ஒரு வீட்டின் விலை ரூ. 77



மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கனவும் தனக்காக ஒரு சொந்த வீடு தேவை என்பதுதான். அதுவும் அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் வீடு வாங்கி அந்த நாட்டின் குடிமகனாகக் குடியேறவேண்டும் என்பது பலரது கனவு மட்டுமல்ல; வாழ்வின் லட்சியம் கூட.

இந்நிலையில் இத்தாலியின் சிசிலியில் உள்ள சம்பூகா என்ற சிற்றூர் பலரின் லட்சியங்களுக்கு கதவை திறந்துவிட்டிருக்கிறது. ஆம்; அங்கே மிகக் குறைந்த விலையில் ஒரு வீட்டை நமதாக்கிக் கொள்ளலாம். சம்பூகாவில் பல வருடங்களாக வசித்து வந்த பூர்வகுடிகள் வீட்டை காலி செய்துவிட்டு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் குடியேறிவிட்டனர்.

அதனால் அந்த ஊரில் மக்கள் தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டுவிட்டது. ஆளில்லாமல், சரியாக கவனிக்கப்படாததால் பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. வீட்டை விட்டுச் சென்றவர்கள் இப்போது வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கக்கூட வருவதில்லை. ஊரின் பாதிப்பகுதி பாழடைந்த இடமாக மாறிவிட்டது.

ஊரையும் வீட்டையும் காப்பாற்றவும், மக்கள் தொகையை அதிகப்படுத்தவும் இத்தாலி அரசு அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

ஆம்; சம்பூகாவில் உள்ள ஒரு வீட்டின் விலை வெறும் ஒரு யூரோ மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் 77 ரூபாய்!

வீட்டை வாங்கியவர்கள்தான் புதுப்பிக்க வேண்டும் என்பது நிபந்தனை. எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்ற கலைஞர்கள் இங்கே  வீட்டை வாங்குவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏனெனில் கலைஞர்களுக்குப் பிடித்த இடமாக இது இருக்கிறது!தவிர, இங்கு வீட்டை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர் என்பது ஹைலைட். ‘‘இன்னும் ஆறு மாதங்களில் மனிதர்கள் யாருமற்ற சம்பூகா வீடுகள் எல்லாம் குடும்பங்களால் நிறைந்திருக்கும்...’’ என்கிறார் மேயர்
லியோனார்டோ.

த.சக்திவேல்