேட்டு விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்தார். அதை கவனித்த முருகன், ‘‘என்ன அருணகிரி... அஷ்ட மா சித்தி அடைந்ததில் உனக்கு மகிழ்ச்சி இல்லையா?’’ ‘‘சுவாமி... ஈசனுக்கு உபதேசம் செய்த தாங்கள் இந்த அடியவனுக்கும் உபதேசம் செய்ததை எண்ணித்தான் நான் அளப்பரிய ஆனந்தம் அடைந்தேன். இதற்கு நான் என்ன தவம் செய்தேனோ என்றே வியந்தேன். மற்றபடி அஷ்ட மா சித்தி அடைந்ததால் நான் எள்ளளவும் மகிழவில்லை...’’ தெளிவாகச் சொன்னார் அருணகிரிநாதர். ‘‘என்ன அருணகிரி உளறுகிறாய்..?’’ குழம்பியது போல் நடித்தபடியே கேட்டார் முருகன்.

‘‘இதற்கு முன் இந்த அஷ்ட மா சித்திகளை அடைந்த சித்தர்கள், காலத்தையும் மரணத்தையும் வென்று வாழ்ந்தார்களா?’’
‘‘ம்... இல்லை. அவர்களும் ஒரு நாள் சமாதி அடைந்து என்னோடு இரண்டறக் கலந்தார்கள்...’’‘‘அதேதான். பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள்! அஷ்ட மா சித்தி அடைந்த அகத்தியர் முதலிய சித்தர்கள் அவர்கள் அடைந்த சித்தியில் மயங்கவில்லை. தங்கள் பாதமே புகல் என்று வாழ்ந்தார்கள்.

எனில் அஷ்ட மா சித்தியை விட மிக மிகப் பெரிய செல்வம் தங்கள் பாதக் கமலங்கள்தானே? அதை நான் இன்னமும் அடைய வில்லையே! இந்த அஷ்ட மா சித்தி எல்லாம் அரைக் காசுக்கு பெறாத விஷயங்கள். உண்மையில் ‘முருகா குமரா குகா’ என்று தங்கள் நாமத்தை பாடுவதே பெரிய செல்வம்...’’‘‘புரியவில்லையே!’’ வேலவன், தன் நடிப்பைக் கைவிடவே இல்லை! அருணகிரியும் விடுவதாக இல்லை!

‘‘ஆம் முருகா! ‘வரதாமணி நீ முருகா!’ என்றால் எந்த செல்வம்தான் வராது. ஆகவே அஷ்ட மா சித்தியை விட மிகப் பெரிய செல்வம் தங்கள் நாமமும் திருவடியும்தான். இவை இரண்டையும் நான் என்றும் மறக்கக் கூடாது. அந்த வரம்தான் நான் வேண்டுவது...’’ முருகனை வேண்டிய
படியே வந்தனங்கள் செய்தார் அருணகிரிநாதர். அதைக் கண்ட முருகனுக்கு அளவில்லா ஆனந்தம்.

‘‘வென்றுவிட்டாய் அருணகிரி! வென்றுவிட்டாய்! இப்போது நீ சொன்னதை திருப்புகழாகப் பாடு... கேட்க என் பன்னிரு செவியும் தவம் கிடக்கின்றன!’’ கெஞ்சியது அந்த ஈசன் பெற்ற செல்வம். அதைக் கேட்ட அருணகிரி சற்றும் தாமதிக்காமல் தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார்.

வரதா மணிநீ... யெனவோரில்
வருகா தெதுதா... னதில்வாரா
திரதா திகளால்... நவலோக
மிடவே கரியா... மிதிலேது

- அருணகிரிநாதரின் இனிமையான குரல் விராலிமலை காடெங்கும் எதிரொலித்தது. அதைக் கேட்ட முருகன் தமிழில் தன்னை மறந்தார்.
கதை சொல்லிக் கொண்டே இருந்த நாகராஜனை உஷ்ணமாகப் பார்த்தார் அவரது நண்பர் ராகவன்.  ஆனால் நாகராஜன் கதையில் தன்னை மறந்திருந்தார். ராகவனுக்கு பொறுக்கவில்லை. ‘‘ஏன் டா... என் பிள்ளை சிகரெட்டைப் பிடிக்கிறான்... அவன திருத்த ஒரு கோயில் சொல்லுடானு கேட்டா நீ என்னென்னவோ சொல்லிக்கிட்டு இருக்கியே...?’’

