நான்...குற்றாலீஸ்வரன்...வாழ்வா? நீச்சலா? இந்தக் கேள்வி ஒரு கட்டத்தில் வந்து நின்றது. நானாகத்தான் நீச்சலுக்கு தடை போட்டேன். இன்னமும் இந்த வதந்திகள் எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது.  1981, நவம்பர் 8ம் தேதி ஈரோட்டில் பிறப்பு. குற்றாலீசுவரன் (எ) குற்றால் இரமேசு. அப்பா பெயர் இரமேசு, அம்மா பெயர் சிவகாமி.அப்பா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். எனக்கு ஒரு அண்ணா. அவர் பெயர் பாலாஜி.

நான் பிறந்து ஓரிரு மாதங்களிலேயே சென்னைக்கு குடிவந்துவிட்டோம். கோபாலபுரம் கலைஞர் ஐயா வீடு பக்கம்தான் எங்களுக்கும் வீடு. டிஏவி பள்ளியில் படிப்பு, அடுத்து கிண்டி பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கலில் பொறியியல் படிப்பு, முதுகலை அமெரிக்கா டல்லாஸில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படித்தேன். எம்ஐடியில் எம்பிஏ.

இதுதான் என் பிறப்பு, படிப்பு. எனக்கு பெயர் வைத்தவர் தாத்தா. பாட்டிக்கு உடல் நலமில்லாதபோது குற்றாலம் சென்று, எனக்கு மகன் பிறந்தால் குற்றாலீஸ்வரன் என பெயர் வைப்பதாக தாத்தா வேண்டியிருக்கிறார். பாட்டி குணமானார். வேண்டுதலை தாத்தா மறந்துவிட்டார். அப்பாவும் தன் மூத்த மகனுக்கு இப்பெயரைச் சூட்ட மறந்துவிட்டார்.

எல்லாமாக சேர்ந்து எனக்கு அப்பெயரை சூட்டினார்கள். உண்மையில் அப்பா எனக்கு வைக்க நினைத்த பெயர், அபிராம். ஒவ்வொரு விடுமுறைக்கும் ஈரோடு செல்வோம். அங்கு கிணறு, குளங்களில் மாமாவிடம் நீச்சல் கற்றுக் கொண்டேன். டயர், மட்டைகளைக் கொண்டுதான் மாமா பயிற்சி அளித்தார்.

இரண்டாம் வகுப்பு படிக்கையில் அந்த ஆண்டு விடுமுறைக்கு எங்களால் ஈரோடு செல்ல முடியவில்லை. காரணம் நினைவில் இல்லை. இந்த நேரத்தில்தான் முறைப்படி நீச்சல் கற்க சென்னை உட்லண்ட்ஸ் நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அப்போது முதலே தண்ணீர் என்றால் எனக்கு அவ்வளவு ப்ரியம். எவ்வளவு நேரம் என்றாலும் தண்ணீரிலேயே இருப்பேன். பயிற்சியை சரியாக முடித்தால் ரிப்பன்களை விருதாகத் தருவார்கள். பயிற்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் ரிப்பன் பெற்றேன்.

‘பையன் ரொம்ப திறமையா இருக்கான். இன்னும் கொஞ்சம் கவனம் காட்டுங்க...’ என அப்பாவிடம் சொன்னார் கோச். அப்பாவும் அதை சீரியசாக ஏற்று எல்லா போட்டிகளிலும் என்னை பங்கேற்க வைத்தார். மெரினா நீச்சல் கட்டடம் அருகே அப்போது சீரணி அரங்கம் இருந்தது. நிறைய மீனவ நண்பர்கள் எனக்கு உண்டு. அடிக்கடி அந்த நண்பர்கள் போட்டி வைப்பார்கள்.

அப்படி 1991ல் ஐந்து கிமீ நீச்சல் மாரத்தான் நடத்தினார்கள். பங்கேற்ற அனைவரும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள். நான் மட்டுமே இளையவன். அந்தப் போட்டியில் நான் ஐந்தாவதாக வந்தேன். உடன் போட்டியிட்டவர்கள் சோர்வாக இருந்தபோது போட்டி முடிந்தபிறகும் நான் சுறுசுறுப்பாக இருந்தேன். பலரும் இதை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

‘எனக்கு நீச்சல் குளத்தை விட கடல் அதிகம் பிடித்திருக்கிறது...’ என அன்றுதான் அப்பாவிடம் சொன்னேன். அப்பாவும் என் ஆசைக்கு பச்சைக் கொடி காட்டினார். ஆனால், அம்மாவுக்கு பயம். தாத்தாவுக்கும் உடன்பாடில்லை. படிப்பில் கவனம் செலுத்தும்படி சொன்னார்.அப்பாதான் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். உற்சாகத்துடன் அடுத்து 15 கிமீ நீந்த முடிவெடுத்தேன். ஆவடி நீச்சல் குளத்தில் அதை நனவாக்கினேன். குஜராத், மும்பை என இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடந்த போட்டிகளில் பங்கேற்றேன். எல்லா போட்டிகளிலும் வயது குறைந்தவனாக நானே இருந்தேன்.

மலை ஏறுபவர்களுக்கு எப்படி எவரெஸ்ட் பெரும் சாதனையோ அப்படி நீச்சல் மாரத்தான் வீரர்களுக்கு இங்கிலீஷ் கால்வாயைக் கடப்பது பெரும் கனவு.இக்கனவை நனவாக்க முடிவெடுத்தேன். கொஞ்சம் ஸ்பான்சர்களும் தேவை. அப்போதுஜெயலலிதா முதல்வராக இருந்தார். குடும்பத்துடன் அவரைச்சந்தித்தோம். நீச்சல் குறித்து பல கேள்விகளை என்னிடம் கேட்டார்; பேசினார். ‘இங்கிலீஷ் கால்வாய்க்கு முன் பாக் ஜலசந்தியை உன்னால் கடக்க முடியுமா’ என்று கேட்டார். யோசிக்காமல் முடியும் என்றேன்.

