கெய்லா முல்லர் ஆபரேஷன்!சிரியாவின் வடமேற்குப் பகுதியின் ஒரு தொலைதூர கிராமத்தின் சுரங்கப் பாதைக்கு மேலே ஒரு நவீன வீட்டில் வசித்து வந்த 48 வயதான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிகடந்த அக்டோபர் 26ம் தேதி இரவு கேட்ட நாய்களின் இரைச்சல் தனது இறுதி மணித்துளிகளுக்கானது என்பதை அறியவில்லை.

ஆம். அவை சிரியா தெருநாய்கள் அல்ல. போர்ப் பயிற்சி பெற்ற அமெரிக்க ராணுவத்தின் வேட்டை நாய்கள்.அல்கொய்தாவுக்குப் பிறகு, சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி, 2012ம் ஆண்டிலிருந்தே தேடப்படும் நபர். அவரது தலைக்கு விலை ரூ.177 கோடி.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் மூலம் உலகப் புகழ் பெற்ற அல்கொய்தா இயக்கத்தின் நீட்சிதான் ஐஎஸ்ஐஎஸ். இஸ்லாமியக் கடும்போக்கு கொண்ட இதன் முக்கியமான தலைவர்கள் அனைவரும் 2006ம் ஆண்டு ஜூன் 8ல் அமெரிக்க விமானத் தாக்குதலுக்கு பலியாகிய பின்னர் அபூ உமர் அல்-பாக்தாதி, அபூ ஹம்ஸா அல்-முஹாஜிர் ஆகியோர் ஈராக் நாட்டின் அல்கொய்தா அமைப்புக்கு தலைமை ஏற்றனர்.

இவர்களுக்குப் பின்னரே அபூபக்கர் அல் பாக்தாதி, அல்கொய்தாவின் தலைமைப் பதவிக்கு வந்தார். பாக்தாதி பதவிக்கு வந்ததன் பின்னர் ‘ஈராக் இஸ்லாமிய தேசம்’ என்ற பெயரில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். இவரது ராணுவ நடவடிக்கைகள் மெல்ல மெல்ல அல் கொய்தா அமைப்பை விடவும் கடும் தீவிரப் போக்கு கொண்டதாக மாறியது.

சிரியாவிலும் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய இனக் குழுக்களின் போராட்டங்கள் தீவிரமான நிலையில்,2012ம் ஆண்டு அல் கொய்தாவைச் சேர்ந்த சிலர் சிரியாவுக்குச்சென்று ‘ஜப்ஹதுன் நுஸ்ரா’ என்ற பெயரில் அல்கொய்தாவின் கிளை அமைப்பொன்றை நிறுவினர்.

2013ம் ஆண்டு அபூபக்கர் அல் பாக்தாதி ஈராக்கில் உள்ள இஸ்லாமிய தேசமும் சிரியாவின் ‘ஜப்ஹதுன் நுஸ்ரா’ என்ற பெயரில் போராடும் கிளை அமைப்பும் ஒரே இயக்கம் என்பதால் இரண்டையும் இணைத்து ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேசம்; (ISIS - The Islamic state of Iraq and Siria) என புதுப் பெயரிட்டு உலகிற்கு பிரகடனம் செய்தார்.

இதுதான் அல்கொய்தாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பையும், பாக்தாதியையும் உலகுக்கு வெளிச்சப்படுத்தியது.
2014 ஜூன் 29ம் தேதி பாக்தாதி ஒரு பிரகடனம் வெளியிட்டார். உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள், அமீரகங்கள், மன்னராட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு விட்டதாகவும், அனைத்து பகுதிகளும் ‘இஸ்லாமிய ஸ்டேட்’ என அழைக்கப்படும் என்றும், அதன் தலைவர் பாக்தாதி என்றும் இயக்கத்தின் பேச்சாளர் அபூ முஹம்மத் அத்னானி பிரகடனம் செய்தார்.

