இந்த நீராவி ரயிலை இந்தியா காப்பாற்றுமா?



இங்கே நீங்கள் காணும் நீராவி ரயிலுக்கு வயது 140. மெட்ரோ, புல்லட் என விதவிதமான நவீன ரயில்கள் வந்துவிட்டாலும் இதற்குரிய மவுசு இன்னும் குறையவில்லை.
‘டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே’ என்றழைக்கப்படும் இதில் பயணிப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே புக் செய்கின்றனர். ஒரு காலத்தில் மலைப்பகுதியிலிருந்து தேயிலை எடுத்து வருவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த ரயில், இன்று யுனெஸ்கோவின் பாரம்பரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள நியூ ஜல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங் வரையிலான 88 கிலோ மீட்டர் தூரம் ஓடிக்கொண்டிருந்த இந்த ரயில் இப்போது சுற்றுலாத் தேவைகளுக்காக மட்டுமே இயக்கப்படுகிறது.விஷயம் இதுவல்ல.இந்த ரயிலும் அது செல்லும் பாதையும் போதிய பராமரிப்பு இல்லாமல் சீர்குலைந்திருப்பதாக யுனெஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.

வரும் பிப்ரவரிக்குள் டார்ஜிலிங் ரயில்வே நிர்வாகம் ரயிலையும், தண்டவாளத்தையும் சீர் செய்ய வேண்டும். இல்லையென்றால் பாரம்பரிய அங்கீகாரத்தை யுனெஸ்கோ திரும்பப்பெறுவதற்கான வாய்ப்புள்ளது!

த.சக்திவேல்