அதைக் கேட்டு சுயநினைவுக்கு வந்த நாகராஜன் மெல்ல நகைத்தார்.‘‘அவர் உங்களுக்கான கோயிலைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கார். கொஞ்சம் பொறுங்க அண்ணா! அடுத்து உங்களோட கஷ்டத்துக்கான தீர்வுதான்...’’ ராகவனைத் தேற்றினாள் ஆனந்தி.‘‘பாட்டி! அருணகிரிநாதர் பயங்கரமான காட்டுல மாட்டிக்கிட்டபோது முருகன் வந்து அருள் செய்தார் இல்லையா? அதுமாதிரி மது, புகை இப்படி பயங்கரமான தீய பழக்கங்களுக்கு அடிமையானவங்களையும் முருகன் நல்ல வழிக்குக் கொண்டு வருவார். அவங்களுக்கு நல்ல புத்தியைத் தருவார்... அருணகிரிநாதருக்கு தந்தா மாதிரி! என்ன நான் சொன்னது சரிதானே பாட்டி..?’’ துள்ளியபடியே கண்ணன் கேட்டான்.

அதைக்கேட்ட நாகராஜன், ஆனந்தி இருவரும் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றார்கள். ‘‘அது மட்டுமில்ல கண்ணா! சர்வசக்தி வாய்ந்த அஷ்ட மா சித்தியை, திருப்புகழைக் கேட்கறதுக்காக அருணகிரிநாதருக்கு முருகன் சொல்லிக் கொடுத்தார். இதுல இருந்து என்ன தெரியுது..? நமக்குத் தெரிஞ்ச திருப்புகழைப் பாடி முருகனை வழிபட்டா நாம கேட்பதை மட்டுமல்ல... கேட்காததையும் கொடுப்பார்...’’ என்றார் நாகராஜன்.
‘‘எல்லாம் இருக்கட்டும் நாகராஜா... என் கஷ்டத்துக்கு தீர்வு சொல்லு...’’ ராகவன் இடையில் வெட்டினார்.

‘‘அப்படியே இந்த அருணகிரி நாதர் கதைய புதுக்கோட்டை மகாராஜாக்கு விராலிமலை முருகன் கோயில் பட்டர் சொல்றதா சொன்னீங்களே தாத்தா... அதுக்குப் பிறகு என்ன ஆச்சு? அதையும் சொல்லுங்க..?’’ ராகவனோடு சேர்ந்து கண்ணனும் பரபரத்தான். ‘‘உங்க ரெண்டு பேர் கேள்விக்கும் அடுத்து இவர் சொல்லப்போற கதைதான் பதில்...’’ ஆனந்தி புதிர் போட்டாள். தன் மனைவியைப் பார்த்து மெல்ல நகைத்தபடியே கதை சொல்ல ஆரம்பித்தார் நாகராஜன்.

விராலிமலை முருகன் கோயிலில் அந்த பட்டர் அற்புதமாக அருணகிரி நாதரின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்:
‘‘அருணகிரிநாதருக்கு முருகன் உபதேசம் செய்த இடம் இன்றளவும் இங்கு இருக்கு. அந்த இடத்தில் நின்றாலே அற்புத அதிர்வலையை உணரலாம். நீங்கள் மலை இறங்கிச் செல்லும்போது அதை அவசியம் சேவித்து விட்டுச் செல்ல வேண்டும்....’’ அந்த சிவாச்சாரியார் உரிமையோடு மன்னரிடம் சொன்னார்.

மன்னரும் ஆமோதிப்பாக தன் சிரசை அசைத்தார்.அப்போதுதான் அந்த பட்டர் இரவு வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்தார். அர்த்தஜாம பூஜை செய்யவேண்டுமே! இப்படி கதையில் மெய்மறந்து இருந்துவிட்டோமே... புலம்பிக் கொண்டே பூஜை செய்ய சன்னதியை நோக்கி நடந்தார்.
அங்கு அர்த்த ஜாம பூஜைக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் தயாராக இருந்தன. மன்னரும் பூஜை வேளையில் முருகனைச் சேவிக்க சன்னதிக்கு அருகில் வந்தார். வேத மந்திரங்கள் ஒரு புறம் ஒலிக்க, மற்றொரு புறம் ஓதுவார்கள் திருப்புகழ் கானம் செய்ய, பூஜை வெகு விமரிசையாக நடந்தது.

