இந்திய தம்பதியருக்கு நோபல் பரிசு!ஆண்டிப்பட்டி முதல்  அமெரிக்கா வரை  எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணில் படுகிற ஒரு பெயர் அபிஜித் பானர்ஜி. கடந்த வாரம் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட பெயரும் இதுவே.

காரணம், இவர் 2019ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர். உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்போது இந்தியர் ஒருவருக்கு இப்பரிசு கிடைத்திருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இவருடன்  சேர்ந்து எஸ்தர் டூப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகிய இருவரும் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண்மணி மற்றும் இளம் வயதிலேயே அந்தப் பரிசைப் பெறும் முதல் நபர் போன்ற பல பெருமைகளையும் தன்வசமாக்கியுள்ளார் எஸ்தர் டூப்லோ. இவர் அபிஜித் பானர்ஜியின் மனைவி என்பது இதில் ஹைலைட்!நோபல் பரிசு வரலாற்றில் கூட்டாக பரிசைத் தட்டும் ஆறாவது தம்பதியினர் இவர்களே!

58 வருடங்களுக்கு முன் மும்பையில் பிறந்த அபிஜித்தின் பெற்றோர் இருவருமே பொருளாதாரத் துறையில் பேராசிரியர்கள். அப்பா - அம்மாவைப் போலவே அபிஜித்தும் சிறு வயதிலிருந்தே பொருளாதாரத்தில் ஆர்வமுடையவராக வளர்ந்தார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ (பொருளாதாரம்) படிக்கும்போது பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றிருக்கிறார். இருந்தாலும் படிப்பில் அபிஜித் சுட்டி.

1988ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதும் அபிஜித்தின் பார்வை வறுமையின் மீது திரும்பியது.
பெருளாதார வளர்ச்சி மற்றும் உலகளவில் காட்டுத் தீ போல பரவியிருக்கும் வறுமையை ஒழிப்பது குறித்த ஆய்வுகளைச் செய்ய ஆரம்பித்தார். இவருடன் இணைந்து பணியாற்றியவர்கள்தான் எஸ்தர் டூப்லோவும், மைக்கேல் கிரெமரும்.

‘வறுமையை ஒழிப்பதற்காக இவர்கள் செய்த பரிசோதனை முயற்சி’க்காகத்தான் நோபல் பரிசே வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது அமெரிக்காவில் வசித்து வரும் அபிஜித் பானர்ஜி, மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மனைவியுடன் இணைந்து பொருளாதாரம் சம்பந்தமான சில புத்தகங்களை எழுதியிருக்கிறார்.          

த.சக்திவேல்