ஹீரோ கை காட்டுகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா? சுந்தர்.சி அதிரடி‘ஆக்‌ஷன் ரெடி. டார்கெட் பக்கா. திருப்தியாக இருக்கிறார் இயக்குநர் சுந்தர். சி.படத்தின் டிரைலர் வெளியாகி இணையப் பரப்பில் அதகளம் பண்ணிக் கொண்டிருக்கிறது.‘‘இந்தளவுக்கு விஷால் பெண்டு நிமிர்ந்து பார்த்தது இல்லை. அவ்வளவு ஆக்ரோஷமா வர்றார். நீங்க பார்த்த ஒவ்வொரு காட்சியிலும் படத்தில் கலகலப்பும், எனர்ஜியும், ஆக்‌ஷனும், வேகமும் ஒவ்வொரு ஃப்ரேம்லயும் தெறிக்கும்.

எல்லாத்தும் தயார்னு ஒரு ஹீரோ நிற்கும் போது, செலவழிக்க அனுமதிக்கிற தயாரிப்பாளர் ரவீந்திரன் இருக்கும்போது எல்லாமே சாத்தியம். முழு ஆக்‌ஷனில் விஷயங்களை அடுக்கியிருக்கேன். மாஸ் ஹீரோவாக விஷாலுக்கு செம மாஸான படம்...’’ என சந்திப்புக்கு ஆரம்பமாகிப்  பேசுகிறார் இயக்குநர் சுந்தர்.சி. இன்னும் பக்குவத்தில் இருக்கிற அரிதான கமர்ஷியல் மாஸ்டர்.

உங்ககிட்டே இவ்வளவு தரமான ஆக்‌ஷனை எதிர்பார்க்காதது உண்மை…சினிமாவிற்கு வந்ததும் நான் அதிகமா எதிர்கொண்ட கேள்வி, பழக்கமான கேள்வி, சின்னப் புன்னகையோடு தாண்டிப்போகிற கேள்வி ‘என்ன... இது உங்க படம் மாதிரியே இல்லையே...’ என்பதுதான்.

அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த போதுதான் நான் கிராமத்தைப் பார்த்தேன். நான் பண்ணின முதல் படமே கிராமம், திருவிழா, கோயில்னு அமைஞ்சது. என் வீட்டிலேயே ‘டேய், உனக்கு என்னடா கிராமம் தெரியும்’னு கேட்டாங்க.

அடுத்து ‘உள்ளத்தை அள்ளித்தா’ செய்தபோது, ‘உன் படம் மாதிரியே இல்லையே’ன்னு சொன்னாங்க. ஏன்னா, நான் சராசரி ஆளுதான். காமெடியில் வித்தைக்காரன் இல்லை. ‘அரண்மனை’ பார்த்ததும் ‘உங்க படம் மாதிரியே இல்லை’ன்னாங்க. ஐ.டி. பசங்களை வைச்சு ‘தீயா வேலை செய்யணும்
குமாரு’ எடுத்தேன்.

அப்பவும் ஆச்சர்யம். உண்மையில் எனக்கு என் படம்னா எப்படி இருக்கணும்னு தெரியலை. எனக்கு ஒரு கதையைச் சொல்லி கன்வின்ஸ் பண்ணத் தெரியாது. ஆனால், ஏற்ற இறக்கமா இருந்தாலும் சக்ஸஸ்ஃபுல்லா இருந்து வந்திருக்கேன்.‘ஆக்‌ஷன்’ பத்தி நிறையப் பேச்சிருக்கு….

எனக்குப் பிடிச்சது பிரம்மாண்டமான படங்கள்தான். அதற்கான வாய்ப்பு முன்னாடி அமைஞ்சதில்லை. எனக்கு சில படங்களைப் பார்க்கும்போது சிரிப்பா இருக்கும். இருநூறு, முந்நூறு கோடிம்பாங்க. சினிமாத் தொழில் தெரிந்தவன்ங்கிற விதத்தில் எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியாது. அடப்பாவிகளா, எதுக்குடா இவ்வளவு செலவுன்னு தோணும். படத்தை எடுத்து தொழில் கத்துக்கிற மாதிரி இருக்கும். சரியாக பிளான் பண்ணி படம் செய்தால் இதில் ஆறில் ஒரு பங்குதான் ஆகும்.