இதன் மூலம் ஈராக், சிரியாவுக்காக தொடங்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் உலகம் முழுவதுக்குமானதாக மாறியது. ஐந்து வருடங்களுக்கு முன் பாக்தாதி விடுத்த மிரட்டல் வீடியோவே அவரின் கடைசி தரிசனம். அதன்பின் எங்கே சென்றார், எங்கு திட்டங்கள் போடுகிறார் என்பது தெரியாமலேயே இருந்தன. 2017, 2018ல் அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் பாக்தாதி காயம் அடைந்ததாகவும், இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. 2018ல் ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயல்படத் தொடங்கியதால், பாக்தாதி உயிரோடுதான் இருக்கிறார் என்பது உறுதியானது. அதன்படி இட்லிப் நகரில் பதுங்கி இருந்த பாக்தாதியைப் பிடிப்பதற்கான திட்டம் முழு
வீச்சில் முடுக்கிவிடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ‘கெய்லா முல்லர் ஆபரேஷன்’ என்ற பெயர் வழங்கப்பட்டதுபாக்தாதியின் இடம் அடையாளம் காணப்பட்டது எப்படி?

ஈராக் அதிகாரிகள் செப்டம்பர் மத்தியில் பாக்தாதியின் இரண்டு சகோதரர்களான அஹ்மத் மற்றும் ஜுமா ஆகியோரின் மனைவிகளை துருக்கி வழியாக இட்லிப் மாகாணத்திற்குக் கொண்டு செல்ல உதவிய ஒரு சிரியா நபரைஅடையாளம் கண்டதாகக் கூறுகிறார்கள்.

ஈராக்கில் இருந்து தன் குடும்பத்தை சிரியாவுக்கு மெல்ல மெல்ல பாக்தாதி நகர்த்துவதற்கு இந்த சிரியா நபரே உதவியிருக்கிறார்.
இவரை வளைத்த ஈராக்கிய உளவுத்துறை அதிகாரிகள், அவர் பயன்படுத்திய பாதை மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இலக்கு பற்றிய தகவல்களை அறிந்துகொண்டனர். ஏற்கனவே பாக்தாதியின் உதவியாளரான ஈராக்கைச் சேர்ந்த இதாவி, துருக்கி உளவுத்துறையிடம் சிக்கியிருந்தார்.
இருவரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இட்லிப் மாகாணத்தின் பாரிஷா என்ற சிறு கிராமத்துக்கு வருவதற்கு முன்பு கிழக்கு சிரியாவிற்கும் மேற்கு ஈராக்கிற்கும் இடையில் பாக்தாதி ஒளிந்திருந்தார். ஜனவரி மாதம் கிழக்கு சிரியா நகரமான பாகுஸில் கடைசியாக அவரைக் கண்காணித்த ஐரோப்பிய உளவுத்துறை பாக்தாதி உண்மையில் இட்லிப் மாகாணத்தில் இருப்பதை அறிந்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமை (அக்டோபர் 26) நள்ளிரவுக்குப் பிறகு வானத்தில் திடீரென ஹெலிகாப்டர் சத்தங்கள் கேட்டன.
எட்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள், டெல்டா படை, கடற்படை முத்திரைகள் சுமந்து, துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள பாரிஷாவில் தாழ்வாகவும் வேகமாகவும் பறந்து வந்தன.  

சில நிமிடங்களில் சரமாரியான வெடியோசைகள் கேட்க ஆரம்பித்தன. தரையிலிருந்தும் கடுமையான பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இந்த திடீர் தாக்குதலை, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் எதிர்பார்க்கவில்லை. அந்த எதிர்பார்ப்பின்மையும், திகைப்பும்தான் அமெரிக்கப் படைகளுக்கு சாதகமாக அமைந்தன.

