60 நாட்கள்ல என்கிட்ட 70 முறை கதை சொன்னார் இயக்குநர் லோகேஷ்!



தொலைக்காட்சிகளில் கவுண்டர் டைலாக் ப்ராங் கால் மூலம் பிரபலமானவர், தீனா. இப்போது சினிமாவிலும் கலக்கத் தொடங்கியிருக்கிறார். ‘கைதி’ நல்ல விசிட்டிங் கார்ட் ஆக இவருக்கு அமைந்திருக்கிறது. ‘‘சொந்த ஊர் திருவாரூர் பக்கம் நாரணமங்களம் கிராமம். விவசாயக் குடும்பம். என்ஜினியரிங் படிக்கும் போதே காலேஜ் கலை நிகழ்ச்சிகள்ல மிமிக்ரி, காமெடியெல்லாம் பண்ணுவேன்.

நண்பர்கள் எல்லாம் பாராட்டி ஏத்தி விட்டாங்க! போதாதா? காலேஜ் முடிச்ச மறுநாளே சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துட்டேன்! சிவகார்த்திகேயன் அண்ணாதான் நமக்கு மானசீக ரோல் மாடல்!’’ என்று சொல்லும் தீனா, சென்னை வந்து தொலைக்காட்சி நிறுவனங்களில் காமெடி நிகழ்ச்சிகளுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக வேலை பார்த்திருக்கிறார். அப்படியே நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடங்கியிருக்கிறார்.

‘‘சினிமா சான்ஸ் தேடியும் அலைஞ்சேன். ‘பவர் பாண்டி’, ‘தும்பா’ மாதிரி சில படங்கள்ல காமெடி ரோல் கிடைச்சது. அந்த கேப்புல சைக்கிள் ஓட்டி என்னை ப்ரூவ் பண்ணினேன். இண்டஸ்ட்ரிக்குள்ள என்னை அடையாளம் தெரிய ஆரம்பிச்சப்ப ‘கைதி’ ஆஃபர் வந்தது.‘உன் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதனாலயே படத்துக்கு நீ தேவைனு நினைச்சேன்’னுஇயக்குநர் லோகேஷ் சொன்னார். என் போன் கால் கலாய் வீடியோஸ் நிறைய பார்த்திருக்காராம்!

ஆனா, ‘கைதி’ல என் வாய்ஸ் அந்த டோன்ல இருக்காது. டப்பிங் போனப்ப என் மாடுலேஷனையே மாத்தி எனக்கே என் வாய்ஸை புதுசா காட்டினார்!’’ கண்சிமிட்டும் தீனா, கதையுடன் பயணிக்கும் எமோஷனல் கேரக்டரில், தான் நடிக்க வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நனவாகி இருப்பதாக நெகிழ்கிறார்.

‘‘தொடர்ந்து கதைக்கு ஏத்த கதாபாத்திரங்களா நடிக்கணும்னு விருப்பம் இருக்கு. ‘கைதி’ல கொஞ்சம் சீரியஸ் ரோல். பேசிக்கா அந்தளவு சீரியஸான ஆள் நான் இல்ல... அதனால கொஞ்சம் சிரமப்பட்டேன்.படத்துல மத்தவங்களுக்கு எல்லாம் சின்னச் சின்னதா வசனம் இருக்கும். எனக்கு மட்டும் நீளம்! அதனால ஷூட்டிங்குக்கு முன்னாடி பயிற்சி எல்லாம் கொடுத்து தயார்படுத்தினாங்க.

கார்த்தி அண்ணனோடு நடிக்கிறப்ப ரீடேக் வாங்கி சொதப்பிடக் கூடாதுனு சின்சியரா பயிற்சி எடுத்தேன். முதல் ஷெட்யூல்ல அவருக்கும் எனக்கும் காம்பினேஷன் குறைவு. அதனால அவர்கிட்ட சரியா அப்ப பேசலை. கொஞ்சம் பயம் வேற. ஆனா, அடுத்தடுத்த ஷெட்யூல்ஸ்ல அண்ணனோட நெருக்கமாகிட்டேன்.

சமூகத்து மேல அண்ணனுக்கு அக்கறை உண்டு. நியூஸ் பேப்பர்ல ஏதாவது வருத்தமான செய்தி படிச்சார்னா அப்செட் ஆகிடுவார். விவசாயத்தைப் பத்தி அதிகம் பேசுவார். தன்னால முடிஞ்ச உதவிகளை மக்களுக்கு செய்துட்டே இருக்கார். ‘உனக்கு தெரிஞ்சவங்கள்ல யாருக்காவது உதவி தேவைப்பட்டா சொல்லு’னு என்கிட்ட சொல்லியிருக்கார்.

அவருக்கு லாரி ஓட்டணும்னு சின்ன வயசுல இருந்து கனவாம். இந்தப் படத்துல அது நிறைவேறினதுல அவருக்கு சந்தோஷம். ஆனா, ஷூட் முடிஞ்சதும் ‘இனிமே லாரியே ஓட்ட மாட்டேன் தம்பி! பவர் ஸ்டியரிங் இல்லாம பழைய லாரி ஓட்டறது ரொம்ப கஷ்டம்’னு சொன்னார். படத்துல லாரி சேஸிங் ரீடேக் ஆகும்போதெல்லாம் அவரே வண்டியை ரிவர்ஸ் எடுத்து பழையபடி நிறுத்துவார்.

நரேன் சாரும் கார்த்தி அண்ணனும் சேர்ந்தாங்கன்னா அந்த இடமே கலகலனு இருக்கும். மாத்தி மாத்தி கலாய்ச்சுப்பாங்க. பிரேக் அப்ப என்னோட பிராங் கால் வீடியோஸை அவங்ககிட்ட காட்டுவேன். நரேன் சார் நடிச்ச ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தை கலாய்ச்சு நான் பண்ணின வீடியோவைக் காட்டினப்ப லேசா ஜெர்க் ஆனார். ‘எப்படிப்பட்ட படம் தெரியுமாடா அது...’னு சொல்லி சிரிச்சார்.

க்ளைமாக்ஸுக்கு முன்னாடி வர்ற மண் சண்டை அப்ப எல்லாமே ரிஸ்க் எடுத்து நடிச்சோம். டஸ்ட் அலர்ஜில எனக்கு உடம்பே முடியாமப் போயிடுச்சு..’’ என்ற தீனா, இயக்குநர் லோகேஷும் ஈகோ இல்லாமல் பழகக் கூடியவர் என்கிறார்.

‘‘60 நாட்கள் படத்துல நடிச்சேன்... அதுக்குள்ள என்கிட்ட 70 முறை கதை சொல்லியிருப்பார்! எடுக்கற சீனை மட்டும் சொல்ல மாட்டார். ஒவ்வொரு முறையும் கதையை சொல்லி அப்புறம்தான் சீன் சொல்லுவார்.

இதனால கதையை விட்டு விலகாம இருக்க முடிஞ்சுது... முழுப் படத்தையும் நான் தியேட்டர்லதான் பார்த்தேன். எபெக்ட்ஸ், பின்னணியோட சேர்ந்து பார்க்கறப்ப ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்.படத்துல நடிச்ச எல்லாருமே இப்ப ‘கைதி 2’க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்!’’ என்கிறார் தீனா.

திலீபன் புகழ்