வந்த தமிழ்ப்படங்கள், இந்திப் படங்களைப் பார்க்கிறபோது வயித்தெரிச்சலா இருக்கு. யார் செய்தாலும் பணம் பணம்தானே! ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட் என்கிற மாதிரி படம் வெற்றி பெற்றாலும், தயாரிப்பாளருக்கும், வெளியிட்டவங்களுக்கும் நஷ்டம் ஆகுது. என்ன காரணம்… பட்ஜெட் எகிறியிருக்கும். வெட்டி விரயம்தான்.

இந்த ‘ஆக்‌ஷன்’ பெரிய பட்ஜெட். மேற்சொன்ன பெரிய பட்ஜெட்களை விட ஆறில் ஒரு பங்குதான் செலவு! என்னால் அப்படி எடுக்க முடியும். இதைவிடவும் பெரிய படம் எடுப்பேன். ஆக்‌ஷன் இப்படி வந்ததுக்குக் காரணம் விஷால்தான்.

ஃபைட்டர்ஸ் சுவத்துல மோதி, மேலே பறந்து, ஃபேனை உடைச்சு, தரையில் விழும்போது பாவமாக இருக்கும். ஆனால், இதில் ஸ்டைலை மாத்தியிருக்கேன். இதற்கு ஹீரோவின் ஒத்துழைப்பு இருந்தது. அவருக்கு உடம்பில் அடிபடாத இடமே இல்லை. விஷால் 99% டூப் போடாமல் நடிச்சார். அடிப்படையான சினிமாத்தனத்தை மாற்றியிருக்கேன்.

தமன்னா கவர்ச்சியில் பின்றாங்க…
இந்தப் படத்திற்கு மூணு ஹீரோயின்ஸ். ஹீரோவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருத்தர் வருவாங்க. தமன்னா இதுல ஆயுதம் எடுக்கிறாங்க. ஐஸ்வர்யா லட்சுமி மலையாளத்தில் அதிர்ஷ்டக்கார தேவதை. அவங்க நடிச்ச படமெல்லாம் அங்கே ஹிட். பிரமாதமான பெர்ஃபார்மர். முதல் பாதி முழுக்க அவங்கதான்.

லொகேஷனில் அவங்க அறுந்தவால் மாதிரி இருப்பாங்க. அந்தக் கேரக்டரையே படத்திலும் வச்சிட்டேன். இன்னொரு பொண்ணா விஷாலுக்கு இணையாக வேணும். அழகா இருந்து, கொஞ்சம் ஆம்பிளை மாதிரி எகிறிக்கிட்டு, கிளாமராகவும் இருக்கணும். இதற்கு ‘விநாயகர்’ சீரியலில் பார்வதியாக நடிக்கிற ஆகான்ஷா பூரி செட் ஆனார். பார்வதியாக நடிச்சாலும், பயங்கர மாடர்ன். அவங்க இடமும் இதில் தெளிவாக இருக்கு.
தயாரிப்பாளர் பாதிக்கப்படாமல் படம் எடுக்கிறதில் சிக்கனமும், அக்கறையும் இப்ப டைரக்டர்களிடம் குறையுதே…. நீங்க, கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி ஒருசிலர்தானே இருக்கீங்க..?

கஷ்டமா இருக்கு. நிறைய டைரக்டர்கள் பெரிய ஹீரோவை கமிட் பண்ணி படம் எடுக்கும்போது, அவங்களை திருப்திப்படுத்துவதில் குறியா இருக்காங்க. பெரிய செட் போடுறோம், 2000 பேரை வைச்சு ஷாட் எடுக்குறோம், ஒரு ஷாட்டை ஒருநாள் எடுக்குறோம்னு ஹீரோவை
இம்ப்ரஸ் பண்ண ரெடியா இருக்காங்க.