ஜெயலலிதா அம்மையாருக்குஎன்மீது நம்பிக்கை வந்தது. ராமேஸ்வரத்தில் அரசு சார்பில் எனக்காக ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இலங்கை - இந்தியா என இரு நாட்டு அதிகாரிகளின் சம்மதம்... காவல்துறை அனுமதி... எல்லாம் பெற்றோம். மீடியா எனக்கு ஆதரவளித்தது. நல்ல முறையில் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தேன். விளைவு, இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க ஸ்பான்சர் கிடைத்தது.

அப்போதுதான் என் குடும்ப நண்பர் ஒரு தகவலைச் சொன்னார். ‘மிகிர்சென் என்பவர் முப்பது வருடங்களுக்கு முன்பு ஐந்து நாடுகளைக் கடந்து கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். நீ நினைத்தால் அதை முறியடிக்கலாம்...’ என்றார். அதாவது ஒரே வருடத்தில் ஐந்து நாடுகளை நீந்திக் கடப்பது.
ஏற்கனவே நான் இரண்டைக் கடந்துவிட்டேன் என்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டு தயாரானேன்.

1994, ஆக்ஸ்ட் 15 அன்று இங்கிலீஷ் கால்வாயைக் கடந்தேன். குளிர்காலம் ஆரம்பித்திருந்த நேரம் அது. கடல் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.ஆறு கால்வாய்களை நீந்திக் கடந்ததால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் என் பெயர் இடம்பெற்றது. டிசம்பர் 13 அன்று அந்தமான் நிக்கோபார் சந்திப்பை நீந்திக் கடந்து இந்த சாதனையை நிறைவு செய்தேன்.

1995 - 98ல் உலகம் முழுக்க நடந்த அத்தனை மாரத்தான் நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்று விருதுகளை வாங்கிக் குவித்தேன். 1998ம் ஆண்டு உலகின் சிறந்த நீச்சல் வீரர்கள் என 25 பேரை தேர்வு செய்தார்கள். அதில் என் பெயரும் இடம்பெற்றது! பிறகு படிப்பு முக்கியம் என்பதால் +2வில் கவனம் செலுத்தினேன். பலரும் ஒலிம்பிக்கில் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்கிறார்கள். ஒலிம்பிக் நீச்சல் வேறு. இதை புரிந்து கொள்ளாமல், ‘ஒலிம்பிக் போக இந்தியா எனக்கு உதவவில்லை... அதனால்தான் நான் நாட்டை விட்டே போய்விட்டேன்...’ என்கிறார்கள் சிலர்.

அப்படியெல்லாம் இல்லை. ஒலிம்பிக்கில் மாரத்தான் நீச்சல் கிடையாது. இதுபோக அடுத்தடுத்த போட்டிகளுக்கு அப்பாவால் செலவு செய்ய முடியவில்லை. ஏனெனில் உலகிலுள்ள பல நாடுகளில் நீச்சல் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. அப்பாவை திரும்பத் திரும்ப சிரமப்படுத்த மனம் இடம் கொடுக்கவில்லை. ஏதேனும் தனியார் நிறுவனம் எனக்கு ஸ்பான்சர் செய்ய வேண்டுமென்றால் அந்த விளையாட்டு பிரபலமாக இருக்க வேண்டும். மாரத்தான் நீச்சல் அதிகம் பிரபலமில்லை. இதை குறையாகச் சொல்லவில்லை. யதார்த்தத்தை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.

இதன் காரணமாக மிகிர்சென் சாதனையை 30 வருடங்கள் கழித்தே என்னால் முறியடிக்க முடிந்தது. இடையில் பல சாதனையாளர்கள் இருந்திருப்பார்கள். போதுமான ஸ்பான்சர்ஸ் கிடைக்காததால் அவர்கள் இந்த முயற்சியில் இறங்கவில்லை. எலெக்ட்ரிக்கலில் பொறியியல், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிப்பு... என ஸ்காலர்ஷிப்பில் படித்தேன். பின் ஓரிரு வருடங்கள் இந்தியாவிலும் பின் கலிபோர்னியாவிலும் வேலை பார்த்தேன். பிறகு வேலையை விட்டுவிட்டு எம்ஐடியில் எம்பிஏ முடித்தேன். இப்போது கனடாவில் இருக்கிறேன்.

அர்ஜுனா விருது வரை வாங்கிவிட்டேன். மாரத்தான் நீச்சல் போதும் என நானே நிறுத்திக்கொண்டுதான் படிப்பு, வேலை என சென்று விட்டேன். இந்தியா உதவவில்லை என ஒருபோதும் சொல்லமாட்டேன். இன்று இந்தளவுக்கு நான் வளர்ந்து நிற்கவே இந்தியாதான் காரணம். மாரத்தான் நீச்சலை ஆசைக்காக செய்யலாம். மற்றபடி இதில் உலகளவில் வருமானம் இல்லை.

வெற்றியாளனாகவே வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டேன். இடையில் வீட்டில் பார்த்து திருமணம் ஆனது. ஆனால், மனம் ஒன்றுபடாததால் ஆறே மாதங்களில் விவாகரத்து பெற்றோம். இப்போது வீட்டில் மறுமணம் செய்ய முயற்சிக்கிறார்கள். நல்லதே நடக்கும் என நம்புகிறேன்...