வானத்திலிருந்து பாதுகாப்புச்சூடுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே, ரோபோக்கள், தற்கொலைத் தாக்குதலை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் என 70 பேர் கொண்ட அணி, பக்தாதியின் வீட்டிற்கு வெளிப்புறமாகத் தரையிறங்கின. கடைசி 15 நிமிடங்கள்வீட்டைச் சுற்றிவளைத்தது அமெரிக்கப்படைகள். எனினும், உள்ளிருந்து துப்பாக்கிச் சூடுகள் வந்தன. இந்த பங்களாவில் பாக்தாதியின் இரண்டு மனைவியர் தற்கொலை அங்கி அணிந்திருந்த போதும், அதை வெடிக்கவைக்க முடியாமல், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

வீட்டின் தரைத்தளத்தை அமெரிக்கப் படைகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும், தனது மூன்று பிள்ளைகளுடன் பாக்தாதி சுரங்கப்பகுதிக்கு தப்பியோடினார். அவரை டெல்டா படைகளும், நாய்களும் துரத்திச் சென்றன. ஒரு கட்டத்தில் சுரங்கம் முடிவடைந்தபோது, அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரை மெதுமெதுவாக அமெரிக்கப்படைகள் நெருங்கிய நிலையில், தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தார்.

மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்தது இந்த ஆபரேஷன். முடிவில், ‘100 percent confidence Jackpot. Over’ என்ற தகவல் அமெரிக்க கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது. ஒசாமா பின்லேடன் நடவடிக்கையின்போது, ஒசாமாவிற்கும் ஜாக்பாட் என்ற குறியீட்டுப் பெயரையே அமெரிக்கா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் சைலன்ட் ஆக்‌ஷன்வெளியுறவுத் துறை ரீதியாகவும், உள்நாட்டு ரீதியாகவும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு, அல்-பாக்தாதியின் மரணம் புதிய புகழைப் பெற்றுத் தந்துள்ளது. 

பாக்தாதி இறந்துவிட்டதை அக்டோபர்27ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தபோது ‘குர்திஷ் படையின் செயல்பாடுகள் உதவிகரமாக இருந்ததே தவிர, மிலிட்டரி காம்பேட் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடவில்லை. அதனை முழுவதுமாக மேற்கொண்டது அமெரிக்கப் படைகள்தான்’ என்று கூறியிருந்தார்.

டிரம்ப்பின் இந்தப் பேச்சால், பாக்தாதியைச் சுற்றி வளைக்க உதவிய குர்திஷ் படைகள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த வருத்தத்துக்குள்ளாகியுள்ளனர்.
பாக்தாதியைக் கொலை செய்ய அமைக்கப்பட்ட ‘கெய்லா முல்லர்’ செயல்படுத்தப்படுவதற்கு முன்னால், சிரியாவிலிருந்த தன் படைகளை திரும்பப் பெற்றது அமெரிக்கா. இதனால், துருக்கி நாட்டின் ராணுவம் எல்லை தாண்டி வந்து, குர்திஷ் படைகளுக்கு பிரச்னை கொடுத்தது.

சிரியாவிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினை எதிர்த்துப் போராட, தங்களுக்கு உதவுவதாக வாக்கு கொடுத்த அமெரிக்கா, இப்படி பின்வாங்கிவிட்டதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த குர்திஷ் படைகள், பாக்தாதியைக் கொல்ல உதவுவதன் மூலம் அமெரிக்காவின் நம்பிக்கையைத் திரும்பப் பெறலாம் என்று கணக்கிட்டு  முழுபலத்துடன் இந்த ஆபரேஷனில் இறங்கியது.இந்நிலையில் டிரம்ப்பின் பேச்சு அவர்களை வருத்தப்பட வைத்துள்ளது. எனவே, தங்கள் பங்களிப்பை இப்போது வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவிற்கு உதவிய குர்திஷ் படைகள்“பாக்தாதியின் கோட்டைக்குள் அவர்களில் ஒருவராக ஒளிந்திருந்த எங்களது உளவாளி கொடுத்திருந்த தகவலின் மூலம், டெர் அல் சோர் பகுதியிலுள்ள அல் தஷிஷா ஏரியாவிலிருந்து இட்லிப் பகுதிக்கு பாக்தாதி இடம்பெயர்ந்துவிட்டதை நாங்கள் உறுதி செய்தோம். பாக்தாதியைக் கண்காணித்துபின்தொடரும் வேலையில் அமெரிக்காவின் CIA உடன் சேர்ந்து மே 15ம் தேதியிலிருந்து நாங்கள் ஈடுபட்டு வந்தோம்.