பணம் போடுற புரடியூசரை அவங்க யோசிக்கிறதில்லை. ஹீரோ கை காட்டுகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களான்னு கேள்வி எழுது. ஹீரோயிசம், பாடல், ஃபைட்டுக்கு என்ன பில்டப், எப்படி ஹீரோவை வாழ்த்தலாம்னு போகுதே தவிர வெற்றிக்கான வழியா தெரியலை. படத்திற்கு புரடியூசர்தான் பிள்ளையார் சுழி. அவரை எதிரி மாதிரி பார்த்தால் எப்படி?

எனக்கு பெரிய படம் பண்ணணும்னா விஷால் இருக்கார். கூடப் பிறந்த தம்பி மாதிரி. அவரும், நான் சரியா படம் பண்ணுவேன்னு நம்புறார்.    
இங்கேசம்பளத்துக்கு 80% போகும்போது எப்படி படத்துக்கு செலவு செய்து குவாலிட்டி காண்பிக்கிறது? அது ஆடியன்சை ஏமாத்துற வேலை இல்லையா? சம்பளத்தையும் வாங்கிட்டு, இஷ்டத்திற்கு செலவையும் ஏத்திவிட்டு, புரடியூசரை அழிக்கக்கூடாது இல்லையா? ஆடியன்ஸ் கொடுத்த காசுக்கு பிரம்மாண்டம் வரணும். புரடியூசருக்கு 2% லாபமாவது கையில் நிற்கணும். அதுதான் முக்கியம்.

‘சங்கமித்ரா’ என்னாச்சு?
அது பெரிய ஏமாற்றம். நாலு வருஷத்திற்கு மேல் அதற்கான உழைப்பை போட்டிருக்கோம். அந்த நேரத்தில் பல படங்கள் செய்து என் பணத்தை பெருக்கியிருக்கலாம். ஆனால் திட்டமிட்டபடி வரலை. வந்திருந்தா இந்தியாவிலேயே அது மிகப்பெரிய படம். அப்படி ஒரு ஸ்கிரிப்ட். ஒரு நாள் நிச்சயம் என் ‘சங்கமித்ரா’ பிரம்மாண்டமாக திரையைத் தொடுவாள்.

இதுவரை பெற்ற அனுபவத்தின் சாரம் என்ன ?
இதுவும் கடந்து போகும்ங்கிறதுதான். Half glass fullன்னு சொல்வாங்க. வாழ்க்கையை பாஸிட்டிவ்வாக பார்க்கிறது. நான் அரைகிளாஸ் தண்ணி இருக்கேன்னு சொல்ற கட்சி. பாதி காலியாயிருக்கேன்னு சொன்னதேயில்லை. ஒரு ஃபார்முலா பார்த்திருக்கேன். இப்ப தெளிஞ்ச நீரோடை மாதிரியிருக்கேன். நினைச்சால், நல்ல ஸ்கிரிப்ட்ன்னா நாளைக்கே ஷூட்டிங் போற திறமை, பக்குவம், அனுபவம், எனக்கான மார்க்கெட்னு
எல்லாம் இருக்கு.

சினிமா ஒரு தேவதைதான். அதற்குத் தேவை சின்சியாரிட்டி. அறிவாளியா, முட்டாளா இருந்துட்டுப் போங்க. இங்கே சின்சியாரிட்டியாக இருந்தால் அது உங்களை சந்தோஷமா வச்சுக்கும். முட்டித்தள்ளிடாமல் ஆதரவாகப் பார்க்கும். ‘ஆக்‌ஷனி’ல்பாருங்க... முதல் நாள் ரிஷிகேஷ், அடுத்த நாள் டேராடூன், அதற்கடுத்து ஜெய்ப்பூர்…. அதற்கடுத்து ஐரோப்பிய நாடுகள்னு தீராத அனுபவத்தையும் பார்வையையும், பயணத்தையும் தருது. எல்லா வைப்ரேஷன்லயும் நிறைஞ்சு கிடக்கு உலகம். என்னால் யாருக்கும் கெடுதல் பண்ண முடியாது. அதுதான் என் சந்தோஷமும் கூட!                  
நா.கதிர்வேலன்