பூஜையின் நிறைவு அங்கமாக வெற்றிலை பாக்கு பழம் அடங்கிய தட்டு சுவாமி நிவேதனத்திற்காக கொண்டு வரப்பட்டது.
அப்போது எதேச்சையாக மன்னரின் பார்வை அந்தத் தட்டின் மீது விழுந்தது. அதில் அவர் எதைக் கண்டாரோ தெரியாது. கோபம் பற்றிக் கொண்டு வந்தது. ‘‘நிறுத்துங்கள்...’’ மன்னர் உரக்க குரல் கொடுத்தார்.உடனே மேளதாளங்கள், வாத்தியங்கள், வேத மந்திரங்கள், திருப்புகழ் கானம் அனைத்தும் நின்றன.   

மன்னரின் ஆவேசக் குரலைக் கேட்டு பூஜை செய்துகொண்டிருந்த பட்டர் விக்கித்துப் போனார். ‘‘மன்னர் மன்னவா! பூஜையை பாதியில் நிறுத்தச் சொன்னதன் காரணம் என்னவோ?’’ தயங்கிய படியே கேட்டார்.‘‘என்ன அபத்தம் இது! இறைவனுக்கு படைக்கப்படும் தாம்பூலத் தட்டில் வழக்கத்துக்கு மாறாக ஒரு சுருட்டு (ஒருவகை புகை யிலை ) உள்ளதே... இறைவனுக்கு புகையிலையை சமர்ப்பிக்கலாமா..? அதை வேதம் படித்த நீர் ஆமோதிக்கலாமா?’’ விராலி மலையில் இருந்த சிங்கங்களே ஸ்தம்பிக்கும் வகையில் மன்னர் கர்ஜித்தார்.

‘‘காலம் காலமாக கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்கம்தான் மன்னா இது... அதை மாற்ற நமக்கு அதிகாரம் கிடையாது. இதற்குப் பின் முருகனின் அற்புத திருவிளையாடல் ஒன்று உள்ளது...’’ பட்டர் என்னவோ சொல்ல வந்தார். அவர் சொல்வது எதையும் மன்னன் கேட்கும் மனநிலையில் இல்லை. அந்த தாம்பூலத் தட்டை விட்டெறிந்தார். அதற்கு மாற்றாக பலவகை பழங்களோடு கூடிய  அற்புதமான தாம்பூலம் இறைவனுக்கு படைக்க கொண்டு வரப்பட்டது.

மன்னரின் கோபத்திற்கு பயந்து பட்டரும் காலம் காலமாக விராலிமலையில் நிகழ்ந்து வந்த அற்புத சம்பிரதாயத்தை மீறினார். பூஜைகள் இனிதே நிறைவடைந்ததும் மன்னன் காதார திருப்புகழைக் கேட்டு விட்டு கண்ணயர்ந்தார். பட்டருக்கோ உறக்கம் வரவில்லை. மரபை மீறி விட்டோமே என்ற மனக்கவலை அவருக்கு. முருகன் சன்னதியில் குற்ற உணர்வால் புழுங்கியபடியே இருந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மன்னர் கனவு ஒன்றைக் கண்டார்.

மேகத்தைப் பிடித்து அதில் வடித்தாற்போல ஒரு நீல மயில். அந்த மயில் மீது பவழ மா மலை போல செந்நிற காந்தியுடன் ராஜ கம்பீரமாக அமர்ந்திருந்தார் கந்தன். என்றும் கருணை மழை பொழியும் கந்தன் மதி வதனம், அன்று கோபத்தில் எரிமலையைப் போல காணப்பட்டது.
அதைக் கண்ட மன்னர் அதிர்ச்சியில் பயந்து நடுங்கினார்.

‘‘முருகப் பெருமானே! வள்ளி மணவாளா! கருணை பொழியும் தங்கள் சிரங்கள் ஆறும் இன்று சினத்தோடு காணப்படுகிறதே... பிரபோ யார் என்ன அபச்சாரம் செய்தார்கள்..? சொல்லுங்கள்,உடன் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குகிறேன்...’’

‘‘யார் தவறு செய்தார்கள் என்று சொல்கிறேன். ஆனால், நீ நான் சொல்வதைச் செய்ய வேண்டும். சம்மதம்தானே..?’’ கோபம் என்னும் நெருப்பின் அனல் காற்றைப் போல இருந்தது முருகனின் குரலும் த்வனியும்.‘‘கட்டளை இடுங்கள் பிரபோ! உடன் தங்கள் எண்ணம் நிறைவேற்றப்படும்!’’ கைகுவித்து
கண்ணீர் மல்க கேட்டார் மன்னர்.‘‘தவறு செய்தது வேறு யாரும் இல்லை... சாட்சாத் நீதான்...’’ திட்டவட்டாக கந்தனிடம் இருந்து பதில் வந்தது!  

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்