உளவுத் தகவல்களிலிருந்து பாக்தாதி விரைவிலேயே ஜெரப்ளஸிலுள்ள புதிய இடத்துக்கு நகரப் போவது தெரிந்தது. பாக்தாதியின் முழு திட்டங்களை அறியக்கூடிய விதத்தில் எங்கள் உளவாளி வேலை செய்ததால், அவர் அடிக்கடி தன் இடத்தை மாற்றிக்கொள்வது தெரிந்தது.

எனவே, இங்கிருப்பது பாக்தாதிதான் என்பதை உறுதி செய்ய, பாக்தாதியின் இடத்துக்குச் சென்று அவரது உள்ளாடைகளை எடுத்துவந்து எங்களுக்குக் கொடுத்தார் எங்களது உளவாளி. அதனை சோதனை செய்து அங்கிருப்பது பாக்தாதிதான் என உறுதி செய்தோம்.  
பாக்தாதியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து தகவல் அனுப்பியது முதல் எங்கு வந்து இறங்கவேண்டும், எப்படி அணிவகுக்கவேண்டும் என்பது வரை அத்தனை முடிவுகளும் எங்களது உழைப்பினால் எடுக்கப்பட்டவை.

இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிய கடைசி நிமிடம் வரை நாங்கள் இதில் ஈடுபட்டிருந்தோம். ஹெலிகாப்டர்கள் வரும்போது தாக்கி அழிக்கவேண்டிய தீவிரவாத முகாம்களை குறித்துக் கொடுத்ததும் நாங்கள்தான். ஒரு மாதத்துக்கு முன்பே, பாக்தாதியைக் கொலை செய்யவேண்டிய இந்த மிஷன் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து பின் வாங்கியது, துருக்கி படைகளை எங்களை நோக்கி நகரச் செய்தது. இதனால், பாக்தாதியைப் பின்தொடர்வதையும் சேர்த்து எங்களது ஸ்பெஷல் ஆபரேஷன்களை எங்களால் தொடர முடியவில்லை. துருக்கியின் படை நகர்வு இந்த ஆபரேஷனை தாமதமாக்கியது...” என்று குர்திஷ் SDF அமைப்பின் சிறப்பு ஆலோசகரான போலட் கேன் தனது தொடர் டுவிட்டுகளின் வழியே உலகுக்கு உண்மையைத் தெரியப்படுத்தினார்.

இந்த டுவிட்டர் கணக்கு உண்மையாகவே, ‘சிறப்பு ஆலோசகரான போலட் கேன் என்பவருக்குச் சொந்தமானதுதான்’ என்பதை சிஎன்என் நிறுவனம் குர்திஷ் அரசாங்கத்திடம் விசாரித்து உறுதி செய்திருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவர். அக்டோபர் 31ம் தேதி ஐஎஸ் ஈராக் அமைப்பின் சார்பில் செய்தித் தொடர்பாளர் அம்சா வெளியிட்ட ஆடியோவில், சிரியாவில் நடந்த தாக்குதலில் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

மேலும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் புதிய தலைவராக அபு இப்ராஹீம் அல் ஹாஷ்மி அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார். பாக்தாதியின் மரணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இனி உலகம் அமைதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் பாக்தாதி மீதான தாக்குதல் வீடியோக்களை வெளியிட்ட அமெரிக்க ராணுவ ஜெனரல் மெக்கன்சி, ‘பாக்தாதி என்ற ஒருவரை அழித்துவிட்டதன் மூலம் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று கருத முடியாது.

எனவே அனைத்து சவால்களுக்கும் அமெரிக்கா தயாராக உள்ளது...’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படிச் சொன்ன 12 மணி நேரத்துக்குள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது!

அன்னம் அரசு