COFFEE TABLEபொய் சொல்லாத க்ளிக்!

பாலிவுட்டில் பரிணீதி சோப்ரா நடிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் அதிதி ராவ் ஹைதரி.  மலையாளத்திலும் ஒரு படம் நடித்து முடித்துவிட்டார். இப்போது மும்பையில் புது போட்டோஷூட் ஒன்றை செய்திருக்கிறார். மாதுரி தீக்‌ஷித், பூஜா ஹெக்டே என பலரையும் க்ளிக்கிய செலிபிரிட்டி போட்டோகிராபரான ரிஷபக்கின் ஷூட் அது. புது போஸ்களை எல்லாம் இன்ஸ்டாவில் கொட்டி, அசத்தல் லைக்குகளை அள்ளிவருகிறார் அதிதி.

மட்கா ரொட்டி

நம்மூர் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கல்தோசை ஃபேமஸ் என்றால், நாக்பூரில் மட்கா ரொட்டி. மைதாவில் தயாராகும் மட்கா ரொட்டியின் மேக்கிங்கை ஃபேஸ்புக்கின் ‘Street Food Recipes’ பக்கத்தில் ‘Slimy Matka Roti Preparation’ என்ற தலைப்பில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். ஷேர்களைக் குவிக்கிறது அந்த வீடியோ. இதுபோக நாக்பூர் பெண்கள் கொதிக்கும் மண்பானையின் மீது வீச்சு மாவைப் போட்டு மட்கா ரொட்டியை ரெடி செய்து தருகிறார்கள்.

தூக்கத்தைத் தொலைக்கும் பெண்கள்

‘‘சமூக வலைத்தளங்களில் இயங்கும் ஆண்களை விட, பெண்கள்தான் அதிகளவில் மன ரீதியாக பாதிப்படைகின்றனர்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ‘லான்செட் சைல்ட் அண்ட் அடாலசென்ட் ஹெல்த்’ என்ற நிறுவனம் செய்த ஆய்வு.சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளம் ஆண், பெண்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

இவர்கள் எல்லோருமே சமூக வலைத்தள பயனாளிகள். இவர்களில் 90 சதவீதம் பேர் எல்லா வகையிலும் நெகட்டிவ்வாகவும், கவலையுடனும் இருந்தனர். குறிப்பாக ஆண்களை விட பெண்களின் நிலை ரொம்பவே கவலையளிக்கிறது. முக்கியமாக இரவில் உறங்காமல் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பத்து பேரில் ஏழு பேர் பெண்கள்!

இதயத்தைக் கண்காணிக்கும் வாட்ச்

கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் வாட்ச்சான
‘சீரிஸ் 5’. உங்களுக்கு விருப்பமான ஸ்டிராப்களை மாற்றிக் கொள்ளும் வசதியிருப்பதால் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்டிராப்பை மாற்றும்போது வாட்ச்சின் வடிவமும் புதிதாக மாறுகிறது.

இது தினம் தினம் புது வாட்ச்சை கட்டும் அனுபவத்தை தருகிறது. இதிலிருக்கும் இசிஜி ஆப் எல்லா நேரமும் உங்களின் இதயத்தைக் கவனித்துக் கொண்டே இருக்கும். இதுபோக தண்ணீர் புகாத பாதுகாப்பு, அழகான வடிவமைப்பு, கையில் இருக்கும் உணர்வே இல்லாத அளவுக்கு இதன் எடை என அசத்துகிறது சீரிஸ் 5. விலை ரூ.40,900லிருந்து ஆரம்பிக்கிறது.

முதலையிடமிருந்து தோழியை மீட்ட சிறுமி!

ஒரே நாளில் ஜிம்பாப்வேயின் சாகச நாயகி ஆகிவிட்டாள் ரெபெக்கா. கடந்த வாரம் சின்ட்ரெல்லா என்ற கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிகள் ஓர் ஏரியில் குளித்தனர். லடோயா என்ற சிறுமி முதலையிடம் மாட்டிக்கொண்டாள்.உடனே முதலையின் முதுகின் மீது தாவிக்குதித்து அதன் கண்ணைக் குத்தியுள்ளாள் ரெபெக்கா.

நிலைகுலைந்து போன முதலை, லடோயாவை விட்டுவிட்டுப் போய்விட்டது. லடோயாவைத் தாங்கிக் கொண்டு ஏரியில் நீந்தி கரையை அடைந்த ரெபெக்காவின் வயது 11. சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள் லடோயா. காயம் ஏதுமில்லாமல் வைரலாகிவிட்டாள் ரெபெக்கா!

குங்குமம் டீம்